பல ஜனாஸாக்களுக்கு ஒரே தொழுகை
ஒரு நேரத்தில் அதிகமானவர்கள் இறந்து விட்டால் ஒவ்வொருவருக்காகவும் தனித் தனியாக நாம் ஜனாஸா தொழுகை நடத்துவது போல் அனைவருக்கும் சேர்த்து ஒரே தொழுகையாக நடத்தினால் அதுவும் போதுமானதே!
இப்னு உமர் (ரலி) அவர்கள் ஒரு நேரத்தில் ஒன்பது ஜனாஸாக்களுக்குத் தொழுகை நடத்தினார்கள். அப்போது ஆண்களின் உடல்களை இமாமுக்கு அருகிலும், பெண்களின் உடல்களை கிப்லாவுக்கு (கிப்லாவின் பக்கம் உள்ள சுவருக்கு) அருகிலும் வைத்தார்கள். அனைத்து உடல்களும் ஒரே நேர் வரிசையில் வைக்கப்பட்டன. உமர் (ரலி) அவர்களின் மனைவி உம்மு குல்சூம், ஸைத் பின் உமர் என்ற அவரது மகன் ஆகியோரின் உடல்களும் வைக்கப்பட்டன. அப்போது ஸயீத் பின் ஆஸ் (ரலி) இமாமாக இருந்தார். அந்தச் சபையில் இப்னு அப்பாஸ் (ரலி), அபூ ஹுரைரா (ரலி), அபூ ஸயீத் (ரலி), அபூ கதாதா (ரலி) ஆகிய நபித்தோழர்களும் இருந்தனர். அப்போது ஒரு மனிதர் ‘இதை நான் ஆட்சேபிக்கிறேன்’ என்றார். அப்போது நான், இப்னு அப்பாஸ் (ரலி) அபூ ஹுரைரா (ரலி), அபூ ஸயீத் (ரலி), அபூ கதாதா (ரலி) ஆகியோரைப் பார்த்து, ‘இது என்ன?’ என்று கேட்டேன். அதற்கவர்கள், ‘இது நபி வழி தான்’ எனக் கூறினார்கள்.
அறிவிப்பவர்: நாஃபிவு
நூல்: நஸயி குப்ரா 1/141, பைஹகீ 4/33