பலவீனமான செய்தியை ஏன் அங்கீகரிக்கக் கூடாது❓
அதை கொண்டு ஏன் அமல் செய்ய முடியாது❓
ஒரு பலவீனமான ஹதீஸை வைத்து அமல் செய்கின்ற போது அது உறுதியான செய்தி தான் என்ற அங்கீகாரம் பெற்றுவிடும்.
அவ்வாறு அங்கீகாரம் பெற்ற பலவீனமான செய்தி நபி (ஸல்) அவர்கள் சொல்லாத ஒரு செய்தியை, அவர்கள் சொன்னதாகக் கூறி அவர்கள் மீது பொய் சொன்ன பாவத்தில் விழுந்து விடுவோம்.
பலவீனமான ஹதீஸ் என்பதன் கருத்து,
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதைச் சொல்லி இருப்பார்களா என்பதில் சந்தேகம் உள்ளது என்பது தான். எல்லா பலவீனமான ஹதீஸ்களிலும் இந்தச் சந்தேகம் உள்ளது.
ஹதீஸ்களில் கடுமையான பலவீனம், இலேசான பலவீனம் என்று பிரித்து, இலேசான பலவீனம் என்ற நிலையில் அமைந்த ஹதீஸ்களை அமல்களின் சிறப்பு மற்றும் எச்சரிக்கை விஷயங்களில் ஆதாரமாகக் கொள்ளலாம் என்ற நிலைப்பாட்டிலும் அறிஞர்களில் ஒரு சாரார் உள்ளனர். ஆனால் தவ்ஹீத் ஜமாஅத் இந்த நிலைப்பாட்டிற்கும் எதிராக உள்ளது.
உமக்கு அறிவு இல்லாததை நீர் பின்பற்றாதீர்! செவி, பார்வை, உள்ளம் ஆகிய அனைத்துமே விசாரிக்கப் படுபவையாகும்.
(அல்குர்ஆன் 17:36)
பலவீனமான ஹதீஸ்களைக் அங்கீகரிப்பதோ அதை கொண்டு அமல் செய்யக் கூடாது என்பதற்கு இவ்வசனம் போதிய ஆதாரமாக உள்ளது.
சந்தேகமானதை விட்டு விட்டு சந்தேகத்துக்கு அப்பாற்பட்டதை நோக்கிச் செல் என்ற நபிமொழியும் பலவீனமான ஹதீஸ்களைக் கொண்டு அமல் செய்யக் கூடாது
என்று சொல்லும் போது இதற்கு மாற்றமாகவும் எவ்வித ஆதாரம் இல்லாமலும் அறிஞர்கள் கூறியதை நாம் ஏற்கக்கூடாது.
*நபி (ஸல்) அவர்கள் கூறினார்களா? இலலையா? *
என்ற சந்தேகத்தை ஏற்படுத்தக் கூடிய செய்திகள் தான் பலவீனமான ஹதீஸ்களாகும்.
உனக்குச் சந்தேகமானதை விட்டு விட்டு சந்தேகமற்றதன் பால் சென்று விடு என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஹஸன் பின் அலீ (ரலி)
நூல்: திர்மிதீ 2442
நபி (ஸல்) அவர்கள் கூறினார்களா? என்ற சந்தேகம் ஏற்பட்டால் அதைப் பின்பற்றுவது தடை செய்யப் பட்டுள்ளது என்பதை மேற்கண்ட குர்ஆன் வசனமும் ஆதாரப்பூர்வமான ஹதீசும் தெளிவாகக் கூறுகின்றன.
எனவே பலவீனமான ஹதீஸ்களைப் பின்பற்றி அமல் செய்யக் முடியாது அதை அங்கீகரிக்க முடியாது . அது குர்ஆன் ஹதீசுக்கு மாற்றமானதாகும்.
*ஏகத்துவம் *