பரிந்துரையை வேண்டுவது குற்றமாகுமா?

பெரியார்களைப் பிரார்த்திக்கும் நாங்கள் அவர்களுக்கு இறைத்தன்மை உண்டு என்று எண்ணவில்லை; மாறாக, அவர்களும் இறைவனின் அடிமைகள்’ என்றே கூறுகிறோம். ‘ஆயினும் அவர்கள் இறைவனது நெருக்கத்தைப் பெற்றுள்ளதால் அவர்கள் இறைவனிடம் பெற்றுத் தருவார்கள்’ என்றே நாங்கள் நம்புகிறோம். ‘சுயமாக எதுவும் அவர்கள் செய்வார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை; இவ்வாறு நம்புவது எப்படித் தவறாகும்?’

இது இவர்களின் தரப்பில் கூறப்படும் நியாயங்களில் ஒன்றாகும்.

மேலோட்டமாகப் பார்க்கும் போது இதில் நியாயம் இருப்பது போல் தோன்றினாலும் இதில் எந்த நியாயமும் இல்லை.

இறைவனின் ஆற்றல் அந்தப் பெரியார்களுக்கு உண்டு என்று இவர்கள் நம்பவில்லை என்பது உண்மையே. ஆனால் மற்றொரு வகையில் இறைவனுக்குச் சமமான ஆற்றல் அந்தப் பெரியவர்களுக்கு உண்டு என்று இவர்கள் நம்புகிறார்கள் என்பதை மறுக்க முடியாது.

எங்கிருந்து அழைத்தாலும், எத்தனை பேர் அழைத்தாலும், எந்த நேரத்தில் அழைத்தாலும், எந்த மொழியில் அழைத்தாலும் அனைத்தையும் ஒரே சமயத்தில் அறிந்து கொள்ளும் ஆற்றல் அல்லாஹ் ஒருவனுக்கு மாத்திரமே சொந்தமானதாகும். இதே போன்ற ஆற்றல் அந்தப் பெரியார்களுக்கு உண்டு என்று இவர்கள் நம்புகிறார்கள்.

இதன் காரணமாகவே உலகின் பல பாகங்களிலிருந்தும் பலரும் அந்தப் பெரியார்களைப் பிரார்த்திக்கின்றனர். தங்களது பிரார்த்தனையை அல்லாஹ் செவிமடுப்பது போலவே பெரியார்களும் செவிமடுக்கின்றனர் என்று நம்பி இந்த விசயத்தில் இறைவனுக்குச் சமமாகப் பெரியார்களை நம்புகின்றனர்.

முழுக்க முழுக்க இறைத்தன்மை பெற்றவர்களாக மற்றவர்களை எண்ணுவது மாத்திரம் இணைவைத்தல் அன்று. மாறாக, இறைவனது தன்மைகளில் ஏதேனும் ஒரு தன்மை இறைவனுக்கு இருப்பது போலவே மற்றவர்களுக்கும் இருப்பதாக எண்ணுவதும் இணை வைத்தலாகும். இதைப் புரிந்து கொள்ளாததாலேயே இறைவனல்லாதவர்களைப் பிரார்த்திக்கின்றனர்.

அல்லாஹ்வையன்றி அவர்களுக்குத் தீமையும், நன்மையும் செய்யாதவற்றை வணங்குகின்றனர். ‘அவர்கள் அல்லாஹ்விடம் எங்களுக்குப் பரிந்துரை செய்பவர்கள்’ என்றும் கூறுகின்றனர். ‘வானங்களிலும் பூமியிலும் அல்லாஹ்வுக்குத் தெரியாததை அவனுக்குச் சொல்லிக் கொடுக்கிறீர்களா? அவன் தூயவன். அவர்கள் இணை கற்பிப்பதை விட்டும் உயர்ந்தவன்’ என்று கூறுவீராக!

(அல்குர்ஆன் 10:18)

கவனத்தில் கொள்க! தூய இம்மார்க்கம் அல்லாஹ்வுக்கே உரியது. அவனையன்றி பாதுகாவலர்களை ஏற்படுத்திக் கொண்டோர் ‘அல்லாஹ்விடம் எங்களை மிகவும் நெருக்கமாக்குவார்கள் என்பதற்காகவே தவிர இவர்களை வணங்கவில்லை’ (என்று கூறுகின்றனர்). அவர்கள் முரண்பட்டது பற்றி அவர்களிடையே அல்லாஹ் தீர்ப்பளிப்பான். (தன்னை) மறுக்கும் பொய்யனுக்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான்.

(அல்குர்ஆன் 39:3)

மக்கத்துக் காஃபிர்கள் பெரியார்கள் பற்றிக் கொண்டிருந்த நம்பிக்கையை இவ்விரு வசனங்களும் தெளிவுபடுத்துகின்றன. இறைவனிடம் பரிந்துரை செய்வார்கள் என்பதற்காக மட்டுமே பெரியார்களை அவர்கள் பிரார்த்தனை செய்து வந்தனர். ஆனால் அதை அல்லாஹ் அங்கீகரிக்காது அவர்களைக் காஃபிர்கள் எனப் பிரகடனம் செய்து விட்டான்.

இறைவனிடம் பெற்றுத் தருவார்கள் என்ற எண்ணத்தில் கூட இறைவனல்லாத எவரையும் பிரார்த்திக்கலாகாது என்பதற்கு இது போதிய சான்றாகும்.

 

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *