நாட்டில் நல்லாட்சி அமைய அஓதும் துஆ
சமூக ஊடகங்கள் வாயிலாக ஏராளமான பலவீனமான மற்றும் இட்டுக்கட்டப்பட்ட செய்திகளை மக்கள் மத்தியில் பரப்புகின்றனர். அதன் உண்மை நிலையறியாத மக்கள் அதைச் சரியான செய்தியென்று நம்பி அதன்படி அமல் செய்யத் துவங்கிவிடுகின்றனர்.
அந்த அடிப்படையில், நல்லாட்சியாளர்களை அல்லாஹ்விடம் கோருவது தொடர்பான ஒரு துஆ தற்போது அதிகமான மக்களால் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வருகிறது. அந்த செய்தியின் உண்மைத் தன்மையைப் பார்ப்போம்.
“எங்கள் மீது இரக்கம் காட்டாதோரை எங்கள் மீது சாட்டிவிடாதே!” என்ற பொருள்பட உள்ள வாசகம் மட்டும் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டாலும் இது ஒரு நீண்ட துஆவின் சிறு பகுதியாகும்.
நபி (ஸல்) அவர்கள் ஒரு சபையிலிருந்து எழுந்திருக்கும் போது சிலவேளை தமது தோழர்களுக்காகப் பின்வரும் பிரார்த்தனையைச் செய்பவர்களாக இருந்தார்கள்.
இறைவா! எங்களுக்கும் நாங்கள் உனக்கு மாறுசெய்வதற்கும் மத்தியில் ஒரு தடையாக உனது பயத்தை எங்களுக்கு வழங்குவாயாக! எங்களை உனது சுவனத்திற்கு நீ அழைத்துச் செல்லும் காரணமாக (நாங்கள்) உனக்கு கட்டுப்படுவதை ஆக்குவாயாக! எங்களுக்கு ஏற்படும் உலக ரீதியான துன்பங்களை உன் மேல் கொண்ட உறுதியான நம்பிக்கையால் கடினமில்லாமல் ஆக்குவாயாக!
எங்களது செவிகளாலும், பார்வைகளாலும் ஆற்றலாலும் நாங்கள் உயிருடன் உள்ள வரை எங்களை பயன்பெறச் செய்வாயாக! அந்த பயனை (மரணம் வரை) எங்களுக்கு நிலைக்கச் செய்வாயாக! எங்களுக்கு அநியாயம் செய்தவர்களுக்கு எதிராக எங்களை பழிவாங்கச் செய்வாயாக! எங்களுக்கு துரோகம் செய்தவர்களுக்கு எதிராக எங்களுக்கு நீ உதவுவாயாக!
எங்களது மார்க்கத்தில் நாங்கள் தவறிவிடுவதை ஆக்கிவிடாதே! உலக வாழ்க்கையை (பற்றிய சிந்தனையை) எங்களது கவலையில் பெரியதாக ஆக்கிவிடாதே! அதை எங்கள் அறிவின் எல்லையாகவும் ஆக்கிவிடாதே! எங்களுக்கு இரக்கம் காட்டாதோரை எங்கள் மீது சாட்டி விடாதே!
நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு பிரார்த்திப்பவர்களாக இருந்தார்கள் என்ற இந்தச் செய்தி திர்மிதீ, பஸ்ஸார், சுனனுல் குப்ரா உள்ளிட்ட நூற்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் செய்தியின் அனைத்து அறிவிப்புகளும் இப்னு உமர் (ரலி) அறிவிப்பதாக இடம்பறுகிறது.
அவர்களிடமிருந்து காலித் பின் அபீ இம்ரான் என்பவரே நேரடியாக அறிவிப்பதாகவும் இப்னு உமரிடமிருந்து நாஃபிஃ கேட்டு அவரிடமிருந்து காலித் பின் அபீ இம்ரான் என்பவர் அறிவிப்பதாகவும் உள்ளது.
காலித் பின் அபீ இம்ரான் என்பாரிடமிருந்து மூவர் அறிவிக்கின்றனர்.
- உபைதுல்லாஹ் பின் ஸஹ்ர்.
- அப்துல்லாஹ் பின் லஹீஆ.
- லைஸ் பின் ஸஅத்.
இவற்றில் ஒவ்வொருவர் வழியாக அறிவிக்கப்படும் செய்திகளின் தன்மையைப் பார்ப்போம்.
- உபைதுல்லாஹ் பின் ஸஹ்ர்
காலித் பின் அபீ இம்ரான் வழியாக அறிவிக்கும் மூவரில் ஒருவர் உபைதுல்லாஹ் பின் ஸஹ்ர் ஆவார்.
இவர் வழியாக அறிவிக்கப்படும் அறிவிப்பு திர்மிதி உட்பட சில நூற்களில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
இவர் அறிஞர்களால் விமர்சிக்கப்பட்ட அறிவிப்பாளர் ஆவார்.
உபைதுல்லாஹ் பின் ஸஹ்ரின் ஹதீஸ்கள் எழுதப்படும். இவரோ பலமானவர் அல்ல என்று இமாம் இஜ்லீ கூறியுள்ளார்.
இமாம் அஹ்மத் இவரை பலவீனமானவர் என்று குறிப்பிட்டுள்ளார்.
இவர் ஒரு பொருட்டாக இல்லை என்று இமாம் யஹ்யா பின் மயீன் கூறியள்ளார்.
ஹதீஸில் மறுக்கப்படுபவர் என்றும் இமாம் அலீ இப்னுல் மதீனீ கூறியுள்ளார்.
இவர் ஹதீஸ் துறையில் பலவீனமானவர் என்று இமாம் அபூஹாதம் கூறியுள்ளார்.
இவரைக் கொண்டு எந்தப் பிரச்சனையும் அல்ல என்று இமாம் அபூஸுர் ஆ கூறியுள்ளார்.
இவரது அனைத்து ஹதீஸ்களும் என்னிடம் பலவீனமானது என்று இமாம் யஹ்யா பின் மயீன் கூறியுள்ளார். இவர் பலமானவர் அல்ல என்று இமாம் தாரகுத்னீ கூறியுள்ளார்.
இவர் நம்பகமானவர்கள் வழியாக இட்டுக் கட்டப்பட்ட செய்திகளை அறிவிக்கிறார் என்று இமாம் இப்னு ஹிப்பான் கூறியுள்ளார்.
(பார்க்க: அஸ்ஸிகாத், பாகம் 2, பக்கம் 109, அல்ஜரஹ் வத்தஃதீல், பாகம் 5, பக்கம் 315, லுஅஃபா, பாகம் 3, பக்கம் 120, லுஅஃபா வல்மத்ரூகீன், பாகம் 2, பக்கம் 162)
ஒரு சில அறிஞர்கள் இவரை உண்மையாளர், இவரால் எந்தப் பிரச்சனையும் இல்லை என்று கூறியிருந்தாலும் இவர் மீது குறைகள் அதிகமாக சொல்லப்பட்டுள்ளதால் இவர் பலவீனமானவர் ஆவார்.
எனவே, இவர் இடம்பெறும் முதல் அறிவிப்பு பலவீனமடைகிறது.
இவரிடமிருந்து அறிவிக்கும் யஹ்யா பின் அய்யூப் என்பார் மீதும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஹதீஸ் மேலுள்ள உபைதுல்லாஹ் பின் ஸஹ்ர் என்பாரின் குறைகளே இந்த செய்தி பலவீனமடைய போதுமானது என்பதால் இவரது விமர்சனங்களையும் கொண்டு வரத்தேவையில்லை.
- அப்துல்லாஹ் பின் லஹீஆ
காலித் பின் அபீ இம்ரானிடமிருந்து அறிவிக்கும் மற்றொரு அறிவிப்பாளர் அப்துல்லாஹ் பின் லஹீஆ ஆவார்.
இவர் இடம்பெறும் அறிவிப்பு இமாம் தப்ரானிக்குரிய துஆ எனும் நூலில் இடம் பெற்றுள்ளது.
இவரும் ஹதீஸ் துறையில் கடுமையாக அறிஞர்களால் விமர்சிக்கப்பட்டுள்ளார்.
அப்துல்லாஹ் பின் லஹீஆவை, யஹ்யா பின் ஸயீத் பொருட்டாகக் கருத மாட்டார் என்று இமாம் புகாரி கூறியுள்ளார்.
நான் இப்னு லஹீஆவிடமிருந்து குறைவாகவோ, அதிகமாகவோ எதையும் எடுக்க மாட்டேன் என்று அப்துர் ரஹ்மான் பின் மஹதீ கூறியதாக அலீ இப்னுல் மதீனீ கூறுகிறார்.
இப்னு லஹீஆ ஹதீஸ் துறையில் பலவீனமானவர் என்று யஹ்யா பின் மயீன் கூறியுள்ளார்.
(பார்க்க: தஹ்தீபுல் கமால், பாகம் 15, பக்கம் 490, அல்ஜரஹ் வத்தஃதீல், பாகம் 5, பக்கம் 147, அல்லுஅஃபா, பாகம் 2, பக்கம் 295)
இன்னும் இதுவல்லாத ஏராளமான குறைகள் இவர் மீது சொல்லப்பட்டுள்ளது. இவர் பலவீனமானவர் என்பதற்கு இதுவே போதுமான குறைகளாகும்.
இவரின் காரணமாக இந்தச் செய்தியின் இரண்டாம் அறிவிப்பும் பலவீனமடைகிறது.
- லைஸ் பின் ஸஅத்
அடுத்து, இந்தச் செய்தியை காலித் பின் அபீ இம்ரானிடமிருந்து அறிவிக்கும் கடைசி அறிவிப்பாளர் லைஸ் பின் ஸஅத் என்பவர் ஆவார்.
இவர் இடம்பெறும் அறிவிப்பு முஸ்தத்ரக் ஹாகிம் மற்றும் தப்ரானி இமாமுக்குரிய துஆ அகிய நூற்களில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
இவர் நம்பகமான அறிவிப்பாளர்தான் என்றாலும் இவரிடமிருந்து அறிவிக்கும் அப்துல்லாஹ் பின் ஸாலிஹ் என்பவர் பலவீனமானவர் என்பதால் இந்த அறிவிப்பும் பலவீனமடைகிறது.
நான் அப்துல்லாஹ் பின் ஸாலிஹ் என்பாரிடமிருந்து எதையும் அறிவிக்கவில்லை என்று அலீ இப்னுல் மதீனீ கூறியுள்ளார்.
இவர் சந்தேகம் கொள்ளப்படுபவர். இவர் ஒரு பொருட்டாக இல்லை என்று அஹ்மது பின் ஸாலிஹ் கூறி, இவர் விஷயத்தில் கடுமையாகப் பேசினார்.
இவர் நம்பகமானவர் அல்ல என்று இமாம் நஸாயீ கூறியுள்ளார்.
இவர் தனது விஷயத்தில் ஆரம்பத்தில் ஊன்றுகோல் பிடிக்கப்படுபவராக இருந்தார். பிறகு இறுதியில் குழம்பிவிட்டார். இவர் எந்த ஒரு பொருட்டாகவும் இல்லை என்று இமாம் அஹ்மது கூறியுள்ளார்.
நான் இவரிடமிருந்து எதையும் அறிவிக்க மாட்டேன். மக்களிலேயே அவரைப் பற்றி எனக்கும் நன்றாகத் தெரியும் என்று இமாம் யஹ்யா பின் மயீன் கூறியுள்ளார்.
இவரது செய்திகளில் மறுக்கத்தக்கவை உள்ளன என்று இமாம் இப்னு ஹிப்பான் கூறியுள்ளார்.
(பார்க்க: தஹ்தீபுல் கமால், பாகம் 15, பக்கம் 102, அல்லுஅஃபா வல்மத்ரூகீன், பாகம் 2, பக்கம் 127)
இந்த அறிவிப்பில் இடம்பெறும் அப்துல்லாஹ் பின் ஸாலிஹ் என்பவர் மீது மேற்படி விமர்சனங்களும் இதுவல்லாத இன்னும் அதிகமான விமர்சனங்களும் சொல்லப்படுவதால் இந்த அறிவிப்பும் பலவீனமடைகிறது.
எனவே, இந்தச் செய்தி தொடர்பான அனைத்து அறிவிப்புகளும் பலவீனமடைகிறது.
தான் நாடியோருக்கு அல்லாஹ் ஆட்சி அதிகாரத்தை வழங்குகிறான்.
நமக்கு யார் ஆட்சியாளர்களாக வர வேண்டும் என்று அல்லாஹ்விடத்தில் கோரிக்கை வைத்துப் பிரார்த்தனை செய்வதில் எந்த தவறும் இல்லை.
ஆனால் அவ்வாறு ஒரு துஆ நபிகளார் கற்றுத் தந்துள்ளார்கள் என்று எண்ணி, இதுபோன்ற பலவீனமான செய்திகளை அமல்படுத்தினால் அது தவறாகிவிடும்.
சமூக வலைத்தளங்களில் பரப்பும் போதும் சரி! அதில் பரப்பப்படும் செய்திகளை அமல்படுத்தும் போதும் சரி! அவை சரியானதா என்று உறுதிப்படுத்திக் கொள்வது ஒவ்வொரு முஃமினின் மீதும் கடமையாகும்.
அவ்வாறின்றி பரப்பினால் பொய்யர்களில் ஒருவராகிவிடுவோம்.
“ஒருவர் தாம் கேள்விப்பட்டதையெல்லாம் (பிறருக்கு) அறிவிப்பதே அவர் பொய்யர் என்பதற்குப் போதுமான சான்றாகும்’’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: முஸ்லிம் 6