துல்கர்னைன் என்பவரைப் பற்றிய நிகழ்வு என்ன?
கேள்வி :
துல்கர்னைன் என்பவரைப் பற்றிய நிகழ்வு என்ன?
பதில் :
83. (முஹம்மதே!) துல்கர்னைன் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். “அவரைப் பற்றிய செய்தியை நான் உங்களுக்குக் கூறுவேன்” என்று கூறுவீராக!
84. அவருக்குப் பூமியில் (ஆட்சி செய்ய) நாம் வாய்ப்பளித்தோம். ஒவ்வொரு பொருளிலிருந்தும் அவருக்கு வழியை ஏற்படுத்தினோம்.
85. அவர் ஒரு வழியில் சென்றார்.
86. சூரியன் மறையுமிடத்தை அவர் அடைந்தபோது சேறு நிறைந்த தண்ணீரில் அது மறைவதைக் கண்டார். அங்கே ஒரு சமுதாயத்தைக் கண்டார். “துல்கர்னைனே! அவர்களை நீர் தண்டிக்கலாம்; அல்லது அவர்களிடமிருந்து அழகிய முறையில் (வரியை) பெற்றுக் கொள்ளலாம்” என்று கூறினோம்.
87. “அநீதி இழைத்தவனைப் பின்னர் தண்டிப்போம். பின்னர் அவன் தனது இறைவனிடம் கொண்டு செல்லப்படுவான். அவன் கடுமையாகத் தண்டிப்பான்” என்று அவர் கூறினார்.
88. நம்பிக்கை கொண்டு நல்லறம் செய்வோருக்கு அழகிய கூலி உண்டு. நமது கட்டளைகளில் எளிதானதை அவருக்குக் கூறுவோம்.
89. பின்னர் ஒரு வழியில் சென்றார்.
90. முடிவில் சூரியன் உதிக்கும் திசையை அடைந்தபோது ஒரு சமுதாயத்தின் மீது அது உதிக்கக் கண்டார். அவர்களுக்கு அதிலிருந்து எந்தத் தடுப்பையும் நாம் ஏற்படுத்தவில்லை.
91. இவ்வாறே அவரிடம் உள்ளதை முழுமையாக அறிவோம்.
92. பின்னர் ஒரு வழியில் தொடர்ந்து சென்றார்.
93. முடிவில் இரண்டு மலைகளுக்கிடையே உள்ள பகுதியை அவர் அடைந்தபோது, அதற்கப்பால் எந்தப் பேச்சையும் புரிந்து கொள்ளாத ஒரு சமுதாயத்தைக் கண்டார்.
94. “துல்கர்னைனே! யஃஜூஜ், மஃஜூஜ் என்போர் பூமியில் குழப்பம் விளைவிக்கின்றனர். எங்களுக்கும், அவர்களுக்கும் இடையே ஒரு தடுப்பை நீர் ஏற்படுத்திட உமக்கு நாங்கள் வரி தரட்டுமா?” என்று அவர்கள் (சைகை மூலம்) கேட்டனர்.
95. “என் இறைவன் எனக்கு அளித்திருப்பதே சிறந்தது. வலிமையால் எனக்கு உதவுங்கள்! உங்களுக்கும், அவர்களுக்குமிடையே தடுப்பை அமைக்கிறேன்” என்றார்.
96. (தனது பணியாளர்களிடம்) “என்னிடம் இரும்புப் பாளங்களைக் கொண்டு வாருங்கள்!” என்றார். இரு மலைகளின் இடைவெளி (மறைந்து) மட்டமானபோது “ஊதுங்கள்!” என்று கூறி அதைத் தீயாக ஆக்கினார். “என்னிடம் செம்பைக் கொண்டு வாருங்கள்! அதன் மீது (உருக்கி) ஊற்றுவேன்” என்றார்.
97. அதில் மேலேறுவதற்கும், அதில் துவாரம் போடவும் அவர்களுக்கு இயலாது.
98. இது எனது இறைவனின் அருள். என் இறைவனின் வாக்கு நிறைவேறும்போது இதை அவன் தூளாக்கி விடுவான். என் இறைவனின் வாக்குறுதி உண்மையானது என்றார்.
99. அவர்களை ஒருவரோடு ஒருவராக மோத விடுவோம். ஸூர் ஊதப்படும். அவர்கள் அனைவரையும் ஒன்று திரட்டுவோம்.
அல்குர்ஆன் : 18 – 83 -99