துஆ (பிரார்த்தனையின்) ஒழுங்குகள்
இறைவன் மிக அருகில் இருந்து, அனைவரின் கோரிக்கைகளையும் அவன் நிறைவேற்றுகிறான் என்றால் நாங்கள் கேட்கும் எத்தனையோ பிரார்த்தனைகளுக்கு எந்தப் பலனும் ஏற்படவில்லையே என்று அரை குறை நம்பிக்கையுள்ளவன் நினைக்கிறான். இதனால் இறைவனிடம் பிரார்த்தனை செய்வதையே விட்டு விடக் கூடியவர்களும் உள்ளனர். பிரார்த்தனை செய்வதற்குரிய ஒழுங்குகளை அவர்கள் கடைப்பிடிக்காததும்,பிரார்த்தனை ஏற்கப்படுவதற்குரிய நிபந்தனைகளை அவர்கள் பேணாததும் தான் இதற்குக் காரணம்.
ஹராமானவற்றைத் தவிர்க்க வேண்டும்
நீண்ட பயணத்தில் ஒருவன் புறப்பட்டு, ஆடைகளும் உடம்பும் புழுதி படிந்த நிலையில்,இறைவா! இறைவா! என்று பிரார்த்திக்கிறான். அவனது உடை, உணவு, பானம் ஆகியவை ஹராமானதாக இருக்கும் போது அவனது பிரார்த்தனை எவ்வாறு அங்கீகரிக்கப்படும்? என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம்-1844 (1686)
மார்க்கத்தில் தடை செய்யப்பட்ட முறையில் பொருளீட்டி உண்பதால் ஒருவனது துஆ அங்கீகரிக்கப்படுவதில்லை என்பதை இந்த ஹதீஸ் விளக்குகின்றது. தங்களின் பிரார்த்தனை அங்கீகரிக்கப்பட வேண்டுமென்று விரும்பக் கூடியவர்கள் அனுமதிக்கப்பட்ட முறையில் பொருளீட்டுவதில் கவனம் செலுத்த வேண்டும்.
அவசரப்படக் கூடாது
அல்லாஹ்விடம் பிரார்த்திக்கும் போது அவசரப்படக் கூடாது. ஒன்றுக்குப் பலமுறை திரும்பத் திரும்பக் கேட்க வேண்டும். ஒரு தடவை பிரார்த்தனை செய்து விட்டு நான் கேட்டேன்; கிடைக்கவில்லை என்ற முடிவுக்கு வந்து விடக் கூடாது. இத்தகைய எண்ணத்துடன் கேட்பவர்களின் துஆக்கள் அங்கீகரிக்கப்படுவதில்லை. நாம் கேட்டவுடன் தருவதற்கு அல்லாஹ் நமது வேலையாள் அல்ல! அவன் நமது எஜமானன். எஜமானனிடம் கெஞ்சிக் கேட்பதே முறையாகும்.
நான் பிரார்த்தனை செய்தேன்; அங்கீகரிக்கப்படவில்லைஎன்று கூறி அவசரப்படாத வரை உங்கள் துஆக்கள் அங்கீகரிக்கப்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி-6340 .
பாவமானதைக் கேட்கக் கூடாது
பிரார்த்திக்கும் போது இறைவன் எதைத் தடை செய்துள்ளானோ, அதைக் கேட்கக் கூடாது.இறைவா! லாட்டரிச் சீட்டில் என்னைப் பணக்காரனாக்கு! என்பது போன்ற பிரார்த்தனைகள் இறைவனால் அங்கீகரிக்கப்படுவதில்லை.
பாவமானவற்றையும், உறவினரைப் பகைப்பதாகவும், பிரார்த்திக்காத வரை அடியானின் பிரார்த்தனை அங்கீகரிக்கப்பட்டுக் கொண்டே இருக்கும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம்-5285 (4918)
மரணத்தைக் கேட்கக் கூடாது
முதுமையின் காரணமாக மற்றவர்களுக்குப் பாரமாகி, சொந்த பந்தங்கள் கூட அலட்சியப்படுத்துவதைக் காணும் போது ஏன் இவ்வுலகில் நாம் வாழ வேண்டும்? என்று எண்ணுவார்கள். இறைவா! சீக்கிரம் என்னை மரணிக்கச் செய்து விடு!என்று பிரார்த்தனை செய்து விடுவார்கள்.
எந்த நிலையிலும் யாரும் மரணத்தை இறைவனிடம் கேட்கவும் கூடாது; மனதால் அதற்கு ஆசைப்படவும் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள்.
தனக்கு ஏற்பட்ட துன்பத்தின் காரணமாக உங்களில் யாரும் மரணிக்க ஆசைப்படக் கூடாது. அப்படிச் செய்ய வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டால் இறைவா! நான் வாழ்வது எனக்குச் சிறந்ததாக இருக்கும் வரை என்னை வாழ வை! நான் மரணிப்பது எனக்கு நல்லதாக இருந்தால் என்னை மரணிக்கச் செய் என்று கூறட்டும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி). நூல்: புகாரி-5671 , 6351
இறந்தவருக்காகப் பிரார்த்தனை செய்தல்
இறந்தவர்களுக்காக, உயிருடன் உள்ளவர்கள் செய்யும் மற்றொரு நன்மை அவருக்காக அதிகமதிகம் அல்லாஹ்விடம் துஆச் செய்வதாகும்.
அல்குர்ஆன் 59:10
குறிப்பாக இறந்தவரின் பிள்ளைகள் துஆச் செய்வது இறந்தவருக்குப் பெரிதும் பயன் தரும்.
ஒரு மனிதன் மரணித்து விட்டால் மூன்று காரியங்கள் தவிர மற்ற செயல்பாடுகள் முடிந்து விடும். அவை: நிலையான தர்மம், பிறர் பயன்பெறும் கல்வி, தனக்காகப் பிரார்த்தனை செய்யும் நல்லொழுக்கமுள்ள சந்ததி என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி, நூல்: முஸ்லிம்-3358 (3084)
மனிதன் மரணித்த பின் பயன் தரும் மூன்று காரியங்களில் பெற்றோருக்காகப் பிள்ளைகள் செய்யும் பிரார்த்தனையையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். எனவே பிள்ளைகள் தமது பெற்றோருக்காக அதிகமதிகம் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து கொண்டே வர வேண்டும். இதனால் பெற்றோர் நன்மைகளை அடைவார்கள்.
மகான்கள் பொருட்டால் கேட்கக் கூடாது
பிரார்த்தனை செய்து முடிக்கும் போது, இறைவா! இந்தப் பெரியாரின் பொருட்டால் இப்பிரார்த்தனையை ஏற்றுக் கொள் என்று சிலர் கூறுகின்றனர். இது முற்றிலும் தவறாகும்.
தனது அடிமைத் தனத்தையும், இறைவனின் பேராற்றலையும் உணர்ந்து உருகிக் கேட்கும் வகையில் அமைந்த பிரார்த்தனையைத் தான் இறைவன் ஏற்றுக் கொள்வான். மற்றவர் பெயரைச் சொல்லி இறைவனை மிரட்டுவது போல் அமைந்த இது போன்ற திமிரான வார்த்தைகள் இறைவனுக்குக் கடும் கோபத்தை ஏற்படுத்தும். எந்த மகானுக்காகவும் இறைவன் எதையும் தரவேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை. ஆதம் (அலை) அவர்கள் நபிகள் நாயகத்தின் பொருட்டால் மன்னிப்புக் கேட்டதால் மன்னிக்கப்பட்டனர் என்ற கட்டுக் கதையை இதற்கு ஆதாரமாகக் காட்டுகின்றனர்.
திர்மிதீ, ஹாகிம் ஆகிய நூல்களிலும், இன்ன பிற நூல்களிலும் பதிவு செய்யப்பட்ட இச்செய்தியை இட்டுக்கட்டப்பட்டது என அறிஞர்கள் கூறியுள்ளனர்.
அப்துர் ரஹ்மான் பின் ஸைத் பின் அஸ்லம் என்பவர் வழியாகவே இது அறிவிக்கப்படுகிறது. அவர் இட்டுக் கட்டிக் கூறுவதில் பிரசித்தி பெற்றவர்.
ஆதம் (அலை) எவ்வாறு மன்னிப்புக் கேட்டார் என்று திருக்குர்ஆனின் 2:37, 7:23 வசனங்கள் விளக்குவதற்கு எதிராகவும் இந்தக் கதை அமைந்துள்ளது.
(பாவ மன்னிப்புக்குரிய) சில வார்த்தைகளை இறைவனிடமிருந்து ஆதம் பெற்றுக் கொண்டார். எனவே அவரை இறைவன் மன்னித்தான்; அவன் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
(அல்குர்ஆன் 2:37)
இறைவன் புறத்திருந்து சில வார்த்தைகளை ஆதம் (அலை) கற்றுக் கொண்டார் என்று திருக்குர்ஆனின் 2:37 வசனத்தில் கூறப்படுகிறது. அந்த வார்த்தைகள் யாவை என்பது இங்கே கூறப்படாவிட்டாலும் திருக்குர்ஆனின் 7:23 வசனத்தில் அந்த வார்த்தைகள் யாவை எனக் கூறப்பட்டுள்ளது.
எங்கள் இறைவா! எங்களுக்கே தீங்கு இழைத்து விட்டோம். நீ எங்களை மன்னித்து, அருள் புரியவில்லையானால் நஷ்டமடைந்தோராவோம் என்று அவ்விருவரும் கூறினர்.
(அல்குர்ஆன் 7:23)
இதைக் கூறித் தான் இருவரும் மன்னிப்புக் கேட்டனர்; அல்லாஹ் அவர்களை மன்னித்தான் என்பதையும், தமது தவறை உணர்ந்து வருந்திக் கேட்கும் போது தான் இறைவன் மன்னிப்பான் என்பதையும் 7:23 வசனத்திருந்து அறியலாம்.
எனவே அந்தக் கதையை நம்புவது குர்ஆனுக்கு எதிரானதாகும்.இறைவன் பால் வஸீலாவைத் தேடிக் கொள்ளுங்கள் என்ற வசனத்துக்கு தவறான பொருள் கொடுத்து, அதனடிப்படையில் இவ்வாறு பிரார்த்திக்கின்றனர்.
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! அவனை நோக்கி ஒரு வஸீலாவைத் தேடிக் கொள்ளுங்கள்! அவன் பாதையில் அறப்போர் செய்யுங்கள்! வெற்றி பெறுவீர்கள்.
(அல்குர்ஆன் 5:35)
வஸீலா என்பதன் பொருள் சாதனம்.
கடல் பயணம் செய்ய கப்பல் வஸீலாவாகசாதனமாக உள்ளது என்பர். நாம் நல்வழியில் நடக்கத் தேவையில்லை; எந்த நல்லறமும் செய்யத் தேவையில்லை;எந்தத் தீமையிருந்தும் விலகத் தேவையில்லை; ஏதாவது ஒரு மகானைப் பிடித்துக் கொண்டால் போதும்; கடவுளை நெருங்கிடலாம்என்ற நம்பிக்கை உலகில் உள்ள பல மதங்களிலும் இருக்கிறது. இஸ்லாம் இந்த நம்பிக்கையை நிராகரிக்கின்றது. இறைவனை நெருங்க நினைப்பவர்கள் நல்லறங்கள் எனும் வஸீலாவைசாதனத்தைத் தேடிக் கொள்ள வேண்டும் என்று இங்கே கட்டளையிடப்படுகின்றது.
இறைவனை நெருங்க வேண்டுமானால் ஒவ்வொருவரும் நல்லறங்கள் செய்து அதன் மூலமே நெருங்க வேண்டும். அவ்வாறின்றி மகான்களை இடைத் தரகர்களாகப் பயன்படுத்தி வெற்றி பெற முடியாது என்பதே வஸீலா தேடுங்கள்!என்பதன் கருத்தாகும்.
இடைத் தரகர்களை அறவே ஒழித்துக் கட்டும் வகையில் அமைந்த இவ்வசனத்தை இடைத் தரகர்களை ஏற்படுத்திக் கொள்ளுங்கள் என்று நேர் மாறாக விளங்கிக் கொள்கிறார்கள்.
வஸீலாவுக்கு மகான்கள், இடைத் தரகர்கள் என்ற அர்த்தம் கிடையாது. இவ்வசனத்தின் (5:35)துவக்கத்தில் நம்பிக்கையாளர்களே என்று அழைக்கப்படுகிறது. இந்த அழைப்பில் மகான்கள் என்று கருதப்படுவோரும் அடங்குவார்கள். மகான்களும் வஸீலா தேட வேண்டும் என்பது தான் இவ்வசனத்தின் பொருள்.
நம்பிக்கையாளர்களே என்ற அழைப்பில் முதல் அடங்கக் கூடியவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாம். அவர்களுக்கும் வஸீலா தேடும் கட்டளை உள்ளது. அவர்கள் எந்த மகானைப் பிடிப்பார்கள்? என்று சிந்தித்தால் இப்படி விளங்க மாட்டார்கள்.
இவ்வசனத்தில் மூன்று கட்டளைகள் உள்ளன. மற்ற இரண்டு கட்டளைகள் எவ்வாறு மகான்கள் உள்ளிட்ட அனைவரையும் கட்டுப்படுத்துமோ, அது போல் தான் வஸீலா தேடும் கட்டளையும் அனைவரையும் கட்டுப்படுத்தும்.
மகான்கள் கூட வஸீலா தேடுகிறார்கள் என்று மற்றொரு வசனம்
(இவர்கள் யாரிடம் பிரார்த்திக்கிறார்களோ அவர்களில் (இறைவனுக்கு) மிகவும் நெருக்கமானவர்களே தமது இறைவனை நோக்கி வஸீலாவை (இறைவனை நெருங்குவதற்கான வழியைத்) தேடுகின்றனர். அவனது அருளை எதிர்பார்க்கின்றனர். அவனது வேதனைக்கு அஞ்சுகின்றனர். உமது இறைவனின் வேதனை அச்சப்பட வேண்டியதாகும்.
(அல்குர்ஆன் 17:57) தெளிவாகவே கூறுகிறது.
எனவே நல்லறங்கள் எனும் வஸீலா – சாதனம் மூலம் இறைவனை நெருங்குங்கள் என்று பொருள் கொண்டால் தான் நபிகள் நாயகம் (ஸல்) உள்ளிட்ட அனைத்து முஃமின்களும் வஸீலா தேட வேண்டும் என்பது பொருந்தும். மகான்களைப் பிடித்துக் கொள்ளுங்கள் என்று பொருள் கொண்டால் இவ்வசனம் பொருளற்றதாகி விடும்.
வலியுறுத்திக் கேட்க வேண்டும்
இறைவனிடம் கேட்கும் போது, கேட்கப்படும் கோரிக்கை தனக்கு அவசியம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்க வேண்டும். உனக்கு விருப்பமிருந்தால் தா! இல்லாவிட்டால் தராதே!என்பது போல் கேட்கப்படும் துஆக்களும் அங்கீகரிக்கப்படுவதில்லை. எப்படிக் கேட்டாலும் அவன் விரும்பினால் தான் தருவான். விரும்பினால் தா! என்று கேட்கும் போது அவன் விரும்பாவிட்டால் கூட நிர்பந்தப்படுத்தி வாங்க முடியும் என்ற கருத்து இதில் உள்ளது.
உங்களில் எவரேனும் துஆச் செய்தால் வலியுறுத்திக் கேட்கட்டும்! நீ விரும்பினால் தா! என்று எவரும் கேட்க வேண்டாம். ஏனெனில் அவனை நிர்பந்தம் செய்பவன் எவனுமில்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி). நூல்: புகாரி-6338 , 6339, 7464, 7477
அனைத்தையும் கேட்க வேண்டும்
சாதாரண சின்னச் சின்ன விஷயங்களை அல்லாஹ்விடம் கேட்காமல் நானே அடைந்து கொள்ள முடியும். பெரிய விஷயங்களை மட்டும் தான் அவனிடம் கேட்பேன் என்று மக்கள் நடந்து கொள்கிறார்கள்..
தங்களுக்கு எவை சாத்தியமென நம்புகிறார்களோ அதைத் தான் இறைவனிடம் கேட்கின்றனர். தங்களுக்குச் சாத்தியமற்றவையாகத் தோன்றக் கூடியதை அவர்கள் இறைவனிடம் கேட்பதில்லை. இதவும் தவறாகும்.
திருமணம் ஆகி பத்து வருடங்கள் வரை குழந்தையில்லா விட்டால் அல்லாஹ்விடம் குழந்தையைக் கேட்கின்றனர். ஆனால் தள்ளாத வயதையடைந்தும் குழந்தை இல்லாவிட்டால் இறைவனிடம் கேட்பதில்லை.
தள்ளாத வயதுடையவர்களுக்குக் குழந்தை பிறப்பதில்லை என்பதால் இவ்வாறு நடந்து கொள்கின்றனர். இறைவனால் எதுவும் முடியும் என்ற நம்பிக்கையிருந்தால் இந்தக் கட்டத்திலும் வல்ல இறைவனிடம் பிரார்த்திப்பதைத் தவிர்க்க மாட்டார்கள்.
ஜக்கரியா நபியவர்கள் உடல் தளர்ந்து, எலும்புகள் பலவீனமடைந்து மயிர்கள் நரைத்து விட்ட நிலையில் தமக்கொரு சந்ததியைக் கேட்டார்கள். இறைவனும் சந்ததியை வழங்கினான். இதைத் திருக்குர்ஆன் தெளிவாகக் கூறுகிறது.
(இது) உமது இறைவன் தனது அடியார் ஸக்கரிய்யாவுக்குச் செய்த அருளைக் கூறுதல்! அவர் தமது இறைவனை இரகசியமாக அழைத்துப் பிரார்த்தித்தார். என் இறைவா! என் எலும்பு பலவீனமடைந்து விட்டது. தலையும் நரையால் மின்னுகிறது. என் இறைவா! உன்னிடம் பிரார்த்தித்ததில் நான் துர்பாக்கியசாலியாக இருந்ததில்லை.
(அல்குர்ஆன் 19: 2-4)
சிறிய தொழில் செய்பவன் தன்னைக் கோடீஸ்வரனாக்குமாறு இறைவனிடம் கேட்பதில்லை. சிறிய தொழிலில் கோடிக் கணக்கான ரூபாய்கள் எப்படிக் கிடைக்க முடியும் என்று எண்ணுகிறானே தவிர வல்ல அல்லாஹ்வுக்கு எதுவும் சாத்தியம் தான் என்று எண்ணுவதில்லை.
தன்னைப் போன்ற பலவீனனாக இறைவனையும் அவனது உள் மனது நினைக்கிறது. அனைத்தின் மீதும் பேராற்றலுடையவன் என்பதை நம்பவில்லை. இது தான் இந்தப் போக்குக்குக் காரணம். எனவே கேட்பதில் கஞ்சத்தனம் காட்ட வேண்டியதில்லை.
இரகசியமாகவும், பணிவாகவும் பிரார்த்தித்தல்
உங்கள் இறைவனைப் பணிவுடனும், இரகசியமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள்! வரம்பு மீறியோரை அவன் நேசிக்க மாட்டான்.
(அல்குர்ஆன் 7:55)
உமது இறைவனைக் காலையிலும், மாலையிலும் மனதிற்குள் பணிவாகவும், அச்சத்துடனும்,சொல்லில் உரத்த சப்தமில்லாமலும் நினைப்பீராக! கவனமற்றவராக ஆகி விடாதீர்.
(அல்குர்ஆன் 7:205)
இறைவனிடம் எவ்வாறு பிரார்த்தனை செய்வது என்ற வழி முறையை இவ்வசனங்கள் கற்றுத் தருகின்றன.
ஒரு அதிகாரியிடம், அமைச்சரிடம் நமது கோரிக்கைகளை எழுப்புவது என்றால் அதற்கென சில ஒழுங்கு முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை நாம் அறிந்து வைத்துள்ளோம்.
நமது கோரிக்கையைக் கேட்கும் போது அடுக்கு மொழியில் வசனம் பேசினால் அல்லது ராகம் போட்டு கோரிக்கையை எழுப்பினால் கோரிக்கை எவ்வளவு நியாயம் என்றாலும் அந்த அதிகாரி ஏற்க மாட்டார். அல்லது கடுமையான சப்தத்தில் கோரிக்கையை எழுப்பினாலும் கோரிக்கை நிராகரிக்கப்படும்.
மனிதனிடம் கோரிக்கை வைக்கும் போது காட்டப்படும் பணிவை விட அல்லாஹ்விடம் ஆயிரமாயிரம் மடங்கு அதிகமாக பணிவைக் காட்ட வேண்டும். அதைத் தான் அல்லாஹ் இங்கே கூறுகிறான்.
பணிவுடன் உங்கள் இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள் என்பது முதலாவது ஒழுங்கு. அல்லாஹ்விடம் கேட்கும் போது ராகம் போட்டோ, அடுக்கு மொழியிலோ கேட்டால் அங்கே பணிவு எடுபட்டுப் போய் விடும்.
பெரும்பாலான பள்ளிவாசல்களில் இப்படித் தான் பணிவு இல்லாமல், யாரிடம் கேட்கிறோம் என்ற உணர்வு இல்லாமல் சடங்காகப் பிரார்த்தனை செய்கின்றனர்.
மேலும் இரகசியமாகப் பிரார்த்திப்பது பிரார்த்தனையின் ஒழுங்காக இங்கே குறிப்பிடப்படுகிறது.
இதிலிருந்து கூட்டாக சப்தமிட்டுக் கேட்பது முறையான பிரார்த்தனை இல்லை என்பது தெரிய வரும்.
ஒவ்வொருவருக்கும் தனித் தனித் தேவைகள் உள்ளன. அவரவர் தத்தமது தேவையை தமது மொழியில் பணிவுடனும், ரகசியமாகவும் கேட்பதே பிரார்த்தனையின் முக்கிய ஒழுங்காகும்.
இறைவன் எவ்வாறு பிரார்த்திக்குமாறு நமக்குக் கட்டளையிடுகிறானோ, அவ்வாறு செய்யப்படும் பிரார்த்தனையைத் தான் ஏற்றுக் கொள்வான் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இரவின் கடைசி நேரம்
இரவை மூன்றாகப் பிரித்து அதில் கடைசிப் பகுதியில் கேட்கப்படும் துஆக்கள் அதிகம் பலனளிப்பவை. அந்த நேரத்தைத் தேர்வு செய்து பிரார்த்திக்க வேண்டும்.
இரவை மூன்றாகப் பிரித்து கடைசிப் பகுதியில் இறைவன் முதல் வானத்துக்குத் தினமும் இறங்குகிறான். என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அதை ஏற்கிறேன். என்னிடம் கேட்டால் கொடுக்கிறேன். என்னிடம் மன்னிப்புக் கேட்டால் மன்னிக்கிறேன் என்று கூறுகிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூற்கள்: புகாரி-1145 , 6321, 7494
ஸஜ்தாவின் போது..
அடியான் அல்லாஹ்விடம் அதிகம் நெருங்குவது ஸஜ்தாவின் போது தான். எனவே இந்தச் சந்தர்ப்பத்தையும் துஆவுக்காகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
அடியான், அவனது இறைவனுடன் மிகவும் நெருக்கமாக இருப்பது ஸஜ்தாவின் போது தான். எனவே அதில் துஆவை அதிகப்படுத்துங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம்-832 (744)
மறைமுகமாகச் செய்யும் பிரார்த்தனை
நமக்கு வேண்டியவருக்காக அவர் முன்னிலையில் துஆச் செய்வதை விட, அவருக்குத் தெரியாமல் அவருக்காகச் செய்யும் துஆக்கள் நிச்சயம் அங்கீகரிக்கப்படும்.
ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்காக மறைவாக துஆச் செய்தால் அது அங்கீகரிக்கப்படும். அவனது தலைமாட்டில் ஒரு வானவர் இருப்பார். இவர் துஆச் செய்யும் போதெல்லாம் அந்த வானவர் ஆமீன் எனக் கூறிவிட்டு, உனக்கும் அது போல் கிடைக்கும் எனக் கூறுவார் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.
அறிவிப்பவர்: அபுத்தர்தா (ரலி), நூல்: முஸ்லிம்-5281 (4912)
பிரார்த்தனைக்குப் பலன் தெரியாவிட்டால்…
நீங்கள் கேளுங்கள், தருகிறேன் என்ற இறைவனின் உறுதிமொழியில் எந்தச் சந்தேகமும் இல்லை. கேட்பதற்கான ஒழுங்குகளைப் பேணிக் கொண்டால் எந்தப் பிரார்த்தனையும் வீண் போவதில்லை.
இந்த ஒழுங்குகளை எல்லாம் பூரணமாகப் பேணிய பிறகும் துஆக்கள் அங்கீகரிக்கப்படாமல் போனால் அதனால் நம்பிக்கையிழந்து விடக் கூடாது. நமது துஆவை இறைவன் அங்கீகரிக்கவில்லை என்று எண்ணி விடக் கூடாது.
நாம் கேட்பது நமக்கே தீங்கு விளைவிக்கக் கூடியதாக இருக்கலாம். அது நமக்குத் தெரியாவிட்டாலும் இறைவனுக்குத் தெரியும். எனவே கேட்டதைத் தராமல் அதை விடச் சிறந்ததை அல்லாஹ் தருவான்.
விபரமறியாத குழந்தைகள் தாயிடம் ஆபத்தான கத்தியை வாங்கிக் கேட்டால் தாய் அதை வாங்கிக் கொடுக்க மாட்டாள். மாறாக அதை விட அதிக விலையில் உள்ள வேறு பொருளை வாங்கிக் கொடுப்பாள். தாயை விட அதிகக் கருணையுடையவன் இறைவன். அடியான் அறியாமையினால் அவனுக்குத் தீங்கிழைக்கக் கூடியதைக் கேட்டால் அதைத் தராமல் அதை விடச் சிறந்ததை வழங்குவான்.
ஒரு அடியான் பெருஞ் செல்வத்தைக் கேட்கலாம். அந்தச் செல்வம் அந்த அடியானைத் தவறான வழியிலும், இறை நிராகரிப்பிலும் செலுத்தி விடும் என்று இருந்தால் அதைக் கொடுக்காமல் அதை விடச் சிறந்ததைக் கொடுப்பான்.
அது இல்லையெனில் அவனுக்கு வரவிருக்கின்ற ஆபத்தைத் தடுப்பான். நம்மிடம் ஒரு மனிதன் ஒரு உதவியைக் கேட்கிறான். அந்த நேரத்தில் அந்த மனிதனின் பின்னால் ஒரு பாம்பு தீண்டத் தயாராக இருப்பதை நாம் பார்த்து விடுகிறோம். இந்த நேரத்தில் அவன் கேட்ட உதவியை நாம் செய்ய மாட்டோம். மாறாக பாம்பை அடிப்போம். அல்லது அவனைப் பாம்பு தீண்டாமல் வேறு புறம் இழுப்போம்.
அடியான் தனக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தை உணராமல் வேறு தேவையைக் கேட்டால்,அளவற்ற அருளாளனாகிய அல்லாஹ் அதைக் கொடுப்பதற்குப் பகரமாக அந்த ஆபத்தை நீக்குகிறான்.
அவ்வாறு இல்லையெனில் அவன் கேட்டதைக் கொடுக்காமல் அதற்காக மறுமையில் அவனது நிலையை இறைவன் உயர்த்துகிறான். ஆகவே கேட்டது கிடைக்காவிட்டாலும் ஏதோ நன்மைக்காக இறைவன் மறுமைப் பயனாக அதை மாற்றி விடுவான் என நம்ப வேண்டும்.
பாவமற்ற விஷயங்களிலும், உறவினரைப் பகைக்காத விஷயத்திலும் யாரேனும் அல்லாஹ்விடம் கேட்டால் மூன்று வழிகளில் ஏதேனும் ஒரு வழியில் அதை இறைவன் அங்கீகரிக்கிறான். அவன் கேட்டதையே கொடுப்பான் அல்லது அதை மறுமையின் சேமிப்பாக மாற்றுவான் அல்லது அவனுக்கு ஏற்படும் தீங்கை நீக்குவான்என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள் அப்படியானால் நாங்கள் அதிகமாகக் கேட்போமே! என்றனர். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவர்கள் அல்லாஹ் அதை விட அதிகம் கொடுப்பவன்என்றார்கள்.
அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி), நூல்: அஹ்மத்-11133 (10709)
எனவே துஆக்கள் அனைத்தையும் இறைவன் அங்கீகரிக்கிறான் என்பதில் எள்ளளவும் சந்தேகம் கொள்ளக் கூடாது.
இந்த ஒழுங்குகளைப் பேணி, இந்த வாய்ப்புக்களைப் பயன்படுத்திக் கொண்டால் பிரார்த்தனைகள் அங்கீகரிக்கப்படுவதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
பிரார்த்தனைகள் அங்கீகரிக்கப்பட்ட மக்களாக நம் அனைவரையும் இறைவன் ஆக்கியருள் புரிவானாக!