திருமணத்திற்கு பெண்ணுடைய சம்மதம்
தனக்குப் பிடித்தக் கணவனை தன் விருப்பப்படி தேர்வு செய்வதற்கு பெண்ணிற்கு முழுமையாக இஸ்லாத்தில் உரிமை வழங்கப்பட்டுள்ளது.
பெண்ணுடைய விருப்பமில்லாமல் நடத்தப்படும் திருமணம் செல்லாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நபி (ஸல்) அவர்கள், “கன்னிகழிந்த பெண்ணை, அவளது (வெளிப்படையான) உத்தரவு பெறாமல் மணமுடித்துக் கொடுக்க வேண்டாம். கன்னிப் பெண்ணிடம் (ஏதேனும் ஒருமுறையில்) அனுமதி பெறாமல் மண முடித்துக் கொடுக்க வேண்டாம்” என்று சொன்னார்கள்.
மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! எப்படி கன்னியின் அனுமதி(யைத் தெரிந்துகொள்வது)” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், “அவள் மௌனம் சாதிப்பதே (அவளது சம்மதம்) என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : புகாரி (5136)
கன்னி கழிந்த பெண்ணான என்னை என் தந்தை (ஒருவருக்கு) மணமுடித்துவைத்தார்கள். எனக்கு இதில் விருப்பமிருக்கவில்லை. ஆகவே, நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் போ(ய் என் விருப்பத்தைச் சொன்)னேன். அத்திருமணத்தை நபி (ஸல்) அவர்கள் ரத்துச் செய்தார்கள்.
அறிவிப்பவர் : கன்ஸா பின்த் கிதாம் அல்அன்சாரியா (ரலி)
நூல் : புகாரி (5138)
திருமணப் பொருத்தம்
ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் தன் வாழ்க்கைத் துணையை தேர்வு செய்யும் போது ஒழுக்கத்தையும் மார்க்கப்பிடிப்பபையும் முதலில் கவனத்தில் கொண்டு தேர்வு செய்ய வேண்டும்.
இதற்கடுத்து பெண்கள் கணவன் செல்வந்தனாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதில் தவறில்லை.
கெட்ட பெண்கள், கெட்ட ஆண்களுக்கும் கெட்ட ஆண்கள், கெட்ட பெண்களுக்கும் (உரியோர்). நல்ல பெண்கள், நல்ல ஆண்களுக்கும் நல்ல ஆண்கள், நல்ல பெண்களுக்கும் (தகுதியானோர்).
அல்குர்ஆன் (24 : 26)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நான்கு நோக்கங்களுக்காக ஒரு பெண் மணமுடிக்கப்படுகிறாள்:
1. அவளது செல்வத்திற்காக.
2. அவளது குடும்பப் பாரம்பரியத்திற்காக.
3. அவளது அழகிற்காக.
4. அவளது மார்க்க (நல்லொழுக்க)த் திற்காக.
ஆகவே, மார்க்க (நல்லொழுக்க)ம் உடையவளை (மணந்து) வெற்றி அடைந்து கொள்! (இல்லையேல்) உன்னிரு கரங்களும் மண்ணாகட்டும்!
அறிவிப்பவர் : அபூஹ‚ரைரா (ரலி)
நூல் : புகாரி (5090)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (வந்து), முஆவியா பின் அபீசுஃப்யான் (ரலி) அவர்களும் அபூஜஹ்ம் பின் ஹுதைஃபா (ரலி) அவர்களும் என்னைப் பெண் கேட்கின்றனர்” என்று சொன்னேன்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அபூஜஹ்ம் தமது கைத்தடியைத் தோளிலிருந்து கீழே வைக்கமாட்டார். (கோபக்காரர்; மனைவியரைக் கடுமையாக அடித்துவிடுபவர்).
முஆவியோ, அவர் ஓர் ஏழை; அவரிடம் எந்தச் செல்வமும் இல்லை. நீ உசாமா பின் ஸைதை மணந்துகொள்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி)
நூல் : முஸ்லிம் (2953)
பிடித்தவரிடத்தில் நேரடியாக சம்மதம் கேட்கலாம்
மனதிற்குப் பிடித்த ஆணிடத்தில் ஒரு பெண் நேரடியாக என்னைத் திருமணம் செய்துகொள்கிறீர்களா? என்று கேட்பது குற்றமில்லை.
நான் அனஸ் (ரலி) அவர்கள் அருகில் இருந்தேன். அன்னாருடன் அவர்களுடைய புதல்வியார் ஒருவரும் இருந்தார். (அப்போது) அனஸ் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தன்னை மணந்து கொள்ளுமாறு கோரியபடி ஒரு பெண் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! (மணமுடித்துக் கொள்ள) நான் தங்களுக்கு அவசியமா?” எனக் கேட்டார்” என்று கூறினார்கள்.
அப்போது அனஸ் (ரலி) அவர்களுடைய புதல்வி, “என்ன வெட்கங்கெட்டத் தனம்! என்ன அசிங்கம்! என்ன அசிங்கம்!!” என்று சொன்னார்.
அனஸ் (ரலி) அவர்கள், “அந்தப் பெண்மணி உன்னைவிடச் சிறந்தவர்; அந்தப் பெண் நபியவர்களை (மணந்துகொள்ள) ஆசைப்பட்டார். ஆகவே, தன்னை மணந்து கொள்ளுமாறு கோரினார்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஸாபித் அல் புனானி (ரஹ்)
நூல் : புகாரி (5120)