தடம்புரளாத உள்ளத்தை வேண்டுவோம்.
உள்ளம் என்பது உறுதித் தன்மை அற்றதாக, தவறைத் தூண்டக்கூடியதாகவே இருக்கின்றது.
எனது உள்ளம் தூய்மையானது என்று நான் சாதிக்கவில்லை. எனது இறைவன் அருள் புரிந்ததைத் தவிர உள்ளம் தீமையைத்தான் அதிகம் தூண்டுகிறது. என் இறைவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன் (என்று யூசுப் கூறினார்).
அல்குர்ஆன் 12:53
உள்ளத்தில் ஏற்படும் சிறு தடுமாற்றம் கூட நம்மை ஒரேயடியாகத் திசை திருப்பிவிடுகின்றது. நன்மையிலும் இறையச்சத்திலும் ஈமானிய உறுதியிலும் நம்மை முந்தி விட்ட, நம்மைவிடச் சிறந்தவர்களான நபித்தோழர்கள், உஹத் போர்க்களத்தில் நபிகளார் மரணித்துவிட்டதாக வதந்தி பரவிய போது அவர்களது உள்ளங்கள் தடுமாறி, தடம்புரள முற்பட்டது. எனினும் அல்லாஹ் அவர்களைக் காப்பாற்றினான். எனவே தான் தடம்புரளாத உள்ளத்தையும், இறையச்சத்தையும் இறைவனிடம் வேண்டி ஒவ்வொரு நாளும் நாம் மன்றாட வேண்டும்.
ஒரு சமயம் நபியவர்கள், உள்ளங்களைப் புரட்டக் கூடியவனே! என்னுடைய உள்ளத்தை உனது மார்க்கத்தில் நிலைத்திருக்கச் செய்வாயாக! எனப் பிரார்த்தித்தார்கள்.
இதனைச் செவியுற்ற சிலர், அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் உங்களையும், நீங்கள் கொண்டு வந்ததையும் விசுவாசம் கொண்டுள்ளோம். இப்படியிருக்க எங்கள் மீது அச்சப்படுகிறீர்களா? எனக் கேட்க,
அதற்கு நபியவர்கள், ஆம், நிச்சயமாக உள்ளங்கள் அல்லாஹ்வின் விரல்களில் இரு விரல்களுக்கு மத்தியில் உள்ளன. அவன் நாடிய பிரகாரம் அதனைப் புரட்டுகின்றான் என பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: திர்மிதி 2140
ஒரு தலைவர் வெளியே போய்விட்டால் உடனே ஏகத்துவக் கோட்டை சரிந்து விட்டதைப் போன்று எதிரிகள் பரப்பினாலும், கொள்கையை மட்டுமே தலைவனாகக் கொண்ட கூட்டத்திற்கு ஒருபோதும் வீழ்ச்சி ஏற்படாது. யார் வந்தாலும் யார் போனாலும் இக்கொள்கையை அல்லாஹ் உறுதிப்படுத்தியே தீருவான்.
நல்ல கொள்கைக்குத் தூய்மையான ஒரு மரத்தை அல்லாஹ் எவ்வாறு உதாரணமாக ஆக்கியுள்ளான் என்பதை நீர் அறியவில்லையா? அம்மரத்தின் வேர் (ஆழப் பதிந்து) உறுதியாகவும், அதன் கிளை ஆகாயத்திலும் உள்ளது.
தனது இறைவனின் விருப்பப்படி ஒவ்வொரு நேரமும் தனது உணவை அது வழங்குகிறது. மக்கள் படிப்பினை பெறுவதற்காக அவர்களுக்கு அல்லாஹ் உதாரணங்களைக் கூறுகிறான்.
தீய கொள்கைக்கு உதாரணம் கெட்ட மரம். அது பூமியின் மேற்புறத்திலிருந்து பிடுங்கப்பட்டுள்ளது; அது நிற்காது.
நம்பிக்கை கொண்டோரை உறுதியான கொள்கையின் மூலம் இவ்வுலக வாழ்க்கையிலும், மறுமையிலும் அல்லாஹ் நிலைப்படுத்துகிறான். அநீதி இழைத்தோரை அல்லாஹ் வழிகேட்டில் விட்டு விடுகிறான். அல்லாஹ் நாடியதைச் செய்வான்.
அல்குர்ஆன் 14:24-27
————————
ஏகத்துவம்