ஜின்கள் பற்றி..
அல்ஜின்னு என்ற அரபு வார்த்தை குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் பரவலாக பயன்படுத்தப்பட்டுள்ளது. ஜின்கள் என்பது மனிதர்களைப் போன்று பகுத்தறிவு வழங்கப்பட்டு இறைக்கோட்பாடுகளை கடைபிடிக்குமாறு வலியுறுத்தப்பட்ட உயிரினமாகும்.
மனிதர்களுக்கும் ஜின்களுக்கும் பல ஒற்றுமைகள் இருப்பது போல் சில வேற்றுமைகளும் உள்ளது.
மனிதர்களை நம் கண்களால் காண முடியும். ஆனால் ஜின்களை மனிதக் கண்களால் காண முடியாது.
மாறாக ஜின்களால் மனிதர்களை காணமுடியும்.
ஜன்ன என்ற வினைச் சொல்லிலிருந்து ஜின் என்ற வார்த்தை பிரிந்து வந்துள்ளது. மறைத்தல் மறைதல் என்பது இதன் நேரடிப் பொருளாகும். திருமறைக் குர்ஆனில் ஜன்ன என்ற வார்த்தை மூடுதல் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இரவு அவரை மூடிக் கொண்ட போது ஒரு நட்சத்திரத்தைக் கண்டு “இதுவே என் இறைவன்” எனக் கூறினார். அது மறைந்த போது “மறைபவற்றை நான் விரும்ப மாட்டேன்” என்றார்.
அல்குர்ஆன் (6 : 76)
எதிரிகளின் தாக்குதல்களிலிருந்து தன்னை மறைத்துக் கொள்வதற்கு கேடயம் உதவுவதால் கேடயத்திற்கு ஜுன்னத் என்று சொல்லப்படுகிறது. தாயின் வயிற்றில் உள்ளக் குழந்தை மறைவாக இருப்பதால் அதற்கு ஜனீன் என்று கூறப்படுகிறது.
பாம்புகள் மனிதக் கண்களை விட்டு விரைவில் மறைந்துவிடுவதால் பாம்புகளுக்கு ஜான் என்று கூறப்படுகிறது. ஜின்கள் மனிதக்கண்களுக்கு புலப்படாமல் மறைந்து இருப்பதால் இதற்கு ஜின் என்று கூறப்படுகிறது.
நூல் : லிஸானுல் அரப் பாகம் : 13 பக்கம் : 92
ஜின்கள் இருப்பது உண்மை
ஜின் என்ற ஒரு படைப்பு உலகத்தில் இருப்பதாக திருக்குர்ஆனும் நபிமொழிகளும் தெளிவாக கூறுகிறது. ஒவ்வொரு முஸ்லிமும் நம்பிக்கைக்கொள்ள வேண்டிய மறைவான விஷயங்களிலும் இதுவும் ஒன்றாகும்.
வானவர்கள், சொர்க்கம், நரகம் இவற்றை நாம் யாரும் கண்களால் பார்த்துவிட்டு நம்பவில்லை. மாறாக குர்ஆனும் ஹதீஸ்களும் இவற்றை நம்புமாறு கூறுவதால் நம்புகிறோம். இது போன்று ஜின்களை நம் கண்களால் காணாவிட்டாலும் மறைவான நம்பிக்கை என்ற அடிப்படையில் ஜின்கள் இருப்பதாக நம்புபவரே உண்மையான இறைநம்பிக்கையாளராக இருக்க முடியும்.
இதுவரை மனிதனுடைய அறிவுக்குப் புலப்படாமல் உள்ள பல விஷயங்களில் இதுவும் ஒன்று என்று கருதுவதே ஈமானிற்கு உகந்தது. சில வழிகெட்ட கூட்டங்கள் ஜின்கள் என்று ஒரு படைப்பே இல்லை என்று கூறி மக்களை வழிகெடுத்துக்கொண்டிருக்கிறது. ஜின்கள் தொடர்பாக இந்நூலில் குறிப்பிடப்படும் ஒவ்வொரு ஆதாரமும் இவர்களின் தவறான நம்பிக்கையை தகர்க்கக்கூடியதாக இருக்கிறது.
மனிதர்களுக்கு முன்னால் உருவாக்கப்பட்ட படைப்பு
மனித குலம் அனைத்திற்கும் தந்தையும் முதல் மனிதருமான ஆதம் (அலை) அவர்களை படைப்பதற்கு முன்பே ஜின்களை அல்லாஹ் படைத்துவிட்டதாக திருக்குர்ஆன் கூறுகிறது.
சேற்றிலிருந்த கருப்புக் களிமண்ணால் வடிவமைக்கப்பட்டு மனிதனைப் படைத்தோம். கடுமையான வெப்பமுடைய நெருப்பால் இதற்கு முன் ஜின்னைப் படைத்தோம்.
அல்குர்ஆன்(15 : 26, 27)
நெருப்பால் படைக்கப்பட்டவர்கள்
மனிதர்கள் மண்ணிலிருந்து படைக்கப்பட்டிருப்பது போல் ஜின்கள் நெருப்பிலிருந்து படைக்கப்பட்டுள்ளனர். ஜின்கள் நெருப்பிலிருந்து படைக்கப்பட்டதால் அவர்களின் உடலில் நெருப்பு பற்றிக்கொண்டிருக்கும் என்று விளங்கக்கூடாது.
மனிதன் மண்ணால் படைக்கப்பட்டாலும் தற்போது மனிதர்கள் மண் வடிவத்தில் இல்லை. மனிதனின் தோற்றமும் தன்மைகளும் மண்ணுடைய தோற்றத்திற்கும் தன்மைகளுக்கும் முற்றிலும் வேறுபட்டிருக்கிறது. இது போன்றே நெருப்பிற்கும் ஜின்களுக்கும் மத்தியில் தோற்றத்திலும் தன்மையிலும் வித்தியாசம் இருக்கலாம்.
கடுமையான வெப்பமுடைய நெருப்பால் இதற்கு முன் ஜின்னைப் படைத்தோம்.
அல்குர்ஆன் (15 : 27)
தீப்பிழம்பிலிருந்து ஜின்னைப் படைத்தான்.
அல்குர்ஆன் (55 : 15)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
வானவர்கள் ஒளியால் படைக்கப்பட்டனர். “ஜின்’கள் தீப்பிழம்பால் படைக்கப்பட்டனர். (ஆதி மனிதர்) ஆதம், உங்களுக்கு (குர்ஆனில்) கூறப்பட்டுள்ளதைப் போன்று (களிமண்ணால்) படைக்கப்பட்டார்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி),
நூல் : முஸ்லிம்-5722
பகுத்தறிவு வழங்கப்பட்டவர்கள்
ஜின்கள் என்பவர்கள் ஆடுமாடுகளைப் போன்று பகுத்தறிவற்ற உயிரினமில்லை. மாறாக மனிதர்களைப் போலவே பகுத்தறிவு வழங்கப்பட்டவர்கள். மனிதர்களைப் போலவே சொர்க்கம் நரகத்தை அடையக்கூடியவர்கள். சிந்தித்து நல்வழியை தேர்வு செய்யுமாறு வலியுறுத்தப்பட்டவர்கள்.
ஜின்களிலும், மனிதர்களிலும் நரகத்திற்காகவே பலரைப் படைத்துள்ளோம். அவர்களுக்கு உள்ளங்கள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் புரிந்து கொள்வதில்லை. அவர்களுக்குக் கண்கள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் பார்ப்பதில்லை. அவர்களுக்குக் காதுகள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் கேட்பதில்லை. அவர்கள் கால்நடைகளைப் போன்றோர். இல்லை! அதை விடவும் வழி கெட்டவர்கள். அவர்களே அலட்சியம் செய்தவர்கள்.
அல்குர்ஆன் (7 : 179)
ஜின்களும் பேய்களும் ஒன்றா?
பேய்களுக்கும் கெட்ட ஆவிகளுக்கும் ஜின்கள் என்று சொல்லப்படுவதாக சிலர் தவறான கருத்தை கூறி வருகிறார்கள். இக்கருத்து இஸ்லாத்திற்கு முற்றிலும் புறம்பானதாகும். ஆங்காங்கே சுற்றிக்கொண்டிருக்கும் இறந்து போனவர்களின் ஆவிகள் தான் பேய்கள் என்று பேய்நம்பிக்கை உள்ளவர்கள் கருதுகிறார்கள். இந்த நம்பிக்கையை குர்ஆனும் ஹதீஸ்களும் பொய்யென நிராகரிக்கிறது.
இறந்தவர் நல்லவராக இருந்தாலும் தீயவராக இருந்தாலும் அவரின் உயிர் அல்லாஹ்வின் பிடியில் இருக்கிறது. அவனது கடுமையான பிடியிலிருந்து ஆவிகள் தப்பித்து வரவே முடியாது என்று திருக்குர்ஆன் கூறும் போது ஆவிகள் பூமியில் சுற்றித்திரிகிறது என நம்புவது குர்ஆனிற்கு எதிரானதும் மூடநம்பிக்கையுமாகும். எனவே பேய்கள் இருப்பதாக நம்பக்கூடாது.
உயிர்களை அவை மரணிக்கும் நேரத்திலும், மரணிக்காதவற்றை அவற்றின் உறக்கத்திலும் அல்லாஹ் கைப்பற்றுகிறான். எதற்கு மரணத்தை விதித்து விட்டானோ அதைத் தனது கைவசத்தில் வைத்துக் கொண்டு மற்றதை குறிப்பிட்ட காலம் வரை விட்டு விடுகிறான். சிந்திக்கிற மக்களுக்கு இதில் பல சான்றுகள் உள்ளன.
அல்குர்ஆன் (39 : 42)
பேய் நம்பிக்கை பொய்யானது என்பதை விரிவாக விளக்கும் வகையில் பேய் பிசாசு என்ற தலைப்பில் தனி புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. கூடுதல் விபரம் அறிய அதை வாங்கி படித்துக்கொள்ளுங்கள்.
பேய்கள் என்று எதுவும் பூமியில் இல்லை. பேய் நம்பிக்கை என்பது இல்லாத ஒன்றை இருப்பதாக நம்புவதாகும். ஆனால் ஜின்களை நம்புவது பேய்களை நம்புவது போன்றதல்ல. ஜின்கள் என்று ஒரு கூட்டம் தற்போதும் பூமியில் வாழ்ந்து வருவதாக குர்ஆனும் ஹதீஸ்களும் கூறுகிறது. ஜின்களை மறுத்தால் குர்ஆனையும் ஹதீஸ்களை மறுத்ததாகிவிடும். எனவே ஒவ்வொருவரும் ஜின்கள் இருப்பதாக அவசியம் நம்பியாக வேண்டும்.
பேய் நம்பிக்கைக்கும் ஜின் நம்பிக்கைக்கும் உள்ள இந்த வித்தியாசத்தை விளங்கிக் கொண்டால் இரண்டும் ஒன்று என்று சாதாரண அறிவு படைத்தவர் கூட கூறமாட்டார்.