ஜின்களிடம் உதவி தேடலாமா?
ஜின்களால் இந்த உலகத்தில் எந்த நன்மையும் நமக்கு ஏற்படுவதில்லை. நேரடியாக பார்த்து உதவி கோருவதற்கு அவை நம் கண்களுக்கு புலப்படுவதுமில்லை. கண்ணில் காணாமல் சப்தமின்றி பிரார்த்தனை செய்வதற்கு அல்லாஹ் ஒருவன் மட்டுமே தகுதிவாய்ந்தவன்.
ஜின்களிடம் உதவி கேட்குமாறு நபி (ஸல்) அவர்கள் நமக்குக் கற்றுத்தரவில்லை. மக்கத்து காஃபிர்கள் ஜின்களிடம் உதவி கேட்டதால் இணைவைப்பில் அவர்கள் விழுந்ததாக அல்லாஹ் கூறுகிறான். எனவே ஜின்களிடம் உதவி தேடுவது இணைவைப்பாகும்.
மனிதர்களில் உள்ள ஆண்களில் சிலர் ஜின்களில் உள்ள சில ஆண்களைக் கொண்டு பாதுகாப்புத் தேடிக் கொண்டிருந்தனர். எனவே இவர்களுக்கு கர்வத்தை அவர்கள் அதிகமாக்கி விட்டனர் (என்று ஜின்கள் கூறியது)
அல்குர்ஆன் (72 : 6)
ஜின்களை அல்லாஹ்வே படைத்திருக்கும் போது அவர்களை அவனுக்கு இணையாக்கி விட்டனர். அறிவில்லாமல் அவனுக்கு ஆண் மக்களையும் பெண் மக்களையும் கற்பனை செய்து விட்டனர். அவனோ தூயவன். அவர்கள் வர்ணிப்பதை விட்டும் அவன் உயர்ந்து விட்டான்.
அல்குர்ஆன் (6 : 100)
(அது) அவர்கள் அனைவரையும் அவன் ஒன்று திரட்டும் நாள்! பின்னர் “அவர்கள் உங்களைத் தான் வணங்குவோராக இருந்தார்களா?” என்று வானவர்களிடம் கேட்பான்.
“நீ தூயவன். நீயே எங்கள் பாதுகாவலன். அவர்களுடன் (எங்களுக்கு சம்பந்தம்) இல்லை. மாறாக இவர்கள் ஜின்களையே வணங்கி வந்தனர். இவர்களில் அதிகமானோர் அவர்களையே நம்பினர்” என்று கூறுவார்கள்.
அல்குர்ஆன் (34 : 40.41)
ஜின்களைப் பற்றி குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் அறிந்துகொள்வதுடன் நாம் நிறுத்திக்கொள்ள வேண்டும். குர்ஆன் ஹதீஸில் சொல்லப்படாத தேவையற்ற விஷயங்களில் ஈடுபட்டால் வழிகேட்டில் விழுந்துவிடுவோம்.