குளிப்பாட்ட இயலாத நிலையில்…
இறந்தவரின் உடல் சிதைக்கப்படாமல் இருந்தால் தான் குளிப்பாட்டுவது சாத்தியமாகும்.
குண்டு வெடிப்பில் இறந்தவர்கள், வாகன விபத்தில் இறந்தவர்கள், துண்டு துண்டாக வெட்டிக் கொல்லப்பட்டவர்கள், தீயில் எரிந்து கருகிப் போனவர்கள் ஆகியோரின் உடல்களைக் குளிப்பாட்ட இயலாத நிலை ஏற்படுவதுண்டு.
குண்டு வெடிப்பு, வாகன விபத்து போன்றவை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் இல்லை என்றாலும் தீயில் எரிந்து போகவும், துண்டு துண்டாக சிதைக்கப்படவும் வாய்ப்புகள் இருந்தன.
ஆனாலும் எந்த முஸ்லிமும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் இது போன்ற நிலையில் மரணமடைந்ததாகக் காண முடியவில்லை.
போர்க்களத்தில் மட்டும் சிலரது உடல்கள் சிதைக்கப்பட்டன. ஷஹீத்கள் என்ற முறையில் அவர்களின் உடலைக் குளிப்பாட்டக் கூடாது என்பதற்கு ஆதாரம் உள்ளது.
சாதாரணமாக இது போன்ற நிலை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் யாருக்கும் ஏற்படாததால் இத்தகையோரின் உடல்களைக் குளிப்பாட்டுவது பற்றி நேரடியாக எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை.
நேரடி ஆதாரம் கிடைக்காவிட்டாலும் வேறு ஆதாரங்களின் துணையுடன் இது பற்றி நாம் முடிவுக்கு வர முடியும்.
உயிருடன் இருக்கும் ஒருவர் குளிக்க முடியாத நிலையில் இருந்தால் குளிப்பதற்குப் பதிலாக தயம்மும் செய்யுமாறு மார்க்கம் கூறுகிறது.
சிதைந்து போன உடல்களைக் குளிப்பாட்டுவது அதை விடக் கடுமையானது. எனவே குளிப்பாட்டுவதற்குப் பதிலாக தயம்மும் செய்யலாம். அதற்கும் இயலாத நிலை ஏற்பட்டால் ஒன்றும் செய்யாமல் அடக்கம் செய்வது குற்றமாகாது. குளிப்பாட்ட இயலாது என்ற நிலையில் தான் நாம் இவ்வாறு செய்கிறோம்.
நான் உங்களுக்கு ஒரு கட்டளையிட்டால் அதை இயன்ற வரை செய்யுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி); நூல்: புகாரி 7288
எந்த ஆன்மாவையும் அதன் சக்திக்கு மேலே நாம் சிரமப்படுத்த மாட்டோம் என்று அல்லாஹ் கூறுகின்றான்.
எவரையும் அவரது சக்திக்குட்பட்டே தவிர அல்லாஹ் சிரமப்படுத்த மாட்டான். திருக்குர்ஆன் 2:286
எவரையும் அவரது சக்திக்கு மேல் சிரமப்படுத்த மாட்டோம். திருக்குர்ஆன் 6:152
எவரையும் அவர்களின் சக்திக்கு மீறி நாம் சிரமப்படுத்துவதில்லை. திருக்குர்ஆன் 7:42
எவரையும் அவரது சக்திக்கு மேல் சிரமப்படுத்த மாட்டோம். திருக்குர்ஆன் 23:62
வசதியுள்ளவர் தனது வசதிக்கேற்ப செலவிடட்டும். யாருக்குச் செல்வம் அளவாகக் கொடுக்கப்பட்டதோ அவர் தனக்கு அல்லாஹ் வழங்கியதிலிருந்து செலவிடட்டும். அல்லாஹ் எதைக் கொடுத்துள்ளானோ அதற்கு மேல் எவரையும் சிரமப்படுத்த மாட்டான். சிரமத்திற்குப் பின் வசதியை அல்லாஹ் ஏற்படுத்துவான். திருக்குர்ஆன் 65:7
எனவே நம்மால் இயலாத நிலையில் எந்தக் காரியத்தையும் விட்டு விடுவது குற்றமாகாது.