குளிப்பாட்டியவர் குளிக்க வேண்டுமா?
குளிப்பாட்டியவர் குளிக்க வேண்டுமா? என்பதில் மாறுபட்ட கருத்துள்ள ஹதீஸ்கள் உள்ளன.
நாங்கள் இறந்தவரைக் குளிப்பாட்டி விட்டு சிலர் குளிப்பவர்களாகவும், மற்றும் சிலர் குளிக்காதவர்களாகவும் இருந்தோம்
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி); நூல்: தாரகுத்னீ 1820
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் நபித்தோழர்கள் இது விஷயத்தில் எவ்வாறு நடந்து கொண்டனர் என்பதைத் தான் இப்னு உமர் (ரலி) கூறுகிறார்.
அரபு மூலத்தில் குன்னா (கடந்த காலத்தில் இவ்வாறு இருந்தோம்) என்ற சொல்லை இப்னு உமர் (ரலி) பயன்படுத்தியிருப்பதால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்து நடைமுறையைத் தான் குறிப்பிட்டுள்ளார்கள் என்பதில் சந்தேகமில்லை.
எனவே விரும்பியவர் குளித்துக் கொள்ளலாம். விரும்பாதவர் குளிக்காமலும் இருக்கலாம். இரண்டும் சமமானவை தான்.
ஆண்களை ஆண்களும் பெண்களை பெண்களும் குளிப்பாட்ட வேண்டும்.
ஆண்களை ஆண்கள் தான் குளிப்பாட்ட வேண்டும் என்றோ பெண்களை பெண்கள் தான் குளிப்பாட்ட வேண்டும் என்றோ நேரடியாக எந்தக் கட்டளையும் இல்லை.
ஆயினும் குளிப்பாட்டுபவர் அந்தரங்க உறுப்புகளைப் பார்க்கும் நிலை ஏற்படும் என்பதால் ஆண்களை ஆண்கள் தான் குளிப்பாட்ட வேண்டும் என்றும், பெண்களை பெண்கள் தான் குளிப்பாட்ட வேண்டும் என்றும் முடிவு செய்யலாம்.
மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மகளைப் பெண்கள் தான் குளிப்பாட்டியுள்ளனர் என்பதை முன்னரே சுட்டிக் காட்டியுள்ளோம்.
கணவனை மனைவியும், மனைவியை கணவனும் குளிப்பாட்ட விரும்பினால் அவர்களிடையே எந்த அந்தரங்கமும் இல்லை என்பதால் இதைத் தடுக்க முடியாது.
புனிதப் போரில் கொல்லப்பட்டவர்களைக் குளிப்பாட்டக் கூடாது
அல்லாஹ்வின் பாதையில் நியாயத்துக்காகப் போரிடும் போது எதிரி நாட்டுப் படையினரால் கொல்லப்படுபவரைக் குளிப்பாட்டாமல் இரத்தச் சுவடுடன் அடக்கம் செய்ய வேண்டும்.
உஹதுப் போரில் கொல்லபட்டவர்களைக் குறித்து இவர்களை இவர்களின் இரத்தக் கறையுடனே அடக்கம் செய்யுங்கள்! என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அவர்களைக் குளிப்பாட்டவில்லை.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி); நூல்: புகாரி 1346, 1343, 1348, 1353, 4080
மார்க்கத்துடன் தொடர்பு இல்லாதவை
* குளிப்பாட்டுவதற்கு என்று சிறப்பான துஆக்கள் ஏதும் இல்லை.
* மய்யித்துக்கு நகம் வெட்டுதல்
* பல் துலக்குதல்
* அக்குள் மற்றும் மர்மஸ்தான முடிகளை நீக்குதல்
* பின் துவாரத்திலும், மூக்கிலும் பஞ்சு வைத்து அடைத்தல்
* வயிற்றை அழுத்தி உடலில் உள்ள அசுத்தங்களை வெளியேற்றுதல்
* ஜனாஸாவைக் குளிப்பாட்டும் போது சில திக்ருகளை ஓதுதல்
* குளிப்பாட்டும் போது சந்தனத்தினாலோ, வேறு எதன் மூலமோ நெற்றியில் எதையும் எழுதுதல்
ஆகியவற்றைச் செய்யுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழிகாட்டவில்லை. மார்க்கத்தில் இதற்கு முக்கியத்துவம் இல்லை. அது நபிவழி என்ற நம்பிக்கையில்லாமல் நம்முடைய திருப்திக்காகச் செய்தால் அதில் தவறில்லை.