கண்டெடுக்கப்பட்ட பொருளை நாம் உரிமையாக்கிக் கொள்ளலாமா❓
நான் பேருந்தில் பயணித்த போது யாரோ விட்டுச் சென்ற பணம் கிடைத்தது. அந்தப் பேருந்தில் என்னைத் தவிர வேறு பயணிகள் யாரும் இல்லை. அந்தப் பணத்தை நான் என்ன செய்வது❓
பிறர் தவற விட்ட பொருளை ஒருவர் கண்டெடுத்தால் அவர் ஒரு வருட காலம் மக்களிடம் விளம்பரம் செய்ய வேண்டும். விளம்பரம் செய்யாமல் அதை வைத்துக் கொள்ளக் கூடாது.
ஒரு வருட காலம் அறிவிப்புச் செய்தும் யாரும் வராவிட்டால் எடுத்தவரே அப்பொருளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
கண்டெடுக்கப்பட்ட பொருளைப் பற்றி அறிவிப்புச் செய்யாமல் அதைத் தம்மிடம் வைத்துக் கொண்டிருப்பவர் வழிகேட்டிலேயே உள்ளார்.
அறிவிப்பவர் : ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ (ரலி)
நூல் : முஸ்லிம் 3253
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் (வந்து), பாதையில் கண்டெடுக்கப்பட்ட பொருளைப் பற்றிக் கேட்டார்.
அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அதன் முடிச்சை’ அல்லது அதன் பையையும் அதன் உறையையும்’ (அதாவது அதன் முழு விவரங்களை) நீ அறிந்து வைத்துக் கொள்! பிறகு ஓராண்டுக் காலம் அதனைப் பற்றி விளம்பரப்படுத்து! அதற்குப் பிறகு அதனை நீ பயன்படுத்திக் கொள்!
அதன் உரிமையாளர் (முறைப்படி அதைக் கேட்டு) வந்து விட்டால் அதை அவரிடம் கொடுத்துவிடு!” என்றார்கள்.
அறிவிப்பவர் : ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ (ரலி)
நூல் : புகாரி 91
பாதையில் கண்டெடுக்கப்பட்ட பொருள் குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வினவப்பட்டது.
மக்கள் நடமாட்டமுள்ள பாதையிலோ, அல்லது மக்கள் புழக்கமுள்ள ஊரிலோ கண்டெடுக்கப்பட்டிருந்தால் ஒரு வருட காலம் அதைப் பற்றி நீர் அறிவிப்புச் செய்ய வேண்டும்.
அதைத் தேடி எவரேனும் வந்தால் அவரிடம் அதை நீர் ஒப்படைக்க வேண்டும். வரா விட்டால் அது உனக்குரியதாகும். தரிசு நிலத்தில் கண்டெடுக்கப்பட்டவற்றிலும், புதையலிலும் ஐந்தில் ஒரு பங்கு (வரி) உண்டு.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஆஸ் (ரலி)
நூல் : நஸாயீ 2448
பொருளைத் தவற விட்டவர் அதைத் தேடி வராத வகையில் கண்டெடுக்கப்பட்ட பொருள் அற்பமானதாக இருந்தால் அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஒரு வருட காலம் அறிவிப்புச் செய்து காத்திருக்க வேண்டியதில்லை.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பாதையில் கிடந்த ஒரு பேரீச்சம் பழத்தைக் கடந்து சென்றார்கள். இது சதகா(தர்ம)ப் பொருளாக இருக்குமோ என்ற அச்சம் எனக்கில்லாவிட்டால் இதை நான் சாப்பிட்டிருப்பேன் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி)
நூல் : புகாரி 2431
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எடுத்த பேரீச்சம் பழம் தர்மப் பொருளாக இருக்க வாய்ப்புள்ளது என்பதால் அதை உண்ணாமல் விட்டு விட்டார்கள். இல்லையென்றால் அதை உண்டிருப்பார்கள்.
எனவே இது போன்ற அற்பப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டால் அவற்றை பயன்படுத்திக் கொள்வது தவறல்ல.
—————
ஏகத்துவம்