கஃபனிடுதல்

குளிப்பாட்டிய பின் துணியால் உடலை மறைக்க வேண்டும். ‎இதை கஃபன் என்று மார்க்கம் கூறுகிறது.‎

கஃபன் என்றால் அதற்கென குறிப்பிட்ட சில வகைகள் உள்ளதாக ‎மக்கள் நம்புகின்றனர்.‎

சட்டை, உள்ளாடை, வேட்டி, மேல்சட்டை, தலைப்பாகை, பின்னர் ‎முழு உடலையும் மறைக்கும் துணி இப்படி இருந்தால் தான் அது ‎கஃபன் என்று நினைக்கிறார்கள்.‎

அது போல் பெண்களின் கஃபன் என்றால் அதற்கென சில வகை ‎ஆடைகளை நிர்ணயம் செய்து வைத்துள்ளனர்.‎

கஃபன் இடுவதற்கு இப்படியெல்லாம் கட்டுப்பாடுகள் ஏதும் ‎இல்லை.‎

உடலை மறைக்க வேண்டும். அவ்வளவு தான். உள்ளே எதையும் ‎அணிவிக்காமல் உடலை ஒரு போர்வையால் போர்த்தி ‎மறைத்தால் அதுவும் கஃபன் தான். அதுவே போதுமானதாகும்.‎

அது போல் ஒருவர் வாழும் போது அணிந்திருந்த சட்டை, ‎கைலியை அணிவித்தால் அதுவும் கஃபன் தான்.‎

அதே நேரத்தில் மேற்கண்டவாறு சட்டை, உள்ளாடை என்று ‎கஃபனிட்டால் அது நபிவழி என்ற நம்பிக்கையில்லாமல் ‎நம்முடைய திருப்திக்காகச் செய்தால் அதில் தவறில்லை.‎

பின் வரும் தலைப்புகளில் எடுத்துக் காட்டப்படும் ‎ஆதாரங்களிலிருந்து இதைப் புரிந்து கொள்ளலாம்.‎

அழகிய முறையில் கஃபனிடுதல்

உடலின் பாகங்கள் திறந்திருக்காத வகையிலும், உள் உறுப்புகளை ‎வெளிக்காட்டாத வகையிலும், ஏனோ தானோ என்றில்லாமலும் ‎நேர்த்தியாகக் கஃபன் இட வேண்டும்.‎

உங்களில் ஒருவர் தமது சகோதரருக்குக் கஃபன் இட்டால் அதை ‎அழகுறச் செய்யட்டும்  என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‎கூறினார்கள்.‎

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)‎; நூல்: முஸ்லிம் 1567‎

வெள்ளை ஆடையில் கஃபனிடுதல்

கஃபன் ஆடை எந்த நிறத்திலும் இருக்கலாம்; ஆயினும் வெள்ளை ‎ஆடையே சிறந்ததாகும்.‎

நீங்கள் வெள்ளை ஆடையையே அணியுங்கள். ஏனெனில் அது ‎தான் உங்கள் ஆடைகளில் சிறந்ததாகும். உங்களில் இறந்தோரை ‎அதிலேயே கஃபனிடுங்கள்  என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‎கூறினார்கள்.‎

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)‎; நூல்கள்: திர்மிதீ 994

வெள்ளை ஆடையில் கஃபனிடுவது கட்டாயம் இல்லை ‎என்பதையும் அதுவே சிறந்தது என்பதையும் மேற்கண்ட ‎நபிமொழியிலிருந்து அறியலாம்.‎

வண்ண ஆடையிலும் கஃபன் இடலாம்

வண்ண ஆடையில் கஃபனிடுவது பொருளாதார ரீதியாகச் ‎சிரமமாக இல்லாதவர்கள் வண்ண ஆடையில் கஃபனிட ‎இயலுமானால் அவ்வாறு கஃபனிடுவது தவறில்லை.‎

உங்களில் ஒருவர் மரணமடைந்து அவர் வசதி பெற்றவராகவும் ‎இருந்தால் கோடுகள் போட்ட ஆடையில் கஃபனிடலாம்  என்று ‎நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.‎

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)‎; நூல்கள்: அபூ தாவூத்

தைக்கப்பட்ட ஆடையில் கஃபனிடுதல்

தைக்கப்படாத ஆடையில் தான் கஃபனிட வேண்டும் என்பது ‎கட்டாயம் இல்லை. தைக்கப்பட்ட மேலாடை, கீழாடை ‎ஆகியவற்றாலும் கஃபனிடலாம்.‎

‎(நயவஞ்சகர்களின் தலைவன்) அப்துல்லாஹ் பின் உபை இறந்த ‎போது அவரது மகன் (இவர் முஸ்லிமாக இருந்தார்) நபிகள் ‎நாயகத்திடம் வந்து,  அல்லாஹ்வின் தூதரே! உங்கள் ‎சட்டையைத் தாருங்கள் (அதில்) அவரைக் கஃபனிட வேண்டும் ‎‎ என்று கேட்டார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது ‎சட்டையை அவரிடம் கொடுத்தார்கள். (சுருக்கம்)‎

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)‎; நூல்: புகாரி 1269, 4670, 5796‎

பழைய ஆடையில் கபனிடுதல்

‎ ‎‎… குளிப்பாட்டி முடித்ததும் எனக்கு அறிவியுங்கள் என்று நபிகள் ‎நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (குளிப்பாட்டி முடித்ததும்) ‎நாங்கள் அவர்களுக்குத் தெரிவித்தோம். தமது இடுப்பிலிருந்து ‎வேட்டியைக் கழற்றி  இதை அவருக்கு உள்ளாடையாக்குங்கள்! ‎‎ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.‎

அறிவிப்பவர்: உம்மு அதிய்யா (ரலி)‎; நூல்: புகாரி 1253, 1254, 1257, 1259, 1261‎

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாம் அணிந்திருந்த ஆடையைத் ‎தமது மகளுக்குக் கஃபனாகப் பயன்படுத்தியுள்ளனர் என்பதால் ‎பழைய ஆடைகளைக் கஃபனாகப் பயன்படுத்துவது தவறல்ல ‎என்று அறியலாம்.‎

உள்ளாடை அணிவித்தல்

இறந்தவரின் உடலை முழுமையாக மறைப்பது தான் கஃபன் ‎என்றாலும் மேலே போர்த்தும் துணியுடன் உள்ளாடையாக ‎மற்றொரு துணியைச் சேர்த்துக் கொள்ளலாம். முந்தைய ‎தலைப்பில் எடுத்துக் காட்டிய ஹதீஸே இதற்கு ஆதாரமாக ‎உள்ளது.‎

இஹ்ராம் அணிந்தவரின் கஃபன் ஆடை

ஹஜ் அல்லது உம்ராவுக்காக இஹ்ராம் அணிந்தவர் மரணித்து ‎விட்டால் இஹ்ராமின் போது அணிந்த ஆடையிலேயே அவரைக் ‎கஃபனிட வேண்டும்.‎

இஹ்ராம் அணிந்த ஒருவர் அரஃபா மைதானத்தில் நபிகள் ‎நாயகத்துடன் இருந்த போது தமது வாகனத்திலிருந்து கீழே ‎விழுந்து கழுத்து முறிந்து இறந்து விட்டார். அப்போது நபிகள் ‎நாயகம் (ஸல்) அவர்கள்  இவரைத் தண்ணீராலும், இலந்தை ‎இலையாலும் குளிப்பாட்டுங்கள். இவருடைய இரண்டு ‎ஆடைகளில் இவரைக் கஃபனிடுங்கள். இவருக்கு நறுமணம் பூச ‎வேண்டாம். இவரது தலையை மறைக்க வேண்டாம். ஏனெனில் ‎இவர் கியாமத் நாளில் தல்பியா கூறியவராக எழுப்பப்படுவார் ‎‎ என்று கூறினார்கள்.‎

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)‎; நூல்: புகாரி 1265, 1266, 1267, 1268, 1850, 1851‎

கஃபனிட்ட பின் நறுமணம் பூசுதல்

கஃபனிட்ட பின் இறந்தவரின் உடலுக்கு நறுமணம் பூசலாம். ‎இஹ்ராம் அணிந்தவருக்கு நறுமணம் தடை செய்யப்பட்டதால் ‎அவர் இறந்த பிறகு நறுமணத்தை நபிகள் நாயகம் (ஸல்) ‎அவர்கள் தவிர்க்கச் சொன்னார்கள். இதிலிருந்து மற்றவர்களின் ‎உடலுக்கு நறுமணம் பூசலாம் என்று அறிய முடியும்.‎

தலையையும் மறைத்து கஃபனிட வேண்டும்

கஃபன் என்பது தலை உள்ளிட்ட முழு உடலையும் மறைக்கும் ‎வகையில் இருக்க வேண்டும். உடம்பை மறைத்துவிட்டு ‎தலையை மட்டும் விட்டுவிடக் கூடாது.‎

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் அல்லாஹ்வின் திருப்தியை ‎நாடி ஹிஜ்ரத் செய்தோம். அதற்கான நன்மை அல்லாஹ்விடம் ‎உறுதியாகி விட்டது. தமது நன்மையில் எதையும் (இவ்வுலகில்) ‎அனுபவிக்காமல் மரணித்தவர்களும் எங்களில் இருந்தனர். ‎அவர்களில் முஸ்அப் பின் உமைர் (ரலி) அவர்களும் ‎ஒருவாராவார். அவர் உஹதுப் போரில் கொல்லப்பட்டார். அவர் ‎ஒரு போர்வையை மட்டுமே விட்டுச் சென்றார். அதன் மூலம் ‎அவரது தலையை மறைத்தால் கால்கள் தெரிந்தன. கால்களை ‎மறைத்தால் தலை தெரிந்தது. அப்போது நபிகள் நாயகம் (ஸல்) ‎அவர்கள்  இதன் மூலம் இவரது தலையை மூடுங்கள். இவரது ‎கால் பகுதியில் இத்கர் என்ற புல்லைப் போடுங்கள்  எனக் ‎கூறினார்கள்.‎

அறிவிப்பவர்: கப்பாப் பின் அல் அரத் (ரலி)‎; நூல்: புகாரி 4045, 4047, 1275, 1276, 3897, 3914, 4082, 6448‎

கஃபனிடும் போது தலையை மூட வேண்டும் என்பது இந்த ‎ஹதீஸிலிருந்து தெரிய வருகிறது.‎

இஹ்ராம் அணிந்தவர் பற்றிய ஹதீஸில் அவரது தலையை ‎மறைக்க வேண்டாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‎கூறினார்கள். ஏனெனில் இஹ்ராம் அணிந்தவர் தலையை ‎மறைக்கக் கூடாது என்று தடுக்கப்பட்டுள்ளார்.‎

அவருக்குத் தலையை மறைக்க வேண்டாம் என்று நபிகள் ‎நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதிலிருந்து மற்றவர்களின் தலை ‎மறைக்கப்பட வேண்டும் என்பதை விளங்கலாம்.‎

கஃபனிடும் அளவுக்குத் துணி கிடைக்கா விட்டால்…‎

சில சமயங்களில் முழு உடலையும் மறைக்கும் அளவுக்கு துணி ‎கிடைக்காமல் போகலாம். அல்லது அதை வாங்கும் அளவுக்கு ‎வசதியில்லாமல் போகலாம். அது போன்ற சந்தர்ப்பங்களில் ‎வைக்கோல் போன்ற கிடைக்கும் பொருட்களால் எஞ்சிய ‎பகுதியை மறைக்க வேண்டும். முந்தைய தலைப்பில் இடம் ‎பெற்றுள்ள நபிமொழியே இதற்கு ஆதாரமாகும்.‎

புதிய ஆடையில் கஃபனிடுதல்

மேற்கண்ட நபிமொழியில் முஸ்அப் பின் உமைர் (ரலி) ‎அவர்களின் பழைய ஆடையிலேயே கஃபனிடப்பட்டார்கள் ‎என்பதை அறியலாம்.‎

ஆயினும் புதிய ஆடையில் கஃபனிடுவது தவறில்லை.‎

ஒரு பெண்மணி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒரு ‎மேலாடையைக் கொண்டு வந்தார்.  நீங்கள் இதை அணிய ‎வேண்டும் என்பதற்காக என் கையால் நெய்து வந்திருக்கிறேன் ‎என்று அவர் கூறினார். அதை ஆவலுடன் நபிகள் நாயகம் (ஸல்) ‎அவர்கள் பெற்றுக் கொண்டார்கள். பின்னர் அதைக் கீழாடையாக ‎அணிந்து கொண்டு எங்களிடம் வந்தார்கள். அப்போது ஒரு ‎மனிதர் இது எவ்வளவு அழகாக உள்ளது. எனக்குத் தாருங்கள் ‎‎ என்று கேட்டார்.  நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதை மிகவும் ‎விருப்பத்துடன் அணிந்திருக்கிறார்கள். எவர் கேட்டாலும் மறுக்க ‎மாட்டார்கள் என்பது தெரிந்திருந்தும் அவர்களிடம் இதைக் கேட்டு ‎விட்டாயே!  என்று மற்றவர்கள் அவரைக் கடிந்து கொண்டார்கள். ‎அதற்கு அவர்  நான் இதை அணிவதற்காகக் கேட்கவில்லை; ‎எனக்குக் கஃபனாக அமைய வேண்டும் என்பதற்காகவே ‎கேட்டேன்  என்றார். அதுவே அவரது கஃபனாக அமைந்தது. ‎‎(சுருக்கம்)‎

அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஅத் (ரலி)‎; நூல்: புகாரி 2093, 1277, 5810, 6036‎

தனது கஃபனை தானே தயார்படுத்திக் கொள்ளலாம்

நாம் மரணித்த பின் நமக்கு இது தான் கஃபனாக அமைய ‎வேண்டும் என்று விரும்பி தனது கஃபன் துணியை ஒருவர் தயார் ‎படுத்தி வைக்கலாம். அவ்வாறு ஒருவர் தயார் படுத்தி ‎வைத்திருந்தால் அவரது விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும்.‎

மேற்கண்ட ஹதீஸிலிருந்து இதை நாம் அறிந்து கொள்ளலாம்.‎

தைக்கப்படாத ஆடையில் கஃபனிடுதல்

‎(என் தந்தை) அபூ பக்ர் (ரலி) அவர்களின் மரண வேளையில் ‎அவர்களிடம் நான் சென்றேன். அப்போது அவர்கள்,  நபிகள் ‎நாயகத்தை எத்தனை ஆடையில் கஃபனிட்டீர்கள்?  என்று ‎கேட்டார்கள்.  யமன் நாட்டில் தயாரிக்கப்பட்ட வெள்ளையான ‎மூன்று ஆடைகளில் கஃபனிட்டோம். அதில் சட்டையோ, ‎தலைப்பாகையோ இருக்கவில்லை  என்று நான் கூறினேன்.  எந்த ‎நாளில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்தார்கள்?  என்று ‎அவர்கள் கேட்டார்கள்.  திங்கள் கிழமை  என்று நான் கூறினேன். ‎இன்று என்ன கிழமை?  எனக் கேட்டர்கள்.  திங்கள் கிழமை  என்று ‎நான் கூறினேன்.  இன்றிரவுக்குப் பின் எனக்கு மரணம் ‎வந்துவிடும் என்றே எதிர்பார்க்கிறேன்  என்று கூறினார்கள். தாம் ‎அணிந்திருந்த ஆடையை உற்று நோக்கினார்கள். அதில் குங்குமப் ‎பூ கறை இருந்தது.  எனது இந்த ஆடையைக் கழுவி இத்துடன் ‎மேலும் இரண்டு ஆடைகளை அதிகமாக்குங்கள். அதில் எனக்குக் ‎கஃபனிடுங்கள்  என்று கூறினார்கள்.  இது மிகவும் பழையதாக ‎உள்ளதே!  என்று நான் கூறினேன். அதற்கவர்கள்  உயிருடன் ‎உள்ளவர் தான் புதிய ஆடைக்கு அதிகம் தகுதியானவர். இந்த ‎ஆடை சீழ் சலத்திற்குத் தானே போகப் போகிறது  என்றார்கள். ‎‎(ஆனால் அவர்கள் விரும்பிய படி திங்கள் கிழமை ‎மரணிக்கவில்லை) செவ்வாய்க் கிழமை மாலை தான் ‎மரணித்தார்கள். விடிவதற்கு முன் அடக்கம் செய்யப்பட்டார்கள்.‎

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)‎; நூல்: புகாரி 1387‎

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தைக்கப்பட்ட சட்டையில் ‎கஃபனிடப்படவில்லை என்பதை இதிலிருந்து அறியலாம்.‎

முக்கியப் பிரமுகருக்கு தலைப்பாகையுடன் கஃபனிடலாமா?‎

மார்க்க அறிஞர்கள் போன்ற பிரமுகர்கள் கஃபனிடப்படும் போது ‎அவர்களுக்குத் தலைப்பாகை கட்டி அதனுடன் கஃபனிடும் ‎வழக்கம் பல பகுதிகளில் காணப்படுகிறது. வாழும் போது ‎தனியாகத் தங்களை அடையாளம் காட்டிக் கொண்டது போல ‎மரணித்த பிறகும் வேறுபாடு காட்டப்படுவது கொடுமையிலும் ‎கொடுமையாகும்.‎

மாமனிதரான நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தலைப்பாகை, ‎சட்டையுடன் கஃபனிடப்படவில்லை என்ற மேற்கண்ட ‎ஹதீஸிலிருந்து அவர்கள் செய்வது ஆதாரமற்றது என்பதை ‎அறியலாம்.‎

கிரீடம், தலைப்பாகை போன்றவற்றை அணிந்து கஃபனிடுவது ‎கெட்ட முன்மாதிரியாகும்.‎

நியாயத்துக்காக நடக்கும் வீரமரணம் அடைந்தவர்களை அவர்களின் ‎ஆடையில் கஃபனிடுதல்

போரில் எதிரிப் படையினரால் கொல்லப்பட்டவர்களை அவர்கள் ‎அணிந்திருந்த ஆடையிலேயே கஃபனிடுதல் நல்லது.‎

முஸ்அப் பின் உமைர் (ரலி) அவர்களுக்கு அணிந்திருந்த ‎ஆடையே கஃபனாக ஆனது என்பதை முன்னர் ‎குறிப்பிட்டுள்ளோம்.‎

அவர்களை (ஷஹீத்களை) அவர்களின் ஆடைகளிலேயே ‎கஃபனிடுங்கள்  என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‎கூறினார்கள்.‎

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஸஃலபா (ரலி)‎; நூல்: அஹ்மத் 22547‎

ஆயினும் இது கட்டாயமானது அல்ல.‎

ஹம்ஸா அவர்கள் கொல்லப்பட்ட போது அவர்களின் சகோதரி ‎ஸஃபிய்யா அவர்கள் இரண்டு ஆடைகளைப் போர்க்களத்திற்குக் ‎கொண்டு வந்து அதில் தனது சகோதரர் ஹம்ஸாவுக்குக் ‎கஃபனிடுமாறு கூறினார்கள். ஹம்ஸாவுக்கு அருகில் ‎மற்றொருவரும் கொல்லப்பட்டுக் கிடந்ததால் இருவரையும் தலா ‎ஒரு ஆடையில் கஃபனிட்டோம்.‎

அறிவிப்பவர்: ஸுபைர் பின் அவ்வாம் (ரலி)‎; நூல்: அஹ்மத் 1344‎

ஹம்ஸாவும், மற்றொருவரும் போரின் போது அணிந்திருந்த ‎ஆடையில் கஃபனிடப்படாமல் வேறு ஆடையில் ‎கஃபனிடப்பட்டார்கள். இது தவறு என்றால் நபிகள் நாயகம் (ஸல்) ‎அவர்கள் மறுத்திருப்பார்கள்.‎

நெருக்கடியான நேரத்தில் ஒரு ஆடையில் இருவரைக் கஃபனிடலாம்

உஹதுப் போரில் கொல்லப்பட்ட என் தந்தையும், என் சிறிய ‎தந்தையும் ஒரு போர்வையில் கஃபனிடப்பட்டார்கள்.‎

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)‎ ; நூல்: புகாரி 1348‎

உஹதுப் போரில் கொல்லப்பட்ட இருவரை ஒரு ஆடையில் ‎நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கஃபனிட்டார்கள்.‎

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)‎; நூல்: புகாரி 1343. 1348, 4080‎

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *