ஒற்றை எண்ணிக்கையில் தண்ணீர் ஊற்றுதல்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மகள் மரணித்த போது மூன்று அல்லது ஐந்து அல்லது அதை விட அதிகமாக இவரைக் கழுவுங்கள்! ஒற்றைப் படையாகக் கழுவுங்கள்! என்று எங்களிடம் கூறினார்கள்.
அறிவிப்பவர்: உம்மு அதிய்யா (ரலி); நூல்: புகாரி 1254, 1263
கற்பூரம் கலந்து குளிப்பாட்டுதல்
இவரை மூன்று அல்லது ஐந்து அல்லது நீங்கள் விரும்பினால் இதை விட அதிகமாக இலந்தை இலை கலந்த தண்ணீரால் கழுவுங்கள். கடைசியில் கற்பூரத்தை சேர்த்துக் கொள்ளுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: உம்மு அதிய்யா (ரலி); நூல்: புகாரி 1253, 1254, 1259, 1261, 1263
இறந்தவரின் உடல் நன்கு சுத்தமாக வேண்டும் என்பதற்காக சோப் போன்றவற்றைப் பயன்படுத்துவதற்கு இதை ஆதாரமாகக் கொள்ளலாம்.
குளிப்பாட்டும் போது பெண்களின் சடைகளைப் பிரித்து விடுதல்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மகளைக் குளிப்பாட்டிய போது அவரது தலையில் போட்டிருந்த மூன்று சடைகளைப் பிரித்து, குளிப்பாட்டிய பின் மூன்று சடைகளைப் போட்டனர்.
அறிவிப்பவர்: உம்மு அதிய்யா (ரலி); நூல்: புகாரி 1260, 1254, 1259, 1262, 1263