ஒப்பந்தங்களை நிறைவேற்றுவோம்!
உலகில் மனிதர்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்ற நியாயவான்கள், நடுநிலை வாதிகள் என்று அத்தனை நபர்களும் ஒப்பந்தங்கள் மற்றும் வாக்குறுதிகளை முறையாகவும், முழுமையாகவும் பேண வேண்டும் என்று விரும்புவார்கள். அவ்வாறு யாரேனும் ஒப்பந்தத்தை முறித்து விட்டால் அவருக்கு எதிராகக் கடுமையாகக் களத்தில் நின்று போராடுவார்கள். இது இயல்பான ஒன்று!
வாய்மையை நிலை நாட்ட வேண்டும் என்பது இயற்கையாகவே அனைவருக்கும் உள்ள பொதுவான சட்டமாக இருந்தாலும், முஸ்லிம்களாக இருந்தால் இது விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி, பிற மக்களுக்கு முன்மாதிரியாகத்திகழக் கடமைப்பட்டுள்ளோம். இறைவன் தனது திருக்குர்ஆனில் ஒப்பந்தங்கள் குறித்து ஏராளமான உபதேசங்களை அடுக்கடுக்காய் கொட்டி வைத்துள்ளான்.
நம்பிக்கை கொண்டோரே! ஒப்பந்தங்களை நிறைவேற்றுங்கள்!
(அல்குர்ஆன்:5:1)
இறைவனை நம்பியுள்ள ஒவ்வொரு முஸ்லிமும் ஒப்பந்தங்களை உரிய முறையில் நிறைவேற்ற வேண்டும் என்று இறைவன் கட்டளையிடுகின்றான்
தமது அமானிதங்களையும், உடன் படிக்கையையும் அவர்கள் பேணுவார்கள்.!
(அல்குர்ஆன்:23:8)
அவர்கள் அல்லாஹ்வின் உடன்படிக்கையை நிறைவேற்றுவார்கள். உடன்படிக்கையை முறிக்க மாட்டார்கள்.
(அல்குர்ஆன்:13:20)
அமானிதங்களை கண்டிப்பாகப் பேணி நடக்க வேண்டும் என்றும், உடன்படிக்கையை முறிக்கக் கூடாது என்றும் இறைவன் அறிவுரை பகிர்கின்றான். மேலும் இறைவன் கூறும் போது; நீங்கள் ஒப்பந்தம் செய்தால் அல்லாஹ்வின் ஒப்பந்தத்தை நிறைவேற்றுங்கள் உங்கள் மீது அல்லாஹ்வைப் பொறுப்பாளனாக்கி, சத்தியங்களை உறுதிப்படுத்திய பின் அதை முறித்து விடாதிர்கள் நீங்கள் செய்பவற்றை அல்லாம் அறிவான்,
(அல்குர்ஆன்:16:91)
படைத்த இறைவனைப் பொறுப்பாளனாக முன்னிறுத்தி நீங்கள் செய்த வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள் என்றும், நம்ப வைத்து ஒப்பந்தத்தை உறுதிப்படுத்திய பிறகு அதை முறிக்கக் கூடாது என்றும் ஆழமான கருத்தை இறைவன் பதிய வைக்கின்றான்.
அனாதையின் சொத்தை அவர் பருவமடைவது வரை அழகிய முறையிலேயே தவிர நெருங்காதீர்கள் வாக்குறுதியை நிறைவேற்றுங்கள் வாக்குறுதி விசாரிக்கப்படும்.
(அல்குர்ஆன்:17:34)
முஸ்லிம்களாக இந்த உலகத்தில் பல இன்னல்களையும், சிரமங்களையும் சகித்துக் கொண்டு வாழ்வதற்கான மிக முக்கியமான காரணம், மறுமையை இலக்காகக் கொண்டு தான். அப்படிப்பட்ட விசாரணை நாளில் வாக்குறுதியை நிறைவேற்றாதவன் குறித்து கண்டிப்பாக விசாரிக்கப்படும் என்று இறைவன் நினைவூட்டுகின்றான்.…
தொழுகையை நிலைநாட்டு வரும் ஸகாத்தை வழங்குவோரும், வாக்களித்தால் தமது வாக்கை நிறைவேற்றுவோரும், வறுமை, நோய், மற்றும் போர்க்களத்தில் சகிததுக கொள்வோருமே நன்மை செய்பவர்கள். அவர்களே உண்மை கூறியவர்கள். அவர்களே (இறைவனை) அஞ்சுபவர்கள்.
(அல்குர்ஆன்:2:177)
ஒருவன் பிறருக்கும் தனக்கும் நன்மை செய்பவனாக இருக்க வேண்டுமானால் பிறருக்குக் கொடுத்த வாக்குறுதியை மிகச் சரியாக நிறைவேற்ற வேண்டும். மேலும், யார் வாக்குறுதியைச் சரியாக நிறைவேற்றுகின்றாரோ அவர் தான் உண்மை கூறியவராவார் என்றும் சொன்ன சொல்லை உண்மைப்படுத்தியவர்கள் குறித்து திருக்குர்ஆன் சிலாகித்துப் பேசுகின்றது.
இதுபோன்ற ஏராளமான வசனங்களில் வாய்மையைப் பேணுவதற்கு திருக்குர்ஆன் வழிகாட்டுகின்றது.)