உம்மி என்பதன் பொருள் என்ன ❓
உம்மு என்றால் தாய் என்பது பொருள். உம்மீ என்றால் தாயைச் சார்ந்திருப்பவன் என்பது பொருள். கைக் குழந்தைகள் தாயையே சார்ந்திருப்பதால் கைக்குழந்தைகள் உம்மீ எனக் குறிப்பிடப்பட்டனர். பின்னர் எழுதவும், வாசிக்கவும் தெரியாதவர்கள் இந்த விஷயத்தில் கைக்குழந்தைகளின் நிலையில் இருப்பதால் உம்மீ எனப்பட்டனர்.
நபிகள் நாயகத்துக்கு எழுதவும், வாசிக்கவும் தெரியாது என்பதைத் திருக்குர்ஆன் தெளிவாகவும் பல இடங்களில் குறிப்பிடுகிறது.
அல்குர்ஆன் 7 : 157 வசனத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை “உம்மீ’ என்று அல்லாஹ் குறிப்பிடுகிறான்.
الَّذِينَ يَتَّبِعُونَ الرَّسُولَ النَّبِيَّ الْأُمِّيَّ الَّذِي يَجِدُونَهُ مَكْتُوبًا عِنْدَهُمْ فِي التَّوْرَاةِ وَالْإِنجِيلِ يَأْمُرُهُمْ بِالْمَعْرُوفِ وَيَنْهَاهُمْ عَنْ الْمُنكَرِ وَيُحِلُّ لَهُمْ الطَّيِّبَاتِ وَيُحَرِّمُ عَلَيْهِمْ الْخَبَائِثَ وَيَضَعُ عَنْهُمْ إِصْرَهُمْ وَالْأَغْلَالَ الَّتِي كَانَتْ عَلَيْهِمْ فَالَّذِينَ آمَنُوا بِهِ وَعَزَّرُوهُ وَنَصَرُوهُ وَاتَّبَعُوا النُّورَ الَّذِي أُنزِلَ مَعَهُ أُوْلَئِكَ هُمْ الْمُفْلِحُونَ(157)7
எழுதப் படிக்கத் தெரியாத இத்தூதரை, இந்த நபியை (முஹம்மதை) அவர்கள் பின்பற்றுகின்றனர்.
அல்குர்ஆன் (7 : 157)
அரபுகளில் அதிகமானவர்கள் எழுதவும் வாசிக்கவும் தெரியாதவர்கள் என்பதால் அவர்களை உம்மீ என்று குர்ஆன் குறிப்பிடுகின்றது.
وَمِنْهُمْ أُمِّيُّونَ لَا يَعْلَمُونَ الْكِتَابَ إِلَّا أَمَانِيَّ وَإِنْ هُمْ إِلَّا يَظُنُّونَ(78)2
அவர்களில் எழுத்தறிவற்றோரும் உள்ளனர். அவர்கள் பொய்களைத் தவிர வேதத்தை அறிந்து கொள்ள மாட்டார்கள். அவர்கள் கற்பனையே செய்கின்றனர்.
அல்குர்ஆன் (2 : 78)
هُوَ الَّذِي بَعَثَ فِي الْأُمِّيِّينَ رَسُولًا مِنْهُمْ يَتْلُو عَلَيْهِمْ آيَاتِهِ وَيُزَكِّيهِمْ وَيُعَلِّمُهُمْ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَإِنْ كَانُوا مِنْ قَبْلُ لَفِي ضَلَالٍ مُبِينٍ(2)62
அவனே எழுதப் படிக்காத சமுதாயத்தில் அவர்களிலிருந்தே ஒரு தூதரை அனுப்பினான்.
அல்குர்ஆன் (62 : 2)
1913حَدَّثَنَا آدَمُ حَدَّثَنَا شُعْبَةُ حَدَّثَنَا الْأَسْوَدُ بْنُ قَيْسٍ حَدَّثَنَا سَعِيدُ بْنُ عَمْرٍو أَنَّهُ سَمِعَ ابْنَ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ إِنَّا أُمَّةٌ أُمِّيَّةٌ لَا نَكْتُبُ وَلَا نَحْسُبُ الشَّهْرُ هَكَذَا وَهَكَذَا يَعْنِي مَرَّةً تِسْعَةً وَعِشْرِينَ وَمَرَّةً ثَلَاثِينَ رواه البخاري
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
நாம் “உம்மீ’ சமுதாயமாவோம். எழுதுவதை அறிய மாட்டோம்; எண்ணுவதையும் அறிய மாட்டோம். மாதம் என்பது இப்படியும் அப்படியும் இருக்கும். அதாவது சில வேளை இருபத்தொன்பது நாட்களாகவும், சிலை வேளை முப்பது நாட்களாகவும் இருக்கும்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
நூல் : புகாரி (1913)
எனவே உம்மீ என்றால் எழுதவும் வாசிக்கவும் தெரியாதவர் என்பது பொருள்.
(முஹம்மதே!) இதற்கு முன் எந்த வேதத்திலிருந்தும் நீர் வாசிப்பவராக இருந்தில்லை. (இனியும்) உமது வலது கையால் அதை எழுதவும் மாட்டீர்! அவ்வாறு இருந்திருந்தால் வீணர்கள் சந்தேகம் கொண்டிருப்பார்கள்.
அல்குர்ஆன் (29 : 48)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எழுதப் படிக்க அறிந்திருக்கவில்லை என்பதை முஸ்லிம்கள் அறிந்து வைத்திருக்கின்றனர். “நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு எழுதவும், வாசிக்கவும் தெரியும்” என்று படித்தவர்கள் தங்கள் பங்குக்கு இட்டுக் கட்டிக் கூறி வருகின்றனர்.
படிப்பறிவைக் கொண்டே மனிதர்களின் தகுதிகள் வரையறை செய்யப்படும் காலத்தில் இவர்கள் வாழ்வதால், “நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் படிக்காதவர்கள்” என்று சொல்ல இவர்கள் கூச்சப்படுகிறார்கள்.
இவ்வாறு கூறினால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சிறப்புக்குப் பங்கம் ஏற்பட்டு விடுமோ என்று கருதிக் கொண்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு எழுதவும், படிக்கவும் தெரியும் என்று வாதிட்டு வருகின்றனர்.
படிப்பறிவு இல்லாதிருப்பது பொதுவாக தகுதிக் குறைவாகவே கருதப்பட்டாலும் நபிகள் நாயகத்துக்கு இது தகுதிக் குறைவை ஏற்படுத்தாது. ஏனெனில், தகுதிக் குறைவாகக் கருதப்படும் சில விஷயங்கள் சில இடங்களில் தகுதியை அதிகப்படுத்தக் கூடியதாக அமைந்து விடும்.
படிப்பறிவு மனிதர்களுக்கு கூடுதல் தகுதியை ஏற்படுத்தக் கூடியதாக இருந்தாலும் அல்லாஹ்வின் தூதராக நியமிக்கப்பட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் படிப்பறிவு இல்லாமல் இருப்பது தான் சிறப்பாகும்.
எனக்கு இறைவனிடமிருந்து தூதுச் செய்தி வருகிறது என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். அந்தச் செய்தி மிகவும் உயர்ந்த இலக்கியத் தரத்தில் அமைந்திருந்தது. இது போல் யாராலும் இயற்ற முடியாது என்று அறை கூவல் விடும் அளவுக்கு அதன் தரம் இருந்தது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் படித்தவராக இருந்திருந்தால் தமது படிப்புத் திறமையினால் இதை இயற்றியுள்ளார் என்று தான் மக்கள் நினைத்திருப்பார்கள். இதனால் நபிகள் நாயகம் (ஸல்) திறமைசாலி என்பது நிரூபணமாகுமே தவிர அல்லாஹ்வின் தூதர் என்பது நிரூபணமாகாது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அரபு மொழிப் பண்டிதர் என்பதை விட அல்லாஹ்வின் தூதர் என்பது தான் பல்லாயிரம் மடங்கு சிறந்த தகுதியாகும்.
அவர்கள் எழுதவோ, படிக்கவோ தெரிந்திருந்தால் அவர்களை நேரடியாகக் கண்ட மக்கள் அல்லாஹ்வின் தூதர் என்று ஏற்க மாட்டார்கள். அவர்கள் கூறிய தூதுச் செய்தியை அல்லாஹ்வின் வேதம் என்றும் ஏற்றிருக்க மாட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் என்பதை நிரூபிக்க அல்லாஹ் ஏற்படுத்திய நிலை தான் இந்தத் தகுதிக் குறைவு.
“எழுதப் படிக்கத் தெரியாதவர் இவ்வளவு உயர்ந்த தரத்தில் செய்திகளைக் கூறுகிறாரே! நிச்சயமாக இவரது திறமையால் இது உருவாக்கப்பட்டிருக்கவே முடியாது. இவர் கூறுவது போல் இது இறைவனது செய்தியாகத் தான் இருக்க முடியும்” என்று அன்றைய மக்கள் நம்புவதற்கு நபிகள் நாயகத்தின் படிப்பறிவின்மை தான் முக்கியக் காரணமாக இருந்தது.
இதை நாம் கற்பனை செய்து கூறவில்லை. மேலே நாம் சுட்டிக் காட்டிய வசனத்தில் அல்லாஹ்வே இவ்வாறு தான் கூறுகிறான். “வீணர்கள் சந்தேகம் கொண்டிருப்பார்கள்” என்ற வாசகத்தைச் சிந்திப்பவர்கள் இதைச் சந்தேகமற அறியலாம்.
———————
ஏகத்துவம்