இறை நினைவும் அதன் நன்மைகளும்
உள்ளங்கள் அமைதியுறும்
மனிதனாகப் பிறந்த எவரும் சோதனைக்கு உட்படுத்தப்படாமல் இருப்பதில்லை. இது போன்ற சோதனைக் காலங்களில் நமக்கு மன அமைதியைத் தரும் அருமருந்து அல்லாஹ்வை நினைப்பதாகும்.இறைவனை நினைவு கூர்வதால் எவ்வளவு பெரிய கவலைகளும் இல்லாமல் போய்விடும்.
நம்பிக்கை கொண்டோரின் உள்ளங்கள் அல்லாஹ்வின் நினைவால் அமைதியுறுகின்றன. கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் நினைவால் தான் உள்ளங்கள் அமைதியுறுகின்றன.
(அல்குர்ஆன் 13:28)
இறைநினைவே மிகப் பெரியது
அல்லாஹ்வை நினைவு கூர்வது சாதாரண விஷயமல்ல. அதில் கிடைக்கும் நன்மைகள் ஏராளம்! ஏராளம்! அதனால்தான் அல்லாஹ் இறைநினைவு மிகப் பெரியது என்று குறிப்பிடுகின்றான்.
அல்லாஹ்வை நினைப்பதே மிகப் பெரியது. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் அறிவான்.
(அல்குர்ஆன் 29:45)
உயிருள்ள வரை நினைவு கூர வேண்டும்
படைத்தவனை நினைவு கூராமல் ஒருவன் இருந்தால் அவன் இறந்த உடலுக்குச் சமம் என்று நபிகளார் எச்சரிக்கை செய்துள்ளார்கள். உயிருடன் இருக்கும் காலமெல்லாம் படைத்தவனை நினைவு கூர்வது அவசியமாகும்.
தம் இறைவனை நினைவு கூர்ந்து போற்றுகின்றவரின் நிலை உயிருள்ளவரின் நிலைக்கும், தம் இறைவனை நினைவு கூர்ந்து போற்றாதவரின் நிலை உயிரற்றவரின் நிலைக்கும் ஒத்திருக்கிறது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூமூசா (ரலி)
நூல்: புகாரி (6407)
அல்லாஹ் நினைவுகூரப்பட்டுப் போற்றப்படும் இல்லத்தின் நிலை உயிருள்ளவர்களின் நிலைக்கும், அல்லாஹ் நினைவுகூரப்பட்டுப் போற்றப்படாத இல்லத்தின் நிலை உயிரற்றவனின் நிலைக்கும் ஒத்திருக்கிறது.
அறிவிப்பவர்: அபூமூசா (ரலி)
நூல்: முஸ்லிம் (1429)
அதிகம் நினையுங்கள்
மன அமைதியையும் இறையருளையும் அள்ளித் தரும் இறைநினைவு அதிகமதிகம் நம்மிடம் இருக்க வேண்டும். இறைநினைவு அதிகம் இருக்கும் போது ஷைத்தானின் ஆதிக்கம் இல்லாமல் போய்விடும்.
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அதிகமதிகம் நினையுங்கள்!
(அல்குர்ஆன் 33:41)
ஆண்களும் பெண்களும் நினைவு கூர்வார்கள்
நல்லடியார்களாக இருக்கும் ஆண்களும் பெண்களும் அல்லாஹ்வை அதிகமதிகம் நினைவு கூர்வார்கள். அவர்களுக்கு மன்னிப்பும் மகத்தான கூலியும் உண்டு.
முஸ்லிமான ஆண்களும், பெண்களும், நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும், கட்டுப்படும் ஆண்களும், பெண்களும், உண்மை பேசும் ஆண்களும், பெண்களும், பொறுமையை மேற்கொள்ளும் ஆண்களும், பெண்களும், அடக்கமாக நடக்கும் ஆண்களும், பெண்களும், தர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும், நோன்பு நோற்கும் ஆண்களும், பெண்களும், தமது கற்பைக் காத்துக் கொள்ளும் ஆண்களும், பெண்களும், அல்லாஹ்வை அதிகம் நினைக்கும் ஆண்களும், பெண்களும் ஆகியோருக்கு அல்லாஹ் மன்னிப்பையும், மகத்தான கூலியையும் தயாரித்துள்ளான்.
(அல்குர்ஆன் 33:35)
எல்லா நிலையிலும் படைத்தவனை நினைவு கூரவேண்டும்.
அவர்கள் நின்றும், அமர்ந்தும், படுத்த நிலையிலும் அல்லாஹ்வை நினைப்பார்கள். வானங்களும் பூமியும் படைக்கப்பட்டது குறித்துச் சிந்திப்பார்கள். “எங்கள் இறைவா! இதை நீ வீணாகப் படைக்கவில்லை; நீ தூயவன்; எனவே நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக!’’ (என்று அவர்கள் கூறுவார்கள்)
(அல்குர்ஆன் 3:191)
வியாபாரமும் குடும்பமும் தடையாக இருக்காது
வாழ்வுக்கு அவசியமான வியாபாரம், குடும்பம் ஆகியவை, அல்லாஹ்வை நினைத்துப் பார்ப்பதைத் தடுத்துவிடக்கூடாது. அவ்வாறு நடந்துவிட்டால் மிகப்பெரிய நஷ்டவாளியாக ஆகிவிடுவோம்.
வணிகமோ, வர்த்தகமோ அவர்களை அல்லாஹ்வின் நினைவை விட்டும், தொழுகையை நிலைநாட்டுவதை விட்டும், ஸகாத் கொடுப்பதை விட்டும் திசை திருப்பாது. பார்வைகளும், உள்ளங்களும் தடுமாறும் நாளை அவர்கள் அஞ்சுவார்கள்.
(அல்குர்ஆன் 24:37)
நம்பிக்கை கொண்டோரே! உங்களின் பொருட்செல்வமும், மக்கட்செல்வமும் அல்லாஹ்வின் நினைவை விட்டு உங்களைத் திசைதிருப்பி விட வேண்டாம். இதைச் செய்வோரே நட்டமடைந்தவர்கள்.
(அல்குர்ஆன் 63:9)
இறைவன் நினைவுகூர்வான்
அல்லாஹ்வை நாம் நினைக்கும் போதுதான் அல்லாஹ் நம் நிலையைக் கவனித்து, உரிய நல்வழியை நமக்குக் காட்டுவான்.
என்னை நினையுங்கள்! நானும் உங்களை நினைக்கிறேன். எனக்கு நன்றி செலுத்துங்கள்! எனக்கு நன்றி மறக்காதீர்கள்!
(அல்குர்ஆன் 2:152)
அல்லாஹ்வை நினைப்பதற்கு நபிகளார் சில சொற்களை சொல்லிச் சென்றுள்ளார்கள். அந்த சொற்களைப் பொருளறிந்து நாம் சொல்லும் போது எண்ணற்ற நன்மைகளை அடைந்துவிடலாம்.
இறைநினைவு இல்லாதவனுக்குக் கட்டுப்படாதீர்கள்
அல்லாஹ்வைப் பற்றிய நினைவு இல்லாதவனின் அறிவுரைகளை ஏற்காதீர்கள். அவனிடம் ஷைத்தானின் வழிகாட்டுதல்கள் தான் அதிகம் இருக்கும். படைத்தவனைப் பற்றி அஞ்சி நடப்பவன் நல்ல அறிவுரைகளை வழங்குவான்.
நம்மை நினைப்பதை விட்டும் எவனது சிந்தனையை நாம் மறக்கடிக்கச் செய்து விட்டோமோ, அவனுக்குக் கட்டுப்படாதீர்! அவன் தனது மனோ இச்சையைப் பின்பற்றுகிறான். அவனது காரியம் வரம்பு மீறுவதாக உள்ளது.
(அல்குர்ஆன் 18:28)
நன்மை தராசில் கனமான சொற்கள்
சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி
சுப்ஹானல்லாஹில் அழீம்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(இறைவனைத் துதிக்கும்) இரண்டு வாக்கியங்கள் அளவற்ற அருளாளனின் பிரியத்திற்குரியவை; நாவுக்கு எளிதானவை; (நன்மை தீமை நிறுக்கப்படும்) தராசில் கனமானவை ஆகும். (அவை:)
- சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி (அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து துதி செய்கிறேன்).
- சுப்ஹானல்லாஹில் அழீம் (கண்ணிய மிக்க அல்லாஹ்வைத் தூயவன் எனத் துதிக்கிறேன்).
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்கள்: புகாரி (7563), முஸ்லிம் (5224)
செல்வந்தர்களின் நன்மைகளைப் பெற்றுத் தரும் சொற்கள்
சுப்ஹானல்லாஹ், அல்ஹம்து லில்லாஹ், அல்லாஹு அக்பர்
ஏழைகள் (சிலர்) நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘‘செல்வச் சீமான்கள் உயர்வான பதவிகளையும் நிலையான இன்பங்களையும் (தட்டிக்) கொண்டு போய்விடுகின்றனர். நாங்கள் தொழுவது போன்றே அவர்களும் தொழுகின்றனர். நாங்கள் நோன்பு நோற்பதுபோன்றே அவர்களும் நோன்பு நோற்கின்றனர். ஆயினும் தங்களது அதிகப்படியான செல்வங்கள் மூலம் அவர்கள் ஹஜ் செய்கின்றனர்; உம்ரா செய்கின்றனர்; அறப்போருக்காகச் செலவளிக்கின்றனர்; தான தர்மம் செய்கின்றனர். (ஏழைகளாகிய எங்களால் இவற்றைச் செய்ய முடிவதில்லையே)’’ என்று கூறினர்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘நான் உங்களுக்கு ஒன்றைத் தெரிவிக்கட்டுமா? அதை நீங்கள் கடைப்பிடித்தால் (இந்த சமுதாயத்தில்) உங்களை முந்திவிட்ட(செல்வர்)வர்களையும் நீங்கள் பிடித்துவிடலாம். உங்களுக்குப் பின்னால் வரும் எவராலும் உங்களை பிடிக்க இயலாது. நீங்கள் எந்த மக்களிடையே வாழ்கிறீர்களோ அவர்களில் சிறந்தவர்கள் ஆவீர்கள். உங்களைப் போன்று மற்றவரும் அதைச் செயல்படத்தினால் தவிர!
நீங்கள் ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பும் 33தடவை தஸ்பீஹ் (சுப்ஹானல்லாஹ்) சொல்லுங்கள்; 33 தடவை தஹ்மீத் (அல்ஹம்துலில்லாஹ்) கூறுங்கள்; 33 தக்பீர் (அல்லாஹு அக்பர்) சொல்லுங்கள் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்கள்: புகாரி (843), முஸ்லிம்(1044)
தர்மத்தின் நன்மை தரும் திக்ர்
சுப்ஹானல்லாஹ், அல்ஹம்து லில்லாஹ், அல்லாஹு அக்பர், லா இலாஹ இல்லல்லாஹ்.
‘‘உங்களில் ஒருவர் ஒவ்வொரு காலையிலும் (தமது உடலிலுள்ள) ஒவ்வொரு மூட்டிற்காகவும் தர்மம் செய்வது கடமையாகும்; இறைவனைத் துதிக்கும் ஒவ்வொரு துதிச் சொல்லும் (-சுப்ஹானல்லாஹ்) தர்மமாகும். ஒவ்வொரு புகழ்மாலையும் (-அல்ஹம்து லில்லாஹ்) தர்மமாகும். ஒவ்வொரு ஓரிறை உறுதிமொழியும் (-லாஇலாஹ இல்லல்லாஹ்-) தர்மமாகும்; அவனைப் பெருமைப்படுத்தும் ஒவ்வொரு சொல்லும் (-அல்லாஹு அக்பர்) தர்மமே! நல்லதை ஏவுதலும் தர்மமே! தீமைகளைத் தடுத்தலும் தர்மமே! இவை அனைத்திற்கும் (ஈடாக) முற்பகல் நேரத்தில் (ளுஹா) இரண்டு ரக்அத்கள் தொழுவது போதுமானதாக அமையும்’’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூதர் (ரலி)
நூல்: முஸ்லிம் (1302)
வலிமை தரும் திக்ர்
(என் துணைவியாரான) ஃபாத்திமா அவர்கள் மாவு அரைக்கும் திருகையினால் தமக்கு ஏற்பட்ட வேதனையைக் குறித்து முறையிட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சில போர்க் கைதிகள் கொண்டு வரப்பட்டிருக்கிறார்கள் (அவர்களை நபி (ஸல்) அவர்கள் முஸ்லிம்களிடையே பங்கிடவிருக்கின்றார்கள்) என்னும் செய்தி ஃபாத்திமா (ரலி) அவர்களுக்கு எட்டியது. உடனே, அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் (அந்தப் போர்க் கைதிகளிலிருந்து) ஒரு பணியாளை (தமக்குக் கொடுக்கும்படி) கேட்கச் சென்றார்கள். ஆனால், நபி (ஸல்) அவர்கள் வீட்டில் இல்லாததால் அவர்களை ஃபாத்திமா (ரலி) அவர்களால் அந்த நேரத்தில் சந்திக்க முடியவில்லை. ஆகவே, ஆயிஷா (ரலி) அவர்களிடம் (தாம் வந்த காரணத்தைக்) கூறி(விட்டுத் திரும்பி)னார்கள். பின்னர், நபி (ஸல்) அவர்கள் வந்தவுடன் அவர்களுக்கு ஆயிஷா (ரலி) அவர்கள் விஷயத்தைச் சொன்னார்கள்.
நபி (ஸல்) அவர்கள் நாங்கள் படுக்கைக்குச் சென்று விட்ட பின்னால் எங்களிடம் வருகை தந்தார்கள். அவர்களைக் கண்டவுடன் நாங்கள் எழுந்து நிற்க முனைந்தோம். நபி (ஸல்) அவர்கள், (எழுந்திருக்க வேண்டாம்.) உங்கள் இடத்திலேயே இருவரும் இருங்கள் என்று கூறினார்கள். (பிறகு) நான் அவர்களுடைய பாதத்தின் குளிர்ச்சியை என் நெஞ்சின் மீது உணர்ந்தேன். (அந்த அளவிற்கு எங்கள் அருகில் வந்து அமர்ந்து கொண்டார்கள்). பின்னர், நீங்கள் இருவரும் என்னிடம் கேட்டதை விடச் சிறந்த ஒன்றை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? நீங்கள் படுக்கைக்குச் செல்லும் போது, ‘அல்லாஹு அக்பர் – அல்லாஹ் பெரியவன்’ என்று முப்பத்து நான்கு முறையும், ‘அல்ஹம்துலில்லாஹ் – புகழனைத்தும் அல்லாஹ்விற்கே’ என்று முப்பத்து மூன்று முறையும், சுப்ஹானல்லாஹ்- – அல்லாஹ் குறைகளிலிருந்து தூய்மையானவன்’ என்று முப்பத்து மூன்று முறையும் சொல்லுங்கள். ஏனெனில், அது நீங்கள் இருவரும் என்னிடம் கேட்டதை விடச் சிறந்ததாகும் என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர்: அலீ (ரலி)
நூல்கள்: புகாரி (3113), முஸ்லிம்(5273)