இறைத்தூதர்கள் கொல்லப்பட்டது ஏன்?
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முன் எண்ணற்ற நபிமார்கள் அனுப்பப்பட்டனர். அவர்களில் ஏராளமான நபிமார்களை அவர்களின் எதிரிகள் கொன்று விட்டனர். இதைப் பின்வரும் வசனங்களில் காணலாம்.
அல்லாஹ்வின் உடன்படிக்கையும், மனிதர்களின் உடன்படிக்கையும் இருந்தால் தவிர அவர்கள் எங்கிருந்த போதும் அவர்களுக்கு இழிவு விதிக்கப்பட்டு விட்டது. அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளானார்கள். அவர்களுக்கு வறுமை விதிக்கப்பட்டு விட்டது. அல்லாஹ்வின் வசனங்களை அவர்கள் ஏற்க மறுத்ததும், நபிமார்களை அநியாயமாகக் கொலை செய்ததுமே இதற்குக் காரணம். மேலும் அவர்கள் பாவம் செய்ததும் வரம்பு மீறியதும் இதற்குக் காரணம்.
அல்குர்ஆன் 3:112
அல்குர்ஆன் 3:21, 2:61, 2:91, 2:87, 3:183 ஆகிய வசனங்களிலும் நபிமார்களை அவர்களின் எதிரிகள் கொலை செய்ததை அல்லாஹ் குறிப்பிடுகிறான்.
நினைத்த மாத்திரத்தில் அன்றாடம் அற்புதம் நிகழ்த்தும் சக்தி நபிமார்களுக்கு வழங்கப்பட்டிருந்தால் அவர்கள் ஏன் கொல்லப்பட்டனர்? யாரேனும் நம்மைக் கொல்ல வந்தால் நம்மிடம் உள்ள வலிமையைப் பயன்படுத்தி அதிலிருந்து தப்பிக்க முயற்சிப்பது கட்டாயக் கடமை. கை கட்டிக் கொண்டு தலையை நீட்ட மார்க்கத்தில் அனுமதி இல்லை.
அற்புதம் நிகழ்த்தும் ஆற்றல் நபிமார்களிடம் இருந்திருந்தால் எதிரிகள் கொல்ல வரும் போது அதைப் பயன்படுத்தும் கடமை அவர்களுக்கு உண்டு. அற்புதத்தைப் பயன்படுத்தியிருந்தால் அவர்களை யாராலும் கொன்றிருக்கவே முடியாது. ஆனாலும் அவர்கள் கொல்லப்பட்டனர். எனவே அற்புதங்கள் நிகழ்த்தும் அதிகாரம் அல்லாஹ்வுடையதே தவிர நபிமார்களுக்கோ, மற்றவர்களுக்கோ உரியதன்று என்பதை இதிலிருந்து அறிய முடியும்.