இறைத்தூதர்களுக்கு எதிரிகள்
தீய மனிதர்கள் இறைத்தூதர்களுக்கு துயரங்களையும் துன்பங்களையும் கொடுத்தது போல் கெட்ட ஜின்களும் இறைத்தூதர்களுக்கு இடஞ்சல்களை கொடுத்துள்ளனர்.
இவ்வாறே மனிதர்களிலும், ஜின்களிலும் உள்ள ஷைத்தான்களை ஒவ்வொரு நபிக்கும் பகைவர்களாக ஆக்கினோம். ஏமாற்றுவதற்காக கவர்ச்சிகரமான சொற்களை அவர்களில் ஒருவர் மற்றவருக்கு அறிவிக்கின்றனர். (முஹம்மதே) உமது இறைவன் நாடியிருந்தால் அவர்கள் இதைச் செய்திருக்க மாட்டார்கள். அவர்கள் இட்டுக் கட்டுவதோடு அவர்களை விட்டு விடுவீராக!
அல்குர்ஆன் (6 : 112)
நபி (ஸல்) அவர்களின் தொழுகையை பாழ்படுத்துவதற்காக ஒரு கெட்ட ஜின் ஒன்று முயற்சித்தது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
பலம் பொருந்திய ஜின் ஒன்று நேற்றிரவு என் தொழுகையை (இடையில்) துண்டிப்பதற்காக திடீரென்று வந்து நின்றது. அல்லாஹ் எனக்கு அதை வசப்படுத்தித் தந்தான். நான் அதைப் பிடித்துக் கொண்டேன். நீங்கள் ஒவ்வொருவரும் அதைப் பார்ப்பதற்காக அதைப் பள்ளிவாசலின் தூண்களில் ஒன்றில் கட்டி வைக்க விரும்பினேன்.
அப்போது, என் சகோதரர் சுலைமான் (அலை) அவர்கள் செய்த, “என் இறைவா! எனக்குப் பின் வேறெவருக்கும் கிடைக்காத ஓர் அதிகாரத்தை எனக்கு வழங்குவாயாக!” (38:35) என்னும் பிரார்த்தனையை நினைவு கூர்ந்தேன். உடனே, அதைச் சபித்து எறியப்பட்டதாகத் திருப்பியனுப்பி விட்டேன்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),
நூல் : புகாரி-3423