இறந்து விட்ட குழந்தைகளின் மறுமை நிலை என்ன?
தனக்கு கனவில் காட்டப்பட்ட சொர்க்கத்தின் வர்ணனை குறித்து அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
……..அப்படியே நடங்கள் அடர்ந்துயர்ந்த பசுமையான ஒரு பூங்காவிற்குச் சென்றோம். அதில் வசந்த காலத்தின் எல்லா வண்ணப் பூக்களும் காணப்பட்டன.
அந்தப் பூங்காவிற்கு நடுவில் உயரமான மனிதர் ஒருவர் இருந்தார்.
வான் நோக்கி உயர்ந்திருந்தால் அவரின் தலையை என்னால் (எளிதில்) பார்க்க முடியவில்லை.
அந்த மனிதரைச் சுற்றி நான் ஒருபோதும் கண்டிராத அளவிற்கு ஏராளமான சிறுவர்கள் இருந்தார்கள்.
நான் அவ்விருவரிடமும், ‘இந்த (உயரமான) மனிதர் யார்? இந்தச் சிறுவர்கள் யார்?’ என்று கேட்டேன். அவர்கள் என்னிடம், ‘செல்லுங்கள், செல்லுங்கள்‘ எனக் கூறிவிடவே நடந்து ஒரு பெரும் பூங்காவுக்கு வந்தோம்.
அதைவிட பெரிய அழகான பூங்காவை நான் ஒருபோதும் கண்டதில்லை.
அந்தப் பூங்காவிலிருந்த உயரமான மனிதர் (இறைத்தூதர்) இப்ராஹீம்(அலை) அவர்களாவார்.
அவர்களைச் சுற்றியிருந்த சிறுவர்கள் இயற்கை மரபில் (இஸ்லாத்தில்) இறந்துவிட்ட சிறுவர்கள் ஆவர்.
இதை நபி(ஸல்) அவர்கள் கூறியபோது முஸ்லிம்களில் சிலர், ‘இறைத்தூதர் அவர்களே! இணைவைப்பாளர்களின் குழந்தைகளும் (அந்தப் பூங்காவில் இருந்த குழந்தைகளில் அடங்குவார்களா?)’ என்று கேட்டனர்.
அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ஆம் இணைவைப்பாளர்களுடைய குழந்தைகளும் தாம் என்று பதிலளித்தார்கள்.
ஸஹீஹ் புகாரி : 7047. (ஹதீஸ் சுருக்கம்)
இணைவைப்பாளர்களின் பிள்ளைகள் முதற்கொண்டு எல்லா பிள்ளைகளும் இயற்கை மார்க்கமான இஸ்லாத்திலேயே பிறப்பதாக நபிகளார் கூறிவிட்டார்கள். நல்லது கெட்டதைக் கண்டறியும் பருவத்தை அடையும் முன்னே அக்குழந்தைகள் இறந்து விட்டால் அவர்களின் இறப்பும் இஸ்லாத்திலேயே அமைந்து விடுவதை நபிகளாரின் இக்கூற்று உறுதிப்படுத்தி விடுகிறது.
விபரமறியும் பருவத்தை அடையும் முன் மரணித்த சிறுவர்கள் முஸ்லிம்களாகவே மரணிக்கின்றார்கள் என்ற கருத்து தெளிவாகவே இதில் உள்ளது.
இக்கருத்தை வலுப்படுத்தும் விதமாகவே மிஃராஜ் தொடர்பிலான செய்தி அமைந்திருக்கின்றது.
சொர்க்கத்தில் சில சிறுவர்களைப் பார்த்ததாக நபிகளார் குறிப்பிடும் போது இணை வைப்பாளர்களின் பிள்ளைகளும் இதில் அடங்குவார்களா? என்று நபித்தோழர்கள் கேட்க ஆம் என நபி (ஸல்) அவர்கள் பதிலளிக்கின்றார்கள்.
எனவே குழந்தைப் பருவத்திலே மரணிக்கின்ற பிள்ளைகள் யாவரும் இஸ்லாத்திலேயே மரணிக்கின்றார்கள் என்பது இஸ்லாத்தின் நிலைப்பாடு என்பதை இதிலிருந்து உறுதியாக விளங்கலாம்.
இஸ்லாத்தின் நிலைப்பாடு இப்படி இருக்க உயிருடன் புதைக்கப்பட்ட குழந்தை நரகிற்குச் செல்லும் என்பது இஸ்லாத்தின் இந்நிலைப்பாட்டிற்கு எதிராக உள்ளது.
இதன்படி மேற்கண்ட ஹதீஸின் பொருள் ஆதாரப்பூர்வமான பல நபிமொழிகளுக்கும் மாற்றமாக உள்ளதை அறியலாம்.
தற்கால அறிஞரான இமாம் ஷூஐப் அல்அர்னாஊத் என்பவரும் அஹ்மத் செய்தியின் அடிக்குறிப்பில் இக்கருத்தை சுட்டிக்காட்டுகிறார்.
இதில் தாவூத் பின் அபீஹின்த் என்பாரைத் தவிர இதர அறிவிப்பாளர்கள் அனைவரும் புகாரி, முஸ்லிமில் இடம்பெறும் அறிவிப்பாளர்களாவர். தாவூத் பின் அபீஹின்த் முஸ்லிமின் அறிவிப்பாளர் ஆவார்.
இச்செய்தியை அறிவிக்கும் நபித்தோழரின் (ஸலமா ரலி) அறிவிப்பு நஸாயியிலும், முஸ்லிமிலும் உள்ளது.
எனினும் இச்செய்தியின் கருத்திலே மறுக்கத்தக்க அம்சம் உள்ளது. அது என்னவென்றால் உயிருடன் புதைக்கப்பட்ட பருவத்தை அடையாத குழந்தைக்கு நரகம் என்று இதில் கூறப்படுகிறது.
பருவமடையாத குழந்தைகளைப் பொறுத்தவரை விசாரணைக்கு உட்படுத்தப்படுதல் அவர்களுக்கு இல்லை என மார்க்கச் சான்றுகள் அதிகம் சான்று பகர்கின்றன.
எனவே பருவத்தை அடையும் முன் மரணிக்கின்ற இணை வைப்பாளர்களின் குழந்தைகள் சொர்க்கவாசிகள் என்பதே ஆய்வாளர்களிடம் தேர்ந்தெடுக்கப்பட்ட சரியான கருத்தாகும்.
அஹ்மத் பாகம் 3 பக்கம் 478
ஏகத்துவம்