ரஹ், அலை, ஸல், ரலி – என்றால் என்ன?

முன் சென்றவர்களின் பெயருக்குப் பின்னால் ஸல், அலை, ரலி, ரஹ் என்றெல்லாம் முஸ்லிம்களாகிய நீங்கள் குறிப்பிடுவதன் கருத்து என்ன என்று முஸ்லிமல்லாத நண்பர் கேட்கிறார். எப்படி விளக்கம் கூறுவது?

ஸல் என்பது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்பதன் சுருக்கமாகும்.

எழுத்தில் ஸல் என்று கூறப்பட்டாலும் வாசிக்கும்போது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்று வாசிக்க வேண்டும். ‘அவர் மீது அல்லாஹ் சிறப்பருள் புரியட்டும். சாந்தியை வழங்கட்டும்’என்பது இதன் பொருள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பற்றிக் கூறப்படும் போது அவர்களுக்காக இறையருள் வேண்டி பிரார்த்தனை செய்ய வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இது பற்றி வயுறுத்தியுள்ளனர். எனவே, முஹம்மது நபியவர்களைப் பற்றிக் கூறும் போது, ‘அவர்களுக்கு அல்லாஹ் அருள் புரியட்டும்’ என்பதையும் சேர்த்துக் கூறுகிறோம்.

ஒவ்வொரு சமுதாயமும் தங்களுக்கு வழிகாட்ட அனுப்பப்பட்ட நபிமார்களைக் கடவுளர்களாக ஆக்கி விட்ட நிலையில் முஸ்லிம்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கடவுளாக ஆக்காமல் இந்த அடைமொழி தடுத்து வருகிறது.

நபிகள் நாயகத்தைப் பற்றிப் பேசும் போதெல்லாம் அவர்களுக்கு நாம் பிரார்த்தனை செய்கிறோமே தவிர அவர்களிடம் பிரார்த்தனை செய்ய மாட்டோம் என்ற தெளிவை முஸ்லிம் சமுதாயத்துக்கு இது உருவாக்கியுள்ளது.

அலை என்பது அலைஹிஸ்ஸலாம்’ அல்லது அலை ஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம்’ என்பதன் சுருக்கமாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) தவிர மற்ற நபிமார்களைப் பற்றிக் கூறும் போது இவ்வாறு பயன்படுத்தி வருவது வழக்கமாகவுள்ளது. ‘அவர் மீது இறைவனின் சிறப்பருளும் சாந்தியும் ஏற்படட்டுமாக’ என்பது இதன் பொருள். அதாவது ஸல்லஸ்லாஹு அலைஹி வஸல்லம்’ என்பதற்கு என்ன பொருளோ அது தான் அலைஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம்’ என்பதற்கும் பொருளாகும்.

‘நபிகள் நாயகம் (அலை)’ ‘மூஸா (ஸல்)’ என்று பயன்படுத்தினால் அதில் எந்தத் தவறும் இல்லை. பழங்கால நூல்களில் இப்படியும் பலர் பயன்படுத்தியுள்ளனர்.

ஆனாலும் ஸல்’ என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும் அலை’ என்பதை மற்ற நபிமார்களுக்கும் பயன்படுத்துவதை வழக்கமாக ஆக்கி விட்டனர்.

அலை என்பதை நபிமார்கள் அல்லாதவர்களுக்கும் பயன்படுத்தினால் அதில் மார்க்க அடிப்படையில் தவறு இல்லை. அவர்கள் மீது சாந்தியும் அருளும் ஏற்படட்டும் என்பது இதன் பொருள். இது யாருக்கு வேண்டுமானாலும் செய்யத் தக்க துஆ தான்

ரலி என்பது ரலியல்லாஹு அன்ஹு’ என்பதன் சுருக்கமாகும். அவரை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக என்பது இதன் பொருள்.

இதை எந்த இறை நம்பிக்கையாளருக்கும் பயன்படுத்தலாம். எல்லோருக்கும் இறைவனின் பொருத்தம் தேவையானது தான்.

ஆனாலும், இதை நபித்தோழர்களுக்கு மட்டுமே பயன்படுத்துவது வழக்கமாகி விட்டது. நபித்தோழர் அல்லாத மற்றவர்களுக்கும் ரலி’ என்பதைப் பயன்படுத்துவது மார்க்கச் சட்டப்படி குற்றமல்ல.

உங்களைக் கூட தஸ்னீம் (ரலி)’ எனக் கூறலாம். ஆனாலும் ரலி’ என்பது அதன் அர்த்தத்தைக் கடந்து நபித்தோழர்களின் அடையாளமாகவே இன்று ஆகிவிட்டது. மற்றவர்களுக்கு ரலி’ என்று பயன்படுத்தினால் அவர்கள் நபித்தோழர்களாக இருப்பார்களோ என்ற எண்ணத்தை ஏற்படுத்தி விடும்.

இதைக் கவனத்தில் கொண்டு மற்றவர்களுக்கு இதைப் பயன்படுத்தாமல் தவிர்க்கலாம்.

ரஹ்’ என்பது ரஹ்மத்துல்லாஹி அலைஹி’ என்பதன் சுருக்கம். அல்லாஹ் அவருக்கு அருள்புரிவானாக’ என்பது இதன் பொருள்.

எல்லா நம்பிக்கையாளர்களுக்கும் இதைப் பயன்படுத்தலாம். ஏனெனில் அனைவருக்குமே அல்லாஹ்வின் அருள் தேவை தான். ஆனால், இறந்தவர்களுக்கு மட்டுமே இது பயன்படுத்தப்படுகிறது. அதுவும் பிரபலமானவர்களுக்கே பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனக்கோ, உங்களுக்கோ இதைப் பயன்படுத்தினால் நாம் எந்தக் காலத்திலோ வாழ்ந்து மடிந்தவர்கள் என்று மக்கள் நினைப்பார்கள். இதை எவருக்கும் பயன்படுத்தலாம். மார்க்க ரீதியாக இதற்குத் தடை இல்லை.

ஏகத்துவம்

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed