அஸர் தொழுகைக்குப் பின் ஜனாஸா தொழலாமா?
அஸர் தொழுகைக்குப் பின்னால் எந்தத் தொழுகையும் தொழக் கூடாது என்ற கருத்தில் சில ஹதீஸ்கள் உள்ளன.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சுப்ஹுத் தொழுகைக்குப் பின்னாலிருந்து சூரியன் (உயர்ந்து) சுடர்விடும் வரை தொழுவதையும், அஸ்ர் தொழுகைக்குப் பின்னால் சூரியன் மறையும் வரை தொழுவதையும் தடைசெய்தார்கள் என திருப்திக்குரிய சிலர் என்னிடம் உறுதிபடக் கூறினர். அவர்களில் என்னிடம் மிகவும் திருப்திக்குரியவர் உமர் (ரலி) அவர்கள் ஆவார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
நூல் : புகாரி 581
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
சுப்ஹுத் தொழுகைக்குப் பின்னாலிருந்து சூரியன் (முழுமையாக) உதிக்கும் வரை எந்தத் தொழுகையும் இல்லை. அஸ்ர் தொழுகைக்குப் பின்னாலிருந்து சூரியன் (முழுமையாக) மறைவும் வரை எந்தத் தொழுகையும் இல்லை.
அறிவிப்பவர் : அபூசயீத் அல்குத்ரீ (ரலி)
நூல் : புகாரி 586
மேற்கண்ட செய்திகைளை மட்டும் கவனித்தால் அஸர் தொழுகைக்குப் பின்னால் ஜனாஸாத் தொழுகை உட்பட எந்தத் தொழுகையும் தொழக் கூடாது என்று விளங்குவதற்கு வாய்ப்புள்ளது.
ஆனால் இது தொடர்பாக வரும் மற்ற செய்திகளையும் கவனித்தால் இந்தத் தடை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்து காட்டிய சுன்னத்தான தொழுகைகளுக்குப் பொருந்தாது என்பதையும், அஸருக்குப் பின்னால் ஒரு மனிதர் தாமாக விரும்பித் தொழும் உபரியான தொழுகைகளைப் பற்றியே இவை பேசுகின்றன என்பதையும் தெளிவாக அறியலாம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் லுஹருடைய பின் சுன்னத் இரண்டு ரக்அத்களை அஸர் தொழுகைக்குப் பின்னால் தொழுதுள்ளார்கள்.
குறைப் கூறுகின்றார் :
இப்னு அப்பாஸ் (ரலி), மிஸ்வர் பின் மக்ரமா (ரலி), அப்துர் ரஹ்மான் பின் அஸ்ஹர் (ரலி) ஆகியோர் என்னிடம் “ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்று எங்கள் அனைவரின் ஸலாமையும் அவருக்குக் கூறுவீராக! அஸ்ருக்குப் பின் இரண்டு ரக்அத் தொழுவது பற்றி அவரிடம் கேட்பீராக! நபிகள் நாயகம் (ஸல்) அதைத் தடை செய்ததாக எங்களுக்குச் செய்தி கிடைத்திருக்க, அத்தொழுகையை (ஆயிஷாவே!) நீங்கள் தொழுவதாகக் கேள்விப்படுகிறோம் என்று கேட்பீராக!’ என்று கூறினார்கள். (மேலும்) இப்னு அப்பாஸ் (ரலி), தாமும் உமர் (ரலி) அவர்களும், இவ்வாறு (அஸ்ருக்குப் பின்) தொழுபவர்களை அடிப்பவர்களாக இருந்ததையும் தெரிவிக்கச் சொன்னார்கள்.
நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்று, நான் அனுப்பப்பட்ட விஷயத்தைக் கூறினேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள் “நீர் உம்மு சலமா (ரலி) அவர்களிடம் கேளும்!” என்று கூறினார்கள். நானும் இம்மூவரிடம் திரும்பி வந்து ஆயிஷா (ரலி) கூறியதைச் சொன்னேன். உம்மு சலமா (ரலி) அவர்களிடம் சென்று ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்ட கேள்வியைக் கேட்குமாறு மீண்டும் அனுப்பினார்கள். (உடனே நான் உம்மு சலமா (ரலி) அவர்களிடம் வந்து விஷயத்தைக் கூறிய போது) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்விரு ரக்அத்களைத் தடை செய்ததை நான் கேட்டுள்ளேன். பிறகு அவர்கள் அஸ்ர் தொழுதுவிட்டு இரண்டு ரக்அத்கள் தொழுததை நான் பார்த்தேன். தொழுதுவிட்டு எனது வீட்டிற்கு வந்தார்கள். அப்போது என்னுடன் அன்சாரிகளில் பனூஹராம் எனும் கோத்திரத்தைச் சேர்ந்த பெண்கள் சிலர் இருந்தனர். அவர்களில் ஒரு பெண்ணை, தொழுது கொண்டிருக்கும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் அனுப்பி, ” நீ அவர்களுக்கு அருகில் சென்று “அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் இந்த இரண்டு ரக்அத்கள் தொழுவதைத் தடுத்ததை நான் கேட்டிருக்கிறேன். ஆனால் இப்போது தாங்களே அதைத் தொழுவதை நான் பார்க்கிறேனே?’ என நான் கேட்டதாக அவர்களிடம் நீ கூறு. அவர்கள் தம் கைகளினால் சைகை செய்தால் நீ பின்வாங்கி விடு!” எனக் கூறி அனுப்பினேன். அப்பெண்ணும் கூறப்பட்டது போன்றே செய்தார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம் கைகளால் சைகை செய்த போது அப்பெண்மணி திரும்பி வந்து விட்டார். தொழுகையை முடித்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “”அபூ உமைய்யாவின் மகளே! அஸ்ருக்குப் பின்னால் (தொழுத) இரண்டு ரக்அத்தைப் பற்றிக் கேட்டாய். அப்துல் கைஸ் கிளையைச் சேர்ந்தவர்கள் வந்ததால் லுஹ்ருக்குப் பின்னால் உள்ள இரண்டு ரக்அத்களை நான் தொழ முடியவில்லை; அத்தொழுகையே இந்த இரண்டு ரக்அத்களாகும்” என்றார்கள் என உம்மு சலமா (ரலி) அவர்கள் விடையளித்தார்கள்.
நூல் : புகாரி 1233
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தவறிப் போன லுஹருடைய பின் சுன்னத் இரண்டு ரக்அத்களை அஸருக்குப் பின்னால் தொழுகிறார்கள். உம்மு சலமா (ரலி) அவர்கள் இது தடுக்கப்பட்ட காரியமாயிற்றே எனக் கருதி இதை நபியவர்களுக்கு ஞாகப்படுத்துகின்றார்கள்.
ஆனால் நபியவர்கள் இது உபரியான வணக்கமல்ல. விடுபட்ட சுன்னத் தொழுகை என்று பதிலளிக்கின்றார்கள். எனவே அஸருக்குப் பின்னால் உபரியாக (நஃபில்) தொழுவதே கூடாது என்பதை அறியலாம்.
அஸர் தொழுகைக்குப் பின்னால் எந்தத் தொழுகையும் கிடையாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதைப் போன்று ஃபஜருக்குப் பின்னாலும் எந்தத் தொழுகை கிடையாது என்று கூறியுள்ளார்கள். ஆனால் ஒரு நபித்தோழர் ஃபஜர் தொழுகைக்குப் பின்னால் தவறிப் போன ஃபஜருடைய முன் சுன்னத் இரண்டு ரக்அத்கள் தொழுத போது அதை நபியவர்கள் அனுமதித்தார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் நான் சுப்ஹு தொழுதேன். ஆனால் சுப்ஹுடைய (முன் சுன்னத்) இரண்டு ரக்அத்களை நான் தொழவில்லை. எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸலாம் சொன்ன பிறகு நான் எழுந்து (விடுபட்ட முன்ன சுன்னத்தான) பஜ்ருடைய இரண்டு ரக்அத்துகளைத் தொழுதேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் இதற்கு ஆட்சேபனை தெரிவிக்கவில்லை.
அறிவிப்பவர் : கைஸ் (ரலி),
நூல் : இப்னுஹிப்பான் 2471
ஜனாஸாத் தொழுகையைப் பொறுத்தவரை அது ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்குச் செய்ய வேண்டிய கடமையாகும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித்தந்த சுன்னத்தான வணக்கமாகும். எனவே அஸர் தொழுகைக்குப் பின்னால் தொழக் கூடாது என்ற தடை இத்தொழுகைக்குப் பொருந்தாது.
மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்ட மூன்று நேரங்களைத் தவிர மற்ற நேரங்களில் ஜனாஸாத் தொழுவதற்கு அனுமதி வழங்கியுள்ளார்கள்.
மூன்று நேரங்களில் தொழ வேண்டாம்; அல்லது இறந்தவர்களைப் புதைக்க வேண்டாம் என எங்களுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்துவந்தார்கள்.
1. சூரியன் உதிக்கத் துவங்கியதில் இருந்து நன்கு உயரும் வரை,
2. நண்பகல் துவங்கியதிலிருந்து சூரியன் (மேற்கு) சாயும் வரை.
3. சூரியன் மறையத் துவங்கியதில் இருந்து நன்கு மறையும் வரை.
அறிவிப்பவர் : உக்பா பின் ஆமிர் அல்ஜுஹனீ (ரலி)
நூல் : முஸ்லிம் 1371
அஸர் தொழுகைக்குப் பிறகுள்ள நேரத்தை ஜனாஸாத் தொழுவதற்கு தடைசெய்யப்பட்ட நேரங்களில் ஒன்றாக நபியவர்கள் குறிப்பிடவில்லை. எனவே அஸருக்குப் பின்னால் ஜனாஸாத் தொழுகை தொழுவதற்கு அனுமதியுள்ளது என்பதை இந்தச் செய்தியும் உறுதிபடுத்துகின்றது.