அழைப்புப் பணியே அழகிய பணி!

அல்லாஹ்வை நோக்கி (மக்களை) அழைத்து நல்லறம் செய்து நான் முஸ்லிம் என்று கூறியவனை விட அழகிய சொல்லைக் கூறுபவன் யார்?

(அல்குர்ஆன் 41:33)

அழைப்புப் பணியை, சிறப்பு மிக்க பணி என்று இந்த வசனத்தில் அல்லாஹ் கூறுகின்றான்.

அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் வரும் போது, (முஹம்மதே!) அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக நுழைவதை நீர் காணும் போது, உமது இறைவனைப் புகழ்ந்து போற்றுவீராக! அவனிடம் மன்னிப்புத் தேடுவீராக! அவன் மன்னிப்பை ஏற்பவனாக இருக்கிறான்.

அல்குர்ஆன்: 110வது அத்தியாயம்

இந்த அத்தியாயம் குறிப்பிடுவது போன்று இன்று அல்லாஹ்வின் கிருபையால் தமிழகத்தில் தவ்ஹீது கிளைகள் பெருகிக் கொண்டே இருக்கின்றன.

ஒவ்வொரு ஊரிலும் அழைப்பு மையங்கள், அல்லாஹ்வின் ஆலயங்கள் குடிசைகளிலும் கூரைக் கொட்டகைகளிலும் உதயமாகிக் கொண்டே தான் இருக்கின்றன.

கோபுரம் போன்ற பள்ளி வாசல்கள் இணை வைப்புக் கோட்டைகளாக உள்ளன. ஆனால் ஏகத்துவத்தின் கோட்டைகளோ எளிய மக்களின் சக்திக்கேற்ப குடிசைகளில் இயங்குகின்றன.

வறுமையில் உழலும் நமது கொள்கைச் சகோதரர்கள் மறுமையை நம்பி, தங்களது அன்றாட வருவாயில் ஒரு தொகையை மிச்சப்படுத்தி, வாடகை மற்றும் இரவல் இடங்களில் தங்கள் தூய வணக்கத்தைத் துவங்குகின்றனர்.

இப்படிப்பட்ட சகோதரர்கள் சரியான அழைப்பாளர்கள்  ஆலிம்கள் இல்லாமல் பரிதவிக்கின்றனர்.

அதிலும் குறிப்பாக ரமளானில் அழைப்பாளர்கள் பற்றாக்குறை அதிகமாகி விடுகின்றது. காரணம், அயல் நாடுகளில் வேலை செய்யும் நமது கொள்கைச் சகோதரர்களின் மார்க்கப் பசியைத் தணிப்பதற்காக அங்கும் நமது அழைப்பாளர்கள் சென்றாக வேண்டிய அவசியம் உள்ளது.

அதனால் இங்குள்ள பற்றாக்குறை மேலும் அதிகமாகி விடுகின்றது.

இந்தப் பற்றாக்குறையைத் தவிர்க்க, இரண்டே இரண்டு வழிமுறைகள் தான் உள்ளன.

1. ஒவ்வொரு கிளையில் உள்ளவர்களும் தத்தமது ஊரில் ஒருவரைத் தத்தெடுத்து, குறுகிய காலக் கல்வித் திட்டத்தில் தலைமையகத்தில் செயல்படும் கல்வியகத்திற்கோ, அல்லது நீண்ட காலப் பாடத்திட்டத்தின் அடிப்படையில் கடையநல்லூரில் செயல்படும் இஸ்லாமியக் கல்லூரிக்கோ அனுப்பி வையுங்கள்.

சொந்த ஊர் எனும் போது ஓர் அழைப்பாளரின் மனதில், மண்ணின் மைந்தர் என்ற இயற்கையான மண் வாசனை வீசும். அது அழைப்புப் பணியில் அதிக ஊக்கமாகப் பணியாற்றச் செய்யும். தவ்ஹீது பிரச்சாரம் இன்னும் விண்ணைத் தொடும்.

2. அழைப்பாளர்களை உருவாக்கும் மையங்களுக்கு, கல்வி நிறுவனங்களுக்கு பொருளாதார உதவிகளை அள்ளி வழங்குங்கள்.

ஓர் ஊருக்கு அழைப்புப் பணி மையம் எப்படி முக்கியமோ அதை விடப் பன்மடங்கு முக்கியமானது அழைப்புப் பணியாளர்களை உருவாக்குவதாகும்.

சிறந்த சமுதாயம் நாம் தான்

மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தில்) சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள்; (ஏனெனில்) நீங்கள் நல்லதைச் செய்ய ஏவுகிறீர்கள் தீயதை விட்டும் விலக்குகிறீர்கள்; இன்னும் அல்லாஹ்வின்மேல் (திடமாக) நம்பிக்கை கொள்கிறீர்கள்; வேதத்தையுடையோரும் (உங்களைப் போன்றே) நம்பிக்கை கொண்டிருப்பின், (அது) அவர்களுக்கு நன்மையாகும் – அவர்களில் (சிலர்) நம்பிக்கை கொண்டோராயும் இருக்கின்றனர்; எனினும் அவர்களில் பலர் (இறை கட்டளையை மீறும்) பாவிகளாகவே இருக்கின்றனர்.

(அல்குர்ஆன் 3:110)

மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான்

அல்லாஹ் கூறுகிறான்: நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான். ஆயினும், எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து, மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர (அவர்கள் நஷ்டத்திலில்லை).

(அல்குர்ஆன் 103:2-3)

எனவே சகோதர, சகோதரிகளே! இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இந்த அழைப்பு பணியை முஃமினான ஆண், பெண் ஒவ்வொருவரும் தம்முடைய அன்பிற்கு பாத்திரமானவர்களுக்கும் மற்றவர்களுக்கும் எடுத்துக் கூறி மேற்கண்ட வசனத்தில் கூறப்பட்டவாறு அழிவிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அதற்காக நாம் ஒவ்வொருவரும் அல்லாஹ் மேற்கண்ட வசனத்தின் மூலம் நம்மீது இட்டிருக்கின்ற கட்டளைகளை பின்பற்றி நடக்கவேண்டும்.

அல்லாஹ் அருள்புரிவானாக!

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *