தூதரை நேசிப்போம்

இஸ்லாம் எனும் பாக்கியத்தை நமக்கு வழங்கிய இறைவனுக்கு நன்றி செலுத்தியவர்களாக, எனது உரையை ஆரம்பம் செய்கிறேன்.

உயிரினும் மேலான உத்தம நபி

ஓர் இறை நம்பிக்கையாளர் எனப்படுபவர் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீது கொண்டிருக்க வேண்டிய உறவு சாதாரண தொண்டன், தன்னுடைய அரசியல் கட்சித் தலைவர் மீது கொண்டிருக்கும் உறவைப் போன்றதல்ல!

அவனது தாய், தந்தையர், மனைவி மக்கள் மற்றும் உலக மக்களில் யார் மீது கொண்டிருக்கும் உறவு, அன்பு, பாசத்தை விடவும் நபி (ஸல்) அவர்கள் மீது கொள்ள வேண்டிய அன்பு அழுத்தமான ஒன்றாக இருக்க வேண்டும்.

இதை அல்லாஹ் தனது திருமறையில் சொல்லிக் காட்டுகின்றான்.

“உங்கள் பெற்றோரும், உங்கள் பிள்ளைகளும், உங்கள் உடன்பிறந்தாரும், உங்கள் வாழ்க்கைத் துணைவியரும், உங்களின் குடும்பத்தாரும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டத்திற்கு நீங்கள் அஞ்சுகிற வியாபாரமும், நீங்கள் விரும்புகிற வசிப்பிடங்களும் அல்லாஹ்வை விட, அவனது தூதரை விட, அவன் பாதையில் போரிடுவதை விட உங்களுக்கு அதிக விருப்பமான வையாக ஆகி விட்டால் அல்லாஹ் தனது கட்டளையைப் பிறப்பிக்கும் வரை காத்திருங்கள்! குற்றம் புரியும் கூட்டத்துக்கு அல்லாஹ் வழி காட்ட மாட்டான்” என்று கூறுவீராக!

(அல்குர்ஆன் 9:24)

இந்த உலகத்தில் ஒரு மனிதனுக்குப் பிரியமான அனைத் தையும் விட அல்லாஹ்வும், அவனது தூதரும் மேலாக இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் தன்னுடைய வேதனையை எதிர்பார்த்திருக்க வேண்டும் என்று அல்லாஹ் இந்த வசனத்தில் குறிப்பிடுகின்றான்.

 

நம்பிக்கை கொண்டோருக்கு தங்களை விட இந்த நபி (முஹம்மத்) தான் முன்னுரிமை பெற்றவர். அவரது மனைவியர் அவர்களுக்கு அன்னையர்.

(அல்குர்ஆன் 33:6)

நம்முடைய உயிரை விடவும் நபி (ஸல்) அவர்கள் மேலானவர்கள் என்று இந்த வசனம் குறிப்பிடுகின்றது. இதன் படி நபி (ஸல்) அவர்களை நேசிப்பது என்பது கொள்கை (ஈமானிய) அடிப்படையில் அமைந்து விடுகின்றது. அதனால் தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்:

“எனது உயிர் எவனது கைவசம் உள்ளதோ அவன் மீது ஆணையாக! உங்களில் ஒருவருக்கு அவரது தந்தையையும், அவரது மக்களையும் விட நான் மிக்க அன்பானவராக ஆகும் வரை அவர் (உண்மையான) ஈமான் உள்ளவராக மாட்டார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),

நூல் : புகாரி 14

இறைத் தூதரை நேசிப்பவர்கள் தான் ஈமானிய சுவையை அனுபவிக்க முடியும் என்று இந்த ஹதீஸில் குறிப்பிடுகின்றார்கள்.

நபி (ஸல்) மீது அன்பு நபித்தோழர்கள் போட்டி

போர்க் களத்திற்குப் போவதற்காக, அங்கு தங்கள் உயிர்களை அர்ப்பணம் செய்வதற்காகப் போட்டி போட்டுக் கொள்வார்கள். அவர்களுக்குத் தேவை நபி (ஸல்) அவர்களின் அன்பு தான். அதற்காக அவர்கள் எதையும் இழக்கத் தயாரானார்கள்.

(கைபர் போரின் போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நாளை (இஸ்லாமியப் படையின்) கொடியை ஒரு மனிதரிடம் தரப் போகின்றேன். அல்லாஹ் அவருடைய கரங்களில் வெற்றியை அளிப்பான்” என்று சொன்னார்கள். ஆகவே மக்கள் தம்மில் எவரிடம் அது கொடுக்கப்படும் என்ற யோசனையில் இரவெல்லாம் மூழ்கினார்கள். காலையானதும் மக்களில் ஒவ்வொருவரும் தன்னிடம் அது கொடுக்கப்பட வேண்டும் என்று ஆசைப்பட்ட வண்ணம் அல்லாஹ்வின் தூதரிடம் சென்றனர். நபி (ஸல்) அவர்கள், “அலீ பின் அபீதாலிப் எங்கே?” என்று கேட்டார்கள்.

மக்கள், “அவருக்குக் கண் வலி, அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறினார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள், “அவருக்கு ஆளனுப்பி என்னிடம் அழைத்து வாருங்கள்” என்று உத்தரவிட்டார்கள். அலீ (ரலி) அவர்கள் வந்தவுடன், அவர்களுடைய இரு கண்களிலும் (தம் உமிழ்நீரை) உமிழ்ந்து அவர்களுக்காகப் பிரார்த்தனை புரிந்தார்கள். அவர்களுக்கு (அதற்கு முன்) வலியே இருந்ததில்லை என்பதைப் போன்று அலீ (ரலி) அவர்கள் குணமடைந்தார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள் அலீ (ரலி)யிடம் கொடியைக் கொடுத்தார்கள். அப்போது அலீ (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! அவர்கள் நம்மைப் போன்று (ஒரே இறைவனுக்குக் கீழ்ப்படிந்தவர்களாக) ஆகும் வரை நான் அவர்களுடன் போரிடட்டுமா?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், “அவர்களுடைய களத்தில் இறங்கும் வரை நிதானமாகச் செல்லுங்கள். பிறகு அவர்களை இஸ்லாத்திற்கு அழையுங்கள்.

மேலும் இஸ்லாத்தில் அவர்கள் மீது கடமையாகின்ற அல்லாஹ்விற்குச் செய்ய வேண்டிய கடமைகளைத் தெரிவியுங்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக! உங்கள் மூலமாக அல்லாஹ் ஒரு மனிதருக்கு நேர்வழி காட்டுவது (அரபுகளின் பெரும் செல்வமான) சிவப்பு நிற ஒட்டகங்களை தர்மம் செய்வதை விட உங்களுக்குச் சிறந்ததாகும்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர் : ஸஹ்ல் பின் ஸஅத் (ரலி),

நூல் : புகாரி 3701

உஹத் போர் சம்பவம்

உஹத் போர்க்களம் இஸ்லாமிய வரலாற்றில் மறக்க முடியாத ஒரு போர்க்களம். அந்தப் போர்க்களத்தின் போது நபி (ஸல்) அவர்களை எல்லா திசையிலிருந்தும் ஆபத்துகள் சுற்றி வளைத்து விடுகின்றன. எதிரிகள் யார்? முஸ்லிம்கள் யார்? என்று அடையாளம் தெரியாத அளவுக்குப் போர்க்களம் சின்னாபின்னமாகியிருந்தது.

போர்த் தளபதியாக இருந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் குறி வைத்து, எதிரிகள் கொல்ல நினைக்கின்ற அந்த வேளையில், அந்த இக்கட்டான கட்டத்தில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “எனக்காகக் களமிறங்கி எதிரிகளுக்குப் பதிலடி கொடுப்பவர் என்னுடன் சுவனத்தில் இருப்பார்” என்ற பிரகடனத்தை வெளியிடுகின்றார்கள். அப்போது அந்தத் தலைவர் மீது பற்றும் பாசமும் கொண்ட அன்சாரித் தோழர்கள் பாய்ந்து விழுந்து காப்பாற்றிய அந்த வீர தீர, தியாக வரலாற்றை, உண்மைச் சம்பவத்தைப் பார்ப்போம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் அன்சாரிகள் ஏழு பேர், குறைஷிகளில் இரண்டு பேர் மட்டும் இருந்தனர். (இதைக் கண்ணுற்ற) எதிரிகள், நபி (ஸல்) அவர்களைத் தீர்த்துக் கட்ட நெருங்கியதும், “எனக்காக இவர்களுடன் எதிர்த்துப் போரிடுபவர் யார்? அவ்வாறு போரிடுபவர் சுவனத்தில் எனது நண்பர்கள்” என்று சொன்னார்கள். உடனே அன்சாரிகளில் ஒருவர் முன்வந்து போராடினார். கடைசியாக அவர் கொல்லப்பட்டு விட்டார். மீண்டும் எதிரிகள், நபி (ஸல்) அவர்களைத் தீர்த்துக் கட்ட நெருங்கியதும், “எனக்காக இவர்களுடன் எதிர்த்துப் போரிடுபவர் யார்? அவ்வாறு போரிடுபவர் சுவனத்தில் எனது நண்பர்கள்” என்று சொன்னார்கள். உடனே அன்சாரிகளில் ஒருவர் முன்வந்து போராடினார். கடைசியாக அவர் கொல்லப்பட்டு விட்டார். இப்படியே தொடர்ந்து (ஏழு தடவை) நடந்தது. கடைசியில் ஏழு அன்சாரித் தோழர்களும் கொல்லப்பட்டு விட்டனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (குறைஷிகளான) இரு தோழர்களை நோக்கி, “நம்முடைய (குறைஷி) தோழர்கள் அன்சாரிகளைப் போல் நடந்து கொள்ளவில்லை” என்று குறிப்பிட்டார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி),

நூல் : அஹ்மத் 13544

இங்கு இன்னொரு விஷயத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நேசித்தல் என்றால், வாயளவில் நேசிக்கிறேன் என்று சொன்னால் போதாது. அது உண்மையில் நேசமாகாது. ஒருவரை நேசிப்பதாக இருந்தால் அவர் சொன்ன அடிப்படையில் வாழ வேண்டும். அது தான் அவர்கள் மீது காட்டுகின்ற உண்மையான அன்பாகும்.

“நபி (ஸல்) அவர்கள் மீது அன்பு செலுத்துகின்றேன்’ என்று கூறிக் கொண்டே, அவர்களது கட்டளைக்கு மாற்றமாக, சமாதி வழிபாடு செய்தல், அல்லாஹ் அல்லாதவர்களிடம் உதவி தேடுதல், நபி (ஸல்) அவர்கள் ஒன்றைச் சொல்லியிருக்கும் போது, அதற்கு மாற்றமாக, “எங்கள் இமாம் இப்படித் தான் சொல்லியிருக்கின்றார்’ என்று கூறி நபியவர்களின் கட்டளையைப் புறக்கணித்தல் போன்ற காரியங்களில் ஈடுபடுவது ஒரு போதும் நபி (ஸல்) அவர்கள் மீது அன்பு செலுத்துவதாக ஆகாது.

அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நாம் உண்மையிலேயே நேசிப்பவர்களாக இருந்தால் நபி (ஸல்) அவர்களைப் பின்பற்ற வேண்டும். அதில் தான் அவர்களது நேசம் அடங்கியிருக்கின்றது. இதைத் தான் வல்ல அல்லாஹ்வும் தன் திருமறையில் கூறுகின்றான்.

“நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப் பவன்; நிகரற்ற அன்புடையோன்” என்று கூறுவீராக! “அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித்தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்” எனக் கூறுவீராக!

(அல்குர்ஆன் 3:31,32)

இத்தூதர் உங்களுக்கு எதைக் கொடுத்தாரோ அதை வாங்கிக் கொள்ளுங்கள்! எதை விட்டும் உங்களைத் தடுத்தாரோ (அதில் இருந்து) விலகிக் கொள்ளுங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன்.

(அல்குர்ஆன் 59:7)

அல்லாஹ்வும், அவனது தூதரும் ஒரு காரியத்தை முடிவு செய்யும் போது நம்பிக்கை கொண்ட ஆணுக்கும், பெண்ணுக்கும் தமது அக்காரியத்தில் சுய விருப்பம் கொள்ளுதல் இல்லை. அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்பவர் தெளிவாக வழி கெட்டு விட்டார்.

(அல்குர்ஆன் 33:36)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மீது அன்பு செலுத்தி, அவர்கள் காட்டிய வழியில் நடந்து, மறுமையில் அவர்களுடன் சேர்ந்திருக்கும் பாக்கியத்தைப் பெறுவோமாக!

 

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed