அய்யூப் (அலை)
அல்லாஹ்வால் அதிகமாகச் சோதிக்கப்பட்ட நபிமார்களில் அய்யூப் (அலை) அவர்களும் ஒருவராவார். பலவிதமான நோய்களை அல்லாஹ் அவர்களுக்கு வழங்கினான். குடும்பத்தார் அவரிடமிருந்து பிரிந்து சென்றனர்.
எனக்குத் துன்பம் நேர்ந்து விட்டது. நீ கருணையாளர்களுக்கெல்லாம் கருணையாளன் என அய்யூப் தமது இறைவனை அழைத்த போது, அவரது பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டோம். அவருக்கு ஏற்பட்ட துன்பத்தை நீக்கினோம். அவரது குடும்பத்தாரையும் அவர்களுடன் அவர்களைப் போன்றோரையும் நம் அருளாக அவருக்கு வழங்கினோம். வணங்குவோருக்கு இது அறிவுரை. (அல்குர்ஆன் 21:83,84)
நமது அடியார் அய்யூபை நினைவூட்டுவீராக! ஷைத்தான் வேதனையாலும், துன்புறுத்தலாலும் என்னைத் தீண்டி விட்டான் என்று தமது இறைவனிடம் அவர் பிரார்த்தித்த போது, உமது காலால் மிதிப்பீராக! இதோ குளிர்ந்த குளிக்குமிடம்! பானம்! (எனக் கூறினோம்). அவருக்கு அவரது குடும்பத்தினரையும் அவர்களுடன் அவர்களைப் போன்றோரையும் வழங்கினோம். இது நம்மிடமிருந்து கிடைக்கப் பெறும் அருளும், அறிவுடையோருக்கு அறிவுரையுமாகும். (அல்குர்ஆன் 38:41,42)
நோய் நொடிகளுக்கு ஆளாகி, மனைவியால் புறக்கணிக்கப்பட்டு, கடுமையான வேதனையை அவர்கள் அனுபவித்தார்கள். மகான்கள்(?) மற்றவர்களின் நோய்களை மகான்கள்(?) நீக்குவார்கள் என்று நம்புகிற சமுதாயமே! அய்யூப் நபியவர்களுக்கு ஏற்பட்ட நோயை தாமாகக் குணப்படுத்திக் கொள்ள முடியவில்லை. அல்லாஹ்விடம் பிரார்த்தனை தான் செய்ய முடிந்தது.
அவன் எப்போது விரும்பினானோ அப்போது குணப்படுத்தி குடும்பத்தினரையும் சேர்த்து வைத்தான் என்பதை மேற்கண்ட வசனங்களிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
இந்த நிகழ்ச்சியும் ரப்புல் ஆலமீன் என்ற அல்லாஹ்வின் பண்புக்கு விளக்கவுரையாகும்.