யஃகூப் (அலை)
இப்ராஹீம் (அலை) அவர்களின் பேரரான யஃகூப் நபியின் வரலாற்றையும் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். அவர்கள் தமது மகன் யூசுபின் மீது அளவு கடந்த அன்பு வைத்திருந்தார்கள். அல்லாஹ் யூசுப் நபி அவர்களைச் சிறு பிராயத்திலேயே தந்தையிடமிருந்து பிரித்தான்.
மகனைப் பறிகொடுத்த சோகத்தில் அவர்கள் அழுது புலம்பத் தான் முடிந்ததே தவிர வேறொன்றும் செய்ய முடியவில்லை. மகன் உயிரோடு இருக்கிறாரா? எங்கே இருக்கிறார் என்ற மறைவான விபரம் கூட அவர்களுக்குத் தெரியவில்லை. அவர்கள் எந்த அளவுக்கு கவலைப்பட்டார்கள் என்பதைத் திருக்குர்ஆன் கூறுகிறது.
அவர்களை விட்டும் அவர் ஒதுங்கிக் கொண்டார்! யூஸுஃபுக்கு ஏற்பட்ட துக்கமே என்றார். கவலையால் அவரது கண்கள் வெளுத்தன. அவர் (துக்கத்தை) அடக்கிக் கொள்பவராக இருந்தார். அல்லாஹ்வின் மீது ஆணையாக! உமது உடல் மெலியும் வரை, அல்லது இறக்கும் வரை நீர் யூஸுஃபை நினைத்துக் கொண்டேயிருப்பீர் (போலும்) என்று அவர்கள் கூறினர். எனது துக்கத்தையும், கவலையையும் அல்லாஹ்விடமே முறையிடுகிறேன். நீங்கள் அறியாததை அல்லாஹ்விடமிருந்து அறிகிறேன் என்று அவர் கூறினார் (அல்குர்ஆன் 12:84,85,86)
இஸ்ரவேல் எனும் சிறப்புப் பெயர் பெற்ற நல்லடியார் யஃகூப் நபியின் நிலை இது தான். தன் மகன் தன்னோடு இருக்க வேண்டும் என்று எல்லா மனிதர்களும் ஆசைப்படுவது போலவே அவர்களும் ஆசைப்பட்டார்கள். ஆனால் அல்லாஹ் தான் நினைத்ததைத் தான் செய்தானே தவிர யஃகூப் நபியின் விருப்பத்தைக் கண்டு கொள்ளவில்லை.
அவன் ரப்புல் ஆலமீனாக இருப்பதே இதற்குக் காரணம்.