ஈஸா (அலை)

ஈஸா (அலை) என்ற இறைத் தூதரின் பிறப்பு அதிசயமான ஒன்று. இது உலகின் இரண்டு பெரும் சமுதாயத்தினர் ஏற்றுக் கொண்ட உண்மை. தந்தையின்றி இறைவனின் தனிப்பெரும் ஆற்றலால் அவர்கள் படைக்கப்பட்டார்கள். இதைத் திருக்குர்ஆனும் பல இடங்களில் குறிப்பிட்டுக் காட்டுகின்றது.(3:47, 19:20)

இவ்வளவு அதிசயமான முறையில் பிறந்து விட்டதனால் இறைவனின் அடிமை என்ற நிலையை ஈஸா (அலை) கடந்து இறைவனுக்குச் சகோதரனாக, மகனாக ஆகிவிட முடியுமா? அவர்களையே அல்லாஹ் பின்வருமாறு கூறச் செய்து விடுகின்றான். அதுவும் அவர் பிறந்த உடனேயே இவ்வாறு கூறச் செய்கிறான்.

நான் அல்லாஹ்வுக்கு அடிமையாக இருக்கிறேன் என்று ஈஸா (அலை) கூறினார்கள். (அல்குர்ஆன் 19:30)

மஸீஹ் (என்ற ஈஸா) அவர்களும், நெருக்கமான வானவர்களும் அல்லாஹ்வுக்கு அடிமையாக இருப்பதிலிருந்து விலகிக் கொள்ள மாட்டார்கள். அவனுக்கு அடிமையாக இருப்பதிலிருந்து விலகிப் பெருமையடிப்போர் அனைவரையும் அவன் தன்னிடம் ஒன்று திரட்டுவான். ( 4:172)

எந்தச் சந்தர்ப்பத்திலும் எவருக்காகவும் அல்லாஹ் எஜமான் என்ற நிலையிலிருந்து தன்னை இறக்கிக் கொள்ள மாட்டான். எஜமான் தன்மையில் எவருக்கும் பங்களிக்கவும் மாட்டான் என்பதை இவ்வசனங்கள் தெளிவாகத் தெரிவிக்கின்றன.

இவ்வளவு தெளிவாக விளக்கிய பிறகும் உண்மையை உணராது, அவர்களை அடிமை என்ற நிலையிலிருந்து உயர்த்தி வேறுவிதமான உறவுகளைக் கற்பனை செய்து கொள்பவர்களுக்கும் புரியக் கூடிய வகையில், அகில உலகுக்கும் எஜமான் என்பதை அல்லாஹ் தெளிவாக்குவதைக் கவனியுங்கள்!

மர்யமுடைய மகன் மஸீஹ் தான் அல்லாஹ் என்று கூறியோர் (ஏக இறைவனை) மறுத்து விட்டனர். மர்யமின் மகன் மஸீஹையும், அவரது தாயாரையும், பூமியில் உள்ள அனைவரையும் அல்லாஹ் அழிக்க நாடினால் அவனிடமிருந்து (அதைத் தடுக்க) சிறிதளவேனும் சக்தி பெற்றவர் யார்? என்று நீர் கேட்பீராக! வானங்கள், பூமி மற்றும் அவற்றுக்கு இடைப்பட்டவைகளின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அவன் நாடியதைப் படைப்பான். அல்லாஹ் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன். (அல்குர்ஆன் 5:17)

ஈஸா (அலை) அவர்கள் இறைக் கோட்பாட்டில் எந்தத் தவறும் செய்திடவில்லை. இறைவனுக்கு அடிமையாக இருப்பதையும் அவர்கள் மறுக்கவில்லை. அவர்களின் சமுதாயத்தினர் என்று தங்களைப் பிரகடனப்படுத்திக் கொள்வோர் கற்பித்துக் கொண்ட தந்தை – மகன் என்ற உறவுக்கும் அவருக்கும் ஒரு சம்பந்தமுமில்லை.

அப்படி இருந்தும் இவ்வளவு கடுமையான வார்த்தைகளை அல்லாஹ் பிரயோகிக்கிறான். இதிலிருந்து அவன் ரப்புல் ஆலமீன் (அகில உலகின் எஜமான்) என்ற தனித்தன்மையை எவருக்கும் பங்கிட்டு வழங்கத் தயாராக இல்லை என்பதை உணரலாம்.

எந்த ஈஸா (அலை) அவர்களை இறைவனின் குமாரர் என்று கருதிக் கொண்டு அவர்களை வணங்கி வழிபடுகின்றார்களோ அந்த ஈஸா (அலை) அவர்களையும், அவர்களின் தாயையும், உலகில் உள்ள அனைவரையும் நான் அழித்தொழிக்க முடிவு செய்தால் என்னை எவர் தடுக்க முடியும்? என்று கேட்டு ரப்புல் ஆலமீன் என்ற தன் உரிமையை மீண்டும் வலியுறுத்துகின்றான்.

எவரேனும் இறைத்தன்மையைப் பிறருக்குப் பங்கிட்டு வழங்க முயன்றால், இறைவனின் அடிமைகளை அடிமைத்தனத்தில் இருந்து விடுவிக்க (?) எண்ணினால் அவர்களை அவர்களால் பூஜிக்கப்பட்வர்களே கைகழுவி விடும் நிலைமை மறுமையில் ஏற்படும் என்று வல்ல அல்லாஹ் பின்வரும் வசனத்தில் தெளிவுபடுத்துகின்றான்.

மர்யமின் மகன் ஈஸாவே! அல்லாஹ்வையன்றி என்னையும், என் தாயாரையும் கடவுள்களாக்கிக் கொள்ளுங்கள்! என நீர் தான் மக்களுக்குக் கூறினீரா? என்று அல்லாஹ் (மறுமையில்) கேட்கும் போது, நீ தூயவன். எனக்குத் தகுதியில்லாத வார்த்தையை நான் கூற உரிமையில்லாதவன். நான் அவ்வாறு கூறியிருந்தால் அதை நீ அறிவாய். எனக்குள் உள்ளதை நீ அறிவாய்! உனக்குள் உள்ளதை நான் அறிய மாட்டேன். நீயே மறைவானவற்றை அறிபவன் என்று அவர் பதிலளிப்பார்.

நீ எனக்குக் கட்டளையிட்ட படி எனது இறைவனும், உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்! என்பதைத் தவிர வேறு எதையும் நான் அவர்களிடம் கூறவில்லை. நான் அவர்களுடன் இருக்கும் போது அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன். என்னை நீ கைப்பற்றியதும் நீயே அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தாய். நீ அனைத்துப் பொருட்களையும் கண்காணிப்பவன். ( 5:116, 117)

ஈஸா (அலை) அவர்களுக்காகக் கூட அல்லாஹ் தன் ஆளுமையில் பங்களிக்கத் தயாரில்லை என்றால் மற்றவர்களின் நிலை என்ன என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

 

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed