இப்ராஹீம் (அலை)
இப்ராஹீம் (அலை) அவர்களுக்காகவும் கூட அல்லாஹ் அடிமைத்தனத்திலிருந்து விலக்களிக்கவில்லை. மற்ற எவருக்கும் அளிக்காத பல தனிச் சிறப்புக்களை அவர்களுக்கு வல்ல அல்லாஹ் வழங்கி இருந்தான். அந்தச் சிறப்புக்களைக் கவனிக்கும் எவருக்குமே இப்ராஹீம் (அலை) அவர்கள் இறைவனின் அடிமை என்ற நிலையைக் கடந்து விட்டவரோ என்று தான் எண்ணத் தோன்றும்.
உலகில் அல்லாஹ்வை வணங்குவதற்காக முதன் முதலில் எழுப்பப்பட்ட ஆலயத்தை புனர் நிர்மானம் செய்கின்ற பணியை இப்ராஹீம் (அலை) அவர்களிடம் அல்லாஹ் வழங்கினான். (அல்குர்ஆன் 2:127)
அந்த இல்லத்தைத் தூய்மைப்படுத்தும் திருப்பணியும் இப்ராஹீம் (அலை) அவர்களிடமே வழங்கப்பட்டது. (அல்குர்ஆன் 2:125)
இப்ராஹீம் (அலை) அவர்கள் நின்ற அந்த இடத்தில் தொழுமாறு அல்லாஹ் நமக்குக் கட்டளையிடுகிறான். (அல்குர்ஆன் 2:125)
இப்ராஹீம் (அலை) அவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க மக்காவுக்கு அபயத்தையும், அந்தப் பாலைவனத்தில் பலவகையான உணவுகளையும் இன்றளவும் வழங்கிக் கொண்டிருக்கிறான். (அல்குர்ஆன் 2:126)
இப்ராஹீம் (அலை) அவர்களைப் பல்வேறு வழிகளில் சோதித்துப் பார்த்த போது அந்தச் சோதனையில் அவர்கள் வெற்றி பெற்றதாக அல்லாஹ் சொல்கிறான். (அல்குர்ஆன் 2:124)
மக்காவின் தனிச் சிறப்பைக் குறிப்பிடும் போது இப்ராஹீம் நின்ற இடமும் அங்கே உள்ளது என்று சிலாகித்துச் சொல்கிறான். (அல்குர்ஆன் 3:97)
இப்ராஹீம் என்ற தனி நபர் ஒரு சமுதாயமாகவே திகழ்ந்ததாக அல்லாஹ் புகழ்ந்துரைக்கிறான். (அல்குர்ஆன் 16:120)
அல்லாஹ்வின் கட்டளைப்படி ஆளரவமற்ற வனாந்திரத்தில் தமது மனைவியையும், குழந்தையாக இருந்த மகன் இஸ்மாயீலையும் இப்ராஹீம் (அலை) விட்டு வந்தார்கள். (அல்குர்ஆன் 14:37)
குழந்தை தாகத்தால் தவித்த போது ஹாஜரா அம்மையார் அவர்கள் ஸஃபா மர்வா எனும் மலைகளில் ஏறி ஏதாவது வாகனக் கூட்டம் தென்படுகிறதா என்று பார்த்தார்கள்.
நம்மையும் அது போல் ஸஃபா மர்வா மலைகளுக்கிடையே ஓடுமாறு அல்லாஹ் கட்டளையிடுகிறான். (அல்குர்ஆன் 2:158)
இப்ராஹீம் (அலை) அவர்களது குடும்பத்தார் செய்த ஒரு காரியத்தை அனைவரும் செய்ய வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிடுவதாக இருந்தால் இப்ராஹீம் (அலை) அவர்கள் மீது அல்லாஹ் எவ்வளவு அன்பு வைத்திருக்க வேண்டும்?
இப்ராஹீம் (அலை) அவர்கள் ஆட்டைப் பலியிட்டதற்காக நாமும் அதைத் தொடர வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிடுகிறான். (அல்குர்ஆன் 37:108)
இப்ராஹீம் (அலை) அவர்கள் ஷைத்தான் மீது கல்லெறிந்ததற்காக நாம் ஷைத்தானைக் காணாவிட்டாலும் நாமும் கல்லெறிய வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழிகாட்டியுள்ளனர்.
அவர்கள் வாழ்வில் நடந்த பல நிகழ்வுகள் நம் மீது மார்க்கக் கடமையாகவே ஆக்கப்பட்டுள்ளன. இதிலிருந்து அவர்கள் மீது அல்லாஹ் எந்த அளவு நேசம் வைத்திருக்கிறான் என்பதை விளங்கலாம்.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நோக்கி இப்ராஹீமுடைய மார்க்கத்தைப் பின்பற்றுவீராக என்று அல்லாஹ் கட்டளையிடுகிறான். (அல்குர்ஆன் 16:123)
இப்ராஹீமைத் தனது நண்பராக ஆக்கிக் கொண்டு விட்டதாகவும் அல்லாஹ் கூறுகிறான். (அல்குர்ஆன் 4:125)
அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் கமா ஸல்லைத்த அலா இப்ராஹீம் . இப்ராஹீமுக்கு நீ அருள் புரிந்ததைப் போல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும் அருள் புரிவாயாக என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் துஆச் செய்யுமாறு நமக்குக் கட்டளையிட்டுள்ளார்கள். (புகாரி 3370)
இதிலிருந்து இப்ராஹீம் (அலை) அவர்கள் இறைவனுக்கு எவ்வளவு நெருக்கமானவர்கள் என்பதை தெளிவாக நாம் அறிந்து கொள்ள இயலும்.
இவ்வளவு மகத்தான சிறப்புக்களைப் பெற்றிருந்த இப்ராஹீம் (அலை) அவர்கள் இறைவனுக்கு அடிமை என்ற நிலையிலிருந்து விலக்குப் பெறவும் இல்லை. எஜமான் என்ற தனது தன்மையில் அல்லாஹ் அவர்களுக்குப் பங்களிக்கவுமில்லை.
நம்முடைய அடியார்கள் இப்ராஹீம், இஸ்ஹாக், யாஃகூப் ஆகியோரை (நபியே) நீர் நினைவு கூர்வீராக! (அல்குர்ஆன் 38:45)
தன்னுடைய அடியார்களில் ஒருவராகவே அவர்களை அல்லாஹ் குறிப்பிடுகிறான். அதனால் தான் அவர்களின் கோரிக்கைகள் மற்றும் விருப்பங்களில் சிலவற்றை அல்லாஹ் நிறைவேற்றாமலும் இருந்திருக்கிறான்.
அவர்களை அல்லாஹ் மனித சமுதாயத்திற்கு இமாமாக (தலைவராக) நியமித்த நேரத்தில் என் சந்ததிகளிலும் அத்தகையவர்களை ஏற்படுத்துவாயாக என்று கேட்கிறார்கள். அக்கிரமம் புரிபவர்களுக்கு என் வாக்குறுதி சேராது என்று அல்லாஹ் கூறி விடுகிறான். (அல்குர்ஆன் 2:124)
இப்ராஹீம் (அலை) அவர்களின் சந்ததிகளாக இருக்கின்ற தகுதியை மட்டும் வைத்து எவரும் இறைவனின் அன்பைப் பெற இயலாது. இறைவனுக்கு அடிமைகளாக வாழ்வதோடு, அல்லாஹ் எஜமான் என்பதையும் ஏற்று வாழ வேண்டும் என்பதை இவ்வசனத்திலிருந்து அறிந்து கொள்ளலாம்.
இதனால் தான் அவர்களின் தந்தைக்காக பாவ மன்னிப்புத் தேடுவதற்கும் அனுமதி மறுக்கிறான். (அல்குர்ஆன் 9:114)
ஒவ்வொரு மனிதனும் தனது இளமைப் பருவத்தில் அல்லது நடுத்தர வயதில் தனக்கு ஒரு சந்ததி வேண்டும் என்று ஆசைப்படுவான். இது போன்ற ஆசை இப்ராஹீம் நபியவர்களுக்கும் இருந்தது. அல்லாஹ்வின் நண்பர் என்பதால் அவர்களது ஆசையை அவர்களாகவும் நிறைவேற்றிக் கொள்ள முடியவில்லை. அல்லாஹ்வும் நிறைவேற்றவில்லை.
தள்ளாத வயதில் தான் அவர்களுக்கு இஸ்மாயில் இஸ்ஹாக் ஆகிய புதல்வர்களை அல்லாஹ் வழங்கினான்.
அவரது மனைவியும் நின்று கொண்டிருந்தார். அவர் சிரித்தார். அவருக்கு இஸ்ஹாக் பற்றியும், இஸ்ஹாக்குக்குப் பின் யஃகூப் பற்றியும் நற்செய்தி கூறினோம். இது என்ன அதிசயம்! நான் கிழவியாகவும், இதோ எனது கணவர் கிழவராகவும் இருக்கும் போது பிள்ளை பெறுவேனா? இது வியப்பான செய்தி தான் என்று அவர் கூறினார் (அல்குர்ஆன் 11:71,72)
நீர் பயப்படாதீர்! அறிவுடைய ஆண் குழந்தை பற்றி உமக்கு நாங்கள் நற்செய்தி கூறுகிறோம் என்று அவர்கள் கூறினர். எனக்கு முதுமை ஏற்பட்ட நிலையில் எனக்கு நற்செய்தி கூறுகிறீர்களா? எதனடிப்படையில் நற்செய்தி கூறுகிறீர்கள்? என்று அவர் கேட்டார். (அல்குர்ஆன் 15:53,54)
அவர்களைப் பற்றிப் பயந்தார். பயப்படாதீர்! என்று அவர்கள் கூறினர். அறிவாளியான ஆண் குழந்தை பற்றி அவருக்கு நற்செய்தி கூறினர். உடனே அவரது மனைவி சப்தமிட்டவராக வந்து முகத்தில் அடித்துக் கொண்டு, நான் மலட்டுக் கிழவியாயிற்றே என்றார். (அல்குர்ஆன் 51:29)
இஸ்மாயீலையும், இஸ்ஹாக்கையும் முதுமையில் எனக்கு வழங்கிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். என் இறைவன் பிரார்த்தனையை ஏற்பவன். (அல்குர்ஆன் 14:39)
ஒவ்வொரு மனிதனும் ஆசைப்படக் கூடிய வயதில் ஏன் ஒரு குழந்தையை அல்லாஹ் கொடுக்கவில்லை. எதை விரும்புகிறானோ எப்போது விரும்புகிறானோ அப்போது செய்யும் அதிகாரம் படைத்த ரப்புல் ஆலமீன் என்பது தான் காரணம்.