அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு விஷம் தடவப்பட்ட ஆடு ஒன்று அன்பளிப்பாகத் தரப்பட்டது. (விஷயம் தெரிந்தவுடன்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இங்குள்ள யூதர்களை ஒன்று திரட்டி என்னிடம் கொண்டு வாருங்கள்’’ என்று கூறினார்கள். அவ்வாறே அவர்கள் ஒன்று திரட்டப்பட்டு நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டார்கள்.
அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்,
“நான் உங்களிடம் ஒரு விஷயத்தைப் பற்றிக் கேட்கப்போகிறேன். நீங்கள் என்னிடம் அதைப் பற்றி உண்மை சொல்வீர்களா?’’ என்று கேட்டார்கள். அதற்கு அந்த யூதர்கள் “சரி (உண்மையைச் சொல்கிறோம்), அபுல்காசிம் முஹம்மது (ஸல்) அவர்களே!’’ என்று பதிலளித்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உங்கள் தந்தை யார்?’’ என்று கேட்டார்கள்.
அதற்கு அவர்கள், “எங்கள் தந்தை இன்னார்’’ என்று பதிலளித்தார்கள். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “பொய் சொன்னீர்கள். மாறாக, உங்கள் தந்தை இன்னார்தாம்’’ என்று கூறினார்கள். யூதர்கள், “நீங்கள் உண்மை சொன்னீர்கள்; நல்லதையும் சொன்னீர்கள்’’ என்று கூறினார்கள்.
நபி (ஸல்) அவர்கள், “ நான் ஒரு விஷயத்தைப் பற்றி உங்களிடம் கேட்டால் அதைப் பற்றி நீங்கள் என்னிடம் உண்மை சொல்வீர்களா?’’ என்று (மறுபடியும்) கேட்டார்கள். அதற்கவர்கள், “சரி, அபுல் காசிமே! இனி நாங்கள் பொய் சொன்னால் எங்கள் தந்தை விஷயத்தில் நாங்கள் பொய் சொன்னதை நீங்கள் அறிந்துகொண்டதைப் போன்றே இதையும் அறிந்துகொள்வீர்கள்’’ என்று சொன்னார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நரகவாசிகள் யார்?’’ என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், “நாங்கள் அந்த நரகத்தில் சில காலம் மட்டுமே இருப்போம். பிறகு எங்களுக்குப் பதிலாக அதில் நீங்கள் புகுவீர்கள்’’ என்று பதிலளித்தார்கள்.
(இதைக் கேட்ட) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் யூதர்களிடம், “அதில் நீங்கள் தாம் இழிவடைவீர்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் அதில் உங்களுக்கு பதிலாக ஒரு போதும் புகமாட்டோம்‘’ என்று கூறிவிட்டுப் பிறகு அவர்களிடம், “நான் (இன்னும்) ஒரு விஷயத்தைப் பற்றி உங்களிடம் கேட்டால் நீங்கள் என்னிடம் உண்மை சொல்வீர்களா?’’ என்று கேட்டார்கள். யூதர்கள், “சரி’’ என்று கூறினர்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இந்த ஆட்டில் நீங்கள் விஷம் கலந்திருக்கிறீர்களா?’’ என்று கேட்டார்கள். அவர்கள், “ஆம் (கலந்திருக்கிறோம்)’’ என்று பதிலளித்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “ஏன் இப்படிச் செய்தீர்கள்?’’ என்று கேட்டார்கள். அதற்கவர்கள், “நீங்கள் பொய்யராக இருந்(து, விஷத்தின் மூலம் இறந்)தால் நாங்கள் ஆனந்தமடைவோம். நீங்கள் இறைத்தூதராக இருந்தால் உங்களுக்கு அ(ந்த விஷமான)து தீங்கிழைக்காது” என்று பதிலளித்தார்கள்.
ஆதாரம்: புகாரி 5777