ஹதீஸ்கள் விஷயத்தில் TNTJ அறிவுக்கு முன்னுரிமை கொடுக்கிறதா❓
மார்க்கத்தைப் பொறுத்தவரை இரண்டு துருவங்களைக் கொண்டது.
அறிவுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டிய இடங்களில் கொடுக்க வேண்டும்.
அறிவை பயன்படுத்தாமல் அப்படியே நம்ப வேண்டிய விஷயங்களை அப்படியே நம்ப வேண்டும்.
மறுமை, மலக்குமார்கள், ஜின்கள், சொர்க்கம், நரகம் இது போன்ற காரியங்களைப் பற்றி அறிவைக் கொண்டா நம்புகிறோம்?
அல்லாஹ் சொல்லி விட்டான், நம்பி விட்டோம்.
நம்பிக்கை சார்ந்த விஷயங்கள் எதற்கும் நாம் அறிவைப் பயன்படுத்தி கேள்வியெழுப்புவதோ மறுப்பதோ கிடையாது.
அதே சமயம், நடைமுறையில் நாம் காணக்கூடிய விஷயங்கள், உலக விஷயங்கள், பார்த்தோ, கேட்டோ, உணர்ந்தோ நிரூபணமாகக் கூடிய விஷயங்களைப் பொறுத்தவரை அறிவை தான் பயன்படுத்த வேண்டும்.
அஜ்வா வகை பேரீத்தம்பழத்திற்கு குறிப்பிட்ட இந்த அற்புதத் தன்மை இருக்கிறது என்று சொன்னால், இது நம்பிக்கை சார்ந்த விஷயமல்ல.
இது உலகக் காரியம். நடைமுறையில் பரிசோதனைக்கு உட்படுத்தலாம் என்கிற விஷயம்.
அப்படிப்பட்டவற்றை பரிசோதித்து தான் நம்ப முடியும்.
ஒரு பொருளுக்கு இன்ன அற்புதம் இருக்கிறது என்று இஸ்லாத்தின் பெயரால் சொன்னால் அதை எப்படி வெறுமனே நம்பிக்கை சார்ந்த விஷயமாக எடுப்பது?
அதை ஒரு காஃபிர் எப்படி அணுகுவார்?
கத்திரிக்காயில் இன்ன குணம் இருக்கிறது என்கிறாயே..
பரிசோதித்தால் அது இல்லை, அப்போது இஸ்லாமே பொய் என்று அவன் கருத மாட்டானா?
அதே சமயம், நரகம் அல்லாஹ்விடம் பேசியது என்று ஒரு ஹதிஸில் வருவதைப் பற்றி நாம் சொல்கிறோம். இது பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டிய ஒன்றல்ல.
நரகம் என்பது மறைவானது.
படைத்த இறைவன் சொல்லி விட்டான், அதனால் அதை நம்புகிறோம்.
அதே இறைவன், அந்த நரகம் பேசும் என்கிறான், அப்படியானால் அது பேசும், அல்லாஹ் நாடினால் எதையும் செய்வான்.
இப்படி புரிவது தான் சரியானதே தவிர, அறிவையே பயன்படுத்தமல் கண்மூடித்தனமாக இருக்கவா இஸ்லாம் சொல்கிறது?
சிந்தியுங்கள், சிந்தியுங்கள், ஏன் சிந்திக்காமல் இருக்கிறீர்கள்?
உங்கள் மூளையில் பூட்டா போடப்பட்டிருக்கிறது?
என்றெல்லாம் அல்லாஹ் குர் ஆனில் பல இடங்களில் சொல்கிறானே, அவையெல்லாம் எதற்காக?
எனவே, இது போன்ற வாதங்கள் அபத்தமானவை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
சிந்திக்க வேண்டிய இடத்தில் சிந்திக்கத் தான் வேண்டும்.
அறிவைப் பயன்படுத்தாமல் அப்படியே நம்பிக்கை கொள்ள வேண்டிய விஷயங்களில் அப்படியே நம்பி விட வேண்டும்.
இரண்டையும் குழப்பிக் கொள்வதால் தான் இது போன்ற அபத்தமான விமர்சனங்கள் எழுகின்றன !
——————
ஏகத்துவம்