வானத்தின் தகவல்களை ஷைத்தான்கள் ஒட்டுக் கேட்கிறார்களா?

திருமறை வசனங்கள், மற்றும் நபிமொழிகளை மேலோட்டமாகப் பார்ப்பவர்கள்  வானத்துச் செய்திகளில் சிலவற்றை ஷைத்தான்கள் ஒட்டுக் கேட்கின்றனர் என்றும், அவ்வாறு செவியேற்றதை ஜோசியக்காரன், அல்லது சூனியக்காரனிடம் போடுகின்றனர் என்றும், இதன் மூலம்தான் ஜோசியக்காரர்கள் சில விசயங்களை முன் கூட்டியே அறிந்து கூறுகின்றனர் என்றும் வாதிடுகின்றனர்.

ஆனால் திருமறை வசனங்களைக் கவனமாக ஆய்வு செய்தால் முஹம்மது நபியவர்கள் இறைத்தூதராக நியமிக்கப்படுவதற்கு முன் சில விசயங்களை ஷைத்தான்கள் ஒட்டுக் கேட்டு வந்தனர். முஹம்மது நபியவர்கள் இறைத்தூதராக அனுப்பப்பட்ட பிறகு அது அறவே தடை செய்யப்பட்டு விட்டது என்பதைத் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

வானத்தை அல்லாஹ் படைத்த காலத்திலிருந்தே ஷைத்தான்கள் அங்குள்ள தகவல்களைச் செவியேற்க முடியாதவாறு மிகப்பெரும் பாதுகாப்பு அரணை அல்லாஹ் ஏற்படுத்தியுள்ளான்.

ஷைத்தான்கள் வானத்தின் தகவல்களை ஒட்டுக் கேட்பதற்காகக் காத்திருக்கும் போது வானவர்கள் தீப்பந்தங்களால் எறிந்து ஷைத்தான்களை விரட்டியடிப்பார்கள். என்றாலும் சில வேளை தீப்பந்தங்கள் எறியப்படுவதற்கு முன் வானவர்கள் பேசும் சில வார்த்தைகளை ஷைத்தான்கள் செவியேற்று விடுவார்கள்.

இதனை அவர்கள் ஜோசியக்காரனின் காதுகளில் போடும்போது அவர்கள் அதனுடன் நூறு பொய்களைக் கலந்து ஜோசியம் கூறுவார்கள்.

ஷைத்தான்கள் இவ்வாறு செவியேற்பதும், அதனை ஜோசியக்காரனுடைய காதுகளில் போடுவதும் திருமறைக் குர்ஆன் அருளப்படுவதற்கு முன்பு தான்.

திருமறைக் குர்ஆன் இறக்கப்பட்ட பின்பு இது தடைசெய்யப்பட்டு விட்டது.
இதற்குரிய சான்றுகளைக் காண்போம்.

திருமறைக்குர்ஆன் அருளப்படுவதற்கு முன்னால் ஷைத்தான்கள் ஒட்டுக் கேட்டனர் என்பதற்கான சான்றுகள்.

முதல் வானத்தை விளக்குகளால் அலங்கரித்தோம். அதை ஷைத்தான்கள் மீது எறியப்படும் பொருட்களாக ஆக்கினோம். அவர்களுக்கு நரகத்தின் வேதனையைத் தயாரித்துள்ளோம்.

(அல்குர்ஆன் 67 : 5)

{وَلَقَدْ جَعَلْنَا فِي السَّمَاءِ بُرُوجًا وَزَيَّنَّاهَا لِلنَّاظِرِينَ (16) وَحَفِظْنَاهَا مِنْ كُلِّ شَيْطَانٍ رَجِيمٍ (17) إِلَّا مَنِ اسْتَرَقَ السَّمْعَ فَأَتْبَعَهُ شِهَابٌ مُبِينٌ (18)} [الحجر 15: 16 – 18]

வானத்தில் நட்சத்திரங்களை அமைத்தோம். பார்ப்போருக்கு அதை அழகாக்கினோம். ஒட்டுக் கேட்பவனைத் தவிர, விரட்டப்பட்ட ஒவ்வொரு ஷைத்தானிடமிருந்தும் அதைப் பாதுகாத்துள்ளோம். அவனை ஒளி வீசும் தீப்பந்தம் விரட்டும்.

( அல்குர்ஆன் 15 : 16, 17, 18)

{إِنَّا زَيَّنَّا السَّمَاءَ الدُّنْيَا بِزِينَةٍ الْكَوَاكِبِ (6) وَحِفْظًا مِنْ كُلِّ شَيْطَانٍ مَارِدٍ (7) لَا يَسَّمَّعُونَ إِلَى الْمَلَإِ الْأَعْلَى وَيُقْذَفُونَ مِنْ كُلِّ جَانِبٍ (8) دُحُورًا وَلَهُمْ عَذَابٌ وَاصِبٌ (9) إِلَّا مَنْ خَطِفَ الْخَطْفَةَ فَأَتْبَعَهُ شِهَابٌ ثَاقِبٌ (10)} [الصافات37: 6 – 10]

முதல் வானத்தை நட்சத்திரங்கள் எனும் அலங்காரம் மூலம் நாம் அலங்கரித்துள்ளோம். கட்டுப்படாத ஒவ்வொரு ஷைத்தானிடமிருந்தும் பாதுகாப்பாக (அவற்றை ஆக்கினோம்).(வானவர்கள் எனும்) உயர்ந்த கூட்டத்தினரிடமிருந்து (ஓரிரு சொற்களை) ஒட்டுக் கேட்பவனைத் தவிர அவர்கள் செவியுற முடியாது. விரட்டப்படுவதற்காக ஒவ்வொரு பகுதியிலிருந்தும் அவர்கள் மீது எறியப்படும் பிரகாசமான தீப்பந்தம்அவர்களை விரட்டும். அவர்களுக்கு நிலையான வேதனையுமுன்டு.

(அல்குர்ஆன் 37 : 6 – 10)

{ثُمَّ اسْتَوَى إِلَى السَّمَاءِ وَهِيَ دُخَانٌ فَقَالَ لَهَا وَلِلْأَرْضِ ائْتِيَا طَوْعًا أَوْ كَرْهًا قَالَتَا أَتَيْنَا طَائِعِينَ (11) فَقَضَاهُنَّ سَبْعَ سَمَاوَاتٍ فِي يَوْمَيْنِ وَأَوْحَى فِي كُلِّ سَمَاءٍ أَمْرَهَا وَزَيَّنَّا السَّمَاءَ الدُّنْيَا بِمَصَابِيحَ وَحِفْظًا ذَلِكَ تَقْدِيرُ الْعَزِيزِ الْعَلِيمِ (12)} [فصلت 41 :, 1211]

கீழ் வானத்தை விளக்குகளால் அலங்கரித்தோம். (அவற்றை) பாதுகாக்கப்பட்டதாக (ஆக்கினோம்). இது அறிந்தவனாகிய மிகைத்தவனின் ஏற்பாடாகும்.

(அல்குர்ஆன் 41 : 11, 12)

மேற்கண்ட வசனங்கள் அனைத்தும் வானம் படைக்கப்பட்ட காலத்திலிருந்து ஷைத்தான்கள் ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்தனர் என்பதையும், அவர்கள் தீப்பந்தங்களால் எறியப்பட்டனர் என்பதையும், ஒரு சில நேரங்களில் ஷைத்தான்கள் ஒரு சில வாரத்தைகளைச் செவியேற்று விடுவார்கள் என்பதையும் அறிவிக்கின்றன.

ஷைத்தான்கள் செவியேற்ற விசயங்களை ஜோசியக்காரன் காதில் போடுவதும், அவன் அதனுடன் நூறு பொய்களை கலந்து ஜோசியம் கூறுவதும் நபியவர்கள் அனுப்பப்படுவதற்கு முன்னர் நடந்த நிகழ்வுதான் என்பதைப் பின்வரும் ஹதீஸ் தெளிவாக விளக்குகிறது.

அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :

அன்சாரி நபித்தோழர்களில் ஒருவர் என்னிடம் (பின்வருமாறு) கூறினார்:

ஒரு நாள் இரவில் நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தோம். அப்போது (வானிலிருந்து) ஒரு நட்சத்திரம் எறியப்பட்டு ஒளிர்ந்தது.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களிடம் “இதைப் போன்று (வானிலிருந்து) நட்சத்திரம் எறியப்பட்டால், நீங்கள் அறியாமைக் காலத்தில் என்ன சொல்லிக் கொண்டிருந்தீர்கள்?’’ என்று கேட்டார்கள்.

அதற்கு மக்கள், “அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள். (அறியாமைக் காலத்தில் இவ்வாறு நட்சத்திரம் எறியப்பட்டால்) இன்றிரவு ஒரு மாமனிதர் பிறந்திருக்கிறார்; ஒரு மா மனிதர் இறந்திருக்கிறார் என்று சொல்லிக் கொண்டிருந்தோம்‘’ என்று பதிலளித்தனர்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யாருடைய பிறப்புக்காகவோ யாருடைய இறப்புக்காகவோ அது எறியப்படுவதில்லை. மாறாக, வளமும் புகழும் கொண்ட நம் இறைவன் ஒரு விஷயத்தைத் தீர்மானித்து விட்டால்,அரியணையை (அர்ஷ்) சுமக்கும் வானவர்கள் இறைவனை(ப் போற்றி)த் துதிக்கின்றனர்.

பிறகு (அதைக் கேட்டு) அதற்கடுத்த வானிலுள்ள (வான)வர்களும் (இறைவனைப் போற்றித்) துதிக்கின்றனர். (இவ்வாறே ஒவ்வொரு வானிலுள்ள வானவர்களும் துதிக்கின்றனர்.) இறுதியில் அத்துதி பூமிக்கு அருகிலுள்ள வானவர்களை வந்தடைகிறது.
பின்னர் அரியணையைச் சுமக்கும் வானவர்களுக்கு அருகிலிருப்பவர்கள், அரியணையைச் சுமக்கும் வானவர்களிடம், “உங்கள் இறைவன் என்ன சொன்னான்?’’ என்று வினவுகின்றனர்.

அதற்கு அரியணையைச் சுமக்கும் வானவர்கள் இறைவன் என்ன சொன்னான் என்பதை அவர்களிடம் தெரிவிக்கின்றனர். உடனே வானிலிருப்போரில் சிலர் வேறு சிலரிடம் அது குறித்து விசாரித்துக் கொள்கின்றனர்.

முடிவில் அச்செய்தி பூமிக்கு அருகிலுள்ள வானத்தை வந்தடைகிறது. உடனே அதை ஜின்கள் ஒட்டுக்கேட்டு, அதைத் தம் (சோதிட) நண்பர்களிடம் போடுகின்றனர். (அப்போது) அவர்கள் மீது நட்சத்திரங்கள் எறியப்படுகின்றன. ஆயினும், அவர்கள் அதில் பொய்யைக் கலந்து கூடுதலாக (மக்களிடம்) கூறுகின்றனர்.

நூல் : முஸ்லிம் (4487)

நபியவர்கள் இறைத்தூதராக அனுப்பப்படுவதற்கு முன்னால் நட்சத்திரங்கள் எதற்காக எறியப்பட்டன என்பதின் சரியான காரணத்தை நபியவர்கள் நபித்தோழர்களுக்குத்தெளிவு படுத்துகிறார்கள்.

வானத்துச் செய்திகளை ஷைத்தான்கள் செவியேற்பதும், அதனை ஜோசியக்காரன் காதில் போடுவதும், அவன் அதனுடன் பல பொய்களைக் கலந்து மக்களிடம் கூறுவதும் இவை அனைத்துமே அறியாமைக் காலத்தில் உள்ள நிலைமை என்பதை மேற்கண்ட ஹதீஸ் தெளிவாக விளக்குகிறது.

திருக்குர்ஆன் அருளப்பட்ட பின்பு ஷைத்தான்கள் ஒட்டுக் கேட்பது அறவே தடைசெய்யப்பட்டுவிட்டது
நபியவர்கள் இறைத்தூதராக அனுப்பப்பட்ட பிறகு வானுலகச் செய்திகளில் எந்த ஒன்றையும் செவியேற்க முடியாத அளவிற்கு மிகப்பெரும் தடை விதிக்கப்பட்டுவிட்டது என்பதைப் பின்வரும் வசனங்கள் மற்றும் நபிமொழிகள் தெளிவுபடுத்துகின்றன.

{وَأَنَّا لَمَسْنَا السَّمَاءَ فَوَجَدْنَاهَا مُلِئَتْ حَرَسًا شَدِيدًا وَشُهُبًا (8) وَأَنَّا كُنَّا نَقْعُدُ مِنْهَا مَقَاعِدَ لِلسَّمْعِ فَمَنْ يَسْتَمِعِ الْآنَ يَجِدْ لَهُ شِهَابًا رَصَدًا (9) وَأَنَّا لَا نَدْرِي أَشَرٌّ أُرِيدَ بِمَنْ فِي الْأَرْضِ أَمْ أَرَادَ بِهِمْ رَبُّهُمْ رَشَدًا (10)} [الجن72: 8 – 10[

வானத்தைத் தீண்டினோம். அது கடுமையான பாதுகாப்பாலும், தீப்பந்தங்களாலும் நிரப்பப் பட்டுள்ளதைக் கண்டோம்.

(ஒட்டுக்) கேட்பதற்காக அங்கே பல இடங்களில் அமர்வோராக இருந்தோம். இப்போது யார் (ஒட்டுக்) கேட்கிறாரோ அவர் காத்திருக்கும் தீப்பந்தத்தை தனக்கு (எதிராக) காண்பார்.

பூமியில் உள்ளவர்களுக்குக் கெடுதி நாடப்பட்டுள்ளதா? அல்லது அவர்களின் இறைவன் அவர்களுக்கு நேர்வழியை நாடியிருக்கிறானா? என்பதை அறிய மாட்டோம்.

(அல்குர்ஆன் 72 : 8, 9, 10)

”இப்போது ஒட்டுக் கேட்பவர் காத்திருக்கும் தீப்பந்தத்தை தனக்கு (எதிராகக்) காண்பார்” என்று ஷைத்தான் பேசியதிலிருந்தே முன்பு எறியப்பட்டதை விட மிகக் கடுமையாகவும் எந்த ஒன்றையும் செவியேற்க முடியாத அளவிற்கும் அவர்கள் எறியப்பட்டனர் என்பதைத் தெளிவாக அறிந்து கொள்ள முடிகிறது.

மேலும் அதைத் தொடர்ந்து…

“பூமியில் உள்ளவர்களுக்குக் கெடுதி நாடப்பட்டுள்ளதா? அல்லது அவர்களின் இறைவன் அவர்களுக்கு நேர்வழியை நாடியிருக்கிறானா? என்பதை அறிய மாட்டோம்““

என்று ஷைத்தான்கள் கூறுவதிலிருந்தே அவர்கள் எதையும் செவியேற்க முடியாத அளவிற்கு தடைசெய்யப்பட்டு விட்டனர் என்பதை மேற்கண்ட வசனம் அறிவிக்கிறது.

குர்ஆன் அருளப்பட்ட பிறகு ஷைத்தான்கள் ஒட்டுக் கேட்பதை விட்டும் அறவே தடுக்கப்பட்டு விட்டனர் என்பதை பின்வரும் வசனமும் தெளிவாக எடுத்துரைக்கிறது.

{وَمَا تَنَزَّلَتْ بِهِ الشَّيَاطِينُ (210) وَمَا يَنْبَغِي لَهُمْ وَمَا يَسْتَطِيعُونَ (211) إِنَّهُمْ عَنِ السَّمْعِ لَمَعْزُولُونَ (212)} [الشعراء 26 : 210 – 212]

(இது) அறிவுரை! நாம் அநீதி இழைத்ததில்லை. இதை ஷைத்தான்கள் இறக்கிடவில்லை. அது அவர்களுக்குத் தகுதியானதும் அல்ல. அதற்கு அவர்களால் இயலாது. அவர்கள் செவியேற்பதை விட்டும் தடுக்கப்பட்டவராவர்

(அல்குர்ஆன் 26 : 210, 211, 212)

குர்ஆன் அருளப்பட்ட பிறகு வானுலகச் செய்திகளை ஒட்டுக் கேட்பதை விட்டும் ஷைத்தான்கள் அறவே தடுக்கப்பட்டுவிட்டனர் என்பதை பின்வரும் செய்தியும் தெளிவுபடுத்துகிறது.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள்அறிவிக்கிறார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் தோழர்கள் சிலருடன் உக்காழ்’ எனும் சந்தையை நோக்கிச் சென்றார்கள். (இந்த நேரத்தில்) ஷைத்தான்களுக்கும் வானுலகச் செய்திகளுக்குமிடையே திரையிடப்பட்டு (அச்செய்திகளைக் கேட்கவிடாமல் ஷைத்தான்களைத் தடுக்கப்பட்டு)விட்டது. (வானுலகச் செய்திகளை ஒட்டுக் கேட்கச் சென்ற) ஷைத்தான்கள் மீது தீப்பந்தங்கள் ஏவி விடப்பட்டன.

(ஒட்டுக் கேட்கச் சென்ற) அந்த ஷைத்தான்கள் (ஒரு செய்தியும் கிடைக்காமல் தம் தலைவர்களிடம்) திரும்பி வந்தனர். அப்போது தலைவர்கள், உங்களுக்கு என்ன நேர்ந்தது? என்று கேட்டார்கள்.

ஷைத்தான்கள், வானத்துச் செய்திகளுக்கும் எங்களுக்குமிடையே திரையிடப்பட்டு விட்டது; எங்கள் மீது தீப்பந்தங்கள் ஏவி விடப்பட்டன என்று பதிலளித்தனர்.

புதியதொரு நிகழ்ச்சி ஏதேனும் சம்பவித்திருக்கும். அதுவே உங்களுக்கும் வானத்துச் செய்திகளுக்குமிடையே தடையாக அமைந்திருக்க வேண்டும். எனவே நீங்கள், பூமியின் கீழ்த்திசை, மேல்திசை (என நாலா பாகங்களிலும்) சென்று புதிதாகச் சம்பவித்து விட்ட இந்த நிகழ்ச்சி என்னவென்று ஆராயுங்கள் என்றனர்.

உடனே ஷைத்தான்கள் பூமியின் கீழ்த்திசை, மேல்திசை எங்கும் பயணம் செய்து தங்களுக்கும் வானுலகச் செய்திகளுக்கும் இடையே தடுப்பாய் அமைந்த அந்த நிகழ்ச்சி என்னவென்று ஆராயலாயினர்.

திஹாமா எனும் (மக்கா) பகுதியை நோக்கி ஷைத்தான்கள் வந்த போது உக்காழ் சந்தையை நோக்கிச் சென்று கொண்டிருந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நக்லா எனுமிடத்தில் தம் தோழர்களுக்கு ஃபஜ்ருத் தொழுகையை முன்னின்று நடத்திக் கொண்டிருந்தார்கள். அப்போது ஓதப்பட்ட குர்ஆன் வசனங்களை அந்த ஷைத்தான்கள் கேட்டபோது அதைக் கவனமாகச் செவிகொடுத்துக் கேட்டனர். அப்போது ஷைத்தான்கள் (தங்களுக்கிடையில்) வானத்துச் செய்திகளை (கேட்க முடியாமல்) உங்களைத் தடுத்தது இது தான் என்று கூறிவிட்டு,

தம் கூட்டத்தாரிடம் சென்று, எங்கள் கூட்டத்தாரே! திண்ணமாக நாங்கள் ஆச்சரியமானதொரு குர்ஆனைச் செவிமடுத்தோம். அது நேர்வழியைக் காட்டுகின்றது. எனவே நாங்கள் அதை விசுவாசித்தோம். எங்கள் இறைவனுக்கு (இனி) நாங்கள் ஒரு போதும் யாரையும் இணையாகக் கருத மாட்டோம் என்று கூறினர். (இதையொட்டி) மாண்பும் மகத்துவமும் வாய்ந்த அல்லாஹ் தன் தூதருக்கு,

 

(நபியே!) நீர் கூறுக: வஹீ மூலம் எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது: மெய்யாகவே ஜின்களில் சிலர் (இவ்வேதத்தைச்) செவியேற்றனர்… என்று தொடங்கும் இந்த (72ஆவது) அத்தியாயத்தை அருளினான்.

ஜின்கள் (தம் கூட்டத்தாரிடம்) கூறியது வஹியின் மூலம்தான் நபி (ஸல்) அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது..

நூல் : புகாரி (4921)

மேற்கண்ட ஆதாரங்களிலிருந்து நபியவர்கள் அனுப்பப்பட்ட பிறகு ஷைத்தான்கள் எந்த ஒன்றையும் செவியேற்க முடியாது; அது இறைவனால் தடைசெய்யப்பட்டு விட்டது என்பதைத் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

ஆக்கம் :

அபு அம்மார்

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed