பாதிக்கப்பட்டவர்களின் பிரார்த்தனைக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்

 

மனிதர்கள் இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டும் என்பதற்காகப் பல்வேறு விதமான வணக்க வழிபாடுகளை இறைவன் கற்றுத் தருகின்றான்.

மனிதர்களுக்கு இறைவன் வழங்கியிருக்கின்ற வணக்க வழிபாடுகளில் மிகமிக முக்கியத்துவம் வாய்ந்தது என்னவென்றால், அனுதினமும் இறைவனிடத்தில் கையேந்தி, பணிவுடன் கேட்கின்ற பிரார்த்தனை.

ஒரு மனிதன் பிரார்த்தனையின் மூலமாகவே தன்னுடைய அனைத்து விதமான கஷ்டங்கள், பாரங்கள், சிரமங்கள், சோதனைகள் இதுபோன்ற ஒட்டு மொத்தத்தையும் இறைவனிடத்தில் இறக்கி வைக்கின்றான். அத்தகைய மாபெரும் ஆயுதமே பிரார்த்தனை.

பணக்காரன், ஏழை, உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற எந்தப் பாகுபாடுமின்றி அனைவரும் தங்களுடைய மன பாரத்தைக் கொட்டுகின்ற ஒரு நீரூற்று இந்தப் பிரார்த்தனையாகும். இதன் காரணமாகத் தான் பிரார்த்தனையை இஸ்லாமிய மார்க்கம் மிகவும் சிறப்பித்துச் சொல்கின்றது…

பிரார்த்தனையை அல்லாஹ்வும், அவனது தூதரும் ஏராளமான இடங்களில் மிகவும் சிறப்பித்து நமக்கு கற்றுத் தருகின்றார்கள். பிரார்த்தனையின் சிறப்புகள், பிரார்த்தனையினால் நாம் அடையும் நன்மைகள் என்று பல்வேறு விதமான வழிமுறைகளை வழிகாட்டுகின்றார்கள்.

பிரார்த்தனையைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்:
‘‘பிரார்த்தனை தான் வணக்கமாகும்’’ என்று நபி (ஸல்) கூறியுள்ளனர்.

நூல்கள்: அஹ்மத் 17629, 17660, 17665

பிரார்த்தனை ஒரு வணக்கம் என்று சொல்லாமல் வணக்கங்களிலேயே தலையாய வணக்கம் பிரார்த்தனை என்ற கருத்துப்பட நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.

ஒரு அடியான் தனது அடிமைத்தனத்தைப் பரிபூரணமாக உணர்வதும், தன்னைப் படைத்தவனை எஜமானனாக ஏற்பதும் தான் வணக்கத்தின் முக்கியமான அம்சமாகும். இந்த அம்சம் பிரார்த்தனையில் கூடுதலாகவே உள்ளது என்பதை இந்தச் செய்தி உணர்த்துகின்றது.

அதிலும் மற்றவர்கள் கேட்கின்ற பிரார்த்தனையைக் காட்டிலும் பாதிக்கப் பட்டவர்களின் பிரார்த்தனை, இறைவனிடத்தில் வித்தியாசமானது.

பாதிக்கப்பட்டவர்கள் இறைவனிடத்தில் கையேந்துகின்ற பிரார்த்தனையை இறைவன் தனித்துவம் வாய்ந்ததாகக் கருதி, அதற்கு வெகு சீக்கிரமே பதிலளிக்கின்றான்.

ஒரு மனிதன் இறைவனுக்குச் செய்யக்கூடிய பாவங்களை, இறைவனிடத்தில் அந்த மனிதர் பாவமன்னிப்புக் கேட்டு விட்டால் இறைவன் தன்னுடைய அடியார்களின் மீது கருணைப் பார்வையைப் பொழிந்து, அனைத்துப் பாவங்களையும் தான் நாடியவர்களுக்கு மன்னிக்கத் தயாராக உள்ளான்.

ஆனால் ஒரு மனிதன், தன்னோடு வாழ்ந்து கொண்டிருக்கின்ற சக மனிதர்களுக்குச் செய்கின்ற பாவங்களை அந்த மனிதன் மன்னிக்காத வரை இறைவன் மன்னிக்கவே மாட்டான் என்று சொல்கின்ற அளவுக்கு இஸ்லாமிய மார்க்கம் சொல்கின்றது.

மேலும், சக மனிதர்களிடத்தில் எப்படி நடப்பது என்பதைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் அற்புதமான முறையில் நமக்குக் கற்றுத் தருகின்றார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்:

ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரன் ஆவான். அவனுக்கு அநீதியிழைக்கவும் மாட்டான்; அவனை (பிறரது அநீதிக்கு ஆளாகும்படி) கைவிட்டு விடவும் மாட்டான்.

நூல்: புகாரி 2442

ஒரு முஸ்லிம், சக முஸ்லிமுக்கு ஒருக்காலும் அநீதி இழைக்க மாட்டான் என்று கூறுவதன் மூலம், ஒரு முஸ்லிம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை நபி (ஸல்) அவர்கள் பறைசாற்றுகின்றார்கள்.

பாதிக்கப்பட்டவர்களின் பிரார்த்தனை
பாதிக்கப்பட்டவர்கள் தனக்கு யார் அநியாயம் செய்தார்களோ அவர்களுக்கு எதிராகத் தனது இறைவனிடத்தில் கையேந்தி, இறைவனின் சன்னிதானத்தில் வீழ்ந்து விட்டால், அந்தப் பாதிக்கப்பட்டவர்களின் குரலுக்கு அல்லாஹ் வேகமாகச் செவி சாய்க்கின்றான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தெள்ளத் தெளிவாக நமக்கு விளக்குகின்றார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்:

அநீதி இழைக்கப்பட்டவனின் பிரார்த்தனைக்கு பயந்து கொள்ளும்! ஏனெனில் அவனுக்கும் இறைவனுக்கும் மத்தியில் எந்தத் திரையுமில்லை.

நூல்: புகாரி 1496

அநீதம் செய்யப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களின் பிரார்த்தனைக்கு ஒவ்வொருவரும் அஞ்சிக் கொள்ள வேண்டும் என்றும், அவ்வாறு பாதிக்கப்பட்டவன் இறைவனிடத்தில் கையேந்தி விட்டால் அல்லாஹ்வுக்கும், பாதிக்கப்பட்டவனுக்கும் இடையில் எந்தத் திரையும் இல்லை என்றும் நபி (ஸல்) அவர்கள் பாதிக்கப்பட்டவர்களின் பிரார்த்தனையின் தனித்துவத்தைப் பற்றி நமக்கு எச்சரிக்கை விடுக்கின்றார்கள்.

ஒரு மனிதனுக்கோ அல்லது நம்மை நம்பி சில காரியங்களையும், பொறுப்புகளையும் ஒப்படைத்த கூட்டத்திற்கோ பாதிப்பை ஏற்படுத்தி விட்டால் அல்லது நம்ப வைத்து ஏமாற்றி விட்டால், பாதிப்படைந்தவர்கள் விரக்தியில், கடுமையான மனச் சங்கடத்தில் ‘இறைவா! இந்த நாசக்காரனை அழித்து விடு!’ என்று கையேந்திக் கதறி விட்டால் அல்லாஹ்வுக்கும்,

கையேந்தியவனுக்கும் இடையில் எந்தத் திரையுமின்றி அங்கீகரித்து இறைவன் பதிலளிக்கின்றான்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

‘‘அநீதியிழைக்கப்பட்டவரின் சாபத்திற்கு அஞ்சுங்கள். ஏனெனில், அதற்கும் அல்லாஹ்வுக்கும் இடையே எந்தத் திரையும் இல்லை’’ என்று நபி (ஸல்) அவர்கள் முஆத் (ரலி) அவர்களை யமன் நாட்டுக்கு (ஆளுநராக) அனுப்பி வைத்த போது கூறினார்கள்.

நூல்: புகாரி 2448

இந்தச் செய்தியை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எப்போது சொல்கிறார்கள் என்பதைக் கவனியுங்கள். ஒரு நபித்தோழரை, ஒரு பகுதிக்கு ஆட்சியாளராக அனுப்பும் போது சொல்கிறார்கள். ஏனென்றால் மற்ற எவரையும் விட, பதவியில் இருப்பவர்கள் தான் மக்களுக்கு அநியாயம் செய்பவர்களாக இருப்பதைப் பார்க்கிறோம்.

மறுமையின் இருள்

சக மனிதர்களுக்கு நாம் இழைக்கின்ற அநீதி மறுமை நாளில் பூதாகரமாகக் கிளம்பி நம்மை வறுத்தெடுக்கும் என்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நமக்கு எச்சரிக்கை விடுக்கின்றார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அநீதி, மறுமை நாளின் பல இருள்களாக காட்சி தரும்.

நூல்: புகாரி 2447

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அநீதியிழைப்பதிலிருந்து தவிர்ந்து கொள்ளுங்கள். ஏனெனில் அநீதியானது, மறுமை நாளில் பல இருள்களாகக் காட்சி தரும்.

நூல்: முஸ்லிம் 5034

மறுமையின் இருள் என்பது நாம் மீளவே முடியாத அளவுக்குப் படுபயங்கரமான பாதிப்பை ஏற்ப்படுத்துகின்ற இழிவு தரும் இருளாகும். அந்த இழிவிலிருந்தும், இருளிலிருந்தும் நாம் தப்பிக்க வேண்டுமானால் பிறருக்கு அநீதி இழைப்பதிலிருந்து தவிர்ந்து இருக்கக் கடமைப்பட்டிருக்கின்றோம்.
மேலும், நாம் பிறருக்கு இழைக்கின்ற அநீதியின் காரணமாக அதுவே நம்மை மறுமையில் அதள பாதாளத்திலே வீசி எறிந்து, நரகத்தில் விழுந்து விடுவதற்குக் காரணமாக அமைந்து விடும். எனவே, சக மனிதர்களிடம் நடந்து கொள்ளக் கூடிய விஷயங்களில் மிகுந்த எச்சரிக்கை உணர்வோடு வாழ வேண்டும்.

மறுமையின் பேரிழப்பு

அநீதி இழைத்தவர்கள் மறுமையில் அதிகப்படியான இழப்பைச் சந்திப்பார்கள் என்றும், செய்த நன்மைகள் அனைத்தும் அழிந்து நாசமாகி விடும் என்றும் பயங்கரமான எச்சரிக்கையை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எடுத்துரைக்கின்றார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர், தன் சகோதரனுக்கு அவனது மானத்திலோ, வேறு (பணம், சொத்து போன்ற) விஷயத்திலோ இழைத்த அநீதி (ஏதும் பரிகாரம் காணப்படாமல்) இருக்குமாயின், அவர் அவனிடமிருந்து அதற்கு இன்றே மன்னிப்புப் பெற்றுக் கொள்ளட்டும். தீனாரோ, திர்ஹமோ (பொற்காசுகளோ வெள்ளிக் காசுகளோ) பயன் தரும் வாய்ப்பில்லாத நிலை (ஏற்படும் மறுமை நாள்) வருவதற்கு முன்னால் (மன்னிப்புப் பெற்றுக் கொள்ளட்டும்.

ஏனெனில், மறுமை நாளில்) அவரிடம் நற்செயல் ஏதும் இருக்குமாயின் அவனது அநீதியின் அளவுக்கு அவரிடமிருந்து எடுத்துக் கொள்ளப்பட்டு (அநீதிக்குள்ளானவரின் கணக்கில் வரவு வைக்கப்பட்டு) விடும். அநீதியிழைத்தவரிடம் நற்செயல்கள் எதுவும் இல்லையென்றால் அவரது தோழரின் (அநீதிக்குள்ளானவரின்) தீய செயல்கள் (அவர் கணக்கிலிருந்து) எடுக்கப்பட்டு அநீதியிழைத்தவரின் மீது சுமத்தப்பட்டு விடும்.

நூல்: புகாரி 2449

நாளை மறுமையில் அநீதி இழைத்தவர்கள் படும் அவல நிலையை இச்செய்தி நமக்குப் படம் பிடித்துக் காட்டுகின்றது. அநீதி இழைத்தவர்கள் இந்த உலகத்திலேயே தன்னால் பாதிக்கப்பட்டவர்களிடத்தில் கணக்குத் தீர்த்துக் கொள்ளவில்லையானால், நாளை மறுமையில் அவர்கள் செய்த நன்மையை வாங்கிக் கொண்டு பாதிக்கப்பட்டவர்கள் கணக்குத் தீர்த்து கொள்வார்கள். அநியாயக்காரனின் நன்மைகள் முடிந்து விட்டால், பாதிக்கப்பட்டவர்கள் தன்னுடைய தீமைகளை அவர்களின் தலையில் சுமத்தி கணக்குத் தீர்த்துக் கொள்வார்கள்.

இன்றைய காலகட்டத்தில் சர்வ சாதாரணமாக சக முஸ்லிம்களுக்கு துரோகத்தையும், நம்ப வைத்து ஏமாற்றுவதையும், பெரும் கூட்டத்திற்கு அநீதி இழைப்பதையும் பார்க்கின்றோம்.
அநீதியின் அளவுக்கு நன்மைகள் பறிக்கப்படும் நாளில் கைசேதப்பட்டு நிற்பதை அஞ்சி, பிறருக்கு அநீதி இழைப்பதிலிருந்து தவிர்ந்து வாழக் கடமைப்பட்டிருக்கின்றோம்.

அநியாயம் செய்வது ஹராம்

ஒரு மனிதர் இறைவனுக்கோ அல்லது சக மனிதர்களுக்கோ அநியாயம் செய்வதை இறைவன் தடை செய்து விட்டதாக இறைவனே கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் நமக்கு எடுத்துரைக்கின்றார்கள்.
நபி (ஸல்) அவர்கள் வளமும் உயர்வும் மிக்க அல்லாஹ் பின்வருமாறு கூறியதாக அறிவித்தார்கள்:
என் அடியார்களே!

அநீதியிழைப்பதை எனக்கு நானே தடை செய்துகொண்டேன். அதை உங்களிடையேயும் தடை செய்யப்பட்டதாக ஆக்கிவிட்டேன். ஆகவே, நீங்கள் ஒருவருக்கொருவர் அநீதியிழைக்காதீர்கள்.
என் அடியார்களே!

உங்களில் யாரை நான் நல்வழியில் செலுத்தினேனோ அவர்களைத் தவிர மற்ற அனைவரும் வழி தவறியவர்களே. ஆகவே, என்னிடமே நல்வழியில் செலுத்துமாறு கேளுங்கள். உங்களை நான் நல்வழியில் செலுத்துவேன்.

நூல்: முஸ்லிம் 5033

அநீதியிழைப்பதை அல்லாஹ் தனக்கே தடை செய்திருக்கின்றான். மேலும், மனிதர்கள், சக மனிதர்களுக்கு அநீதியிழைப்பதையும் தடை செய்து விட்டேன் என்று அறுதியிட்டுச் சொல்கின்றான்.
இந்த எச்சரிக்கைக்குப் பயந்து, நம்பி ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகளுக்கு நீதியாகவும், நேர்மையாகவும், இறையச்சத்துடனும், இன்னும் பிறருக்கு எந்தக் காரியத்திலும், எவ்விதத்திலும் அநீதி இழைப்பதிலிருந்து ஒதுங்கி நல்ல மனிதர்களாக வாழக் கடமைப்பட்டிருக்கின்றோம்.

இந்த உலகிலேயே தண்டனை கிடைக்கலாம்
பாதிக்கப்பட்டவர்கள் இறைவனிடத்தில் சாபப் பிரார்த்தனையைக் கேட்டுக் கையேந்தி விட்டால், அந்தப் பிரார்த்தனைக்கு இறைவன் இந்த உலகத்திலேயே பதிலளித்து, அதற்குண்டான இழிவையும், தண்டனையையும் வழங்கி மக்களுக்கு முன்னால் தலைக்குனிவை ஏற்படுத்தலாம். அல்லது மறுமையில் இதற்கான தண்டனை கிடைக்கலாம்.
பாதிக்கப்பட்டவர்களின் பிரார்த்தனை இந்த உலகத்திலேயே அங்கீகரிக்கப்பட்ட சம்பவம் நபித்தோழர்கள் காலத்தில் நடைபெற்றதாக செய்திகள் உள்ளன.

சயீத் (ரலி) அவர்கள் மீது, அர்வா என்ற பெண்மணி அபாண்டமாகப் பொய்ப்பழி சுமத்துகின்றாள். ஆனால் ஒன்றுமே செய்யாத, பாதிக்கப்பட்ட சயீத் (ரலி) அவர்கள், அர்வா என்ற பெண்ணுக்கு எதிராக இறைவனிடத்தில் சாபப் பிரார்த்தனையைக் கேட்கின்றார்கள். அந்தச் செய்தி இதோ:

சயீத் பின் ஸைத் பின் அம்ர் பின் நுஃபைல் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அர்வா பின்த் உவைஸ் என்ற பெண், எனக்குரிய வீட்டின் ஒரு பகுதி தொடர்பாக வழக்காடினாள். அப்போது நான், “அவளையும் அந்த வீட்டையும் விட்டுவிடுங்கள். ஏனெனில், “யார் நியாயமின்றி (பிறருக்குச் சொந்தமான) ஒரு சாண் நிலத்தைக் கைப்பற்றிக் கொள்கிறாரோ, அவரது கழுத்தில் மறுமை நாளில் அந்த நிலத்தி(ன் மேற்பகுதியி)லிருந்து ஏழு பூமிகள்வரை (செல்லும் பகுதி) மாலையாக மாட்டப்படும்‘ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டுள்ளேன். ‘‘இறைவா! அவள் (தனது வாதத்தில்) பொய் சொல்பவளாக இருந்தால், அவளது பார்வையைப் பறித்துவிடு. அவளது சவக்குழியை அந்த வீட்டிலேயே அமைத்துவிடு’’ என்று கூறினேன்.

இந்த ஹதீஸை சயீத் பின் ஸைத் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும் முஹம்மத் பின் ஸைத் பின் அப்தில்லாஹ் பின் உமர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

பின்னர் நான் அந்தப் பெண்ணைப் பார்வையற்றவளாகப் பார்த்தேன். அவள் சுவர்களைத் தடவிக்கொண்டு இருந்தாள். “சயீத் பின் ஸைதின் பிரார்த்தனை எனது விஷயத்தில் பலித்துவிட்டது’’ என்று கூறுவாள். இந்நிலையில் அவள் (ஒரு நாள்) தனது வீட்டில் நடந்துகொண்டிருந்தபோது, வீட்டுக்குள்ளிருந்த கிணறு ஒன்றை அவள் கடந்து சென்றாள். அப்போது அதில் அவள் (தவறி) விழுந்துவிட்டாள். அதுவே அவளது சவக் குழியாக அமைந்தது.

நூல்: முஸ்லிம் 3291

சயீத் (ரலி) அவர்களுக்கு சொந்தமான இடத்தின் ஒரு பகுதியை அநியாயமாகப் பறித்துக் கொண்ட அர்வா என்ற பெண்ணுக்கு எதிராக, தனக்கு இழைக்கப்பட்ட அநியாயத்தை முன்னிறுத்தி அல்லாஹ்விடத்தில் முறையிடுகின்றார். பின்னர் இறைவன், அந்தப் பெண்ணைக் கண் தெரியாதவளாக ஆக்கி, அந்த வீட்டையே அவளுக்கு சவக்குழியாக மாற்றி விடுகின்றான்.

பாதிக்கப்பட்டவர்கள் அல்லாஹ்விடத்தில் கையேந்தி விட்டால், வல்ல இறைவன் அவர்களின் பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டு அநியாயம் செய்த அயோக்கியர்களுக்கு கடுமையான தண்டனையையும், இழிவையும் வழங்கி கேவலப்படுத்துகிறான் என்ற செய்தியை மேற்கண்ட வரலாற்றுச் சம்பவத்தில் பார்க்கிறோம்.

அநியாயக்காரர்களுக்கு அல்லாஹ்வின் எச்சரிக்கை

அநியாயம் செய்பவர்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து செய்த தவறை நியாயப்படுத்தாமல், திருந்தி, வருந்தி வாய்மூடி அமைதியாக இருந்து அல்லாஹ்விடம் தான் செய்த அநியாயத்திற்காக மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் இறைவன் கடுமையாக தண்டிப்பான்.

என்றென்றும் உயிருடனிருப்பவன் முன்னே முகங்கள் கவிழ்ந்து விடும். அநியாயத்தைச் சுமந்தவன் நட்டமடைந்து விட்டான்.

அல்குர்ஆன் 20:111

அவர்கள் அதை உறுதியாக நம்பியிருந்தும் அநியாயமாகவும், ஆணவமாகவும் மறுத்தனர். “குழப்பம் செய்தோரின் முடிவு எவ்வாறு இருந்தது?’’ என்று கவனிப்பீராக!

அல்குர்ஆன் 27:11

அநீதி இழைத்தோரை அல்லாஹ் விரும்ப மாட்டான்.

அல்குர்ஆன் 3:57

இன்னும் இதுபோன்ற ஏராளமான திருமறை வசனங்கள் அநீதம் இழைப்பவர்களுக்கு எச்சரிக்கையை அள்ளி வீசுகின்றது. இதுபோன்ற கடுமையான இறைவனின் எச்சரிக்கைக்கு அஞ்சி வாழக் கடமைப்பட்டிருக்கின்றோம்.

இன்றைய கால கட்டத்தில் சர்வ சாதாரணமாக மக்களை நம்ப வைத்து கழுத்தறுக்கின்ற நம்பிக்கை மோசடியை, பொறுப்பு மோசடியைப் பலர் செய்து கொண்டிருக்கின்றார்கள்.

இன்னும் சிலர், பிறருக்கு அநியாயங்களை எல்லாம் செய்து விட்டு, பின் அதை நியாயப்படுத்துகின்ற அவல நிலையையும் பார்க்கிறோம்.

தாங்கள் செய்த தவறுகளை மறைப்பதற்காக மற்றவர்கள் மீது அவதூறுகளை அள்ளி வீசுகின்றார்கள். பொய்யான குற்றச்சாட்டுகளை சர்வ சாதாரணமாகக் கூறி, அதைப் பரப்பியும் வருவதைப் பார்க்கிறோம்.
அத்தகையவர்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து, பாதிக்கப்பட்டவர்களின் பிரார்த்தனைக்குப் பயந்து திருந்தி வாழ வேண்டும். அதற்கு வல்ல இறைவன் உதவி செய்வானாக!!!

ஆக்கம்: M.A. அப்துர் ரஹ்மான்

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed