வலைதளங்களில் பரவும் பொய்யான ஹதீஸ்கள்

 

நாம் வாழ்ந்துக் கொண்டிருக்கும் நவீன யுகத்தில் மனிதர்களின் வாழ்வோடு இரண்டறக் கலந்துவிட்ட விஷயம்தான் சமூக வலைதளங்கள்.

ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப் போன்ற சமூக வலைதளங்கள் தொலைதொடர்பு சாதனங்களின் ஒரு மைல்கல் என்றே சொல்லலாம்.

உலகின் எந்த மூலைமுடுக்கில் இருப்பவர்களையும் எளிதில் தொடர்புக் கொண்டு தகவல்களை பரிமாறிக் கொள்ளலாம் எனும் அளவிற்கு தகவல் பரிமாற்றத்தில் மிகப் பெரும் சாதனையாகவும் இவை விளங்குகிறது.
மேலும், இஸ்லாமிய சமூகம் போன்ற உலக மீடியாக்களால் புறக்கணிக்கப்படும் சமூகங்களுக்கும் அவர்களது கருத்துக்களுக்கும் ஒரு வடிகாலாகவும் இவை திகழ்கிறது.

வரலாற்று திரிப்பு என்பது ஒவ்வொரு காலத்திலும் மேல்தட்டு மக்களால் செய்யப்பட்டு வந்தது.

அவர்கள் வரலாற்றில் தங்களுக்கு சாதகமாக தங்களை உயர்த்தியும், மற்றவர்களை தாழ்த்தியும், மற்றவர்களின் தியாகங்களை மறைத்தும் திரித்துக் கூறிவந்தனர்.

ஆனால், தற்போதைய காலத்தில் சமூக வலைதளங்கள் வாயிலாக இவ்வாறு வரலாற்றை மறைப்பதற்கு எவ்வித இடமும் அளிக்காமல் ஒவ்வொரு தகவலையும் ஆதாரத்துடன் உலகிற்கு அவ்வப்போது தந்துவிடுகின்றனர்.

இவ்வாறு, பல்வேறு நன்மையான காரியங்களுக்காக இச்சமூக வலைதளங்கள் நமக்கு பயன்பட்டு வந்தாலும் பல பொய்யான தகவல்கள், வதந்திகள் பரவுவதற்கும், யாரும் யாரின் நன்மதிப்பையும் குறைத்துவிடலாம் எனும் அளவிற்கு ஆதாரமற்ற செய்திகள் பரப்பபட்டு குழப்பம் ஏற்படுத்தப்படுவதற்கும் இவை பயன்படுத்தப்படுவதுதான் வேதனையான விஷயம்.

குழப்பங்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்று சொன்ன இஸ்லாத்தில் உள்ளவர்களே இவ்வாறான ஆதாரமற்ற செய்திகளை பரப்புகின்றனர்.

ஒரு செய்தியை பரப்புவதற்கு முன் அது ஆதாரப்பூர்வமான சரியான செய்தியா? என்பதையும், இவ்வாற ஒரு செய்தி உள்ளதா? என்பதையும் தெளிவுப்படுத்திக் கொள்வதுதான் இறை நம்பிக்கையாளரின் பண்பு.

நம்பிக்கை கொண்டோரே! குற்றம் புரிபவன் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால் ஒரு சமுதாயத்திற்கு அறியாமையால் நீங்கள் தீங்கு இழைக்காமலிருக்க அதைத் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்! (அவ்வாறில்லை எனில்) நீங்கள் செய்ததற்காகக் கவலைப்படுவீர்கள்.

அல்குர்ஆன் 49: 6

எந்தவொரு செய்தி வந்தாலும் அதை சரியானதா என்று தெளிவுப்படுத்திக் கொள்வது ஒவ்வொரு மூஃமினின் பண்பாகும்.

அவ்வாறின்றி கேள்விப்பட்டதையெல்லாம் தெளிவுப்படுத்திக் கொள்ளாமல் பரப்பினால் பொய்யன் என்ற பட்டத்தை நமக்கு அது பெற்றுத் தந்துவிடும்.

ஒருவர் தாம் கேள்விப்பட்டதையெல்லாம் (பிறருக்கு) அறிவிப்பதே அவர் பொய்யர் என்பதற்குப் போதுமான சான்றாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 6

இவ்வாறு மார்க்கம் எச்சரித்து தடுத்த காரியத்தைத்தான் நம்மில் பலர் சமூக வலைதளங்கள் வாயிலாக செய்துவருகிறோம்.

அதிலும் குறிப்பாக மார்க்கம் தொடர்பான ஆதாரமற்ற பலவீனமான செய்திகளை சரியான ஹதீஸ்கள் என்று நம்பி பரப்புவதுதான் வேதனையின் உச்சக்கட்டம்.
அவ்வாறு, சமூக வலைதளங்களில் பரப்பபடும் பலவீனமாக செய்திகளில் நம் பார்வைக்கு தெரிந்தவையும் அவை ஏன் பலவீனம் என்பது பற்றியும் இக்கட்டுரையில் காண்போம்.

நல்ல நண்பனின் அடையாளம் நான்கு
அவனைப் பார்த்தால் அல்லாஹ்வின் ஞாபகம் வரும்
அவனுடன் பேசினால் ஈமான் அதிகரிக்கும்
அவனுடன் உட்கார்ந்தால் அறிவு வளரும்
அவனுடைய செயல்கள் மறுமை நாளை நினைவுப்படுத்தும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இவ்வாறான செய்தி திர்மிதி 2144ல் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று சமூக வலைதளங்களில் நட்பின் இலக்கணம் என்ற தலைப்பின் கீழ் பரப்பட்டு வருகிறது.

ஆனால் இவ்வாறு நண்பனின் அடையாளம் நான்கு என்று எந்த செய்தியும் ஜாமிவுத் திர்மிதியில் இல்லை. எந்த கிதாபிலும் இல்லை.

அதே சமயம், மூன்று தன்மைகளை உள்ளடக்கிய ஒரு செய்தி முஸ்னத் அபீ யஃலா என்ற ஹதீஸ் கிரந்தத்தில் 2437வது இலக்கத்திலும் முஸ்னத் அப்து பின் ஹுமைத் என்ற கிரந்தத்தின் 631வது இலக்கத்திலும் இன்னும் சில இடங்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

مسند أبي يعلى محقق (4/ 326)
2437 – حدثنا عبد الله بن عمر بن أبان حدثنا علي بن هاشم بن البريد عن مبارك بن حسان عن عطاء : عن ابن عباس قال : قيل يا رسول الله أي جلسائنا خير ؟ قال : من ذ كركم الله رؤيته وزاد في علمكم منطقه وذكركم بالآخرة عمله

அல்லாஹ்வின் தூதரே! எங்கள் அருகில் அமர்பவர்களில் சிறந்தவர் யார்? என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு, யாரை பார்ப்பது அல்லாஹ்வை உங்களுக்கு நினைவுப்படுத்துமோ,

யாரிடம் பேசுவது உங்களது கல்வியை அதிகப்படுத்துமோ,

யாருடைய செயல் உங்களுக்கு மறுமையை நினைவூட்டுமோ அவரே ஆவார் என்று நபி(ஸல்) அவர்கள் விடையளித்தார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கிறார்கள்.

இந்த செய்தியும் பலவீனமான செய்தியாகும்.
இந்த செய்தியில் இடம்பெறும் முபாரக் பின் ஹஸ்ஸான் என்பவரை அறிஞர்கள் குறைக்கூறியுள்ளனர்.

تهذيب التهذيب محقق (10/ 25)
وقال أبو داود منكر الحديث وقال النسائي ليس بالقوي في حديثه شئ وذكره ابن حبان في الثقات وقال يخطئ ويخالف.
قلت: وقال الازدي متروك يرمى بالكذب وقال ابن عدي روى اشياء غير محفوضة وقال البيهقي في الشعب.

இவர் ஹதீஸில் மறுக்கப்பட வேண்டியவர் என்று இமாம் அபூதாவூத் அவர்கள் கூறியுள்ளார்கள்.

இவர் பலமானவர் இல்லை என்றும் இவரது ஹதீஸில் ஆட்சேபனை உள்ளது என்றும் இமாம் நஸாயீ அவர்கள் கூறியுள்ளார்கள்.

இவர் ஹதீஸ் துறையில் விடப்படவேண்டியவர் என்றும் பொய்யர் என்றும் இமாம் அஸ்தீ கூறியதாக இமாம் ஹஜர் கூறியுள்ளார்.

தஹ்தீபுத் தஹ்தீப் பாகம் 10 பக்கம் 25
இவ்வாறான பல விமர்சனங்கள் இவர் மீது கூறப்படுவதால் இவரது அறிவுப்புகள் ஏற்கத்தகுந்தது இல்லை என ஆகிறது.

எனவே இந்த செய்தி பலவீனமானதாகும்.
மேலும், இதே செய்தி இப்னு ஷாஹீன் என்பவருக்குரிய அத்தர்கீப் என்ற நூல் வேறொரு அறிவிப்பாளர் தொடரைக் கொண்டு இடம்பெற்றுள்ளது.

الترغيب في فضائل الأعمال وثواب ذلك لابن شاهين (ص: 139)
482 – حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْحَسَنِ بْنِ أَحْمَدَ الْحَرَّانِيُّ، ثنا أَبِي، ثنا يَحْيَى بْنُ عَبْدِ اللَّهِ الْحَرَّانِيُّ، ثنا عُمَرُ يَعْنِي ابْنَ سَالِمٍ الْأَفْطَسَ، عَنْ أَبِيهِ، عَنِ الْحَسَنِ، عَنْ عُرْوَةَ، عَنِ ابْنِ مَسْعُودٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «تَقَرَّبُوا إِلَى اللَّهِ بِبُغْضِ أَهْلِ الْمَعَاصِي، وَالْقَوْهُمْ بِوُجُوهٍ مُكْفَهِرَّةٍ، وَالْتَمِسُوا رِضَا اللَّهِ بِسَخَطِهِمْ، وَتَقَرَّبُوا إِلَى اللَّهِ بِالتَّبَاعُدِ مِنْهُمْயு. قَالُوا: يَا نَبِيَّ اللَّهِ، فَمَنْ نُجَالِسُ؟ قَالَ: «مَنْ تُذَكِّرُكُمُ اللَّهَ رُؤْيَتُهُ، وَيَزِيدُ فِي عَمَلِكُمْ مَنْطِقُهُ، وَمَنْ يُرَغِّبُكُمْ فِي الْآخِرَةِ عَمَلُهُயு

இந்த செய்தியில் இடம்பெற்றிருக்கும் உமர் பின் ஸாலிம் அல்அஃப்தஸ் என்பவர் பலவீனமானவர் ஆவார்.
இவரை இப்னு ஹிப்பான் மாத்திரம் சரியானவர் என்று குறிப்பிட்டுள்ளார்.

இப்னு ஹிப்பான் மாத்திரம் ஒருவரை சரியானவர் என்று குறிப்பிட்டால் அதை ஏற்க இயலாது.

ஏனெனில், இவர் யாரென்று அறியப்படாதவர்களையும் கூட சரியானவர் என்று சான்றளிக்கும் அலட்சியப்போக்குள்ளவர்.

இதுதவிர இவர் மீது எந்த நிறையும் குறையும் காணப்படாததால் இவர் நிலை அறியப்படாத மஜ்ஹூலுல் ஹால் எனும் அந்தஸ்த்தில் உள்ளவர்.
இந்த அந்தஸ்த்தில் உள்ளவர்களின் அறிவிப்பு ஏற்கப்படாது.

இவ்வாறு இந்த செய்தியின் எல்லா அறிவிப்புகளும் இருக்க இந்த செய்தியை பரப்புவதோடு மட்டுமல்லாமல் இந்த செய்தியில் இல்லாத மற்றுமொரு நான்காவது தன்மையையும் சேர்த்து பரப்பிக் கொண்டிருக்கிறோம்.
இது எவ்வளவு குற்றம் என்பதை கற்பனைச் செய்துப்பாருங்கள்.

நபி(ஸல்) ஃபாத்திமா(ரலி)க்கு கற்றுக் கொடுத்த ஐந்து வார்த்தைகள்

الدعاء للطبراني 360 (ص: 319)
1047- حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ نُصَيْرٍ الأَصْبَهَانِيُّ ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَمْرٍو الْبَجَلِيُّ ، حَدَّثَنَا سُفْيَانُ الثَّوْرِيُّ عَنْ عَبْدَةَ بْنِ أَبِي لُبَابَةَ عَنْ سُوَيْدِ بْنِ غَفَلَةَ قَالَ أَصَابَتْ عَلِيًّا رَضِيَ اللَّهُ عَنْهُ فَاقَةٌ فَقَالَ لِفَاطِمَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا لَوْ أَتَيْتِ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم فَسَأَلْتِيهِ وَكَانَ عِنْدَ أُمِّ أَيْمَنَ رَضِيَ اللَّهُ عَنْهَا فَدَقَّتِ الْبَابَ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم لأُمِّ أَيْمَنَ إِنَّ هَذَا لَدَقُّ فَاطِمَةَ وَلَقَدْ أَتَتْنَا فِي سَاعَةٍ مَا عَوَّدَتْنَا أَنْ تَأْتِيَنَا فِي مِثْلِهَا فَقُومِي فَافْتَحِي لَهَا الْبَابَ قَالَتْ فَفَتَحْتُ لَهَا الْبَابَ فَقَالَ يَا فَاطِمَةُ لَقَدْ أَتَيْتِنَا فِي سَاعَةٍ مَا عَوَّدْتِنَا أَنْ تَأْتِينَا فِي مِثْلِهَا فَقَالَتْ يَا رَسُولَ اللهِ هَذِهِ الْمَلائِكَةُ طَعَامُهَا التَّسْبِيحُ وَالتَّحْمِيدُ وَالتَّمْجِيدُ فَمَا طَعَامُنَا قَالَ وَالَّذِي بَعَثَنِي بِالْحَقِّ مَا اقْتَبَسَ فِي آلِ مُحَمَّدٍ نَارٌ مُنْذُ ثَلاثِينَ يَوْمًا وَقَدْ أَتَانَا أَعْنُزٌ فَإِنْ شِئْتِ أَمَرْتُ لَكِ بِخَمْسَةِ أَعْنُزٍ وَإِنْ شِئْتِ عَلَّمْتُكَ خَمْسَ كَلِمَاتٍ عَلَّمَنِيهِنَّ جِبْرِيلُ عَلَيْهِ السَّلامُ آنِفًا قَالَتْ بَلْ عَلِّمْنِي الْخَمْسَ كَلِمَاتٍ الَّتِي عَلَّمَكَهُنَّ جِبْرِيلُ عَلَيْهِ السَّلامُ قَالَ قُولِي يَا أَوَّلَ الأَوَّلِينَ يَا آخِرَ الآخَرِينَ ذَا الْقُوَّةِ الْمَتِينَ وَيَا رَاحِمَ الْمَسَاكِينِ وَيَا أَرْحَمَ الرَّاحِمِينَ قَالَ فَانْصَرَفَتْ حَتَّى دَخَلَتْ عَلَى عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُمَا فَقَالَتْ ذَهَبْتُ مِنْ عِنْدِكِ إِلَى الدُّنْيَا وَأَتَيْتُكَ بِالآخِرَةِ قَالَ خَيْرًا يَأْتِيكِ خَيْرًا يَأْتِيكِ

அலீ(ரலி) அவர்களுக்கு பஞ்சம் ஏற்பட்டது. எனவே, அலீ(ரலி) அவர்கள் ஃபாத்திமா(ரலி) அவர்களிடம், நீ அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களிடம் சென்றால் அவர்களிடம் (உதவி) கேள்! என்று கூறினார்கள்.

நபி(ஸல்) அவர்கள் உம்மு அய்மன்(ரலி) அவர்களி(ன் வீட்டி)டம் இருந்தபோது சென்று கதவை தட்டினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் உம்மு அய்மன்(ரலி) அவரகளிடம், இது ஃபாத்திமா கதவை தட்டுகின்ற சத்தமாகும். எந்த நேரத்தில் வருவது ஃபாத்திமாவின் வழமை இல்லையோ அந்த நேரத்தில் நம்மிடம் வந்துள்ளார். எனவே, எழுந்து, கதவை ஃபாத்திமாவிற்கு திறந்து விடுங்கள் என்று கூறினார்கள். நான் அவர்களுக்கு கதவை திறந்து விட்டேன் என்று உம்மு அய்மன் கூறினார்கள்.

அப்போது நபி(ஸல்) அவர்கள், ஃபாத்திமாவே! எந்த நேரத்தில் வருவது உனது வழமையில்லையோ அந்த நேரத்தில் எங்களிடம் நீ வந்துள்ளாய் என்று கூறினார்கள். உடனே, ஃபாத்திமா(ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே! சுப்ஹானல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ் சொல்வது இன்னும் இறைவனை மகத்துவப்படுத்துவதெல்லாம் வானவர்களின் உணவு. எங்களின் உணவு எது? என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் அவர்கள், சத்தியத்துடன் என்னை அனுப்பியவன் மீது ஆணையாக! எங்களுக்கு செம்பறியாடு வந்த நிலையிலும் முஹம்மதாகிய (என்) குடும்பத்தில் முப்பது நாட்களாக நெருப்பு எரியவில்லை.

நீ விரும்பினால் உனக்கு ஐந்து செம்பறியாடுகளை தருமாறு கட்டளையிடுகிறேன். நீ விரும்பினால் தற்போது எனக்கு ஜிப்ரீல்(அலை) அவர்கள் கற்று தந்த ஐந்து வார்த்தைகளை உனக்கு கற்றுத் தருகிறேன் என்று கூறினார்கள்.

(அப்போது) ஃபாத்திமா(ரலி) அவர்கள் ஜிப்ரீல்(அலை) உங்களுக்கு கற்று தந்த ஐந்து வார்த்தைகளையே எனக்கு கற்றுத்தாருங்கள் என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் அவர்கள், யா அவ்வலல் அவ்வலீன் யா ஆகீரல் ஆகீரீன் தல் குவ்வத்தில் மத்தீன் வ யா ராஹிமல் மஸாகீன் வயா அர்ஹமர் ராஹிமீன் என்று நீ சொல் என்று நபியவர்கள் கூறினார்கள்.

உடனே, ஃபாத்திமா(ரலி) திரும்பி அலி(ரலி) அவர்களிடம் வந்து, நான் உங்களிடமிருந்து உலகத்தை (எதிர்ப்பார்த்து) நோக்கி சென்றேன். (தற்போது) மறுமை பலனை கொண்டு வந்துவிட்டேன் என்று கூறினார்கள். அதற்கு அலீ(ரலி) அவர்கள் நல்லதே உன்னிடம் வரும் நல்லதே உன்னிடம் வரும் என்று கூறினார்கள்.
ஐந்து வார்த்தைகளுக்கான

பொருள்: முதலாமவர்களில் முதலாமவனே! இறுதியானவர்களில் இறுதியானவேனே! உறுதியான ஆற்றலுடையவனே! ஏழைகளுக்கு இரக்கம் காட்டுபவனே!

கருணையாளர்களுக்கெல்லாம் கருணையாளனே!
இந்த செய்தியை ஒருவர் தனது உரையில் கூறியிருந்தார். அவர் பேசிய வீடியோவை மக்கள் சமூக வலைதளங்களில் பரப்பினர்.

இந்த செய்தி தப்ரானீ இமாமுக்குரிய துஆ எனும் புத்தகத்தில் 1047வது செய்தியாகவும், தர்தீபுல் அமாலீ எனும் புத்தகத்தில் 1138வது செய்தியாகவும் இடம்பெற்றுள்ளது.

இந்த செய்திகளில், “இஸ்மாயீல் பின் அம்ர் அல்பஜலீ” எனும் அறிவிப்பாளர் இடம்பெறுகிறார்.
இவர் ஹதீஸ்துறையில் பலவீனமானவர் என்று அறிஞர்களால் விமர்சிக்கப்பட்டுள்ளார்.

الجرح والتعديل (2/ 190)
643 – (131 م) إسماعيل بن عمرو البجلي كوفي قدم اصبهان روى عن سفيان الثوري والحسن وعلي (3) ابني صالح وقيس بن الربيع روى عنه أحمد بن محمد بن عمر بن يونس اليمامي، سألت أبي عنه فقال هو ضعيف الحديث.

இவர் ஹதீஸில் பலவீனமானவர் என்று இமாம் அபூ ஹாதம் அவர்கள் கூறியுள்ளார்கள்.
அல்ஜரஹ் வத்தஃதீல் பாகம் 2 பக்கம் 190

الضعفاء والمتروكين لابن الجوزي (1/ 118)
400 إسماعيل بن عمرو بن نجيح أبو إسحاق البجلي الأصبهاني الكوفي
يروي عن الحسن بن صالح والثوري
قال الدارمي والدارقطني وابن عدي ضعيف

இவரை தாரமீ, தாரகுத்னீ, இப்னு அதீ ஆகியோர் பலவீனமானவர் என்று கூறியுள்ளனர்.
அல்லுஅஃபாஉ வல் மத்ரூகீன் லிப்னில் ஜவ்ஸீ பாகம் 1 பக்கம் 118

تهذيب التهذيب محقق (1/ 280)
وذكره ابن حبان في الثقات فقال يغرب كثيرا وقال أبو الشيخ في طبقات الاصبهانيين غرائب حديثه تكثر وضعفه أبو حاتم والدارقطني وابن عقدة والعقيلي والازدي وقال الخطيب صاحب غرائب ومناكير عن الثوري وغيره مات سنة (227) أرخه أبو نعيم.

சுஃப்யானுஸ் ஸவ்ரீ வழியாகவும் ஏனையோர் வழியாகவும் அரிதானவைகளையும் மறுக்கத்தக்க செய்திகளையும்(முன்கர்) அறிவிக்க கூடியவர் என்று இமாம் கதீப் கூறியுள்ளார்.

தஹ்தீபுத் தஹ்தீப் பாகம் 1 பக்கம்280

இஸ்மாயீல் இந்த செய்தியை சுஃப்யான் வழியாகத்தான் அறிவித்துள்ளார்.

ميزان الاعتدال (1/ 239)
922 – إسماعيل بن عمرو بن نجيح البجلى الكوفى ثم الاصبهاني.
عن الثوري ومسعر، وانتهى إليه علو الاسناد بإصبهان.
قال ابن عدى: حدث بأحاديث لا يتابع عليها.

துணை சான்றாக கூட எடுக்க இயலாத செய்திகளையே இவர் அறிவிப்பார் என்று இப்னு அதீ கூறியுள்ளார்.
மீஸானுல் இஃதிதால் பாகம் 1 பக்கம் 239
இவ்வாறு பலவீனமானவர் என்று இஸ்மாயீல பின் அம்ரு அல்பஜலீ என்பவரை அறிஞர்கள் விமர்சித்துள்ளதால் இந்த செய்தி ஏற்கத்தகுந்த செய்தியாக இல்லை.
இத்தகைய பலவீனமான செய்தியுடன், இதில் இல்லாத பல தகவல்களையும் இட்டுக்கட்டி இந்த செய்தியை பேசியிருந்தார்.

ஹுனைன் போர்க்களத்திலிருந்து நிறைய கனிமத் பொருள் நபி(ஸல்) அவர்களுக்கு வந்திருக்கிறது என அலீ(ரலி) கூறினார்கள் என்றும்,

கடுமையான பஞ்சம் என்று ஃபாத்திமா சொன்னவுடன் நபி(ஸல்) அவர்கள் கட்டியனைத்து அழுதார்கள் என்றும்,
உனக்கு ஏன் உலக ஆசை இப்படி வந்துவிட்டது என்று நபி(ஸல்) சொன்னார்கள் என்றும்,

மேலும் அனைத்தையும் விட மேலாக அல்லாஹ்வை அர்ஷிலிருந்து இந்த ஐந்து வார்த்தைகள் இறக்கிவிடும் என்றும் நாகூசாமல் நபி(ஸல்) அவர்களின் மீது இட்டுகட்டி கூறியிருந்தார்.

பலவீனமான செய்தியை சொல்வதே தவறு அதிலும் அதில் இல்லாதவைகளை இணைத்துக் கூறுவது பெருந்தவறு.

“என் மீது எவன் வேண்டுமென்றே இட்டுக் கட்டி பொய் சொல்வானோ அவன் தனது இருப்பிடத்தை நரகத்தில் அமைத்துக்கொள்ளட்டும்‘ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்: புகாரி 108

நான் கூறாதவற்றை நான் கூறியதாக யார் கூறுவாரோ அவர் நரகத்தில் தன் இருப்பிடத்தை அமைத்துக்கொள்ளட்டும்.

நூல்: புகாரி 109

இத்தகைய பாவமான காரியத்தை திக்ரு, துஆ என்று சொன்னதும் அதை பரப்பி நாம் அக்குற்றத்தை சம்பாதிக்கலாமா?

எனவே ஒரு செய்தியைப் பரப்புவதற்கு முன்னால் அல்லாஹ்வின் எச்சரிக்கைக்கு அஞ்சி அது சரியான செய்தியா என்பதை தெளிவுப்படுத்திக் கொள்ள வேண்டும்.

இன்னும் இதுப்போன்று ஏராளமான பலவீனமான ஆதாரமற்ற செய்திகள் சமூக வலைதளங்களில் பரவிக் கொண்டும் மக்களிடத்தில் பிரபல்யமாகவும் உள்ளன.

ஆக்கம் : சபீர் அலி

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed