வஇய்யாக நஸ்தயீன்- உன்னிடமே உதவி தேடுகிறோம் 

உன்னையே வணங்குகிறோம் என்ற உறுதிமொழியைத் தொடர்ந்து உன்னிடமே உதவி தேடுகிறோம் (வஇய்யாக நஸ்தயீன்) என்று மற்றொரு உறுதிமொழி எடுக்குமாறும் அல்லாஹ் நமக்குப் போதிக்கின்றான். அதனையும் ஐயத்திற்கிடமின்றி விளங்குவது அவசியமாகும். ஏனெனில் சில அறிவீனர்கள் இந்த உறுதிமொழியைக் கேலிக் கூத்தாகச் சித்தரித்து பலதெய்வ வணக்கத்தை நியாயப்படுத்த முனைந்திருக்கிறார்கள்.

அல்லாஹ் தன்னிடம் மட்டுமே உதவி தேடும்படி நமக்குக் கற்றுத் தருகிறான். ஆனால் நமது வாழ்க்கையில் பல்வேறு தேவைகளை நம்மைப் போன்ற மனிதர்களிடம் கேட்டுக் கொண்டிருக்கிறோம். இவ்வாறு கேட்காத மனிதன் எவனுமே இல்லை. மற்ற மனிதர்களின் உதவியின்றி மனிதனால் இந்த உலகில் வாழ்வது கூட சாத்தியமாகாது. நபிகள் நாயகம் (ஸல்) உட்பட மாந்தர் அனைவருமே, பிற மனிதர்களிடம் உதவி தேடியே இருக்கிறார்கள்.

அப்படியானால் உன்னிடமே உதவி தேடுகிறோம் என்பது செயல்படுத்த முடியாததாகவே உள்ளது. இறைவனல்லாத மற்றவர்களிடம் உதவி தேடுவது பாவம் என்றால் எந்த மனிதனும் இந்தப் பாவத்தைச் செய்யாமலில்லை. இப்படிப் போகிறது அந்த அறிவீனர்களின் சிந்தனை.

இத்துடன் இவர்கள் நிறுத்திக் கொண்டார்களில்லை. ஒரு மனிதன் பிறரது உதவியின்றி வாழ முடியாது எனும் போது, இறந்து போய் விட்ட நல்லடியார்களிடம் கேட்பதில் என்ன தவறு இருக்க முடியும்? என்று விரிகிறது இவர்களது சிந்தனை. இதன் காரணமாகவே இது பற்றி விரிவாகவும், விளக்கமாகவும் அறிந்து கொள்ள நாம் கடமைப்பட்டுள்ளோம். உன்னிடமே உதவி தேடுகிறோம் என்பதன் சரியான பொருளை திருக்குர்ஆனின் மற்றொரு வசனம் நமக்கு விளக்குகின்றது.

நன்மையான காரியங்களிலும் இறையச்சத்தை ஏற்படுத்தும் காரியங்களிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்! (அல்குர்ஆன் 5:2) என்பதே அந்த வசனம். இந்த வசனத்தில் மனிதர்கள் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்வதை அல்லாஹ் அனுமதிக்கின்றான். வலியுறுத்தவும் செய்கிறான்.

இறைவனே இவ்வாறு உதவிக் கொள்வதை அனுமதிப்பதால், உன்னிடமே உதவி தேடுகிறோம் என்பது ஒருவருக்கொருவர் பரஸ்பரம் உதவிக் கொள்வதையும் மனிதர்களை மனித நிலையில் வைத்து உதவி தேடுவதையும் மறுக்கும் விதத்தில் அருளப்படவில்லை என்பது தெளிவு. மாறாக மனிதனை இறைவனது அம்சம் பொருந்தியவனாகக் கருதும் விதமாக உதவி தேடுவதை மட்டுமே இந்த வசனம் மறுக்கின்றது.

இறந்து போன நல்லடியார் ஒருவரை ஒருவன் அழைத்து உதவி தேடும் போது அவர் இறைவனது அம்சம் கொண்டவராக நம்பப்படுகிறார். உயிருடன் உள்ள ஒரு மனிதரிடம் கேட்கப்படும் சாதாரண உதவிகள் இத்தகைய நிலையில் இல்லை. எப்படி என்று விளக்கமாகக் காண்போம்.

ஒருவன் இறந்தவரிடம் தமது நோயைக் குணப்படுத்துமாறு வேண்டுகிறான். மற்றொருவன் ஒரு மருத்துவரிடம் சென்று தனது நோயைக் குணப்படுத்துமாறு கேட்கிறான். இரண்டும் மேலோட்டமாகப் பார்க்கும் போது ஒரே மாதிரியாகத் தென்பட்டாலும், இரண்டுக்குமிடையே வித்தியாசங்கள் உள்ளன.

முதல்வித்தியாசம்

மருத்துவரை அணுகுபவன் மருத்துவரைத் தனது கண்களால் நேரடியாகப் பார்க்கிறான். மருத்துவரும் இவனை நேரடியாகப் பார்க்கிறார்.

இறந்து போனவரை அணுகுபவன், அவரைத் தன் கண்களால் காண்பதில்லை. அல்லாஹ் எப்படி மறைவாக இருந்து கொண்டு கண்காணித்துக் கொண்டிருக்கிறானோ அது போல் இந்தப் பெரியாரும் தன்னைக் கண்காணிக்கிறார் என்ற நம்பிக்கை இருப்பதாலேயே அவரை அழைக்கிறான். மறைவாக இருந்து கொண்டு அனைத்தையும் கண்காணிக்கும் இறைவனது தன்மையை இறந்து போனவக்கும் இவன் அளித்து விடுகிறான். மருத்துவரிடம் தேடும் உதவிகள் இப்படி அமைந்திருக்கவில்லை.

இரண்டாவதுவித்தியாசம்

மருத்துவரை அணுகும் போது, இந்த மருத்துவர் தன்னால் இயன்ற அளவு நோய் தீர்க்க முயற்சிக்கிறார். அவர் எவ்வளவு தான் சிறப்பாக மருத்துவம் செய்தாலும் அந்த மருத்துவம் பயனளிக்காமலும் போகலாம். இந்த மருத்துவர் குணமளிக்க வேண்டும் என்று நாடிவிட்டால் அது நடந்து தான் ஆகும் என்பது கிடையாது என்ற நம்பிக்கையிலேயே மருத்துவரை அணுகுகின்றான்.

இறந்து போன நல்லடியாரை அணுகக் கூடியவனின் நம்பிக்கை இப்படி இல்லை. இந்தப் பெரியார் மாத்திரம் நமக்கு உதவி செய்ய வேண்டும் என்று நினைத்து விட்டால் நிச்சயமாக நமது நோய் நீங்கிவிடும். இவர் நினைத்தால் அது நடக்காமல் போகாது என்ற நம்பிக்கை தான் இவனிடம் உள்ளது. அதாவது பலவீனத்திற்கு அப்பாற்பட்டவராகவும், அனைத்துக் காரியங்களின் மீதும் ஆற்றல் பெற்றவராகவும் இவர் கருதப்படுகிறார்.

மூன்றாவதுவித்தியாசம்

ஒரு மருத்துவரை அணுகும் போது இந்த மருத்துவர் ஒரு சமயத்தில் ஒருவரது பேச்சையே கேட்க முடியும். ஒரு சமயத்தில் பலபேர் தங்கள் நோய்கள் பற்றி முறையிட்டால் இவரால் எதையுமே கேட்க முடியாது என்ற நம்பிக்கையில் தான் அணுகுகிறோம்.

இறந்து போன நல்லடியார் ஒருவரை அணுகும் போது, இவன் உதவி தேடும் அதே சமயத்தில் இன்னும் பலரும் அவரிடம் உதவி தேடுவார்கள். உலகின் பல பகுதிகளிலிருந்தும் பலரும் அவரை அழைப்பார்கள் என்பதைத் தெரிந்து கொண்டே அவரை அணுகுகின்றான். அதாவது எங்கிருந்து அழைத்தாலும் எத்தனை பேர் அழைத்தாலும் இந்தப் பெரியார் கேட்கிறார் என்ற நம்பிக்கை இருப்பதாலேயே அழைக்கிறான். இந்தத் தன்மை இறைவனுக்கு மாத்திரம் சொந்தமான தனித்தன்மையாகும்.

மருத்துவரின் கேட்கும் ஆற்றல் தன்னுடைய ஆற்றல் போன்றது தான் என்று நம்புகிறான். இறந்து போனவரின் கேட்கும் திறனோ இறைவனது கேட்கும் திறனுக்கு நிகரானது என்று நம்புகிறான்.

நான்காவதுவித்தியாசம்

மருத்துவருக்கு மருத்துவ ஆற்றல் இருப்பதை நாம் கண்கூடாகக் காண்கிறோம். அல்லாஹ் மனிதனுக்கு இத்தகைய ஆற்றல்களை வழங்கியுள்ளான் என்பதற்குச் சான்றும் உள்ளது.

இறந்தவரிடம் இத்தகைய ஆற்றல் இருப்பதை நாம் காண்பதில்லை. இறந்த பின் அவரிடம் இத்தகைய ஆற்றல் இருக்கும் என்பதற்கு எந்தச் சான்றும் இல்லை. இன்னும் சொல்வதென்றால், உயிரோடு இருந்த போது அவரிடம் இருந்த ஆற்றல்களும் கூட இறந்த பின் இல்லாது போய் விடுகின்றது. அதற்குத் தான் சான்றுகள் உள்ளன.

ஐந்தாவதுவித்தியாசம்

மருத்துவர், மருத்துவம் செய்யும் போது அதற்குரிய மருந்துகள், மாத்திரைகள், ஊசிகள், ஆயுதங்கள் போன்ற சாதனங்களின் துணையுடன் செய்கிறார். அதை நாம் காணவும் செய்கிறோம். ஆனால் இறந்தவரோ இப்படி சாதனங்கள் எதனையும் பயன்படுத்தாமல் மந்திர சக்தியால் குணப்படுத்துவதாக நம்பப்படுகிறது. அதாவது அல்லாஹ் உதவி செய்வது போலவே, இறந்தவரும் உதவி செய்வதாக இவன் நம்புகிறான்.

ஆக, மனிதர்கள் ஒருவருக்கொருவர் உதவி தேடும் போதும், உதவி செய்யும் போதும் எவருமே இறைத்தன்மை பெற்றவராக எண்ணப்படுவதில்லை. சமாதிகளில் போய்க் கேட்கும் உதவிகளில் சமாதிகளில் அடங்கப்பட்டவருக்கு இறைத் தன்மை அளிக்கப்படுகிறது.

உன்னிடமே உதவி தேடுகிறோம் என்றால் எல்லாக் காரியங்களிலும் எவ்வித இயலாமையும் இல்லாதவன் என்ற நம்பிக்கையிலும், எங்கிருந்து அழைத்தாலும், எத்தனை பேர் அழைத்தாலும் அதைச் செவியுற்று நடவடிக்கை எடுக்கிறவன் என்ற நம்பிக்கையிலும், இறைவா! உன்னிடமே உதவி தேடுகிறோம் என்பதே அதன் பொருளாகும்.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed