இய்யாக நஃபுது- உன்னையே வணங்குகிறோம்  01

உன்னையே வணங்குகிறோம் என்பது இந்தச் சொற்றொடரின் பொருள். அல்லாஹ்வின் முன்னிலையில் அன்றாடம் எடுக்கப்படும் இவ்வுறுதிமொழியில் அல்லாஹ் கற்றுத் தரும் பாடங்கள் ஏராளம். இந்த ஒரு சொற்றொடர் மட்டும் சரியாகப் புரிந்து கொள்ளப்படுமானால் மனித வாழ்வில் மகத்தான மாறுதல் ஏற்பட்டு விடும்.

உன்னை வணங்குகிறோம் என்று அல்லாஹ் நமக்குக் கற்றுத் தராமல் உன்னையே வணங்குகிறோம் எனக் கற்றுத் தருகிறான். அதாவது அல்லாஹ்வை வணங்குவது மட்டும் போதாது. அவனைத் தவிர வேறு யாரையும் வணங்காமலிருக்க வேண்டும் என்பதாலேயே உன்னையே வணங்குகிறோம் எனக் கற்பித்துத் தருகிறான்.

லாயிலாஹ இல்லல்லாஹ் வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை என்ற திருக்கலிமா எந்தக் கருத்தை வலியுறுத்துகின்றதோ அதையே இய்யாக நஃபுது என்பதும் வலியுறுத்துவதைக் காணலாம். அல்லாஹ்வை வணங்குவது மாத்திரம் போதாது. அல்லாஹ் அல்லாத வேறு யாரையும் எதையும் வணங்காமலிருக்க வேண்டும் என்பதையும் இவ்விரு சொற்களும் நமக்கு அறிவிக்கின்றன.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் வாழ்ந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் எதிரிகள் அனைவரும் வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் என்பதை மறுத்ததே இல்லை. இறைவனுடைய இறைத்தன்மையை அவர்கள், எச்சந்தர்ப்பத்திலும் நிராகரித்ததில்லை.

மாறாக, அல்லாஹ்வை அவர்கள் ஏற்றிருந்தார்கள். அவனையும் வணங்கி வந்தார்கள். அத்துடன் சில சமயங்களில் சில வணக்கங்களை அல்லாஹ் அல்லாதவர்களுக்கும் அவர்கள் செய்து வந்தார்கள்.

உன்னை வணங்குகிறோம் என்பதில் அவர்களுக்கு ஆட்சேபனை எதுவும் இருக்கவில்லை. உன்னையே வணங்குகிறோம். (வேறு யாரையும் வணங்க மாட்டோம்) என்பதிலேயே அவர்களுக்கு ஆட்சேபனை இருந்தது.

வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உங்களுக்கு உணவளிப்பவன் யார்? செவிப் புலனையும், பார்வைகளையும் தன் கைவசம் வைத்திருப்பவன் யார்? உயிரற்றதிலிருந்து உயிருள்ளதையும், உயிருள்ளதிலிருந்து உயிரற்றதையும் வெளிப்படுத்துபவன் யார்? காரியங்களை நிர்வகிப்பவன் யார்? என்று கேட்பீராக! அல்லாஹ் என்று கூறுவார்கள். அஞ்ச மாட்டீர்களா என்று நீர் கேட்பீராக!

(அல்குர்ஆன் 10:31)

அவர்களைப் படைத்தவன் யார் என்று அவர்களிடமே நீர் கேட்டால் அல்லாஹ் என்று கூறுவார்கள். எவ்வாறு திசை திருப்பப்படுகின்றனர்?

(அல்குர்ஆன் 43:87)

வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்? என்று அவர்களிடம் நீர் கேட்டால் மிகைத்தவனாகிய அறிந்தவனே இவற்றைப் படைத்தான் எனக் கூறுவார்கள்.

(அல்குர்ஆன் 43:9)

பூமியும், அதில் உள்ளோரும் யாருக்குச் சொந்தம்? நீங்கள் அறிந்தால் (பதிலளியுங்கள்!) என்று (முஹம்மதே!) கேட்பீராக! அல்லாஹ்வுக்கே என்று அவர்கள் கூறுவார்கள். சிந்திக்க மாட்டீர்களா? என்று கேட்பீராக! ஏழு வானங்களுக்கும் அதிபதி, மகத்தான அர்ஷுக்கும் அதிபதி யார்? எனக் கேட்பீராக! அல்லாஹ்வே என்று கூறுவார்கள். அஞ்ச மாட்டீர்களா;? என்று கேட்பீராக! பாதுகாப்பவனும், (பிறரால்) பாதுகாக்கப்படாதவனும், தன் கைவசம் ஒவ்வொரு பொருளின் அதிகாரத்தை வைத்திருப்பவனும் யார்? நீங்கள் அறிந்தால் (பதில் கூறுங்கள்!) என்று கேட்பீராக! அல்லாஹ்வே என்று கூறுவார்கள். எவ்வாறு மதி மயக்கப்படுகிறீர்கள்? என்று கேட்பீராக!

(அல்குர்ஆன் 23:84,85,86,87)

வானத்திலிருந்து தண்ணீரை இறக்கி பூமி செத்த பின் அதன் மூலம் அதற்கு உயிரூட்டுபவன் யார்? என்று அவர்களிடம் நீர் கேட்டால் அல்லாஹ் என்றே கூறுவார்கள். அல்லாஹ்வுக்கே புகழனைத்தும் என்று கூறுவீராக! மாறாக அவர்களில் அதிகமானோர் விளங்கிக் கொள்வதில்லை.

(அல்குர்ஆன் 29:63)

வானங்களையும், பூமியையும் படைத்தவனும், சூரியனையும், சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவனும் யார்? என்று அவர்களிடம் நீர் கேட்டால் அல்லாஹ் என்று கூறுவார்கள். அப்படியாயின் எவ்வாறு அவர்கள் திசை திருப்பப்படுகிறார்கள்?

(அல்குர்ஆன் 29:61)

பாதுகாப்பவனும், (பிறரால்) பாதுகாக்கப்படாதவனும், தன் கைவசம் ஒவ்வொரு பொருளின் அதிகாரத்தை வைத்திருப்பவனும் யார்? நீங்கள் அறிந்தால் (பதில் கூறுங்கள்!) என்று கேட்பீராக!

(அல்குர்ஆன் 23:88)

இந்த வசனங்களும், இந்தக் கருத்தில் அமைந்த ஏனைய வசனங்களும், மக்கத்துக் காஃபிர்கள் (இஸ்லாத்தை ஏற்காதவர்கள்) அல்லாஹ்வை நம்பியிருந்தார்கள். அவனது வல்லமையைப் புரிந்து வைத்திருந்தார்கள் என்பதைச் சந்தேகத்திற்கிடமின்றி அறிவிக்கின்றன.

மக்கத்து காஃபிர்களின் நம்பிக்கையும் இன்றைய முஸ்லிம்களின் நம்பிக்கையும்

அல்லாஹ்வைப் பற்றி இவ்வாறு நம்புவது மட்டும் போதும் என்றிருந்தால் அவர்களுக்கு ஒரு நபியை அல்லாஹ் அனுப்பி இருக்கத் தேவையே இல்லை. அல்லாஹ்வை நம்பிய மக்களை அல்லாஹ் காஃபிர்கள் (இஸ்லாத்தை ஏற்காதவர்கள்) எனக் கூறுவதேன்? அல்லாஹ்வை ஏற்ற மக்களுக்கு ஏன் இறைத் தூதரை அனுப்ப வேண்டும்? கடவுள் விஷயத்தில் அவர்கள் செய்த தவறு என்ன?

திருக்குர்ஆனை ஆராயும் போது அவர்கள் செய்த தவறு என்ன என்பது தெளிவாகத் தெரிகின்றது.

அல்லாஹ்வைக் கடவுளாக அவர்கள் ஏற்றுக் கொண்டாலும் சில வணக்கங்களை அல்லாஹ்வைத் தவிர மற்றவர்களுக்கும் செய்து வந்தனர். இவர்களை நாம் திருப்திப்படுத்தினால் இவர்கள் நமக்காக அல்லாஹ்விடம் பரிந்து பேசுவார்கள். நமக்கும் அல்லாஹ்வுக்கும் இடையே நெருக்கத்தை இவர்கள் ஏற்படுத்துவார்கள் என்ற நம்பிக்கையின் காரணமாகவே அல்லாஹ் அல்லாதவர்களையும் வணங்கி வந்தனர்.

இன்றைக்கு தமிழக முஸ்லிம்களில் பெரும்பாலானவர்கள் அல்லாஹ்வை ஏற்றுக் கொண்டு சமாதிகளிலும் வழிபாடு நடத்துகிறார்களே இது போன்று தான் அவர்களின் கடவுள் நம்பிக்கை இருந்தது. அந்த நம்பிக்கை தவறானது என்பதைச் சுட்டிக்காட்டித் திருத்தவே உன்னையே – உன்னை மட்டும் வணங்குகிறோம் என்று அவர்களுக்குக் கற்றுத் தருகிறான்.

அவர்களில் பெரும்பாலோர் இணை கற்பிப்போராகவே தவிர அல்லாஹ்வை நம்புவதில்லை.

(அல்குர்ஆன் 12:106)

கடவுள்களை ஒரே கடவுளாக ஆக்கி விட்டாரா? இது வியப்பான செய்தி தான்.

(அல்குர்ஆன் 38:5)

அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை என்று அவர்களிடம் கூறப்பட்டால் பெருமையடிப்போராக அவர்கள் இருந்தனர்.

(அல்குர்ஆன் 37:35,36)

அல்லாஹ் மட்டும் கூறப்படும் போது, மறுமையை நம்பாதோரின் உள்ளங்கள் சுருங்கி விடுகின்றன. அவனல்லாதோர் கூறப்பட்டால் உடனே அவர்கள் மகிழ்ச்சியடைகின்றனர்.

(அல்குர்ஆன் 39:45)

படைத்தவன், உணவளிப்பவன், அனைத்து அதிகாரங்களையும் தன்னகத்தே கொண்டவன் என்றெல்லாம் அவர்கள் அல்லாஹ்வைப் பற்றி நம்பியிருந்தாலும், இறைவனுக்கு இணையாக இன்னும் பல கடவுளர்களை அவர்கள் உருவாக்கி வழிபட்டு வந்தனர் என்பதை இந்த வசனங்கள் தெளிவாக அறிவிக்கின்றன.

இதன் காரணமாகவே உன்னை மட்டுமே வணங்குவோம் என்று உறுதிமொழி எடுக்குமாறு நமக்கு அல்லாஹ் கற்றுத் தந்து, அந்தத் தவறான நம்பிக்கையைத் தகர்த்தெறிகின்றான். அன்றைய மக்கள் எவ்வாறு இணை வைத்தனர் என்பதையும் அல்லாஹ் வேறு சில இடங்களில் அடையாளம் காட்டுகின்றான்.

அல்லாஹ்வையன்றி அவர்களுக்குத் தீமையும், நன்மையும் செய்யாதவற்றை வணங்குகின்றனர். அவர்கள் அல்லாஹ்விடம் எங்களுக்குப் பரிந்துரை செய்பவர்கள் என்றும் கூறுகின்றனர். வானங்களிலும் பூமியிலும் அல்லாஹ்வுக்குத் தெரியாததை அவனுக்குச் சொல்லிக் கொடுக்கிறீர்களா? அவன் தூயவன். அவர்கள் இணை கற்பிப்பதை விட்டும் உயர்ந்தவன் என்று கூறுவீராக!

(அல்குர்ஆன் 10:18)

கவனத்தில் கொள்க! தூய இம்மார்க்கம் அல்லாஹ்வுக்கே உரியது. அவனையன்றி பாதுகாவலர்களை ஏற்படுத்திக் கொண்டோர் அல்லாஹ்விடம் எங்களை மிகவும் நெருக்கமாக்குவார்கள் என்பதற்காகவே தவிர இவர்களை வணங்கவில்லை (என்று கூறுகின்றனர்). அவர்கள் முரண்பட்டது பற்றி அவர்களிடையே அல்லாஹ் தீர்ப்பளிப்பான். (தன்னை) மறுக்கும் பொய்யனுக்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான்.

(அல்குர்ஆன் 39:3)

இந்த வசனங்கள் மக்கத்துக் காஃபிர்கள் (இஸ்லாத்தை ஏற்காதவர்) அல்லாஹ்வை நம்பியதுடன் அந்த இறைவனிடம் தங்களைப் பற்றி எடுத்துச் சொல்லிப் பரிந்துரைப்பதற்காக அல்லாஹ் அல்லாதவர்களை வணங்கி அவர்களை திருப்திப்படுத்த முயன்றனர் என்பதை அறிவிக்கின்றன. அவர்களின் இத்தகைய நம்பிக்கையை முற்றாக மறுத்திடவே உன்னையே வணங்குகிறோம் என்று சொல்லுமாறு அல்லாஹ் நமக்குப் போதிக்கின்றான்.

மொத்தத்தில் அன்றைய காஃபிர்களுக்கு (இஸ்லாத்தை ஏற்காதவர்களுக்கு) அல்லாஹ்வை வணங்குவதில் ஆட்சேபணை எதுவும் இருந்ததில்லை. அல்லாஹ்வை மதிக்கவும், அவனைப் போற்றவும் அவனை வணங்கவும் அவர்கள் தயாராகவே இருந்தார்கள்.

அவர்கள் செய்த தவறு என்னவென்றால் அல்லாஹ்வைக் கடவுள் என்ற முறையில் அவர்கள் வணங்கியதுடன் இறைவனின் அடியார்களை கடவுளிடம் பரிந்துரை செய்பவர்கள் என்ற முறையில் வணங்கி வந்தனர்.

இவ்வாறு பரிந்துரை செய்வார்கள் என்று அவர்களைத் திருப்திபடுத்த எண்ணுவதும் ஒரு சில வணக்கங்களை அவர்களுக்கு செய்ய முன்வருவதும் தவறான கொள்கை என்பதனாலேயே அவர்களை அல்லாஹ் காஃபிர்கள் (இஸ்லாத்தை ஏற்காதவர்) என்றான்.

அவர்கள் கப்பலில் ஏறிச் செல்லும் போது பிரார்த்தனையை அவனுக்கே உளத்தூய்மையுடன் உரித்தாக்கி அல்லாஹ்வைப் பிரார்த்திக்கின்றனர். அவர்களைக் காப்பாற்றி தரையில் சேர்த்ததும் அவர்கள் இணை கற்பிக்கின்றனர்.

(அல்குர்ஆன் 29:65)

உங்களிடம் உள்ள ஒவ்வொரு அருட்கொடையும் அல்லாஹ்வுடையது. பின்னர் உங்களுக்கு ஒரு தீங்கு ஏற்பட்டால் அவனிடமே முறையிடுகின்றீர்கள். பின்னர் அத்துன்பத்தை உங்களை விட்டும் அவன் நீக்கியதும் நாம் அவர்களுக்கு வழங்கியதற்கு துரோகம் செய்து, உங்களில் ஒரு பிரிவினர் தமது இறைவனுக்கு இணை கற்பிக்கின்றனர். அனுபவியுங்கள்! பின்னர் அறிந்து கொள்வீர்கள்.

(அல்குர்ஆன் 16:53,54,55)

அல்லாஹ்வை வணங்கி அவனிடமே பிரார்த்தனை செய்து வந்த அம்மக்கள் இறைவனல்லாதவர்களையும் வணங்கியதன் மூலம் இணைவைத்து வந்தனர் என்பதற்கு இந்த வசனங்களும் சான்றுகளாக உள்ளன.

அல்லாஹ்வையும் வணங்கிக் கொண்டு இறைவனல்லாதவர்களையும் வணங்கினால் அது இறைவனால் ஏற்கப்படாது. மக்கத்துக் காஃபிர்கள் (இஸ்லாத்தை ஏற்காதவர்) இவ்வாறு நம்பிக்கை கொண்டிருந்ததை அல்லாஹ் ஏற்கவில்லை என்பதை இதிலிருந்து அறியலாம்.

என்றோ மரணித்து விட்டவர்களை முஸ்லிம்களில் சிலர் அழைப்பதும், பிரார்த்திப்பதும் தவறல்ல என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். நாம் தான் அல்லாஹ்வைக் கடவுளாக ஏற்று விட்டோமே! பெரியார்களைப் பரிந்துரை செய்பவர்களாகத் தானே கருதுகிறோம் என்று தங்கள் நிலையை நியாயப்படுத்திக் கொள்கின்றனர்.

மக்காவில் வாழ்ந்த காஃபிர்களும் (இஸ்லாத்தை ஏற்காதவர்களும்) இது போல் தான் நம்பினார்கள். அல்லாஹ்வத் தவிர வேறு யாரையெல்லாம் வணங்கினார்களோ அவர்களைக் கடவுள்கள் என்று மக்காவின் காஃபிர்கள் (இஸ்லாத்தை ஏற்காதவர்கள்) கூறவேயில்லை.

கடவுளிடம் பரிந்து பேசுபவர்கள் என்று தான் நம்பினார்கள். அந்த நம்பிக்கையை ஒழிக்கத் தான் நபிகள் நாயகம் (ஸல்) அனுப்பப்பட்டார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்த நம்பிக்கையை ஒழிக்க அனுப்பப்பட்டார்களோ அதையே இஸ்லாம் என்ற பெயரில் முஸ்லிம்கள் செய்வது தான் வேதனையானது.

மகான்கள் அல்லாஹ்விடம் சிபாரிசு செய்வார்கள் என்று நம்புவதும் இணை வைத்தல் என்ற கடும் குற்றம் என்பதை விளங்க வேண்டும்.

இந்த இடத்தில் சிலருக்கு ஏற்படக் கூடிய ஒரு சந்தேகத்தை அகற்றுவது அவசியமாகும். மக்கத்துக் காஃபிர்கள் (இஸ்லாத்தை ஏற்காதவர்கள்) இறைவனிடம் சிபாரிசு செய்பவர்கள் என்று எண்ணியது ஒரு சக்தியுமற்ற கற்சிலைகளைத் தானே? மகான்களை அல்லவே? என்பதே அந்தச் சந்தேகம். இது அடிப்படையில்லாத சந்தேகமாகும்.

மக்கத்துக் காஃபிர்கள் (இஸ்லாத்தை ஏற்காதவர்கள்) நல்லடியார்கள் என்று திட்டவட்டமாகத் தெரிகின்ற நபிமார்களின் சிலைகளையும் இவ்வாறு வணங்கி வந்தனர். அந்தச் சிலைகள் மூலம் அவர்கள் நாடியது நபிமார்களைத் தான். நபிமார்களைத் தானே அவர்கள் திருப்திபடுத்துகின்றனர் என்பதால் அல்லாஹ் அதை அங்கீகரிக்கவில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின் போது காபாவுக்குள் இப்ராஹீம் (அலை), இஸ்மாயீல் (அலை) ஆகியோரின் உருவச்சிலைகளைக் கண்டார்கள். அவற்றை தம் கைத்தடியால் அப்புறப்படுத்திய பின்பே உள்ளே நுழைந்தார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி); நூல்: புகாரி 1601, 3351, 4289

அன்றைய காஃபிர்கள் (இஸ்லாத்தை ஏற்காதவர்கள்) இப்ராஹீம் (அலை) அவர்களைக் கடவுள் என்று நம்பவில்லை. மாறாக இறைவனிடம் பரிந்து பேசி நமக்கு நெருக்கத்தை ஏற்படுத்துவார்கள் என்றே நம்பினார்கள். அதற்காக சில வணக்கங்களையும் செய்து வந்தனர்.

இவ்வாறு நல்லடியார்களிடம் போய் பிரார்த்தனை செய்வதும், அவர்கள் இறைவனிடம் பரிந்து பேசிப் பெற்றுத் தருவார்கள் என்று நம்புவதும் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டிருக்குமானால் அந்த நபிமார்களின் சிலைகளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அப்புறப்படுத்தியிருக்க வேண்டியதில்லை.

எந்த நல்லடியாராக இருந்தாலும் அவர்கள் பரிந்துரை செய்வார்கள் என்று எண்ணி அவர்களைத் திருப்திப்படுத்த அனுமதி இல்லை. உன்னையே வணங்குகிறோம் என்று உறுதிமொழிக்கு இது மாற்றமானது என்பதாலேயே அந்தச் சிலைகளையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அப்புறப்படுத்துகின்றனர்.

நாம் இவ்வாறு கூறுவதால் நபிமார்கள், நல்லவர்கள் மறுமையில் பரிந்துரை செய்வார்கள் என்பதை மறுப்பதாக எவரும் கருதலாகாது. இறைவனின் அனுமதி பெற்று இணை வைக்காதவர்களுக்காக நபிமார்கள் மறுமையில் பரிந்துரை செய்வார்கள் என்பது உண்மை தான்.

ஆனால் மறுமையில் நாம் கூறுவதை அவர்களும், அவர்கள் கூறுவதை நாமும் கேட்க முடிகின்ற விதத்தில் நேருக்கு நேர் சந்திக்கும் போது, இவ்வாறு கேட்பதற்குத் தடையில்லை. நபிமார்களிடம் அவர்களின் உம்மத்தினர் மறுமையில் இவ்வாறு கேட்பதாக ஹதீஸ்களில் சான்றுகள் உள்ளன.

நாம் மறுப்பது என்னவென்றால் இறந்து போனவர்களை – அவர்களின் சிலையை – சமாதியை பரிந்துரை செய்யுமாறு இம்மையிலேயே வேண்டுவதையும், அவர்களுக்காகவே சில வணக்கங்கள் புரிவதையும் தான்.

நல்லவர்களைச் சிலையாக வடிவமைத்து அதற்கு வேண்டுதல் செலுத்துவது தான் கூடாது. அவர்களைச் சமாதி வடிவில் வைத்துக் கொண்டு இவ்வாறு பரிந்துரை செய்யுமாறு வேண்டுவதும் அவர்களுக்குச் சில வணக்கங்கள் புரிவதும் தவறல்ல என்பர் சிலர்.

அல்லாஹ்வைத் தவிர எதையும் எவரையும் வணங்கலாகாது என்பது தான் இய்யாக நஃபுது வின் பொருள். சிலை வடிவமும், சமாதி வடிவமும் இதில் சமமானதேயாகும்.

யூத கிறித்தவர்களை அல்லாஹ் சபிப்பானாக! ஏனெனில் அவர்கள் தங்கள் நபிமார்களின் சமாதிகளை வணங்குமிடமாக ஆக்கி விட்டனர் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி); நூல்: புகாரி – 436, 1330, 1390, 3454, 4441, 4444, 5816

என் சமாதியை வழிபாடு நடக்கும் இடமாக இறைவா ஆக்கி விடாதே! என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி); நூல்: அஹ்மத்  7054

உங்கள் வீடுகளை அடக்கத்தலங்களாக ஆக்காதீர்கள்! மேலும் எனது அடக்கத்தலத்தில் விழா எடுக்காதீர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி); நூல்: அபூதாவூத்  1746

சமாதி வடிவம் என்றாலும் கூட அதுவும் இறைவனின் சாபத்திற்குரியதே! என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவாக அறிவித்த பின் சமாதிகளை வழிபடலாம் என்ற வாதத்தில் நியாயம் எதுவுமில்லை என்பதை உணர வேண்டும்.

அவர்களில் நல்லவர் ஒருவர் மரணித்து விட்டால் அவரது அடக்கத்தலத்தில் ஒரு வழிபாட்டுத் தலத்தை எழுப்பிக் கொண்டனர். அவர்களது உருவங்களையும் அதில் செதுக்கிக் கொண்டனர். அல்லாஹ்வின் படைப்புகளிலேயே இவர்கள் தான் மிகவும் கெட்டவர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி); நூல்: புகாரி  427, 434, 1341, 3873

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சமாதிகளின் மீது கட்டிடம் கட்டுவதையும் அது பூசப்படுவதையும் அதன் மீது உட்கார்வதையும் தடுத்தார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி); நூல்: முஸ்லிம் 1610

صحيح مسلم
93 – (969) حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَزُهَيْرُ بْنُ حَرْبٍ، – قَالَ يَحْيَى: أَخْبَرَنَا، وَقَالَ الْآخَرَانِ: – حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنْ حَبِيبِ بْنِ أَبِي ثَابِتٍ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ أَبِي الْهَيَّاجِ الْأَسَدِيِّ، قَالَ: قَالَ لِي عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ: أَلَا أَبْعَثُكَ عَلَى مَا بَعَثَنِي عَلَيْهِ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ «أَنْ لَا تَدَعَ تِمْثَالًا إِلَّا طَمَسْتَهُ وَلَا قَبْرًا مُشْرِفًا إِلَّا سَوَّيْتَهُ»

இந்தப் பூமியில் உள்ள எந்தச் சமாதியையும் இடித்துத் தரை மட்டமாக்காது விட்டுவிடாதே என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எனக்குக் கட்டளையிட்டனர். அதே கட்டளையை நிறைவேற்ற உம்மை நான் அனுப்புகிறேன் என்று அலீ (ரலி) என்னிடம் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபுல் ஹய்யாஜ்; நூல்: முஸ்லிம் 1609

இஸ்லாத்தின் பார்வையில் சமாதிகளும், சிலைகளும் சமமானவை தான் என்பதற்கு இந்த நபிமொழிகள் சான்றுகளாக உள்ளன.

கல்லை, மண்ணை, சமாதியை எதை வணங்கினாலும் உன்னை மட்டுமே வணங்குவோம் என்ற உறுதிமொழி அர்த்தமற்றதாகி விடும். அல்லாஹ்வைத் தவிர எதனையும் எந்த வடிவிலும் வணங்காமலிருக்கும் போது தான் உன்னை மட்டும் வணங்குவோம் என்ற உறுதிமொழிக்கு அர்த்தமிருக்க முடியும் என்பதை நாம் மறந்து விடலாகாது.

உன்னை மட்டும் வணங்குவோம் என்று இறைவனுக்குச் செய்து கொடுத்த உறுதிமொழியை மீறி இறைவனல்லாதவர்களை வணங்குவதும், அவர்களிடம் பிரார்த்தனை செய்வதும், இம்மையிலேயே அவர்களின் பரிந்துரையை மக்கா காஃபிர்கள் (இஸ்லாத்தை ஏற்காதவர்கள்) வேண்டியது போல் வேண்டுவதும், இறைவனுக்குச் செய்கின்ற பாவங்களிலேயே பயங்கரமான கடுமையான குற்றமாகும்.

இணை வைத்தலின் விளைவுகள்

ஏனைய குற்றங்கள் புரிவோருக்கு கிடைக்கும் மன்னிப்பு இவர்களுக்கு அறவே கிடையாது. ஒரு காலத்திலும் இவர்கள் சொர்க்கத்தில் நுழைய முடியாது. இணை வைத்தல் என்று சொல்லப்படுகின்ற இந்தப் பாவத்தைப் புரிவோர் ஏதேனும் நல்லறங்கள் புரிந்தாலும், அந்த நல்லறங்களும் கூட அழிந்து பாழாகி விடும் என்பதை அல்லாஹ் தன் திருக்குர்ஆனில் பல்வேறு இடங்களில் வலியுறுத்துகிறான்.

தனக்கு இணை கற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். அதற்குக் கீழ் நிலையில் உள்ள (பாவத்)தை, தான் நாடியோருக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் மிகப் பெரிய பாவத்தையே கற்பனை செய்தார்.

(அல்குர்ஆன் 4:48)

மர்யமின் மகன் மஸீஹ் தான் அல்லாஹ் எனக் கூறியவர்கள் (ஏக இறைவனை) மறுத்து விட்டனர். இஸ்ராயீலின் மக்களே! என் இறைவனும், உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்! அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் விலக்கப்பட்டதாக ஆக்கி விட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளர்களும் இல்லை என்றே மஸீஹ் கூறினார்.

(அல்குர்ஆன் 5:72)

இதுவே அல்லாஹ்வின் வழி. தனது அடியார்களில் தான் நாடியோரை இதன் மூலம் நேர் வழியில் செலுத்துகிறான். அவர்கள் இணை கற்பித்திருந்தால் அவர்கள் செய்த (நல்ல)வை அவர்களை விட்டும் அழிந்திருக்கும்.

(அல்குர்ஆன் 6:88)

இணை கற்பிப்போர் தமது (இறை) மறுப்புக்கு, தாமே சாட்சி கூறிக் கொண்டிருக்கும் நிலையில் அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வகிப்பது தகாது. அவர்கள் செய்தவை அழிந்து விட்டன. அவர்கள் நரகில் நிரந்தரமாக இருப்பார்கள்.

(அல்குர்ஆன் 9:17)

நீர் இணை கற்பித்தால் உமது நல்லறம் அழிந்து விடும்; நீர் நஷ்டமடைந்தவராவீர். மாறாக, அல்லாஹ்வையே வணங்குவீராக! நன்றி செலுத்துவோரில் ஆவீராக! என்று (முஹம்மதே!) உமக்கும், உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப்பட்டது.

(அல்குர்ஆன் 39:65,66)

எவன் அல்லாஹ்வுக்கு நிகராக எவரையும் பிரார்த்தித்த நிலையில் மரணிக்கிறானோ அவன் நரகில் நுழைவான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி); நூல்: புகாரி 1238

விசுவாசங்கொண்டு தங்கள் விசுவாசத்துடன் அநீதியைக் கலக்காதவர்களுக்கே பாதுகாப்பு உண்டு (6:82) என்ற வசனம் இறங்கியதும், அநீதி செய்யாதவர் நம்மில் எவரிருக்க முடியுமா? என்று நபித்தோழர்கள் கூறினார்கள். இதைக் கேட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நிச்சயமாக! இணைவைத்தல் தான் மிகப் பெரும் அநீதியாகும் (31:13) என்ற வசனத்தை ஓதிக் காட்டினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி); நூல்: புகாரி  32, 6937

உன்னை மட்டுமே வணங்குவோம் என்ற உறுதிமொழிக்கு மாற்றமாக அல்லாஹ் அல்லாதவர்களை வணங்குவது எவ்வளவு பயங்கரக் குற்றம் என்பதை உணர இந்தச் சான்றுகளே போதுமாகும்.

வணக்கம் என்றால் என்ன?

இய்யாக நஃபுது (உன்னை மட்டுமே வணங்குவோம்) என்று வல்ல இறைவனிடம் உறுதிமொழி எடுக்கும் போது வணக்கம் என்றால் என்ன என்பதைப் புரிந்து கொள்வது அவசியமாகும். அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும், எதனையும் வணங்கக் கூடாது என்று ஒப்புக் கொள்ளும் முஸ்லிம்களில் சிலர் வணக்கம் என்றால் என்ன என்பதைப் புரியாத காரணத்தினால் ஒரு சில வணக்கங்களை இறைவனல்லாத மற்றவர்களுக்கும் செய்து வருவதைக் காண முடிகின்றது.

தொழுகை, நோன்பு போன்ற காரியங்கள் மாத்திரமே வணக்கம் என்று இவர்கள் தவறாக நம்புவதால் தொழுகை, நோன்பு போன்றவை அல்லாத ஏனைய வணக்கங்களை இறைவனல்லாத மற்றவர்களுக்குச் செய்யத் துணிந்து விடுகின்றார்கள்.

உண்மையில் வணக்கம் என்பது தொழுகை நோன்பு போன்ற கடமைகள் மட்டுமில்லை. இவை அல்லாத இன்னும் பல வணக்கங்களும் உள்ளன.

அல்லாஹ்வை நேசிப்பதும் வணக்கமே!

தனக்காக தனது அடிமைகள் என்னென்ன செய்ய வேண்டுமென்று அல்லாஹ்தனது திருக்குர்ஆனிலும், தனது திருத்தூதர் வாயிலாகவும் கற்றுத் தருகிறானோ அவையாவும் வணக்கங்களேயாகும்.

அல்லாஹ்வையன்றி பல கடவுள்களைக் கற்பனை செய்து, அல்லாஹ்வை விரும்புவது போல் அவர்களை விரும்புவோரும் மனிதர்களில் உள்ளனர். நம்பிக்கை கொண்டோர் (அவர்களை விட) அல்லாஹ்வை அதிகமாக நேசிப்பவர்கள். அநீதி இழைத்தோர் வேதனையைக் காணும் போது அனைத்து வல்லமையும் அல்லாஹ்வுக்கே என்பதையும், அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன் என்பதையும் கண்டு கொள்வார்கள்.

(அல்குர்ஆன் 2:165)

அல்லாஹ்வை நேசிக்க வேண்டுமென்று மட்டும் சொல்லாமல், அல்லாஹ்வை நேசிப்பது போல் அல்லாஹ் அல்லாதவர்களை நேசிக்கலாகாது என்றும், அல்லாஹ் இங்கே நமக்குக் கற்றுத் தருகிறான். மற்ற எவரையும், எதனையும் விட அல்லாஹ்வை அதிகம் நேசிப்பவர்களே மூமின்கள் என்றும் இங்கே விளக்கம் தருகிறான்.

யார் அல்லாஹ்வை நேசிப்பது போல் அல்லாஹ் அல்லாதவர்களை நேசிக்கின்றாரோ அவர் அல்லாஹ் அல்லாதவர்களை வணங்கியவராவார். இய்யாக நஃபுது எனும் உறுதிமொழியை மீறியவராவார். இறைவனளவுக்கு மற்றவர்களை நேசிப்பது நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் வாழ்ந்த காஃபிர்களுடைய (இஸ்லாத்தை ஏற்காதவர்களுடைய) கொள்கையாக இருந்திருக்கின்றது என்பதை இந்த வசனம் விளக்குகின்றது.

அல்லாஹ் மட்டும் கூறப்படும் போது, மறுமையை நம்பாதோரின் உள்ளங்கள் சுருங்கி விடுகின்றன. அவனல்லாதோர் கூறப்பட்டால் உடனே அவர்கள் மகிழ்ச்சியடைகின்றனர்.

(அல்குர்அன் 39:45)

இறைவனின் பெயரைக் கூறும் போது ஏற்படாத மகிழ்ச்சி இறைவனல்லாத மற்றவர்களைக் கூறும் போது ஒருவனுக்கு ஏற்படுமானால் – இறைவனின் – அழைப்பை பாங்கை கேட்கும் போது ஏற்படாத பக்தி சமாதிகளைக் காணும் போது ஒருவனுக்கு ஏற்படுமானால் அவனது உள்ளத்தில் இறைவனின் நேசத்தை விட மற்றவர்களின் நேசமே அதிகமாகக் குடி கொண்டுள்ளது என்று பொருள். இய்யாக நஃபுது என்பதை அவன் பூரணமாக ஏற்கவில்லை.

இறைவனது கட்டளை இது தான் என்று கூறப்படும் போது எனது தந்தை, எனது தாய், எனது மனைவி இப்படிக் கூறுகிறார்களே என்று ஒருவன் கூறத் துணிந்து விட்டால், அவனது உள்ளத்திலும் இறை நேசத்தை விட அவனது குடும்பத்தினர் மீது அதிக நேசம் இருக்கிறது என்று பொருள்! இய்யாக நஃபுது என்பதற்கும் இவனுக்கும் சம்பந்தம் எதுவுமில்லை.

தவக்குல் வைப்பதும் வணக்கமே!

தனது இயலாமையை ஒப்புக் கொண்டு அடுத்தவர் மீது நம்பிக்கை கொண்டு அவரிடமே தனது காரியங்களை ஒப்படைத்து விடுவது தவக்குல் ஆகும். தனக்கு இறைவனால் வழங்கப்பட்டுள்ள அனைத்து ஆற்றல்களையும், வசதிகளையும் பயன்படுத்திய பின்னரும் ஒரு காரியம் கைகூடாத போது தன்னைப் போன்ற மனிதர்களால் அந்தக் காரியத்தைச் செய்திட முடியாது என்பதை உணர்ந்து தனக்கும் மேலான சக்தி பெற்றவனிடம் காரியங்களை ஒப்படைப்பதே தவக்குல்.

என் சமுதாயமே! நீங்கள் அல்லாஹ்வை நம்பி, முஸ்லிம்களாக இருந்தால் அவனையே சார்ந்திருங்கள்! என்று மூஸா கூறினார்.

(அல்குர்அன் 10:84)

அல்குர்ஆன் 3:122, 3:159, 3:160, 5:11, 5:23, 8:2, 8:49, 8:61, 9:51, 12:67, 14:11, 11:123, 14:12, 16:42, 16:99, 25:58, 29:59, 39:38, 42:36, 58:10, 64:13 ஆகிய வசனங்களிலும் இன்னும் பல வசனங்களிலும் யார் மீதும் தவக்குல் வைக்கலாகாது என்று அல்லாஹ் கட்டளையிடுகிறான். இறைவனல்லாத எவர் மீதும் தவக்குல் வைப்பவர்கள் ஈமான் இல்லாதவர்கள்; இஸ்லாத்தை விட்டும் வெளியேறியவர்கள் என்றும் தெளிவாக்குகின்றான்.

பசியைப் போக்கிக் கொள்ள உழைக்காமல் படுக்கையில் படுத்துக் கொண்டு, அல்லாஹ் மீது நம்பிக்கை வைத்திருக்கிறேன் என்று கூறுவதற்குப் பெயர் தவக்குல் அல்ல. செய்ய வேண்டிய எல்லா முயற்சிகளையும் செய்து விட்டு அல்லாஹ்வின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்து அவனிடம் காரியங்களை ஒப்படைப்பதே தவக்குல் என்பதை இங்கே நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அல்லாஹ்வின் மீது தவக்குல் வைத்திருக்கிறோம் என்று எண்ணிக் கொண்டு, எந்தத் தயாரிப்பும் இன்றி, ஹஜ்ஜுக்கு வந்து சிலர் சிரமப்பட்டுக் கொண்டிருந்தார்கள். அதைக் கண்டித்து (ஹஜ்ஜுடைய காலங்களில் வியாபாரம் செய்வதன் மூலம்) உங்கள் இறைவனின் அருட்கொடைகளைத் தேடிக் கொள்வது தவறில்லை. (அல்குர்ஆன் 2:19) என்ற வசனத்தை அல்லாஹ் அருளினான் என்று இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி); நூல்: புகாரி 1770, 2050, 2098, 4519

இதன் மூலம் தவக்குல் என்பதன் பொருளை நாம் அறியலாம். ஒருவன் திருமணம் செய்கிறான். தனக்குச் சந்ததி வேண்டுமென்பதற்காக செய்ய வேண்டிய முயற்சிகளை மேற்கொள்கிறான். அதன் பிறகும் சந்ததி உருவாகவில்லை எனும் போது மருத்துவர்களை அணுகி, தன் உடலைச் சோதனை செய்கிறான். செய்ய வேண்டிய அனைத்தையும் மனித சக்திக்கு உட்பட்டு செய்து பார்த்த பின் இறைவனிடமே அந்தப் பொறுப்பை ஒப்படைக்கும் போது அவன் அல்லாஹ் மீது தவக்குல் வைத்தவனாகின்றான்.

மற்றொருவன் இந்தக் கட்டத்தை அடையும் போது என்றைக்கோ இறந்து போய் விட்ட, தனக்கே ஒரு குழந்தையைச் சுயமாக உருவாக்கிக் கொள்ளச் சக்தியற்றவர்களிடம் போய் அவ்லியாவே! நீங்கள் தான் எனக்குப் பிள்ளை தர வேண்டும் என்று வேண்டுகின்றான் என்றால் அவனது தவக்குல் அல்லாஹ்வின் மீது இல்லை. அல்குர்ஆன் 5:23, 10:84 வசனங்களின் படி இஸ்லாத்தை விட்டு அவன் வெளியேறி விடுகிறான். இய்யாக நஃபுது எனும் உறுதிமொழியை மீறி விடுகிறான்.

தவக்குல் வைக்க வேண்டுமானால், அதற்கு மிக முக்கியமான தகுதி ஒன்று வைக்கப்படுபவரிடம் இருந்தாக வேண்டும். அந்தத் தகுதி எவரிடம் இல்லையோ, அவர் மீது தவக்குல் வைக்க முடியாது. அதாவது எவர் மீது தவக்குல் வைக்கப்படுகின்றதோ, அவர் உயிருடனிருக்க வேண்டும். உயிருடனிருப்பது மட்டும் கூட போதாது. ஒருக்காலும் அவருக்கு மரணமே ஏற்படாது இருக்க வேண்டும். இத்தன்மை கொண்டவரிடமே தவக்குல் வைக்க வேண்டும் என அல்லாஹ் கூறுகிறான்.

மரணிக்காது, உயிரோடு இருப்பவனையே சார்ந்திருப்பீராக! அவனைப் போற்றிப் புகழ்வீராக! தனது அடியார்களின் பாவங்களை நன்கு அறிந்திட அவன் போதுமானவன்.

(அல்குர்ஆன் 25:58)

இந்தத் தகுதி அல்லாஹ்வைத் தவிர, வேறு எவருக்கேனும் இருக்க முடியுமா? பச்சிளம் பாலகனுக்குப் புரியும் விதமாக வல்ல அல்லாஹ் சொல்லித் தந்த பின்னரும் இறந்து போனவர்களைத் தேடிப்பிடித்து, அவர்கள் மீது தவக்குல் வைக்க சிலர் துணிந்து விடுகிறார்கள் என்றால் இவர்களுக்கும், இஸ்லாத்திற்கும் ஏதாவது சம்பந்தமுண்டா? இய்யாக நஃபுது என்று அன்றாடம் பலமுறை எடுத்துக் கொண்ட உறுதிமொழிக்கு ஏதாவது அர்த்தமிருக்கின்றதா?

பைத்தியம் பிடித்து, சிலர் சமாதிகளில் சரணடைவார்கள். பைத்தியம் அங்கே தெளியும் என்பர். பைத்தியத்தைக் குணப்படுத்தும் வல்லமை அந்தச் சமாதிகளுக்கு உண்டென்று நம்புவர்.

இவர்கள் மனநோய்க்கு ஆளானதும், பைத்தியம் பிடித்து அலைவதும், ஷைத்தானின் வலையில் இவர்கள் விழுவதும் எதனால்? எவர்கள் தங்களின் எல்லாக் காரியங்களிலும் அல்லாஹ் மீது தவக்குல் வைக்கத் தவறினார்களோ அவர்களே பைத்தியத்துக்கு ஆளாகின்றனர்.

குர்ஆனை ஓதும் போது விரட்டப்பட்ட ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடிக் கொள்! நம்பிக்கை கொண்டோர் மீதும், தமது இறைவனையே சார்ந்திருப்போர் மீதும் அவனுக்கு அதிகாரம் இல்லை. தன்னைப் பாதுகாப்பாளனாக ஆக்கிக் கொண்டோர் மீதும், இறைவனுக்கு இணை கற்பிப்போர் மீதுமே அவனுக்கு அதிகாரம் உள்ளது.

(அல்குர்ஆன் 16:98,99,100)

வந்துவிட்ட மனநோய்க்காக அல்லாஹ் மீது மட்டும் தவக்குல் வைக்க வேண்டும் என்பது மட்டுமல்ல. இந்த மனநோய் வந்ததற்கு காரணமே அல்லாஹ் மீது மட்டும் தவக்குல் வைக்காமல் எவர் மீதும், எதன் மீதும் தவக்குல் வைத்தது தான் என்பதை இவ்வசனத்தில் அல்லாஹ் குறிப்பிடுகிறான்.

உன்னை மட்டுமே வணங்குவோம் என்று நாம் உறுதிமொழி எடுத்துள்ளதால் தவக்குல் எனும் இவ்வணக்கத்தை எவருக்கும் செய்ய மாட்டோம் என்று எவர் நம்புகிறாரோ, அதன் படி நடக்கிறாரோ, அவர் தான் இய்யாக நஃபுது என்ற உறுதிமொழியை அர்த்தமுள்ளதாக ஆக்கியவராவார்.

நேர்ச்சையும், அறுத்துப் பலியிடலும் வணக்கமே!

இய்யாக நஃபுது (உன்னை மட்டுமே வணங்குவோம்) என்ற உறுதிமொழியை எடுத்துக் கொண்ட முஸ்லிம்களில் சிலர், இறைவனல்லாத இறைவனின் அடியார்களுக்கு நேர்ச்சை செய்வதையும், அவர்களுக்காக அறுத்துப் பலியிடுவதையும் சர்வ சாதாரணமாகச் செய்து வருகின்றனர்.

இறைவனல்லாத எவரையும், எதனையும் வணங்கலாகாது என்று உறுதிமொழி எடுத்தவர்கள், இறைவனல்லாதவர்களுக்காக நேர்சச்சை செய்யவும், அவர்களுக்காகப் பிராணிகளை அறுத்துப் பலியிடுவதற்கு என்ன காரணம்? வணக்கத்தில் இவைகளும் அடங்கும் என்று அவர்கள் அறியாமலிருப்பதே காரணமாகும்.

எனவே உமது இறைவனைத் தொழுது அவனுக்காக அறுப்பீராக!

(அல்குர்ஆன் 108:2)

இறைவனுக்காக மட்டுமே தொழ வேண்டும். அவனுக்காக மட்டுமே அறுத்துப் பலியிட வேண்டும் என்று இந்த வசனத்தில் அல்லாஹ் கட்டளையிடுகிறான். தொழுகையை வணக்கம் என்று அனைவரும் அறிந்திருப்பதால் அல்லாஹ்வைத் தவிர வேறு எவருக்காகவும் தொழுவதில்லை.

ஆனால், அறுத்துப் பலியிடுவதை வணக்கம் என்று அறியாத காரணத்தினால் இறைவனல்லாதவர்களுக்காக அறுத்துப் பலியிடுகின்றனர். இத்தகையோருக்கு இந்த வசனத்தில் சரியான விளக்கம் அமைந்துள்ளது.

தொழுகை எப்படி வணக்கமோ அது போல் அறுத்துப் பலியிடுவதும் வணக்கமே! தொழுகைகளை எப்படி இறைவனல்லாத எவருக்கும் செய்யக் கூடாதோ, அது போல் அறுத்துப் பலியிடுவதையும் இறைவனல்லாத எவருக்கும் செய்யக் கூடாது என்று இங்கே தெளிவுபடுத்தப்படுகின்றது.

தாமாக இறந்தவை, இரத்தம், பன்றியின் மாமிசம், இறைவனல்லாதவர்களுக்காக அறுக்கப்பட்டவை ஆகியவற்றைத் தான் உங்கள் மீது அல்லாஹ் ஹராமாக்கியுள்ளான்.

(அல்குர்ஆன் 2:173)

இதே கருத்தை அல்குர்ஆன் 5:3 வசனத்திலும் அல்லாஹ் குறிப்பிடுகிறான்.

பன்றியின் மாமிசமும், இரத்தமும், செத்த பிராணிகளும் எப்படி ஹராமாக உள்ளனவோ, அது போல் ஹலாலான ஆடு, மாடு போன்றவற்றை இறைவனல்லாத மற்றவர்களின் பெயரால் அறுத்துப் பலியிடும் போது அவையும் ஹராமாக உண்ணத் தகாதவையாக மாறிவிடுகின்றன என்று அல்லாஹ் கூறுகிறான்.

இறைவனால் அனுமதிக்கப்பட்ட பிராணிகளேயானாலும் இறைவனல்லாதவர்களுக்காக அறுத்துப் பலியிடப்பட்டால் அவையும் ஹராமாகி விடுகின்றன என்றால் இதை அல்லாஹ் எந்த அளவுக்கு வெறுக்கின்றான் என்று புரிந்து கொள்ள முடிகின்றது.

இறைவனல்லாதவர்களுக்காக அறுத்துப் பலியிடப்பட்டவைகளும், பன்றியின் மாமிசமும், இறைவனின் பார்வையில் சமமானவையே. இதை விடவும் கடுமையான எச்சரிக்கை என்ன இருக்க முடியும்?

யார் அல்லாஹ் அல்லாத மற்றவர்களுக்காக அறுக்கின்றானோ, அவனை அல்லாஹ் லஃனத் செய்கிறான் (சபிக்கிறான்) என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.

அறிவிப்பவர்: அலீ (ரலி); நூல்: முஸ்லிம் – 3657, 3658, 3659

படைத்த இறைவனே சபிக்கிறான் என்றால், தன்னுடைய அருளை விட்டும் அவனை அப்புறப்படுத்துகிறான் என்றால் அல்லாஹ்வை அஞ்சக் கூடிய ஒரு அடியானுக்கு இதை விட துர்பாக்கியம் என்ன இருக்க முடியும்? இறைவனுடைய சாபத்துக்கு ஆளாகிவிட்ட ஒருவன் எப்படி மறுமைப் பேறுகளைப் பெற முடியும்? இறைவனின் சாபத்துக்கு உரியவனாக ஒருவன் ஆகின்றான் என்றால் அவன் நரகத்திற்கு தகுதி படைத்தவனாக ஆகிவிடுகிறான் என்பது பொருள்.

உயிரே போய்விடும் என்ற நிலை ஏற்பட்டாலும் அல்லாஹ்வைத் தவிர வேறு எவருக்காகவும் எதனையும் பலியிடக் கூடாது. அற்ப ஈ போன்ற மதிப்பற்ற உயிரினங்களைக் கூட, அல்லாஹ் அல்லாதவர்களுக்கு பலியிடக் கூடாது என்பதை இந்த ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது.

நான் புவானா என்ற இடத்தில் அல்லாஹ்வுக்காக அறுத்துப் பலியிடுவதாக நேர்ச்சை செய்து விட்டேன். அதை நான் செய்யலாமா என்று கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அந்த இடத்தில் மற்றவர்களால் வழிபாடு நடத்தப்படும் தெய்வங்கள் உள்ளனவா? என்று கேட்டார்கள். நான் இல்லை என்றேன்.

அது மற்றவர்கள் திருவிழாக்கள் நடத்தும் இடமா? என்று கேட்டார்கள். நான் இல்லை என்றேன். அப்படியானால் உமது நேர்ச்சையை நிறைவேற்றுவீராக என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸாபித் பின் ளஹ்ஹாக் (ரலி); நூல்: அபூதாவூத்  2881

அல்லாஹ்வுக்கு அறுத்துப் பலியிட நேர்ச்சை செய்தால் கூட மற்ற வழிபாடுகள் நடக்கும் இடத்தில் அதைச் செய்யக் கூடாது. சந்தேகத்தின் சாயல் கூடப் படியக் கூடாது என்றால் சமாதிகளில் போய் கோழி, ஆடு, மாடுகளை அறுத்துப் பலியிடுவோர் தங்களின் நிலை என்னவாகும் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

நேர்ச்சையும் வணக்கமாகும்

தங்களின் நோய் நீங்கி விட்டால், அல்லது கோரிக்கை நிறைவேறினால், அவ்லியாவே! உங்களுக்காக நான் அதைச் செய்வேன் இதைச் செய்வேன் என்று கூறுபவர்களும், அவ்வாறே செயல்படுத்துபவர்களும் நம்மவர்களில் உள்ளனர். நேர்ச்சை செய்வது ஒரு வணக்கம் என்பதைப் புரிந்து கொண்டு விட்டால் நேர்ச்சை எனும் வணக்கத்தை இறைவனல்லாத எவருக்கும் செய்யத் துணிய மாட்டார்கள்.

நீங்கள் எதையேனும் (நல் வழியில்) செலவிட்டாலோ, நேர்ச்சை செய்தாலோ அல்லாஹ் அதை அறிகிறான். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளரும் இல்லை.

(அல்குர்ஆன் 2:270)

பின்னர் அவர்கள் தம்மிடம் உள்ள அழுக்குகளை நீக்கட்டும்! தமது நேர்ச்சைகளை நிறைவேற்றட்டும்! பழமையான அந்த ஆலயத்தை தவாஃப் செய்யட்டும்.

(அல்குர்ஆன் 22:29)

அவர்கள் நேர்ச்சையை நிறைவேற்றுவார்கள். தீமை பரவிய நாளைப் பற்றி அஞ்சுவார்கள்.

(அல்குர்ஆன் 76:7)

இந்த வசனங்கள் மூலம் நேர்ச்சைகள் இறைவனுக்காக மட்டுமே செய்யப்பட வேண்டும் என்றும், இறைவனுக்காகச் செய்த நேர்ச்சையை நிறைவேற்ற வேண்டும் என்றும் அல்லாஹ் கற்றுத் தருகிறான்.

இறைவா! நீ இந்தக் காரியத்தை நிறைவேற்றினால் உனக்காகத் தொழுகிறேன்; நோன்பு வைக்கிறேன்; உனக்காக ஆட்டை அறுத்துப் பலியிடுகிறேன்; உனக்காக அவற்றை ஏழைகளுக்கு வழங்குகிறேன் என்பது போல் தான் நேர்ச்சை செய்ய வேண்டுமே தவிர இறைவனல்லாத எவருக்கும் செய்யலாகாது. அறியாத காலத்தில் அவ்வாறு நேர்ச்சை செய்திருந்தால் அதை நிறைவேற்றவும் கூடாது.

யார் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுவதாக நேர்ச்சை செய்கிறாரோ அதை அவர் நிறைவு செய்யட்டும்! யார் இறைவனுக்கு மாறு செய்யும் விஷயங்களில் நேர்ச்சை செய்கிறாரோ அதை நிறைவேற்றலாகாது என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி); நூல்: புகாரி  6696, 6700

நேர்ச்சையும், அறுத்துப் பலியிடலும் ஒரு வணக்கம் என்பதை எவர் அறியவில்லையோ, அதன் படி நடக்கவில்லையோ அவர்கள் உன்னையே வணங்குகிறோம் என்ற உறுதி மொழியை அர்த்தமற்றதாக்குகிறார்கள். இறைவனல்லாதவர்களை வணங்கியவர்களாக ஆகி நிரந்தர நரகத்திற்கு தகுதி பெறுகிறார்கள்.

அதிகாரம் படைத்தவன் என நம்புவதும் வணக்கமே

ஒன்றைக் கூடும் என்று சட்டமியற்றவோ, கூடாது என்று தடை விதிக்கவோ அதிகாரம் படைத்தவன் அல்லாஹ் மட்டுமே. அப்படி நம்புவதும் இறை வணக்கங்களில் ஒன்றாகும். இறைவனல்லாத வேறு யாரும் இந்த அதிகாரத்தைப் பெற்றிருக்கிறார்கள் என்று எவர் நம்பினாலும் உன்னையே வணங்குகிறோம் என்ற உறுதிமொழியை மீறியவராவார். இறைவனல்லாதவர்களையும் வணங்கியவராக அவர் கருதப்படுவார்.

அவர்கள் அல்லாஹ்வையன்றி தமது மத போதகர்களையும், பாதிரிகளையும், மர்யமின் மகன் மஸீஹையும் கடவுள்களாக்கினர். ஒரே கடவுளை வணங்குமாறு தான் அவர்கள் கட்டளையிடப்பட்டனர். அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவர்கள் இணை கற்பிப்பவற்றை விட்டும் அவன் தூயவன்.

(அல்குர்அன் 9:31)

பாதிரிமார்களையும், மதகுருக்களையும் யூத கிறித்தவர்கள் கடவுளர்களாக ஆக்கி விட்டதாக அல்லாஹ் இந்த வசனத்தில் குறிப்பிடுகிறான். உண்மையில் யூத கிறித்தவர்கள் தங்கள் பாதிரிமார்களைக் கடவுளர்கள் என்று நம்பியதுமில்லை! அவர்கள் இறைத்தன்மை பெற்றவர்கள் என்று கொள்ளவுமில்லை!

அவர்கள் செய்த தவறு என்னவென்றால், தங்கள் மதகுருமார்களும் சட்டம் வகுக்கும் அதிகாரத்தைப் பெற்றவர்கள் என்று நம்பியது தான். இவ்வாறு நம்பியதாலேயே அவர்கள், தங்கள் பாதிரிமார்களைக் கடவுளர்களாகக் கருதினார்கள் என்று அல்லாஹ் குறிப்பிடுகிறான்.

எவ்வளவு பெரிய மேதைகள் என்றாலும், மகான்கள் என்றாலும், வேத விற்பன்னர்கள் என்றாலும், இமாம்கள் என்றாலும் அனைவரும் இறைவனின் அடிமைகளே! அல்லாஹ் இடும் கட்டளைக்குக் கட்டுப்படவும் அதைப் பிறருக்கு எடுத்துச் சொல்லவும் அவர்கள் கடமைப்பட்டிருக்கிறார்கள்.

சுயமாக இறைவனின் வேத ஆதாரமின்றி இறைத்தூதரின் வழிகாட்டலின்றி எந்த ஒன்றையும் மார்க்கத்தில் கூட்டவோ, குறைக்கவோ எந்த அதிகாரமும் இல்லை என்று நம்புவது தான் இய்யாக நஃபுது என்று கூறுவதன் சரியான அர்த்தமாகும். இதற்கு மாறாக நடப்பவர்கள், மறுமையில் சந்திக்கும் விளைவை வல்ல அல்லாஹ் தெளிவாக நமக்கு அறிவிக்கிறான்.

அவர்களின் முகங்கள் நரகில் புரட்டப்படும் நாளில் நாங்கள் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டிருக்கக் கூடாதா? இத்தூதருக்குக் கட்டுப்பட்டிருக்கக் கூடாதா? எனக் கூறுவார்கள். எங்கள் இறைவா! எங்கள் தலைவர்களுக்கும், எங்கள் பெரியார்களுக்கும் நாங்கள் கட்டுப்பட்டோம். அவர்கள் எங்களை வழி கெடுத்து விட்டனர் எனவும் கூறுவார்கள். எங்கள் இறைவா! அவர்களுக்கு இருமடங்கு வேதனையை அளிப்பாயாக! அவர்களை மிகப் பெரிய அளவுக்குச் சபிப்பாயாக! (எனவும் கூறுவார்கள்.)

(அல்குர்ஆன் 33:66,67,68)

பெரியார்கள், இமாம்கள், நாதாக்கள், தங்கள்மார்கள் கூறுவதைக் கண்ணை மூடிக் கொண்டு அதற்குரிய சான்றுகள் உள்ளனவா? என்று ஆராயாமல் நம்பியவர்கள் மறுமையில் படும்பாட்டை இங்கே அல்லாஹ் படம்பிடித்துக் காட்டுகிறான்.

இவ்வளவு தெளிவான வழிகாட்டுதலுக்குப் பிறகும் மத்ஹபுகள் என்றும், தரீக்காக்கள் என்றும் சமுதாயத்தைக் கூறுபோட்டுப் பெரியார்களின் காலடிகளில் வீழ்ந்து கிடக்க முஸ்லிம் சமுதாயம் துணிந்து விட்டது என்றால் இதற்கு காரணம் வணக்கம் என்றால் என்னவென்பது முழுமையாக விளக்கப்படாததேயாகும்!

வணக்க வழிபாடுகளாகட்டும்! அரசியலாகட்டும்! இல்லற நெறிகளாகட்டும், இன்ன பிற துறைகளாகட்டும்! அனைத்துமே அல்லாஹ் காட்டித் தந்த வழியில் தான் நடக்க வேண்டும். இதை நிர்ணயிக்கின்ற உரிமையை அல்லாஹ் எவரது கையிலும் ஒப்படைக்கவில்லை என்பதை உணர வேண்டும்.

மதகுருமார்கள் கூறுவதைக் கண்ணை மூடிக் கொண்டு ஏற்பது போலவே மூதாதையாரானலும், பெற்றெடுத்த தாய் தந்தையரானாலும் அவர்கள் கூறுவது இறைவனது வழிகாட்டலுக்கு மாற்றமாக இருந்தால் அதை ஏற்பதும் அவர்களை வணங்கியதாகவே பொருள்.

தங்கள் முன்னோர்கள் கூறினார்கள் என்பதற்காக, அவர்கள் செய்தார்கள் என்பதற்காக, அவர்கள் கூறுவதையெல்லாம் கண்ணை மூடிக் கொண்டு செயல்படுத்துபவர்களை 9:23, 2:170, 5:104, 7:28, 10:78, 21:53, 26:74, 31:21, 43:22, 43:23, 58:22 ஆகிய வசனங்களில் அல்லாஹ் கடுமையாகக் கண்டனம் செய்கிறான்.

பெற்றோர்கள் கூறுகிறார்கள் என்பதற்காக வேத ஆதாரமின்றி அவர்களுக்குக் கட்டுப்படுவதை 29:8, 31:15 ஆகிய வசனங்களில் அல்லாஹ் கண்டிக்கிறான்.

அது போல் பெரும்பான்மை மக்கள் ஒன்றைச் செய்கிறார்கள் என்பதற்காக, அவர்களைக் கண்மூடிப் பின்பற்றுவதும், சட்டமியற்றும் அதிகாரத்தை அவர்கள் கையில் ஒப்படைத்து விடுவதும் அவர்களை வணங்கியதாகவே கொள்ளப்படும். 6:116 வசனத்தில் பெரும்பான்மைக்கு வழிபடுவதை அல்லாஹ் மறுத்துரைக்கிறான். ஆக, எந்த விஷயத்திலும் சட்டமியற்றும் அதிகாரம் எவரிடமாவது இருப்பதாக நம்புவதும் அதைச் செயல்படுத்துவதும் உன்னையே வணங்குகிறோம் என்ற உறுதிமொழிக்கு மாற்றமாகும்.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed