இன்று சண் டீவி யில் மேலுள்ளவாறு ஒரு செய்தி வந்துள்ளது. வழக்கம்போல இது 1400 ஆண்டுகளுக்கு முன்பே குர்ஆனில் சொல்லப்பட்டுவிட்டது என்று கிளம்பிவிட்டனர் நம்ம ஆட்கள். இதில் பிரச்சனை என்னவென்றால் இதுபோன்ற ஆர்வமிகுதி ஆட்களை மட்டும் பிறர் கேலி செய்தால் பரவாயில்லை. ஆனால் கேலி செய்யப்படுவது ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் இஸ்லாமிய மார்க்கமும்… ஒவ்வொன்றாக பார்ப்போம்

*யூனுஸ் நபி அவர்கள் மீன் வயிற்றில் உயிருடன் இருந்ததாக 1400 வருடங்களுக்கு முன்பே உலகப் பொதுமறை திருக்குர்ஆன் கூறிவிட்டது.* என்று இந்த செய்தியுடன் இணைத்து சொல்கிறது ஒரு பேஸ்புக் பதிவு… சற்றேனும் சிந்தித்தீர்களா? நபி யூனுஸ் (அலை) அவர்களின் வரலாறு குர்ஆனில் மட்டுமா இருக்கிறது? கிருத்தவ பைபிளிலும் யூத பைபிளிலும் இதே வரலாறு சொல்லப்பட்டுள்ளதே. அப்படின்னா 2000 வருடங்களுக்கு முன்பே கிருத்தவ பைபிள் சொல்லி இருப்பதாகவும் 3000 வருடங்களுக்கு முன்பே யூத பைபிள் சொல்லி இருப்பதாகவும் அவர்கள் சொன்னால் நம்ம பெருமை என்னாவது?

*அடுத்ததாக 30 வினாடிகள் மட்டுமே மைக்கேல் பெக்கார்ட் மீனின் வயிற்றில் இருந்துள்ளார். இது அற்புதமோ அதிசயமோ அல்ல.. அதுவும் கடலுக்குள் குதித்து மூச்சை அடக்கிக்கொண்டு கல் இறால் (அ) சிங்கி இறால் என்று அழைக்கப்படும் lobsterகளை பிடித்துவரும் அவருக்கு முப்பது வினாடிகள் மூச்சை அடக்கிக்கொண்டு திமிங்கலத்தின் வயிற்றில் இருப்பது அதிசயமே அல்ல. மேலும் இதுகுறித்து விரிவாக பின்வரும் லிங்கில் விவரித்துள்ளனர்*.

https://www.capecodtimes.com/story/news/2021/06/11/humpback-whale-catches-michael-packard-lobster-driver-mouth-proviencetown-cape-cod/7653838002/

இவரை விழுங்கிய ஹம்பேக் வகை திமிங்கலங்கள் மனிதனை தாக்குபவை அல்ல. மனிதனை அவை உணவாகாவும் எடுத்துக்கொள்ளாது. இவற்றின் மேலே ஏறிக்குதித்தால் கூட இவை மனிதனுக்கு ஊறு விளைவிப்பவை அல்ல. தவறுதலாக விழுங்கிவிட்டதால் உடனே துப்பிவிட்டது. இது அதிசயமல்ல சாதாரண நிகழ்வே. ஆனால் யூனூஸ் நபி மீன் வயிற்றில் இருந்தது அதிசய நிகழ்வு. அவர் முப்பது வினாடிகள் மட்டுமே இருக்கவில்லை.

37:141. *அ(க்கப்பலிலுள்ள)வர்கள் சீட்டுப்போட்டனர், (அதில் அவர் பெயர்வரவே கடலில் எறியப்பட வேண்டிய) தோல்வியுற்றோரில் அவர் ஆகிவிட்டார்.*

37:142. *எனவே, (இவரை அவர்கள் கடலில் எறியவே) அவர் நிந்தனைக்கு ஆளானவராகயிருக்க, (ஒரு) மீன் அவரை விழுங்கிற்று.*

37:143. *நிச்சயமாக அவர் (மீன் வயிற்றினுள் நம்மைத்) துதி செய்து கொண்டிருப்பவர்களில் இல்லாமலிருந்திருந்தால்,*

37:144. (*மறுமைக்காக படைப்பினங்களாகிய) அவர்கள் எழுப்பப்படும் நாள் (வரும்) வரையில், அவர் அதன் வயிற்றில் தங்கியிருந்திருப்பார்.*

37:145. (*அவர் துதி செய்ததன் காரணமாக) அவர் நோயுற்றவராக இருந்தநிலையில் வெட்டவெளியில், (மீன் வயிற்றிலிருந்து) அவரை நாம் எறிந்தோம்.*

37:146. *மேலும், அவரின் மீது (நிழல்தருவதற்காக) ஒரு சுரைக்கொடியை நாம் முளைப்பித்தோம்.*

*பிற வேதங்களில் யூனூஸ் நபி 3 நாட்கள் மீன் வயிற்றில் இருந்தார் என்று சொல்லப்பட்டாலும் குர்ஆனில் அவர் எத்தனை நாட்கள் மீன் வயிற்றில் இருந்தார் என்று சொல்லப்படவில்லை. மாறாக அவர் நீண்ட காலம் இருந்துள்ளார்* என்பதை குர்ஆனில் இருந்து அறிய இயலும். மனிதனை விழுங்கும் அளவுக்கு பெரிய மீன் ஆழமுள்ள கடல் பகுதியிலேயே இருக்கும். அது அவரைக் கரையில் கொண்டுவந்து உமிழ்ந்துள்ளது. மீன் வயிற்றில் இருந்து நோய்வாய்ப்பட்ட நிலையிலேயே அவர் வெளியேற்றப்பட்டுள்ளார். நிச்சயமாக இது குறுகிய நேரத்தில் நடந்த நிகழ்வல்ல. இது ஒரு அற்புத நிகழ்வே…

*மீன் வயிற்றில் மனிதன் சுவாசிக்கக் காற்று இருக்காது. ஆக்சிஜன் இருப்பதாக சில தப்சீர்களில் கட்டுக்கதைகளை எழுதி வைத்துள்ளனர். மனிதனால் காற்றிலிருந்து 15% ஆக்சிஜனை மட்டுமே உள்ளிழுக்க இயலும். ஆனால் திமிங்கலத்தால் 90% ஆக்சிஜனை உள்ளிழுக்க முடியும் என்று தமிழ் விக்கிபீடியாவில் வாசித்தவற்றை தவறாக விளங்கி எழுதப்பட்டவை அந்த தப்சீர்கள். திமிங்கலத்தால் 90% ஆக்சிஜனை காற்றிலிருந்து பிரிக்க இயலும் என்பது உண்மையே. ஆனால் அந்த ஆக்சிஜன் மீனின் வயிற்றுப்பகுதியில் மனிதன் சுவாசிக்க இயலும் அளவுக்கு காற்றாக இருக்காது*. மீனின் தசைகளில் மயோக்ளோபின் எனும் செல்களில் அந்த ஆக்சிஜன் செமிக்கப்பட்டிருக்கும். மீனின் வயிற்றில் ஆக்சிஜன் மட்டுமல்ல அல்ல எவ்வித காற்றும் இருக்காது.

மேலும் உணவை உட்கொண்ட உடனேயே திமிங்கலத்தின் வயிறு செரிமான வேலைகளை துவங்கிவிடும். திமிங்கலம் உணவை மென்று விழுங்காது. அப்படியே முழுமையாக விழுங்கி விடும். எனவே வயிற்றின் முதல் பகுதியில் இருக்கும் சக்தி வாய்ந்த தசைகள் மெல்லும் வேலையை செய்யும். மனிதனை திமிங்கலம் விழுங்கினால் சற்று நேரத்தில் வயிற்றின் முதல் பகுதியில் அவனது எலும்புகள் உடைக்கப்படும். அடுத்த இரண்டாம் கட்டமாக செரிமானத்திற்கான அமிலங்கள் சுரக்கப்பட்டு அந்த அமிலத்தில் மனிதன் அழிந்துவிடுவான்.

ஆக மீன்களின் வயிற்றில் சில நாட்கள் என்ன சில மணி நேரங்கள் கூட மனிதனால் உயிரோடு இருக்க இயலாது. உடனே நீங்கள் வேகமாக கட கடவென மீன் வயிற்றில் உயிரோடு இருந்த மனிதர்களின் வரலாற்றை இன்டர்நெட்டில் தேடுவீர்கள். நீங்கள் தமிழில் தேடினால் நிச்சயமாக இந்த கட்டுரையை காண்பீர்கள்.

https://www.onlinetntj.com/articles/unmaipaduthapadum-islam/meen-vayitril-moondru-naatkal-uyirudan-irunthavar

இதை வாசித்தாலே பொது அறிவு கொண்டவர்களுக்கு சிரிப்பு வந்துவிடும். வாய் வழியாக திமிங்கலத்தின் வயிற்றுக்குள் சென்ற ஒருவர் 72 மணி நேரத்திற்கு பிறகு மலத்தோடு உயிருடன் வெளியே வந்தாராம். என்ன ஒரு கட்டுக்கதை இது. செரிமானம் ஆகாமல் 72 மணி நேரம் மீன் வயிற்றில் அவர் இருந்தாரா?

அது பற்றிய உண்மைத் தகவல்களை இதில் காணலாம். https://indianexpress.com/article/trending/trending-globally/man-swallowed-by-whale-survives-to-tell-the-tale/

இந்த கதை முதன் முதலாக worldnewsdailyreport.com எனும் இணையத்தளத்தில் உருவாகியுள்ளது. இந்த தளத்தின் ஸ்லோகமே “இங்கே உண்மை ஒரு பொருட்டே அல்ல” என்பதுதான். அதாவது இந்த தளத்தில் பொய்த் தகவல்கள் மட்டுமே இருக்கும் என்பதே தளத்தில் ஸ்லோகம் ஆகும். இந்த தளத்தில் வரும் செய்திகளுக்கு ஓர் எடுத்துக்காட்டு:-

https://worldnewsdailyreport.com/thailand-snakegirl-attracts-crowds-of-pilgrims-and-tourists/ மனித உடலும் பாம்பு வாலும் கொண்ட சிறுமியாம். இந்த தளத்தில் வந்ததை வீர கேசரி வெளியிட்டால் என்ன சேமியா கேசரி வெளியிட்டால் என்ன? உண்மையா என்று பார்க்க வேண்டமா?

இதுமட்டுமல்ல மீனின் வயிற்றில் மனிதன் உயிர்வாழ்ந்ததாக சொல்லப்படும் இணையதள கதைகள் அனைத்தும் ஆதாரமற்றவை.

குர்ஆனில் பல அற்புத நிகழ்வுகள் கூறப்பட்டுள்ளன, அவற்றை பற்றிய நாத்திகர்களின் கேள்விக்கு பதில் சொல்ல இயலாத நம்மில் இருக்கும் ஆர்வமிகு சகோதரர்கள் அறிவியலை கையில் எடுக்கின்றனர். லங்கா ஸ்ரீ , வீர கேசரி என எந்த இணயதளத்தில் என்ன செய்திவந்தாலும் “இதுதான் அறிவியல் காரணம்!” “பாருங்க 1400 வருடங்களுக்கு முன்னே..” என்று எழுத ஆரம்பித்து விடுகின்றனர்…

குர்ஆன் கூறும் இத்தகைய அற்புத நிகழ்வுகளை சாதாரண நிகழ்வுகள் என்றும் இவற்றை நாங்கள் அறிவியலால் விளக்குகிறோம் என்றும் சொல்வதன் மூலம் இந்த சகோதரர்கள் சொல்ல வருவது என்ன? “இஸ்லாம் கூறும் அற்புதங்கள் எதுவுமே அற்புதங்கள் அல்ல. அனைத்தும் சாதாரண விஷயங்களே” என்பதுதானா? இது இறை நிறைகரிப்பில்லையா என்று ஆர்வமிகு சகோதரர்கள் சிந்திக்க வேண்டும்.

ஒரு வாதத்திற்கு ஆக்சிஜன் சிலிண்டர், சாப்பாடு மற்றும் தண்ணீருடன் தான் யூனூஸ் (அலை) அவர்கள் மீன் வயிற்றுக்குள் சென்றார்கள் என்று வைப்போம்…

37:146. மேலும், அவரின் மீது (நிழல்தருவதற்காக) ஒரு சுரைக்கொடியை நாம் முளைப்பித்தோம்.

இந்த இறை வசனத்தில் அவருக்கு நிழல் தருவதற்காக உடனடியாக ஒரு செடியை இறைவன் முளைக்க செய்தான் என்கிறானே. இது எப்படி அறிவியலில் சாத்தியம்.. ஆங்கிலப் படங்களை பார்த்துவிட்டு இதற்கும் இவர்கள் கதை எழுதினால் ஆச்சரியம் எதுவுமில்லை.

அற்புதங்களை மறுத்து அவற்றுக்கு அறிவியல் சாயும் பூசும் செயல்களில் இருந்து விலகி, ஆர்வமிகு சகோதரர்கள் கலிமா சொல்லி ஈமானை உறுதிப்படுத்துமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்…

ஆக்கம்: முகம்மது பீர்

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *