முழுவதுமாக விட்டொழிக்க வேண்டிய தீய பண்புகள்

M. முஹம்மது சலீம் M.I.Sc. மங்கலம்

அல்லாஹ்வின் பார்வையில் நல்லவர்களாக நாம் இருக்க வேண்டும். அப்போது தான் அவனது அன்பையும் அருளையும் பெற இயலும். அதற்கான அனைத்து வழிமுறைகளும் மார்க்கத்தில் சொல்லப்பட்டுள்ளன. அதில் ஒன்று, அவனிடம் நன்மதிப்பைப் பெற்றுத் தரும் நல்ல பண்புகளை வளர்த்துக் கொள்வதாகும். மற்றொன்று, அவன் தடுத்துள்ள தீய பண்புகளை விட்டும் விலகியிருப்பதாகும். இந்த வகையில் படைத்தவனிடம் கெட்ட பெயரைப் ஏற்படுத்தும் மோசமான குணங்களைக் குறித்து இப்போது காண்போம்.

படைத்தவனை மறுத்தல்

இந்தப் பிரபஞ்சம் மிகவும் பிரமாண்டமானது; நேர்த்தியான வேலைப்பாடுகள் கொண்டது; எண்ணற்ற படைப்பினங்களால் நிறைந்தது. இதன் உரிமையாளன், அல்லாஹ் ஒருவனே. அவனை அறிந்து கொள்வதற்குரிய அத்தாட்சிகள் அனைத்து இடங்களிலும் பரவிக் கிடக்கின்றன. அவற்றை அலட்சியம் செய்துவிட்டு, அந்த அதிபதியை மறுத்து வாழ்வது மிகப்பெரும் பாவமாகும்.

(ஏக இறைவனை) மறுப்போர் தாம், உயிரினங்களிலேயே அல்லாஹ்விடம் மிகவும் கெட்டவர்கள். அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள். 

(திருக்குர் ஆன் 8:55)

இறைவனுக்கு இணை கற்பித்தல்

ஒட்டுமொத்த அகிலத்தையும் ஆளும் அல்லாஹ், அனைத்து ஆற்றலும் அதிகாரமும் கொண்டவன். அவனுக்கு நிகராக எவரும் இல்லை; எதுவும் இல்லை. அவனது அனுமதி இல்லாமல் அணுவும் அசையாது. ஆகவே, அவனுக்கு மட்டுமே முழுமையாக அடிபணிந்து வணங்க வேண்டும். அவனிடமே ஆதரவு தேட வேண்டும். இதற்கு மாற்றமாக அற்பமான படைப்பினங்கள் மீது நம்பிக்கையை அடகு வைப்பதும் அவர்களிடம் உதவி தேடுவதும் மோசமான பண்பாகும்.

(ஏக இறைவனை) மறுப்போராகிய வேதமுடையோரும் இணை கற்பிப்போரும் நரக நெருப்பில் இருப்பார்கள். அதில் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். அவர்களே படைப்புகளில் மிகவும் கெட்டவர்கள்.

(திருக்குர் ஆன் 98:6)

கப்ரைக் கட்டி வழிபடுதல்

மனிதர்கள் உட்பட ஒட்டுமொத்த உலகமே இறைவன் முன்னால் ஒரு கொசுவின் இறக்கையை விடக் கீழானாது, அற்பமானது. இதை மறந்ததின் விளைவாக, படைத்தவனுக்கு நிகராக மனிதர்களைக் கருதும் படுமோசமான குணம் பரவிக் கிடக்கிறது.

நல்ல முறையில் வாழ்ந்து மரணித்துப் போன மக்களை நல்லடியார்கள் என்று சொல்லிக் கொண்டு வரம்பு மீறுவது கூடாது. வல்ல ரஹ்மானுக்கு மட்டுமே உரித்தான பண்புகளை, மண்ணோடு மக்கிப்போன மக்களுக்கும் இருப்பதாக நினைப்பது கடும் குற்றம் ஆகும்.

உம்மு ஹபீபா அவர்களும் உம்மு சலமா அவர்களும் (அபிசீனிய ஹிஜ்ரத்தின்போது) அபிசீனியாவில் தாங்கள் பார்த்த உருவப்படங்கள் கொண்ட ஒரு கிறிஸ்தவ ஆலயத்தைக் குறித்து (என்னிடம்) பேசினார்கள். மேலும் அவ்விருவரும், நபி (ஸல்) அவர்களிடம் அதைப் பற்றிக் கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “(அவர்கள் எத்தகையவர்கள் என்றால்) அவர்களிடையே நல்ல மனிதர் ஒருவர் வாழ்ந்து இறந்துவிடும் போது அவரது சமாதியின் மீது வணக்கத்தலம் ஒன்றைக் கட்டி அதில் (அவருடைய) அந்த உருவங்களை வரைவார்கள். அவர்கள்தாம் மறுமைநாளில் அல்லாஹ்விடம் மக்களிலேயே மிக மோசமானவர்கள்’’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),

நூல்: புஹாரி (427), முஸ்லிம் (918)

மனோ இச்சைக்குப் பணிதல்

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் வஹீயின் அடிப்படையில் நமக்கு மார்க்கத்தைக் கற்றுத் தந்திருக்கிறார்கள். நமது வாழ்வின் வெற்றிக்கான வழிமுறைகளை விளக்கி இருக்கிறார்கள். அண்ணலாரின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி நாம் அழகிய முறையில் வாழ வேண்டும். இதற்கு மாறாக, எதையும் செய்யலாம், எப்படியும் இருக்கலாம் என்று மனம் போன போக்கில் வீழ்ந்துவிடக் கூடாது.

தனது மனோ இச்சையைத் தனது கடவுளாகக் கற்பனை செய்தவனைப் பார்த்தீரா? அவனுக்கு நீர் பொறுப்பாளர் ஆவீரா? அவர்களில் பெரும்பாலோர் செவியுறுகிறார்கள் என்றோ, விளங்குகிறார்கள் என்றோ நீர் நினைக்கிறீரா? அவர்கள் கால்நடைகள் போன்றே தவிர வேறில்லை. இல்லை! (அதை விடவும்) வழி கெட்டவர்கள்.

(திருக்குர் ஆன் 25:43-44)

திருமறையைப் புறக்கணித்தல்

இறுதி வேதமாகத் திருக்குர்ஆன் அருளப்பட்டுள்ளது. அது சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்துக் காட்டும். எல்லா விதமான பிரச்சனைகளுக்கும் தீர்வளிக்கும் அற்புதமான வேதம். அதன் போதனைகளைக் கண்டுகொள்ளாமல் அழிச்சாட்டியம் செய்வது மாபெரும் தவறாகும்.

(ஏக இறைவனை) மறுப்போராகிய வேதமுடையோரும் இணை கற்பிப்போரும் நரக நெருப்பில் இருப்பார்கள். அதில் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். அவர்களே படைப்புகளில் மிகவும் கெட்டவர்கள்.

(திருக்குர் ஆன் 98:6)

எனக்குப் பின் என் சமுதாயத்தில் ஒரு கூட்டத்தார் தோன்றுவார்கள். அவர்கள் குர்ஆனை ஓதுவார்கள். ஆனால், அது அவர்களுடைய கழுத்துகளைத் தாண்டிச் செல்லாது. வேட்டைப் பிராணியைவிட்டு (அதன் உடலைத் துளைக்கின்ற) அம்பு (உடலின் மறு பக்கம்) வெளிப்பட்டுச் சென்று விடுவதைப் போன்று, மார்க்கத்திலிருந்து அவர்கள் (சுவடே தெரியாமல்) வெளியேறிச் சென்றுவிடுவார்கள். பிறகு அதன் பக்கம் திரும்பமாட்டார்கள். அவர்கள்தாம் மனிதர்கள் மற்றும் உயிரினங்களிலேயே மோசமானவர்கள் ஆவர்’’ என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூதர் (ரலி)

நூல்: முஸ்லிம் (1936)

பகுத்தறிவை இழத்தல்

மனித இனத்தின் மகத்துவமே பகுத்தறிவு தான். இந்த ஆற்றலை நாம் வீணடித்து விடக் கூடாது. இதனை சீரிய முறையில் பயன்படுத்த வேண்டும். இதைப் புரிந்து கொள்ளாமல் மூடத்தனமான சிந்தனைகளிலும் செயல்களிலும் பலர் மூழ்கிக் கிடக்கிறார்கள். இத்தன்மை முஃமின்களிடம் இருக்கவே கூடாது.

ஜின்களிலும், மனிதர்களிலும் நரகத்திற்காகவே பலரைப் படைத்துள்ளோம். அவர்களுக்கு உள்ளங்கள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் புரிந்து கொள்வதில்லை. அவர்களுக்குக் கண்கள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் பார்ப்பதில்லை. அவர்களுக்குக் காதுகள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் கேட்பதில்லை. அவர்கள் கால்நடைகளைப் போன்றோர். இல்லை! அதை விடவும் வழி கெட்டவர்கள். அவர்களே அலட்சியம் செய்தவர்கள். 

(திருக்குர்ஆன் 7:179)

சுயநலத்துக்காக வேடம்போடுதல்

தமது சுயநலத்திற்காக ஆளுக்கு ஆள், இடத்திற்கு இடம் வேடம் போடும் கயவர்கள் இருக்கிறார்கள். இவ்வாறு, தங்களது ஆதாயத்திற்காக ஒருவரிடம் முகத்திற்கு நேராக இனிமையாகப் பேசுவதும், திரைமறைவில் அதே நபரைப் பற்றி இழிவாகப் பேசுவதும் நயவஞ்சகத்தின் அடையாளம் ஆகும். இதுபோன்ற மட்டமான பண்பு முஃமின்களிடம் இருக்கவே கூடாது.

‘‘மனிதர்களிலேயே மிகவும் மோசமானவன் இரட்டை முகத்தான் ஆவான். அவன் இவர்களிடம்  செல்லும்போது  ஒரு முகத்துடனும், அவர்களிடம்  செல்லும்போது  இன்னொரு முகத்துடனும் செல்கிறான்’’ என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புஹாரி (7179)

மக்களிடம் சச்சரவு செய்தல்

மனிதர்கள் மத்தியில் ஆயிரம் ஆயிரம் வித்தியாசங்கள் ஒளிந்து இருக்கின்றன. நம்மைச் சுற்றியிருக்கும் மக்கள் நமக்கு பிடித்த மாதிரியே இருக்க வேண்டும் என்று நினைக்கவும் கூடாது. அதற்காக அவர்களை நிர்பந்திக்கவும் கூடாது. இதைப் புரிந்து கொள்ளாத நபர்கள், எதற்கெடுத்தாலும் மற்றவர்களிடம் வர்த்தையால் வாதம் செய்கிறார்கள். சின்னச் சின்ன விஷயங்களிலும் சச்சரவு செய்கிறார்கள். இது குறித்த எச்சரிக்கையைப் பாருங்கள்.

அல்லாஹ்விடம் மனிதர்களிலேயே மிகவும் வெறுப்புக்குரியவன், (எதற்கெடுத்தாலும்) கடுமையாகச் சச்சரவு செய்பவனே ஆவான்  என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புஹாரி (7188), (2457)

அருவருப்பாகப் பேசுதல்:

நம்முடைய பேச்சுகள் எப்போதும் மரியாதைக்குரிய வகையில் இருக்க வேண்டும். சிலர், அருவருப்பான வார்த்தைகளைப் பேசுவதையே வாடிக்கையாக வைத்துள்ளார்கள். எந்தவொரு கூச்சமும் இல்லாமல் அசிங்கமான ஆபாசமான சொற்களைப் பயன்படுத்துகிறார்கள். மற்றவர்கள் முகம் சுழிக்கும் வகையில் பேசும் ஆட்கள் இனியாவது தங்களைத் திருத்திக் கொள்ள வேண்டும்.

ஒரு மனிதர் (எங்கள் வீட்டுக்குள் வர) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அனுமதி கேட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “அவரை உள்ளே வரச் சொல்லுங்கள். அந்தக் கூட்டத்தாரிலேயே (இவர்) மோசமானவர்’’ என்று (அவரைப் பற்றிச்) சொன்னார்கள். (வீட்டுக்கு) உள்ளே அவர் வந்தபோது, (எல்லாரிடமும் பேசுவது போல்) அவரிட(மு)ம் கனிவாகவே பேசினார்கள். (அவர் பேசிவிட்டு எழுந்து சென்றதும்) நான், “அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் (அவரைக் கண்டதும்) ஒன்று சொன்னீர்கள்; பிறகு அவரிடமே கனிவாகப் பேசினீர்களே?’’ என்று கேட்டேன். 

(அப்போது) நபி (ஸல்) அவர்கள், “ஆயிஷா! மக்கள் எவரது அவருவருப்பான பேச்சுகளிலிருந்து (தங்களைத்) தற்காத்துக் கொள்ள அவரை விட்டு ஒதுங்குகிறார்களோ அவரே மக்களில் தீயவர் ஆவார். (அருவருப்பான பேச்சுகள் பேசும் அவர் குறித்து மற்றவர்களை எச்சரிக்கை செய்யவே அவரைப் பற்றி அவ்வாறு சென்னேன்)’’ என்றார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புஹாரி (6054)

அந்தரங்கத்தைச் சொல்லுதல்

கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் ஆடை போன்றவர்கள் என்று திருமறை குறிப்பிடுகிறது. ஆடையானது அணிந்திருப்பவரின் மானத்தை, குறையை மறைப்பது போன்று கணவன் மனைவி இருவரும் தங்களுக்குள் நடந்து கொள்ள வேண்டும்; இரகசியங்களைப் பேண வேண்டும். வாழ்க்கைத் துணையின் அந்தரங்கமான செய்திகளை எக்காரணம் கொண்டும் மற்றவர்களிடம் வெளிப்படுத்தி விடக் கூடாது. ஏனெனில், இப்பண்பை மார்க்கம் கடுமையாக எச்சரிக்கிறது.

‘‘எவன் (தன்னுடைய மனைவியிடம்) சென்று, அவளும் அவனிடம் வந்து (உறவு கொண்டு) பின்னர் அவளுடைய (அந்தரங்க) ரகசியத்தை வெளிப்படுத்துகிறானோ, அவன்தான் மறுமை நாளில் அல்லாஹ்விடம் மக்களில் மோசமானவனாக இருப்பான்’’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி)

நூல்: முஸ்லிம் (2517)

இரக்கம் இல்லாதவர்கள்

அனைத்து உயிர்களிடமும் இரக்கத்தோடு நடந்து கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் போதிக்கிறது. அதிலும் குறிப்பாக, மக்களை வழிநடத்துபவர்கள், நிர்வாகம் செய்பவர்கள், கண்காணிப்பவர்கள் தங்களுக்குக் கீழிருக்கும் பொதுமக்களிடம் கருணை உள்ளம் கொண்டவர்களாகத் திகழ வேண்டும்.

பொதுவாக, மனிதநேயத்தைத் தொலைத்து விட்டுக் கல்நெஞ்சத்தோடு இருக்கும் நபர்களாக நாம் ஒருபோதும் இருக்க கூடாது. இதற்குரிய காரணத்தைப் பின்வரும் செய்தி விளக்குகிறது.

ஹசன் பின் அபில்ஹசன் யசார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்களில் ஒருவரான ஆயித் பின் அம்ர் (ரலி) அவர்கள் (அன்றைய பஸ்ராவின் ஆட்சியராயிருந்த) உபைதுல்லாஹ் பின் ஸியாதிடம் சென்று, “அன்புக் குழந்தாய்! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நிர்வாகிகளில் மிகவும் மோசமானவர், இரக்கமற்ற கல்நெஞ்சக்காரர் தாம்’ என்று கூறியதை நான் கேட்டேன். அவர்களில் ஒருவராக நீ ஆகிவிட வேண்டாம் என உன்னை நான் எச்சரிக்கிறேன்’’ என்று கூறினார்கள். 

அதற்கு உபைதுல்லாஹ், “(நீர் போய்) உட்காரும். நீர் முஹம்மத் (ஸல்) அவர்களின் தோழர்களில் மட்டமான ஒருவர்தாம்’’ என்று கூறினார். அதற்கு ஆயித் பின் அம்ர் (ரலி) அவர்கள், “(நபியின் தோழர்களான) அவர்களில் மட்டமானவர்களும் இருந்தார்களா? அவர்களுக்குப் பின்னர் வந்தவர்களிலும் மற்றவர்களிலும் தாம் மட்டமானவர்கள் தோன்றினர்’’ என்று கூறினார்கள்.

நூல்: முஸ்லிம் (3736)

ஒழுக்கக் கேடுகளில் வீழ்தல்

இன்றைய காலத்தில் கொலை, கொள்ளை போன்ற குற்றங்கள் மிகவும் சாதாரணமாகி விட்டன. பல ஒழுங்கீனமான செயல்கள் நாகரீத்தின் அடையாளமாகக் கருதப்படுகின்றன. இந்த நிலை நீடித்தால், நாளடைவில் நல்லவர்கள் குறைந்து போய்விடுவார்கள். இழிவான செயல்களைக் கொண்டவர்களே நிறைந்து இருப்பார்கள். படைத்தவன் பார்வையில் தீயவர்களான இத்தகைய மக்களே உலகம் அழிக்கப்படும் போது நிறைந்து இருப்பார்கள் என்று அல்லாஹ்வின் தூதர் முன்னறிவிப்புச் செய்துள்ளார்கள்.

நல்லவர்களில் முதன்மையானவர்கள் முதலாவதாகவும் அவர்களுக்கு அடுத்த (படித்தரத்திலுள்ள)வர்கள் அடுத்ததாகவும் (இவ்வுலகை விட்டுப்) போய்விடுவார்கள். (இவ்வாறு நல்லவர்கள் மறைந்த பின் இப்புவியில்) ‘மட்டமான வாற்கோதுமை போன்ற’, அல்லது ‘மட்டமான பேரீச்சம் பழம் போன்ற’ தரம் தாழ்ந்த மக்களே எஞ்சியிருப்பார்கள். அவர்களை அல்லாஹ் சற்றும் பொருட்படுத்த மாட்டான். இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: மிர்தாஸ் பின் மாலிக் (ரலி)

நூல்: புஹாரி (6434)

(உலக அழிவின் இறுதிக் காலத்தைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்.)

பிறகு (தீமைகளை நோக்கி) விரைந்து செல்வதில் பறவைகளையும் குணத்தில் மிருகங்களையும் ஒத்த தீய மனிதர்களே எஞ்சியிருப்பார்கள். அவர்கள் எந்த நன்மையையும் அறியமாட்டார்கள். எந்தத் தீமையையும் மறுக்கமாட்டார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர்(ரலி)

நூல்: முஸ்லிம் (5635)

(உலக அழிவின் காலத்தைப் பற்றி நபியவர்கள் பின்வருமாறு கூறினார்கள்:)

அன்றைய நாளில் (எந்த அளவுக்கு வளம் கொழிக்குமெனில்), ஒரு குழுவினர் சேர்ந்து ஒரேயொரு மாதுளம் பழத்தை உண்பர். அதன் தோல் அவர்கள் அனைவருக்கும் நிழல் அளிக்கும். அவர்களுக்குப் பால் வளமும் கிட்டும். எந்த அளவுக்கென்றால், பால் தரும் ஓர் ஒட்டகம் ஒரு பெரும் கூட்டத்துக்கே போதுமானதாக இருக்கும். பால் தரும் பசுவொன்று ஒரு குலத்தாருக்கே போதுமானதாயிருக்கும். பால் தரும் ஆடொன்று உறவினர்கள் அடங்கிய ஒரு கூட்டத்திற்கே போதுமானதாயிருக்கும்.

இந்நிலையில், அல்லாஹ் தூய காற்று ஒன்றை அனுப்புவான். அது அவர்களின் அக்குள்களுக்குக் கீழே நுழைந்து அவர்களைப் பிடித்துக்கொள்ளும். இறைநம்பிக்கை கொண்ட ஒவ்வொரு முஸ்லிமின் உயிரையும் அது கைப்பற்றும். அதையடுத்து மக்களில் தீயவர்கள் (மட்டுமே பூமியில்) எஞ்சி இருப்பார்கள். அவர்கள் கழுதைகளைப் போன்று (வெட்ட வெளியில் வைத்துப் பகிரங்கமாக) உடலுறவு கொள்வார்கள். அவர்கள்மீது தான் உலக முடிவு நாள் ஏற்படும்.

அறிவிப்பவர்:  நவ்வாஸ் பின் சம்ஆன் (ரலி)

நூல்: முஸ்லிம் (5629)

நமது சிந்தனைகள், நடத்தைகள் தூயதாக இருந்தால் மட்டும் போதாது. தீமையான எண்ணங்களை, செயல்களை விட்டும் நாம் விலகி இருக்க வேண்டும். அப்போதுதான் அவனிடம் மோசமானவர்கள் எனும் இழிச் சொல்லை விட்டும் நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும்.

ஆகவே, மேற்கண்ட செய்திகளை மனதில் கொண்டு நமது எண்ணங்களையும் நடத்தைகளையும் சீர்படுத்திக் கொள்வோமாக! இதன்படி சிறந்த முறையில் வாழ்ந்து ஈருலகிலும் உயர்ந்த நிலையை அடைவதற்கு அல்லாஹ் அருள்புரிவானாக!

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *