பெண்கள் கால்களை மறைக்க வேண்டுமா?

பெண்கள் தங்கள் கால்களை மறைக்க வேண்டுமா? அபாயா கால்களை மறைத்தால் அது தரையில் இழுபடுமே.! தொழும் பொழுதும் கால்களை மறைக்க வேண்டுமா? மார்க்க அடிப்படையில் விளக்கம் தரவும்!

பெண்கள் கரண்டை வரை கால்களை மறைக்க வேண்டும். கரண்டைக்குக் கீழ் உள்ள பகுதியை மறைக்க வேண்டிய அவசியம் இல்லை. பெண்கள் கால் பாதங்களை வெளிப்படுத்திக் கொள்ள இஸ்லாம் அனுமதிக்கின்றது என்று நாம் கூறுகின்றோம்.

ஆனால் சில அறிஞர்கள் இக்கருத்துக்கு மாற்றமாக பெண்கள் தங்களுடைய பாதங்கள் உட்பட கால்கள் முழுவதையும் மறைப்பது கட்டாயம் என்று கூறுகின்றனர். குறிப்பாக இலங்கையில் இக்கருத்து பரவலாக மக்களிடம் கொண்டு செல்லப்பட்டிருக்கின்றது.

பெண்கள் பாதங்கள் உட்பட கால் முழுவதையும் மறைக்க வேண்டும் என்று கூறுவோர் சில விஷயங்களை ஆதாரங்களாக முன்வைக்கின்றனர். பாதங்களை மறையுங்கள் என்று கட்டளையிடும் எந்த ஆதாரத்தையும் அவர்கள் எடுத்துக் காட்டவில்லை.

அவற்றை ஆராயும் போது அவர்கள் ஆதாரமாகக் காட்டும் சில செய்திகள் பலவீனமாகவும் சில செய்திகள் அவர்களுடைய வாதத்திற்குச் சம்பந்தம் இல்லாம் இருப்பதையும் அறிய முடிகின்றது.

குர்ஆன் கூறாத சட்டம்

ولا يضربن بأرجلهن ليعلم ما يخفين من زينتهن ) النور : 31

பெண்கள் தாங்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம்.

அல்குர்ஆன் (24 : 31)

இந்த வசனம் தான் பெண்கள் கால்களை மறைக்க வேண்டும் என்பதற்கு இவர்கள் எடுத்து வைக்கும் முக்கிய ஆதாரம்.

அதாவது அடித்து நடக்க வேண்டாம் என்பதன் கருத்து பெண்கள் அணியும் கால் கொலுசை மறைக்க வேண்டும் என்பது தான். காலின் கரண்டைப் பகுதியை மறைத்தாலே கால் கொலுசை மறைக்க முடியும். எனவே பெண்களின் பாதங்கள் மறைக்கப்பட வேண்டிய பகுதி என்று இவர்கள் வாதிடுகின்றனர்.

அழகுக்குக்கும் அலங்காரத்துக்கும் வித்தியாசம் உண்டு. அழகு என்பது ஒருவரின் உடலில் இயற்கையாக அமைந்துள்ள கவர்ச்சியாகும். அலங்காரம் என்பது உடலில் அங்கமாக இல்லாத வெளிப்பொருட்களால் ஏற்படும் கவர்ச்சியாகும். அதாவது முகம் அழகு எனலாம். மூக்குத்தியை அலங்காரம் எனலாம். கையை அழகு எனலாம். அதில் அணிந்துள்ள வலையலை அலங்காரம் எனலாம். காலை அழகு எனலாம். அதில் அணிந்துள்ள கொலுசு காப்பு போன்றவற்றை அலங்காரம் எனலாம்.

மேற்கண்ட வசனத்தில் கால்களை அடித்து நடப்பதால் ஸீனத் – அலங்காரம் தெரியும் என்று கூறப்பட்டுள்ளதால் காலில் அணிந்துள்ள ஆபரணங்களைத் தான் இவ்வசனம் கூறுகிறது என்பது சரிதான். ஆனால் இது கால்களை மறைக்க வேண்டும் என்ற கருத்தை பொதுவாக தராது.

கொலுசு தான் மறைக்கப்பட வேண்டுமே தவிர கால் அல்ல. ஒரு பெண் கொலுசு அணியாமல் இருந்தால் அவள் கால் பாதங்களைத் திறந்திருப்பதால் எந்த அலங்காரமும் தெரியப் போவதில்லை. அதை இவ்வசனம் தடை செய்யாது.

எனவே பாதம் மறைக்கப்பட வேண்டிய பகுதி என்ற வாதம் இங்கே அடிப்பட்டு போகின்றது. கொலுசு மறைக்கப்பட வேண்டிய ஆபரணம் என்று மட்டுமே கூற முடியும்.

கொலுசு மறைக்கப்பட வேண்டிய ஆபரணம் என்பதில் நமக்கு மாற்றுக் கருத்தில்லை. ஏனென்றால் பெண்கள் தங்களுடைய அலங்காரங்களை வெளிப்படுத்தக் கூடாது என்று இந்த வசனத்தில் மட்டுமின்றி இதே வசனத்தின் முன் பகுதியிலும் அல்லாஹ் கூறியுள்ளான்.

وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنْهَا (31)24

அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும்.

அல்குர்ஆன் (24 : 31)

கொலுசு அலங்காரப் பொருள் என்பதால் அதை வெளிப்படுத்துவதும் கூடாது. கொலுசு மட்டுமல்ல பொதுவாக வெளிப்படையான அலங்காரத்தைத் தவிர மற்ற அனைத்து அலங்காரத்தையும் பெண்கள் வெளிப்படுத்தக் கூடாது.

பெண்கள் பாதங்களை மறைக்க வேண்டும் என்று கூறுவோர் பெண்கள் முகத்தையும் இரு முன்னங்கைகளையும் வெளிப்படுத்தலாம் என்று கூறுகின்றனர்.

கால்களை மறைப்பது குறித்து இவர்கள் கொடுக்கும் விளக்கப்படி பார்த்தால் கையையும் தான் மறைக்க வேண்டும் எனக் கூற வேண்டும். கையில் வளையல் போன்றவை அணிந்திருந்தால் அது வெளியே தெரியும். எனவே கையையும் உரை போட்டு மூடிக் கொள்ள வேண்டும் எனக் கூறுவார்களா? வளையல் போன்றவை வெளியே தெரியாதவாறு கைகளை திறக்கலாம் என்பார்களா?

இவர்களின் முதலாவது ஆதாரம் கால் பாதத்தை மறைப்பது பற்றி கூறவில்லை.

நபிமொழியை கொச்சைப்படுத்தும் விளக்கம்

அடுத்து பெண்கள் பாதங்களை மறைக்க வேண்டும் என்று கூறுவோர் பின்வரும் ஹதீஸை ஆதாரமாகக் கூறுகின்றனர்.

327 حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ النُّفَيْلِيُّ وَأَحْمَدُ بْنُ يُونُسَ قَالَا حَدَّثَنَا زُهَيْرٌ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عِيسَى عَنْ مُوسَى بْنِ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ عَنْ امْرَأَةٍ مِنْ بَنِي عَبْدِ الْأَشْهَلِ قَالَتْ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنَّ لَنَا طَرِيقًا إِلَى الْمَسْجِدِ مُنْتِنَةً فَكَيْفَ نَفْعَلُ إِذَا مُطِرْنَا قَالَ أَلَيْسَ بَعْدَهَا طَرِيقٌ هِيَ أَطْيَبُ مِنْهَا قَالَتْ قُلْتُ بَلَى قَالَ فَهَذِهِ بِهَذِهِ رواه أبو داود

அப்துல் அஷ்ஹல் கூட்டத்தைச் சார்ந்த ஒரு பெண் கூறுகிறார் :

நான் (நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம்) அல்லாஹ்வின் தூதரே நாங்கள் பள்ளிக்கு வர நாற்றம் நிறைந்த ஒரு பாதை தான் எங்களுக்கு உண்டு! மழை பெய்தால் நாங்கள் என்ன செய்வது? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், இதை விட நல்ல பாதை அதற்குப் பிறகு இல்லையா? என்று வினவினார்கள். நான் ஆம் என்றேன். இது அதற்கு பரிகாரமாகி விடும் என்று பதிலளித்தார்கள்.

அபூதாவூத் (327)

பெண்கள் கால்களை முழுவதுமாக மறைக்க வேண்டும் என்ற தங்களது கருத்தை நிலைநாட்ட இந்த ஹதீஸிற்கு தவறான விளக்கத்தைக் கொடுக்கின்றனர்.

அசுத்தங்கள் ஆடையில் பட்டாலும் பரவாயில்லை. பெண்கள் தங்களுடைய ஆடைகளை தரையில் படுமாறு தான் அணிய வேண்டும். அசுத்தங்கள் பட்ட பிறகு அந்த ஆடையில் தூய்மையான மண் பட்டால் அந்த அசுத்தம் நீங்கிவிடும் என்று இந்தச் செய்தி கூறுகின்றது. எனவே பெண்கள் பாதங்களை மறைக்க வேண்டும் என்பது இவர்களின் வாதம்.

மேற்கண்ட செய்தி ஆதாரப்பூர்வமானது என்பதில் நமக்கு மாற்றுக் கருத்தில்லை. இவர்கள் கூறுகின்ற கருத்தை இந்த ஹதீஸ் தரவில்லை என்றே நாம் கூறுகிறோம்.

எதிர்க் கருத்தில் உள்ளவர்களின் இந்த விளக்கம் நபிமொழியை விகாரப்படுத்தி விமர்சனத்திற்குள்ளாக்கும் வகையில் அமைந்துள்ளது.

ஆடையில் அசுத்தம் படப் போகின்றது என்பதை முன்கூட்டியே அறிந்தால் அந்த அசுத்தம் படாமல் இருப்பதற்குரிய வழியைத் தேர்வு செய்வது தான் அறிவார்ந்த செயலாக இருக்க முடியும். அப்படித்தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழிகாட்டுவார்கள்.

இதைச் செய்யாமல் அசுத்தமான சகதியில் ஆடையை முக்கிவிட்டு பிறகு அசுத்தமில்லாத சகதியில் அதைப் புரட்டினால் சரியாகி விடும் என்று நபிகள் நாயகம் சொல்வார்களா? ஒருக்காலும் சொல்ல மாட்டார்கள். இரண்டு சகதியும் ஆடையில் சேர்ந்து ஒட்டுமே தவிர இதில் ஒன்று இன்னொன்றை எப்படி தூய்மைப்படுத்தும்? நல்ல சகதி என்றாலும் கூட அதை ஆடையில் பூசிக் கொள்ள முடியுமா?

மேற்கண்ட ஹதீஸில் இவர்கள் கூறும் கருத்து அறவே இல்லை.

அப்படியானால் இந்த ஹதீஸின் சரியான விளக்கத்தை இனி அறிந்து கொள்வோம்.

இந்தச் சம்பவத்தில் ஆடையைப் பற்றியோ அதை தரையில் படுமளவிற்கு நீட்டுவதைப் பற்றியோ கூறப்படவே இல்லை. மழைக் காலங்களில் அசுத்தமான பாதையைக் கடந்து வந்தால் அதற்குப் பிறகுள்ள தூய்மையான பாதை அந்த அசுத்தத்தை நீக்கிவிடும் என்றே கூறப்படுகின்றது.

அசுத்தமான பாதையைக் கடக்கும் போது நமது காலணிகளில் அந்த அசுத்தங்கள் ஒட்டுகிறது. இதற்கு அடுத்த தூய்மையான பாதைக்கு நாம் வரும் போது அங்கு தேங்கி கிடக்கும் தூய்மையான மழை நீர் அந்த அசுத்தத்தை நீக்கி விடுகின்றது.

அதாவது அசுத்தத்தை மிதித்தே வர வேண்டும் என்ற நிலை வந்தால் அந்த அசுத்தத்தை நீக்குவதற்கு மாற்று வழியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இங்கே கற்றுத் தருகிறார்கள்.

இன்றைக்குக் கூட மழை நேரங்களில் இது போன்ற பிரச்சனையை நாம் எதிர்கொள்கிறோம். அசுத்தமான தண்ணீரில் காலை வைத்து விட்டால் அதற்குப் பிறகு தேங்கிக் கிடக்கும் தூய்மையான தண்ணீரில் அதை நாம் கழுவுகிறோம். அசுத்தம் நீங்கி விடுகிறது. இந்த வழிகாட்டலைத் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மேற்கண்ட ஹதீஸில் கற்றுத் தந்துள்ளார்கள். அந்த ஹதீஸின் மழை பெய்தால் நாங்கள் என்ன செய்வது என்று தான் கேள்விக்கு பதிலாகத் தான் மேற்கண்டவாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கம் அளித்தார்கள் என்பதைக் கவனிக்க வேண்டும்.

பலவீனமான செய்தி

அடுத்து எதிர்த் தரப்பினர் பின்வரும் செய்தியை தங்கள் கூற்றுக்கு ஆதாரமாகக் கூறுகின்றனர்.

326 حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ عَنْ مَالِكٍ عَنْ مُحَمَّدِ بْنِ عُمَارَةَ بْنِ عَمْرِو بْنِ حَزْمٍ عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ عَنْ أُمِّ وَلَدٍ لِإِبْرَاهِيمَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ أَنَّهَا سَأَلَتْ أُمَّ سَلَمَةَ زَوْجَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ إِنِّي امْرَأَةٌ أُطِيلُ ذَيْلِي وَأَمْشِي فِي الْمَكَانِ الْقَذِرِ فَقَالَتْ أُمُّ سَلَمَةَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُطَهِّرُهُ مَا بَعْدَهُ رواه أبو داود (ضعيف)

இப்ராஹீம் பின் அப்திர் ரஹ்மான் அவர்களின் மூலம் குழந்தையைப் பெற்றெடுத்த அடிப்பெண் ஹுமைதா கூறுகிறார் :

நான் ஆடையின் ஓரத்தை தொங்க விட்டுக் கொண்டு அசுத்தமான இடத்தில் நடந்து செல்லும் பெண்ணாவேன் என்று நபி (ஸல்) அவர்களின் மனைவி உம்மு சலமா (ரலி) அவர்களிடம் கூறினேன். அதற்கு அவர்கள் பின்னால் வரும் (சுத்தமான) பாதை அதை சுத்தப்படுத்தி விடும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள் என்று பதில் சொன்னார்கள்.

அபூதாவூத் (326)

இந்தச் செய்தி ஆதாரப்பூர்வமான செய்தி அல்ல. ஏனென்றால் இதை அறிவிக்கும் ஹுமைதா என்பவரின் நம்பகத் தன்மை உறுதி செய்யப்படவில்லை. இவர் நம்பகமானவர் என்று அறிஞர்களில் ஒருவர் கூட நற்சான்றளிக்கவில்லை.

இவருடைய நம்பகத் தன்மை நிரூபணமாகவில்லை என்று இமாம் தஹபீ போன்ற அறிஞர்கள் கூறியுள்ளனர். எனவே இந்தச் செய்தி நாம் எடுத்துக் கொண்ட பிரச்சனைக்கு ஆதாரமாக அமையாது.

மேலும் இது சரியானது என்று வைத்துக் கொண்டாலும் பாதங்களை மறைக்க வேண்டும் என்ற கருத்து இதில் இல்லை. நான் ஆடையின் ஓரத்தை தொங்க விட்டுக் கொண்டு இருக்கும் பெண்ணாவேன் என்று உம்மு ஸலமா (ரலி) அவர்களிடம் ஹுமைதா கூறியதாக இதில் குறிப்பிடப்படுகிறது. இதில் இருந்து அனைவரும் இப்படி ஆடையைத் தொங்கவிட்டுக் கொண்டிருக்கவில்லை. அரிதாக ஹுமைதா என்பவர் இப்படி நடந்துள்ளதால் இது குறித்து கேள்வி கேட்டுள்ளார் என்பது தெரிகிறது.

இதில் இருந்து ஆடையை தொங்கவிட்டுக் கொள்வது தவறல்ல என்ற கருத்து தான் கிடைக்குமே தவிர கட்டாயம் பாதங்களை மறைக்கும் அளவுக்கு தொங்க விட்டுக் கொள்ள வேண்டும் என்ற கருத்து வராது.

நான் சாப்பிடுவது வழக்கம் என்று கூற மாட்டோம். ஏனெனொல் சாப்பிடாத ஒருவர் கூட உலகில் கிடையாது. நான் சப்பாத்தி சாப்பிடும் வழக்கம் உள்ளவன் என்று கூரலாம். ஏனெனில் அனைவரும் சப்பாத்தி சாப்பிடுவதில்லை. நான் ஆடையைத் தொங்க விடும் வழக்கம் உள்ளவர் என்று என்று கூறினால் இப்படி தொங்கவிடாத பலர் இருந்துள்ளனர் என்பதும் அதுவும் அங்கீகரிக்கப்பட்டது என்பதும் உறுதியாகிறது.

அதாவது முதலில் இது ஆதாரப்பூர்வமான ஹதீஸ் அல்ல. அடுத்தது பாதங்களை மறைக்காமல் இருப்பதை இது அனுமதித்து அவர்களுக்கு எதிரான கருத்தைத் தான் தருகிறதுஇ.

அடுத்து பெண்கள் கால் பாதங்களை கட்டாயம் மறைக்க வேண்டும் என்று கூறுவோர் பின்வரும் செய்தியை ஆதாரமாகக் குறிப்பிடுகின்றனர்.

1653حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْخَلَّالُ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ أَخْبَرَنَا مَعْمَرٌ عَنْ أَيُّوبَ عَنْ نَافِعٍ عَنْ ابْنِ عُمَرَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ جَرَّ ثَوْبَهُ خُيَلَاءَ لَمْ يَنْظُرْ اللَّهُ إِلَيْهِ يَوْمَ الْقِيَامَةِ فَقَالَتْ أُمُّ سَلَمَةَ فَكَيْفَ يَصْنَعْنَ النِّسَاءُ بِذُيُولِهِنَّ قَالَ يُرْخِينَ شِبْرًا فَقَالَتْ إِذًا تَنْكَشِفُ أَقْدَامُهُنَّ قَالَ فَيُرْخِينَهُ ذِرَاعًا لَا يَزِدْنَ عَلَيْهِ قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ رواه الترمذي

உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

யார் தன் ஆடையை பெருமையுடன் இழுத்துச் செல்கின்றாரோ மறுமை நாளில் அவரை அல்லாஹ் பார்க்க மாட்டான் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நான் (அல்லாஹ்வின் தூதரே) அப்படியானால் பெண்கள் தங்களுடைய ஆடையின் ஓரப் பகுதிகளை என்ன செய்வது? என்று கேட்டேன். அதற்கு அவர்கள் பெண்கள் ஒரு ஜான் இறக்கிக் கொள்ளலாம் என்றார்கள். அவர்களின் பாதங்கள் வெளிப்படுமே? என்று நான் கேட்டேன். அதற்கு அவர்கள் அப்படியானால் ஒரு முழம் இறக்கிக் கொள்ளலாம். இதை விட அவர்கள் அதிகப்படுத்தக் கூடாது என்று பதிலளித்தார்கள்.

நூல் : திர்மிதீ (1653)

ஒரு ஜான் இறக்கினால் பாதங்கள் வெளியில் தெரியுமே? என உம்மு சலமா (ரலி) அவர்கள் கேட்ட போது அப்படியானால் ஒரு முழம் இறக்கிக் கொள்ளட்டும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பதில் தருகிறார்கள்.

உம்மு சலமா (ரலி) அவர்கள் நபியவர்களிடம் கேட்ட கேள்வியும் அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அளித்த பதிலும் பெண்கள் அவசியம் பாதங்களை மறைக்க வேண்டும் என்ற கருத்தைக் கொடுக்கின்றது என்று எதிர்த் தரப்பினர் வாதிடுகின்றனர்.

மேலும் கெண்டைக் காலின் நடுப்பகுதியிலிருந்து ஒரு முழம் ஆடையை இறக்க வேண்டும் என்று இந்த ஹதீஸ் கூறுகின்றது. எனவே பெண்கள் தங்கள் பாதங்களை மறைப்பதற்காக ஆடையைத் தரையில் இழுபடும் அளவிற்கு அணியலாம் என்றும் இவர்கள் வாதிடுகின்றனர்.

ஆனால் ஹதீஸின் முன் பின் வாசகங்களை நன்கு கவனித்தால் இந்த ஹதீஸ் பெண்களின் பாதங்கள் மறைக்கப்பட வேண்டிய பகுதியல்ல என்ற கருத்தையே அழுத்தமாக கூறுகின்றது.

தரையில் படுமாறு ஆடையை அணிவது கூடாது என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முதலில் போதனை செய்கிறார்கள். நபியவர்கள் பிறப்பித்த இத்தடை உத்தரவு ஆண் பெண் இருபாலருக்கும் பொதுவானதா? அல்லது ஆண்களுக்கு மட்டும் உரியதா? என்ற சந்தேகம் உம்மு சலமா (ரலி) அவர்களுக்கு எழுகிறது. எனவே தான் நபியவர்கள் இவ்வாறு கூறிய பிறகு பெண்கள் எவ்வாறு ஆடை அணிய வேண்டும் என்ற கேள்வியைக் கேட்கிறார்கள்.

ஒரு ஜான் மட்டும் இறக்கிக் கொள்ளலாம் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பதிலளிக்கிறார்கள். அதாவது தரையில் இழுபடுமாறு ஆடை அணியக் கூடாது என்ற சட்டம் ஆண்கள் மட்டுமின்றி பெண்களுக்கும் உரிய பொதுவான சட்டம் என்பதை உணர்த்துகிறார்கள். எனவே தான் ஒரு ஜான் இறக்ககலாம் என்று ஒரு எல்லையை நிர்ணயிக்கிறார்கள்.

இச்சட்டம் பெண்களுக்கு இல்லை என்றால் ஒரு ஜானை எல்லையாக நபியவர்கள் குறிப்பிட வேண்டிய அவசியமில்லை. உம்மு சலமா (ரலி) அவர்கள் கேட்ட கேள்விக்கு பெண்களாகிய உங்களுக்கு இச்சட்டம் கிடையாது. இது ஆண்களுக்கு மட்டுமே உரிய சட்டம். எனவே நீங்கள் தரையில் படும் அளவிற்கு ஆடையை இறக்கலாம் என்று கூறியிருப்பார்கள்.

ஆனால் நபியவர்கள் அவ்வாறு கூறாமல் ஒரு எல்லையைத் தீர்மானித்ததிலிருந்து தரையில் படுமாறு ஆடை அணியக் கூடாது என்ற சட்டம் பெண்களுக்கும் உரியது என்பதை அறிய முடிகின்றது.

இதற்குப் பிறகு ஒரு முழம் இறக்கிக் கொள்ளலாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதி கொடுத்துவிட்டு இதை விடவும் அதிகப்படுத்தக் கூடாது என்ற தடையைப் பிறப்பிக்கின்றார்கள்.

பெண்கள் தரையில் படுமளவிற்கு ஆடை அணியலாம் என்றால் இதை விடவும் அதிகப்படுத்தி விட வேண்டாம் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூற வேண்டியதில்லை.

எனவே நபியவர்கள் பெண்களின் ஆடைக்கு எல்லையை தீர்மானித்துக் கூறுவதாலும் அதிகப்படுத்திவிடக் கூடாது என்று தடை விதிப்பதாலும் பெண்கள் தரையில் படுமாறு ஆடை அணிவதை இந்தச் செய்தியில் தடை செய்கிறார்கள் என்பதைச் சந்தேகமற அறியலாம்.

ஒரு ஜான் இறக்கினால் பாதங்கள் வெளியில் தெரியுமே? என உம்மு சலமா (ரலி) அவர்கள் கேட்ட கேள்வி பாதங்களை மறைக்க வேண்டும் என்ற கருத்தைத் தருகின்றது என்று எதிர்த் தரப்பினர் கூறுகின்றனர்.

ஒரு ஜான் இறக்கிக் கொள்ளலாம் என்றும் அதிக பட்சம் ஒரு முழம் இறக்கிக் கொள்ளலாம் என்றும் இதில் கூறப்பட்டுள்ளது. எதில் இருந்து ஒரு ஜான் எதில் இருந்து ஒரு முழம் என்ற விளக்கம் இந்த ஹதீஸில் இல்லை.

எந்த இடத்தில் இருந்து ஒரு ஜான் அல்லது ஒரு முழம் என்று கூறப்படாவிட்டாலும் நாம் சிந்தித்து புரிந்து கொள்ள முடியும்.

பொதுவாக மனிதனின் கால்களில் முட்டுக்கால், கரண்டை ஆகிய இரண்டு பாயிண்டுகள் உள்ளன. எல்லையாக இதைத் தான் தீர்மானிக்க முடியும்.

கரண்டைக் கால் என்று வைக்க முடியுமா? ஒரு ஜான் இறக்கினால் பாதம் தெரியுமே என்று உம்மு சலமா ரலி கேட்கிறார்கள். கரண்டையில் இருந்து ஒரு ஜான் இறக்கினால் நிச்சயம் பாதம் தெரியாது. அடுத்து அதிக பட்சம் ஒரு முழம் என்று கூறுகிறார்கள். கரண்டையில் இருந்து ஒரு முழம் இறக்கினால் யாராலும் அத்தகைய ஆடையை அணிந்து நடக்க முடியாது. பத்தடி நடப்பதற்குள் பத்து தடவை கீழே தான் விழ முடியும். எனவே எங்கிருந்து ஒரு ஜான் என்பது நிச்சயம் கரண்டையில் இருந்து ஒரு ஜான் என்று அர்த்தம் கொடுக்கவே முடியாது.

இதை ஏற்றுக் கொள்ளும் எதிர்க் கருத்துடையவர்கள் கரண்டையில் இருந்து ஒரு ஜான் அல்ல. கெண்டைக்காலின் பாதியில் இருந்து ஒரு ஜான் எனக் கூறுகின்றனர். கரண்டை என்பது ஒரு மூட்டு பகுதியாக உள்ளதால் அதை எல்லையாக வைப்பதில் அர்த்தம் உள்ளது. முட்டுக் கால் என்றாலும் அதுவும் ஒரு மூட்டு பகுதியாக உள்ளதால் அதை எல்லையாக தீர்மானிப்பதில் அர்த்தம் உள்ளது. கெண்டைக்காலின் நடுப்பகுதி என்று எல்லை வகுக்க காலில் எந்த அம்சமும் இல்லை. ஆனாலும் கெண்டைக்காலின் நடுப்பகுதியில் இருந்து ஒரு ஜான் என்று இவர்கள் கூறுகின்றனர்.

ஆனால் இதுவும் ஏற்கத்தக்கதல்ல. ஒரு ஜானுக்கு வேண்டுமானால் இது சரியாக இருக்கலாம். கெண்டைக்காலின் நடுப்பகுதியில் இருந்து ஒரு ஜான் வைத்து கீழாடை அணியலாம். ஆனால் கெண்டைக்காலில் இருந்து ஒரு முழம் வைத்து அணிய முடியுமா? அப்படி ஒரு பெண் அணிந்தால் அவளது கால்களை மூடியதற்கு மேல் ஒரு ஜான் அளவுக்குத் தரையில் ஆடை கிடக்கும். அப்படி ஒரு ஆடையை அணிந்து கொண்டு யாராலும் நடக்க முடியாது.

ஒரு ஜான் ஆடை தரையில் இழுபடும் அளவிற்கு ஆடை அணிந்தால் பெண்கள் தடுமாறி கீழே விழக்கூடிய நிலையும் ஆடை தெருவை கூட்டும் துடப்பமாக மாறிவிடும் நிலையும் ஏற்படும்.

இவர்கள் பாதத்தை மறைப்பதற்குத் தான் ஆதரமாக இதைக் காட்டுகிறார்களே தவிர இதில் கூறப்பட்டபடி நடக்குமாறு சொல்வதில்லை. மக்களிடம் அதை இருட்டடிப்பு செய்து விடுகின்றனர்.

கெண்டைக்காலின் நடுப்பகுதியில் இருந்து ஒரு முழம் நீளம் விட்டு பெண்கள் கீழாடை அணிய வேண்டும் என்று தான் இந்த ஹதீஸுக்கு இவர்கள் கொடுக்கும் விளக்கத்தின் படி கூற வேண்டும். அப்படிக் கூறினால் இவர்களின் சாயம் வெளுத்து விடும். அப்படி அணிந்து நடந்து காட்டுங்கள் என்று ஒரு பெண்ணாவது கேட்காமலா இருப்பார். அப்போது இவர்களின் மதியீனம் அம்பலமாகி விடும்.

இது சாத்தியமற்றது என்பதும் நபிவழியை அர்த்தமற்றதாக்கும் கருத்து என்பதும் உறுதியாகிறது. எனவே முட்டுக்காலில் இருந்து ஒரு ஜான் – அதிகபட்சம் ஒரு முழம் – என்று தான் பொருள் கொடுக்க வேண்டும்.

முட்டுக்காலிலிருந்து ஒரு முழம் என்பது கரண்டை வரை உள்ள பாகங்களை மறைத்து விடும். ஆண்கள் தங்களின் கீழாடையை அதிகபட்சமாக நீட்டிக் கொள்வதற்கு கரண்டையைத் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எல்லையாக விதித்துள்ளார்கள். இந்த எல்லையைத் தான் பெண்கள் விஷயத்திலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

எனவே பெண்கள் பாதங்களை மறைக்க வேண்டும் என்ற கருத்துக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ ஒரு ஆதாரமும் இல்லை.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *