இறந்தவர்கள் கனவில் வந்து கூறும் கட்டளைகளை நிறைவேற்ற வேண்டுமா?

என்னை நீங்கள் கனவில் காண்பதாக வைத்துக் கொள்ளுங்கள்! உங்கள் கனவில் நான் வந்தது எனக்குத் தெரியுமா? நிச்சயமாகத் தெரியாது. கனவில் வந்தது உண்மையில் நான் தான் என்றால் வந்த எனக்கல்லவா அது முதலில் தெரிய வேண்டும்?

கனவில் ஒருவர் வருவது என்பது வருபவரின் விருப்பத்தின்பாற்பட்டதன்று. மாறாகக் காண்பவரின் எண்ணத்தைப் பொறுத்தது என்பதை இதிலிருந்து நாம் அறியலாம்.

இறந்தவரோ, உயிருடன் உள்ளவரோ உங்கள் கனவில் வந்தால் உண்மையில் அவர் வரவில்லை. அவர் வந்ததாக உங்களுக்குத் தோன்றுகிறது. அவ்வளவு தான். எனவே கனவில் ஒருவர் வந்து கட்டளையிடுவது என்பதற்கு இடமே இல்லை.

அல்லாஹ் இந்த மார்க்கத்தைத் தன் திருத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் மூலம் நிறைவு செய்து விட்டான். மார்க்கத்தின் எந்த ஒரு அம்சத்தையும் அவன் சொல்லாமல் விட்டதில்லை. அவ்வாறிருக்க, கனவின் மூலம் எந்தக் கட்டளையையும் பிறப்பிக்க வேண்டியதில்லை. கனவுகளின் மூலமும் இறைவன் கட்டளைகளைப் பிறப்பிப்பான் என்றால் மார்க்கம் நபியவர்கள் மூலமாக முழுமைப்படுத்தப்படவில்லை என்று ஆகி விடும்.

கனவுகள் மூலமாகவே கட்டளைகளை இறைவன் பிறப்பிப்பான் என்றால் எந்த நபியையும் அவன் அனுப்பியிருக்கத் தேவையில்லை. நபிமார்கள் பல கொடுமைகளுக்கு ஆளாக வேண்டியதுமில்லை. ஒவ்வொருவருக்கும் கனவிலேயே அனைத்தையும் கட்டளையிட்டு விடலாம்.

நபிமார்கள் இறைவனுடன் நேரடித் தொடர்பு உடையவர்கள் என்பதால் அவர்களின் கனவுகள் மட்டுமே வஹீ என்று ஹதீஸ்களில் காண்கிறோம்.

கனவில் யாரும் உங்களுக்குக் கட்டளையிடுவதாக உங்களுக்குத் தெரிந்தால் அப்படி நீங்கள் கற்பனை செய்கிறீர்கள் என்று பொருளேயன்றி ‘அவரே வந்தார்; கட்டளையிட்டார்’ என்பது அதன் பொருளன்று.

‘இந்த இரவில் இத்தனை ரக்அத்கள் தொழு!’ என்று ஒருவர் கூறுவது போல் ஒருவர் கனவில் காண்கிறார் என்று வைத்துக் கொள்வோம். இது நிச்சயம் இறைவன் புறத்திலிருந்து வந்த கனவல்ல.

ஏனெனில் இந்த நாளில் இவ்வளவு தொழ வேண்டும் என்பதையெல்லாம் நபிகள் நாயகம் (ஸல்) வழியாக இறைவன் நமக்குக் காட்டித் தந்து விட்டான். கனவின் மூலம் காட்டித் தரும் வகையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறை ஏதும் வைக்கவில்லை.

மேலும் இது போன்ற செய்திகள் இறைவன் புறத்திலிருந்து வந்தவை என்றால் அனைத்து முஸ்லிம்களின் கனவிலும் இது போல் கூறப்பட வேண்டும். ஏனெனில் வணக்க வழிபாடுகளில் அனைவரும் சமமானவர்களே. மார்க்கத்தில் உள்ள நல்ல செயல் ஒன்றை ஒரே ஒருவருக்கு மட்டும் காட்டிவிட்டு மற்றவர்களுக்கு அதைக் காட்டாமல் இருப்பது இறைவனின் நீதிக்கு எதிரானதாகும்.

‘இந்த இடத்தில் ஒரு நல்லடியார் அடக்கம் செய்யப்பட்டுள்ளார்; அவருக்காக அந்த இடத்தில் ஒரு தர்ஹாவைக் கட்டு’ என்று ஒருவரது கனவில் கூறப்பட்டால் அதுவும் ஷைத்தானிடமிருந்து வந்த கனவு தான்.

ஏனெனில் இறந்தவர்களின் அடக்கத்தலங்களில் கட்டடங்கள் கட்டுவதையும், வழிபாட்டுத் தலங்கள் எழுப்புவதையும், சமாதிகள் பூசப்படுவதையும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடுத்து விட்டனர்.

பார்க்க : புகாரி 417, 418, 827, 1244, 1301, 3195, 4087, 4089, 5368 பார்க்க : முஸ்லிம் 1763, 1765

எழுப்பப்பட்ட கட்டடங்களை இடித்துத் தகர்க்கும் படியும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மூலம் இறைவன் ஏற்கனவே நமக்கு அறிவித்து விட்டான்.

பார்க்க : முஸ்லிம் 1764

அந்த அறிவிப்புக்கு எதிரான ஒரு செய்தியை இறைவன் கூற மாட்டான் என்பதால் இது ஷைத்தானின் வேலை தான் என்று கண்டு கொள்ளலாம்.

கனவுகள் என்ற நமது நூலில் ஹதீஸ்களின் ஆதாரங்களுடன் விரிவாக இதை விளக்கியுள்ளதால் அந்த ஆதாரங்களை இங்கே குறிப்பிடவில்லை. மேல் விபரங்களுக்கு அந்த நூலைப் பார்வையிடுக.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed