பிறர்நலம் பேணுபவரே முஸ்லிம்
————————————————

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவரது நாவு மற்றும் கையி(ன் தொல்லை களி)லிருந்து பிற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெறுகிறார்களோ அவரே (உண்மையான) முஸ்லிம் ஆவார். எவர் அல்லாஹ் தடை விதித்தவற்றிலிருந்து விலகிக் கொண்டாரோ அவரே முஹாஜிர் (துறந்தவர்) ஆவார்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
நூல்: புகாரி 10

தனக்குள்ளதைப் பிறருக்கு விரும்புபவரே முஸ்லிம்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பாத வரை (முழுமையான) இறை நம்பிக்கை கொண்டவர் ஆக மாட்டார்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி 13

மனைவியின் நலம் பேணல்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நோக்கமாகக் கொண்டு நீர் செய்கின்ற எந்த ஒரு செலவானாலும் சரி, அதற்காக உமக்கு நற்பலன் வழங்கப்படும். உம்முடைய மனைவியின் வாயில் (அன்புடன்) நீர் ஊட்டும் ஒரு கவள உணவு உட்பட.

அறிவிப்பவர்: சஅத் பின் அபீவக்காஸ் (ரலி)
நூல்: புகாரி 56

பிள்ளைகள் நலம் பேணுதல்

ஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்கüடம் வந்து, நீங்கள் சிறு குழந்தைகளை முத்தமிடுகின்றீர்களா? நாங்களெல்லாம் அவர்களை முத்தமிடுவதில்லை என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ் உமது இதயத்திலிருந்து அன்பைக் கழற்றி விட்ட பின்னர் உமக்காக நான் என்ன செய்ய முடியும்? என்று கேட்டார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 5998

பெற்றோர் நலம் பேணுதல்

ஒரு மனிதர் தம் தாய் தந்தையரை சபிப்பது பெரும் பாவங்களில் உள்ளதாகும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதரே! ஒரு மனிதர் தம் தாய் தந்தையரை எவ்வாறு சபிப்பார்? என்று கேட்கப்பட்டது.

நபி (ஸல்) அவர்கள், ஒருவர் இன்னொருவரின் தந்தையை ஏசுவார். உடனே (பதிலுக்கு) அவர் இவருடைய தந்தையையும் தாயையும் ஏசுவார் (ஆக, தம் தாய் தந்தையர் ஏசப்பட இவரே காரணமாகிறார்) என்றார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
நூல்: புகாரி 5973

அண்டை வீட்டாரின் நலம் பேணல்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவருடைய நாச வேலைகளிலிருந்து அவருடைய அண்டை வீட்டாருக்குப் பாதுகாப்பு உணர்வு ஏற்படவில்லையோ அவர் சொர்க்கத்தில் நுழையமாட்டார்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 73

புன்முறுவல் ஒரு புண்ணிய தர்மம்

என்னிடம் நபி (ஸல்) அவர்கள், நல்லறங்களில் எதையும் அற்பமாகக் கருதாதீர்; உம்முடைய சகோதரரை மலர்ந்த முகத்துடன் நீர் சந்திப்பதானாலும் சரியே என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூதர் (ரலி)
நூல்: முஸ்லிம் 5122

மென்மையே மேன்மை

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மென்மை எதில் இருந்தாலும், அதை அது அழகாக்கிவிடும். மென்மை அகற்றப்பட்ட எந்த ஒன்றும் அலங்கோலமாகிவிடும்.

அறிவிப்பவர்: நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி)
நூல்: முஸ்லிம் 5056

வதை செய்பவன் வதைக்கப்படுவான்

ஹிஷாம் பின் ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) அவர்கள் ஷாம் (சிரியா) நாட்டில் மக்களில் சிலரைக் கடந்து சென்றார்கள். அம்மக்களின் தலையில் ஆலிவ் எண்ணெய் ஊற்றப்பட்டு வெயிலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர். ஹிஷாம் (ரலி) அவர்கள், என்ன இது? என்று கேட்டார்கள். கராஜ் (வரி செலுத்தாதது) தொடர்பாகத் தண்டிக்கப்படுகின்றனர் என்று சொல்லப்பட்டது.

அப்போது ஹிஷாம் (ரலி) அவர்கள், *அறிக! அல்லாஹ்வின் தூதர (ஸல்) அவர்கள், *இவ்வுலகில் மக்களை (நியாயமின்றி) வேதனை செய்பவர்களை அல்லாஹ் வேதனை செய்வான்* என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்” என்றார்கள்.

அறிவிப்பவர்: உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்)
நூல்: புகாரி 5095
——————-
ஏகத்துவம்

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed