பத்ர் போர்غزوة بدر

——————————-

நபி (ஸல்) அவர்கள் ஓரிறைக் கொள்கை மக்களிடம் எடுத்துரைத்த போது கடும் எதிர்ப்புகள் வந்தன. அவற்றின் உச்சகட்டமாக இஸ்லாத்தை ஏற்ற மக்களை கருவறுக்க போர்கள் தொடுக்கப்பட்டன.

அந்த வகையில் இஸ்லாமிய வரலாற்றில் நபிகளார் சந்தித்த போர்களில் முக்கியத்துவமான போராகவும் முதல் போராகவும் இருந்தது பத்ருப் போராகும்.

உள்தலைப்புகள்…

1. பத்ருப் போர் வெற்றி குறித்த முன்னறிவிப்பு

2. அனுமதியின்றி நுழைந்த கூட்டத்திற்கு தடை

3. படை திரட்டப்படுதல்

4. போர் ஏற்படக் காரணம்

5. போர் நடந்த காலம்

6. நபிதோழர்களின் கருத்து

7. அபூசுப்யான் பாதுகாப்பாக மக்கா சென்றடைதல்

8. அபூசுப்யான் பாதுகாப்பாக மக்கா சென்றடைதல்

9. பத்ரை களத்தை நோக்கி

10. பத்ருப் போரில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை

11. போருக்கான வாகனங்கள்

12. பத்ருப் போர் நடப்பதற்கு முந்தைய இரவில்

13. சிறு தூக்கம்

14. நேருக்கு நேர்

15. எதிரிகள் குறைந்த எண்ணிக்கையானார்கள்

16. அம்பெய்தல்

17. வானவர்களின் உதவி

18. அபூஜஹ்லைக் கொன்ற இரு இளைஞர்கள்

19. கொல்லப்பட்ட முஸ்லிம்கள்

20. கொல்லப்பட்ட இணைவைப்பாளர்கள்

21. கிணற்றில் போடப்பட்ட இணைவைப்பாளர்கள்

22. போரில் பிடிபட்ட கைதிகள்

23. ஆலோசனை

24. இறைவனின் கண்டனம்

25. பிணைத் தொகை

26. வீரர்களின் சிறப்புகள்

27. நீங்கள் விரும்பியதைச் செய்யுங்கள். உங்களுக்கு சொர்க்கம் உறுதியாகிவிட்டது!

28. கனீமத் பெருட்கள்

 

//பத்ருப் போர் வெற்றி குறித்த முன்னறிவிப்பு//

___________________________________

8:7. (அபூஸுஃப்யான் தலைமையில் வரும் வியாபாரக் கூட்டம் அபூஜஹ்லின் தலைமையில் வரும் படையினர் ஆகிய) இரு கூட்டங்களில் (ஏதேனும்) ஒரு கூட்டத்தை (வெற்றி கொள்ளும் வாய்ப்பு) உங்களுக்கு உண்டு என்று, அல்லாஹ் வாக்களித்ததை நினைவு கூறுங்கள். ஆயுத பாணிகளாக இல்லாத (வியாபாரக் கூட்டம் கிடைக்க வேண்டுமென) நீங்கள் விரும்பினீர்கள்; (ஆனால்) அல்லாஹ் தன் திருவாக்குகளால் சத்தியத்தை நிலைநாட்டவும் காஃபிர்களை வேரறுக்கவுமே நாடுகிறான்.

இவ்வசனம் (8:7) கூறுவது என்ன என்பதை முதலில் அறிந்து கொள்வோம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவில் ஆட்சியை நிறுவியபின் மக்காவைச் சேர்ந்த வணிகக் கூட்டத்தினர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகள் வழியாகப் பயணம் செய்து வந்தனர்.

//அனுமதியின்றி நுழைந்த கூட்டத்திற்கு தடை//

___________________________________

தமது நாட்டைப் பாதுகாக்கும் பொறுப்பை ஏற்றிருந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அன்னிய நாட்டவர் தமது நாட்டுக்குள் அத்துமீறிப் பிரவேசிப்பதைத் தடுக்கத் திட்டமிட்டார்கள். குறிப்பாக முஸ்லிம்களின் உடைமைகளைப் பறித்துக் கொண்டு ஊரைவிட்டே விரட்டியடித்த மக்காவாசிகள் தமது நாட்டுக்குள் அத்துமீறி நுழைவதைத் தடுக்க வேண்டும் என நினைத்தார்கள்.

நாட்டின் மீது அக்கறையுள்ள எந்தத் தலைவரும் செய்வது போலவே தமது நாட்டுக்குள் அத்துமீறி நுழைந்தவர்களைத் தடுத்து நிறுத்தவும், பொருட்களைப் பறிமுதல் செய்யவும் ஆணை பிறப்பித்தார்கள்.

இந்த நிலையில்தான் மக்காவின் முக்கியப் பிரமுகரான அபூஸுஃப்யான் தலைமையில் ஒரு வணிகக் கூட்டம் அதிகமான சரக்குகளுடன் தமது நாட்டுக்குள் புகுந்து பயணித்துக் கொண்டிருக்கும் செய்தி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குக் கிடைத்தது.

எனவே அவர்களை வழிமறித்து அவர்களின் பொருட்களைப் பறிமுதல் செய்வதற்காகத் தமது தலைமையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் படைநடத்திச் சென்றார்கள்.

//படை திரட்டப்படுதல்//

_________________

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், வணிகக் கூட்டத்தின் வர்த்தகப் பொருட்களைப் பறிமுதல் செய்ய வரும் செய்தி வணிகக் கூட்டத்தின் தலைவரான அபூஸுஃப்யானுக்குத் தெரிந்தது. உடனே அபூஸுஃப்யான் தம்மையும், தமது வர்த்தகப் பொருட்களையும் காப்பாற்றப் படையெடுத்து வருமாறு மக்காவுக்குத் தகவல் அனுப்பினார்.

இத்தகவலுக்குப் பின் மக்காவிலிருந்து சுமார் ஆயிரம் பேர் கொண்ட பெரும் படை மதீனாவை நோக்கிப் புறப்பட்டு வந்தது.

வர்த்தகக் கூட்டத்தை வழிமறித்துப் பறிமுதல் செய்வதா? அல்லது எதிர்த்து வரும் எதிரிகளுடன் போர் செய்வதா? என்ற குழப்பமான நிலை நபித்தோழர்களுக்கு ஏற்பட்டது. வணிகக் கூட்டத்தை வழிமறித்தால் அதிகம் இரத்தம் சிந்தாமல் அவர்களை வெற்றி கொள்ள முடியும் என்பதாலும், அவர்களின் பொருட்களைப் பங்கு போட்டுக் கொள்ளலாம் என்பதாலும் அதைத்தான் பெரும்பாலோர் விரும்பினார்கள்.

எதிரிகளின் படையில் மூன்றில் ஒரு பங்கு என்ற அளவிலேயே தங்கள் படைபலம் இருந்ததால் போரை விட வணிகக் கூட்டத்தை வழிமறிப்பதிலேயே அவர்கள் அதிக ஆர்வம் காட்டினார்கள்.

ஆயினும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எதிரிகளைக் களத்தில் சந்திப்பதையே தேர்வு செய்தார்கள். எதிரிகளை பத்ர் என்னும் இடத்தில் நடந்த மாபெரும் போரைப் பற்றி விரிவாக காண்போம்!

//போர் ஏற்படக் காரணம்//

______________________

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவில் ஆட்சியை நிறுவிய பின் மக்காவைச் சேர்ந்த வணிகக் கூட்டத்தினர் நபிகள் நாயகத்தின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகள் வழியாகப் பயணம் செய்து வந்தனர்.

தமது நாட்டைப் பாதுகாக்கும் பொறுப்பை ஏற்றிருந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அன்னிய நாட்டவர் தமது நாட்டுக்குள் அத்துமீறிப் பிரவேசிப்பதைத் தடுக்கத் திட்டமிட்டார்கள். குறிப்பாக முஸ்லிம்களின் உடைமைகளைப் பறித்துக் கொண்டு ஊரை விட்டே விரட்டியடித்த மக்காவாசிகள் தமது நாட்டுக்குள் அத்துமீறி நுழைவதைத் தடுக்க வேண்டும் என நினைத்தார்கள்.

நாட்டின் மீது அக்கறையுள்ள எந்தத் தலைவரும் செய்வது போலவே தமது நாட்டுக்குள் அத்துமீறி நுழைந்தவர்களைத் தடுத்து நிறுத்தவும், பொருட்களைப் பறிமுதல் செய்யவும் ஆணை பிறப்பித்தார்கள்.

இந்த நிலையில் தான் மக்காவின் முக்கியப் பிரமுகரும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மாமனாருமான அபூஸுஃப்யான் தலைமையில் ஒரு வணிகக் கூட்டம் அதிகமான சரக்குகளுடன் தமது நாட்டுக்குள் புகுந்து பயணித்துக் கொண்டிருக்கும் செய்தி அவர்களுக்குக் கிடைத்தது.

எனவே அவர்களை வழிமறித்து அவர்களின் பொருட்களைப் பறிமுதல் செய்வதற்காக தமது தலைமையில் படை நடத்திச் சென்றார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வணிகக் கூட்டத்தின் வர்த்தகப் பொருட்களைப் பறிமுதல் செய்ய வரும் செய்தி வணிகக் கூட்டத்தின் தலைவரான அபூஸுஃப்யானுக்குத் தெரிந்தது. உடனே அபூஸுஃப்யான் தம்மையும், தமது வர்த்தகப் பொருட்களையும் காப்பாற்ற படையெடுத்து வருமாறு மக்காவுக்குத் தகவல் அனுப்பினார்.

இத்தகவலுக்குப் பின் மக்காவிலிருந்து சுமார் ஆயிரம் பேர் கொண்ட பெரும் படை மதீனாவை நோக்கிப் புறப்பட்டு வந்தது.

வர்த்தகக் கூட்டத்தை வழிமறித்து பறிமுதல் செய்வதா? அல்லது எதிர்த்து வரும் எதிரிகளுடன் போர் செய்வதா? என்ற குழப்பமான நிலை நபித்தோழர்களுக்கு ஏற்பட்டது. வணிகக் கூட்டத்தை வழிமறித்தால் அதிகம் இரத்தம் சிந்தாமல் அவர்களை வெற்றி கொள்ள முடியும் என்பதாலும் அவர்களின் பொருட்களைப் பங்கு போட்டுக் கொள்ளலாம் என்பதாலும் அதைத் தான் பெரும்பாலோர் விரும்பினார்கள்.

எதிரிகளின் படையில் மூன்றில் ஒரு பங்கு என்ற அளவிலேயே தங்கள் படை பலம் இருந்ததால் போரை விட வணிகக் கூட்டத்தை வழிமறிப்பதிலேயே அதிக ஆர்வம் காட்டினார்கள்.

ஆயினும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எதிரிகளைக் களத்தில் சந்திப்பதையே தேர்வு செய்தார்கள். எதிரிகளை “பத்ர்’ என்னும் இடத்தில் எதிர் கொண்டார்கள்.

//போர் நடந்த காலம்//

__________________

பத்ருப் போர்க்களம் ரமலான் மாதம் வெள்ளிக்கிழமை 17 ஆம் நாள் நடந்தது.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி),

நூல் : அஹ்மத் (2121)

இது தொடர்பாக திருக்குர்ஆன் பேசுகிறது.

(முஹம்மதே!) உம்மை, உமது இறைவன் உமது வீட்டிலிருந்து உண்மையுடன் வெளியேற்றிய (போது வெறுத்த)து போலவே, நம்பிக்கை கொண்டோரில் ஒரு சாரார் (போரை) வெறுத்தனர். உண்மை தெளிவாகத் தெரிந்த பின்பு உம்மிடம் எதிர்வாதம் செய்கின்றனர். பார்த்துக் கொண்டிருக்கும் போதே மரணத்திற்கு இழுத்துச் செல்லப்படுபவர்களைப் போல் அவர்கள் உள்ளனர். “எதிரிகளின் இரண்டு கூட்டத்தினரில் ஒன்று உங்களுக்கு (சாதகமாக இருக்கும்)” என்று அல்லாஹ் உங்களுக்கு வாக்களித்ததை எண்ணிப் பாருங்கள்! ஆயுதம் தரிக்காத (வியாபாரக்) கூட்டம் உங்களுக்கு வேண்டும் என்று நீங்கள் விரும்புகின்றீர்கள். அல்லாஹ் தனது கட்டளைகள் மூலம் உண்மையை நிலை நாட்டவும், (தன்னை) மறுப்போரை வேரறுக்கவும் விரும்புகிறான்.

 ‏

குற்றவாளிகள் வெறுத்த போதும் உண்மையை நிலை நாட்டி, பொய்யை அழித்திட அவன் நாடுகிறான்.

(அல்குர்ஆன் 8:5-8)

//நபிதோழர்களின் கருத்து//

_______________________

அபூசுஃப்யான் (தலைமையில் வணிகக் குழு) வரும் தகவல் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு எட்டியபோது (தம் தோழர்களிடம்) ஆலோசனை கேட்டார்கள்.

அபூபக்ர் (ரலி) அவர்கள் (தமது கருத்தைச்) சொன்னபோது, அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கண்டு கொள்ளவில்லை. பின்னர் உமர் (ரலி) அவர்கள் (தமது கருத்தைச்) சொன்னபோதும் கண்டுகொள்ளவில்லை.

அப்போது (அன்சாரிகளில் கஸ்ரஜ் கூட்டத்தாரின்) தலைவர் சஅத் பின் உபாதா (ரலி) அவர்கள் எழுந்து, “எங்(கள் அன்சாரிகளின் கருத்து)களையா நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள், அல்லாஹ்வின் தூதரே? என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீதாணையாக! எங்கள் குதிரைகளைக் கடலுக்குள் செலுத்துமாறு நீங்கள் உத்தரவிட்டாலும் நிச்சயமாக நாங்கள் செலுத்துவோம். எங்கள் குதிரைகளின் பிடரிகளில் அடித்து (தொலைவில் உள்ள) “பர்குல் ஃகிமாத்’ நோக்கி (விரட்டிச்) செல்லுமாறு நீங்கள் உத்தரவிட்டாலும் நாங்கள் அவ்வாறே செய்வோம்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி).

நூல் : முஸ்லிம் (3646)

நான் மிக்தாத் பின் அஸ்வத் (ரலி) அவர்களது அவைக்குச் சென்றேன். நான் அவர்களது அவையில் (கலந்து கொண்டு, அவர்கள் கூறும் விஷயங்களை எடுத்துரைப்பவனாக) இருப்பது, அதற்கு நிகரான(மற்ற அனைத்)தை விடவும் எனக்கு விருப்பானதாயிருக்கும்.

(மிக்தாத் பின் அஸ்வத் (ரலி) அவர்கள் என்னிடம் கூறினார்கள்:)

நான், நபி (ஸல்) அவர்கள் இணை வைப்போருக்கெதிராகப் பிரார்த்தித்துக் கொண்டிருந்தபோது சென்றேன். அப்போது நான், “(இறைத்தூதர்) மூசாவின் சமுதாயத்தார், “நீங்களும் உங்கள் இறைவனும் போய்ப் போர் செய்யுங்கள்’ என்று (நகைப்பாகக்) கூறியது போல நாங்கள் கூற மாட்டோம். மாறாக, நாங்கள் தங்களின் வலப்பக்கமும், இடப் பக்கமும், முன்னாலும், பின்னாலும் நின்று (தங்கள் எதிரிகளிடம்) போரிடுவோம்” என்று சொன்னேன். (இதைக் கேட்டதும்,) நபி (ஸல்) அவர்களின் முகம் ஒளிர்ந்ததை நான் கண்டேன். (எனது சொல்) அவர்களை மகிழச் செய்தது.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி),

நூல் : புகாரி (3952)

//அபூசுப்யான் பாதுகாப்பாக மக்கா சென்றடைதல்//

_______________________

நபி (ஸல்) அவர்கள் தலைமையில் நமது பொருட்களை அபகரிக்க ஓர் கூட்டம் வருகிறது என்பதை அறிந்த அபூசுப்யான் வேறு வழியில் மக்காவிற்குப் பத்திரமாக சென்றுவிடுகிறார். இந்தத் தகவலை மதீனா நோக்கிச் சென்ற அபூஜஹ்ல் கூட்டத்திற்கு தெரிவித்து திரும்பி வந்துவிடுமாறு கூறுகிறார்கள். ஆனால் அபூஜஹ்ல் முன்வைத்த காலை பின் வைக்க மாட்டேன் என்று இஸ்லாத்தை ஒழிக்க வேண்டுமென எண்ணியவன் போர் செய்யாமல் வரமட்டேன் என்று கூறிவிட்டான்.

இது தொடர்பாக திருக்குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது

தமது இல்லங்களிலிருந்து பெருமைக்காகவும், மக்களுக்குக் காட்டவும் புறப்பட்டோரைப் போன்றும், அல்லாஹ்வின் பாதையை விட்டு (மக்களைத்) தடுத்தவர்களைப் போன்றும் ஆகி விடாதீர்கள்! அவர்கள் செய்பவற்றை அல்லாஹ் முழுமையாக அறிபவன்

(அல்குர்ஆன் 8:47)

//பத்ரை நோக்கி//

_______________

அபூஜஹ்ல் கூட்டத்தினர் போர் செய்ய வருகிறார்கள் என்பதை அறிந்த நபி (ஸல்) அவர்களும் போருக்குரிய ஏற்பாடுகளைச் செய்தார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களைப் புறப்படச் செய்தார்கள். மக்கள் புறப்பட்டுச் சென்று பத்ர் எனும் இடத்தில் தங்கினர். அப்போது அவர்களிடம் குறைஷியரின் தண்ணீர் சுமக்கும் ஒட்டகக் குழாம் ஒன்று வந்தது. அவர்களில் பனுல் ஹஜ்ஜாஜ் குலத்தாரின் கறுப்பு அடிமை ஒருவனும் இருந்தான்.

நபித்தோழர்கள், அவனைப் பிடித்துக்கொண்டனர். அவனிடம் அபூசுஃப்யானைப் பற்றியும் அவருடைய சக பயணிகள் பற்றியும் விசாரித்தனர். அவன் “அபூசுஃப்யானைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஆனால், இதோ அபூஜஹ்ல், உத்பா, ஷைபா, உமய்யா பின் கலஃப் (ஆகியோர் உங்களை நோக்கிப் படை திரட்டி வந்துகொண்டிருக்கின்றனர்)” என்று சொன்னான். அவன் இவ்வாறு சொன்னதும் (அவன் பொய் சொல்வதாக எண்ணிக்கொண்டு) அவனை நபித் தோழர்களை அடித்தனர். அப்போது அவன் “ஆம் (எனக்குத் தெரியும்); நான் சொல்கிறேன். இதோ அபூசுஃப்யான் வந்துகொண்டிருக்கிறார்” என்று (பொய்) சொன்னான்.

அடிப்பதை நிறுத்திவிட்டு அவனிடம் கேட்டால் “அபூசுஃப்யான் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஆனால், இதோ அபூஜஹ்ல், உத்பா, ஷைபா, உமய்யா பின் கலஃப் மக்களுடன் (வந்துகொண்டிருக்கின்றனர்)” என்று சொன்னான். மீண்டும் அவன் இவ்வாறு சொன்னதும் அவனை நபித்தோழர்கள் அடித்தனர்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அங்கு) நின்று தொழுது கொண்டிருந்தார்கள். இ(வ்வாறு அவர்கள் நடந்து கொள்வ)தை அவர்கள் கண்டதும் தொழுகையை (சுருக்கமாக) முடித்துத் திரும்பினார்கள். மேலும், “என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீதாணையாக! அவன் உண்மையைச் சொல்லும்போது அடிக்கிறீர்கள். பொய் சொல்லும்போது அடிப்பதை நிறுத்து விடுகிறீர்களே!” என்று கூறினார்கள்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “இது இன்ன மனிதர் மாண்டு விழும் இடம்” என்று கூறி, பூமியில் தமது கையை வைத்து “இவ்விடத்தில் இவ்விடத்தில்’ என்று காட்டினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கை வைத்துக் காட்டிய இடத்தைவிட்டு அவர்களில் எவரும் தள்ளி விழவில்லை. (சரியாக அதே இடத்தில் போரில் மாண்டு கிடந்தனர்).

அறிவிப்பவர் : அனஸ் (ரலி).

நூல் : முஸ்லிம் (3646)

//பத்ருப் போரில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை/:

________________________________

முஸ்லிம் தரப்பில் 300க்கு சற்று கூடுதலான நபர்களும் இணைப்பு தரப்பில் 1000 க்கு மேற்பட்டவர்களும் கலந்து கொண்டனர். அறுபதுக்கும் சற்றுக் கூடுதலான முஹாஜிர்களும் இரு நூற்று நாற்பதுக்கும் சற்றுக் கூடுதலான அன்சாரிகளும் இருந்தனர்.

பத்ருபோரில் முந்நூற்றி பதிமூன்று போர் இருந்தனர்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி),

நூல் : அஹ்மத் (2121)

“முன்னூற்றுப் பத்துக்கும் சற்றுக் கூடுதலாயிருந்த பத்ருப் போர் வீரர்களின் எண்ணிக்கை, தாலூத் அவர்களுடன் ஆற்றைக் கடந்து சென்ற அவர்களுடைய தோழர்களின் எண்ணிக்கையேயாகும். இறைநம்பிக்கை யாளர்களைத் தவிர வேறெவரும் அவர்களுடன் ஆற்றைக் கடக்கவில்லை” என்று நாங்கள் பேசிக்கொள்வது வழக்கம்.

அறிவிப்பவர் : பரா (ரலி),

நூல் : புகாரி (3959)

பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: நானும் இப்னு உமர் (ரலி) அவர்களும் பத்ருப் போரின் போது சிறுவர்களாகக் கருதப் பட்டோம். பத்ருப் போரில் அறுபதுக்கும் சற்றுக் கூடுதலான முஹாஜிர்களும் இரு நூற்று நாற்பதுக்கும் சற்றுக் கூடுதலான அன்சாரிகளும் இருந்தனர்.

அறிவிப்பவர் : பரா (ரலி),

நூல் : புகாரி (3956)

பத்ருப் பகுதியில் பிடிப்பட்ட ஒரு குறைஷியிடம் நபி (ஸல்) அவர்கள் அவர்கள் எத்தனை நபர்கள் உள்ளனர்? என்று வினவினார்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக அவர்கள் அதிக நபர்கள். வீரமிக்கவர்களாக இருந்தனர் என்றார். அவர்கள் எத்தனை நபர்கள் என்று (மீண்டும் கேட்டு) முயற்சித்த போது அவர் எண்ணிக்கை கூற மறுத்துவிட்டார். எத்தனை ஒட்டங்களை அவர்கள் அறுக்கிறார்கள்? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு அவர் ஒரு நாளைக்கு பத்து ஒட்டகங்கள் அறுக்கிறார்கள் என்று பதிலளித்தார். அப்படியானால் நூறு நபர்களுக்கு ஒரு ஒட்டகம் என்ற கணக்கின்படி ஆயிரம் நபர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் : அஹ்மத் (904)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், பத்ருப் போர் நாளில் (எதிரிகளான) இணை வைப்பாளர்கள் (எண்ணிக்கை) ஆயிரம் பேராக இருப்பதையும், (முஸ்லிம்களான) தம் தோழர்கள் முன்னூற்றுப் பத்தொன்பது பேராக இருப்பதையும் கண்டார்கள்.

அறிவிப்பவர் : உமர் (ரலி),

நூல் : முஸ்லிம் (3621)

//வாகனங்கள்//

______________

இணைவைப்பவர்களிடம் இருந்த அளவுக்கு வாகன வசதிகள் நபிகளாரிடம் இருக்கவில்லை. ஒரு நபருக்கு ஒரு ஒட்டகம் என்றளவுக்குக் கூட வாகனங்கள் இருக்கவில்லை. மூன்று நபர்களுக்கு ஒரு ஒட்டகம் என்றளவுக்கே வாகனங்கள் இருந்தன. எனவே மூன்று நபர்களுக்கு ஒரு ஒட்டகம் வழங்கப்பட்டது. குறிப்பிட்ட தூரம் இரண்டு நபர்கள் ஒட்டகத்தில் அமர்ந்து வருவார்கள். பின்னர் ஒருவர் இறங்குவார். நடந்து வந்தவர் ஏறிக் கொள்வார். இப்படி முறைவைத்து பத்ரை நோக்கி பயணம் செய்தனர்.

நாங்கள் பத்ரு நாளன்று மூன்று நபர்கள் ஒரு ஒட்டகத்தில் பயணித்தோம். அபூலுபாபா (ரலி), அலீ (ரலி) ஆகியோர் நபி (ஸல்) அவர்களுடன் செல்பவர்களாக இருந்தனர். அப்போது அவ்விருவரும் அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் உங்களுக்காக நடக்கிறோம். (நீங்கள் ஒட்டகத்திலேயே அமர்ந்து கொள்ளுங்கள் என்றார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் நீங்கள் இருவரும் என்னைவிட வலிமை வாய்ந்தவர்களும் அல்ல. நான் உங்களைவிட நன்மை பெறுவதில் தேவையற்றவனாகவும் இல்லை என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி),

நூல் : அஹ்மத்(3706)

பத்ருப் போர் அன்று மிக்தாத் (ரலி) அவர்களைத் தவிர வேறு யாரும் குதிரை வீரராக இல்லை.

அறிவிப்பவர் : அலீ (ரலி),

நூல் : அஹ்மத் (973)

//பத்ருப் போர் நடப்பதற்கு முந்தைய இரவில்//

___________________________________

முஸ்லிம்களின் எண்ணிக்கை குறைவாகவும் எதிரிகளின் எண்ணிக்கை அதிகமாகவும் இருந்ததால் அன்றைய இரவு அழுது அழுது இறைவனிடம் நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள்.

. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (தொழுகையின் திசையான) “கிப்லா’வை முன்னோக்கித் தம் கரங்களை நீட்டித் தம் இறைவனை உரத்த குரலில் (அழைத்துப்) பிராத்தித்தார்கள்.

“இறைவா! எனக்கு நீ அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவாயாக. இறைவா! எனக்கு அளித்த வாக்குறுதியை வழங்குவாயாக. இறைவா! இஸ்லாமியரில் இக்குழுவினரை நீ அழித்துவிட்டால், இந்தப் பூமியில் உன்னை (மட்டுமே) வழிபட (இனி) யாரும் இருக்கமாட்டார்கள்” என்று தம் கரங்களை நீட்டி, கிப்லாவை முன்னோக்கி இறைவனிடம் பிரார்த்தித்துக் கொண்டேயிருந்தார்கள். எந்த அளவுக்கென்றால், (கைகளை உயர்த்தியதால்) அவர்களுடைய தோள்களிலிருந்து அவர்களின் மேல்துண்டு நழுவி கீழே விழுந்துவிட்டது.

அப்போது அவர்களிடம் அபூபக்ர் (ரலி) அவர்கள் வந்து, அத்துண்டை எடுத்து அவர்களின் தோள்கள்மீது போட்டுவிட்டு, பின்னாலிருந்து அவர்களைக் கட்டியணைத்துக்கொண்டு, “அல்லாஹ்வின் தூதரே! உங்கள் இறைவனிடம் வேண்டியது போதும். அவன் உங்களுக்கு அளித்த வாக்குறுதியை நிச்சயம் நிறைவேற்றுவான்” என்று கூறினார்கள்.

(நூல்: முஸ்லிம் 3621)

நபி (ஸல்) அவர்கள் பத்ருப் போரின் போது தமது கூடாரமொன்றில் இருந்தபடி, “(இறைவா! எங்களுக்கு வெற்றியளிப்பதாக நீ கொடுத்துள்ள) உன் உறுதிமொழியையும், உன் வாக்குறுதியையும் (நிறைவேற்றித் தரும்படி) உன்னிடம் நான் கோருகிறேன். இறைவா! (இந்த விசுவாசிகளை அழிக்க) நீ நினைத்தால், உன்னை (மட்டுமே) வழிபடுவோர் இனி ஒருபோதும் (உலகில்) இருக்கப்போவதில்லை” என்று பிரார்த்தித்துக் கொண்டிருந்தார்கள்.

அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களது கையைப் பிடித்துக்கொண்டு, “போதும்! அல்லாஹ்வின் தூதரே! தங்கள் இறைவனிடம் தாங்கள் நிறையவே மன்றாடிவிட்டீர்கள்” என்று சொன்னார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் கவச உடையில் இருந்தார்கள். பிறகு, “இந்த (இறைநிராகரிப்பாளர்) குழுவினர் அதிவிரைவில் தோற்கடிக்கப்பட்டுப் புறங்காட்டி ஓடுவர்.

தவிரவும், மறுமைதான் அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட காலமாகும். மறுமை (அவர்களுக்கு) அதிர்ச்சியளிக்கக் கூடியதும் மிகவும் கசப்பானதுமாகும்” எனும் (54:45,46) வசனங்களை ஓதியபடி அங்கிருந்து நபியவர்கள் வெளியேறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி),

நூல் : புகாரி (4877)

//சிறு தூக்கம்//

 ____________

உங்களுக்குச் சிறு தூக்கத்தை அவன் ஏற்படுத்தியதை எண்ணிப் பாருங்கள்! அது அவனிடமிருந்து கிடைத்த நிம்மதியாக இருந்தது. தண்ணீர் மூலம் உங்களைத் தூய்மைப்படுத்திடவும், உங்களை விட்டும் ஷைத்தானின் அசுத்தத்தைப் போக்கிடவும், உங்கள் உள்ளங்களைப் பலப்படுத்தவும், உங்கள் பாதங்களை அதன் மூலம் உறுதிப்படுத்தவுமே வானத்திலிருந்து தண்ணீரை உங்கள் மீது இறக்கினான்.

(அல்குர்ஆன் 8:11)

நபி (ஸல்) அவர்களைத் தவிர மற்றவர்கள் உறங்கிக் கொண்டிருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் மரத்தின் அடியில் அழுது கொண்டு காலை வரை தொழுது கொண்டிருந்தார்கள்.

அறிவிப்பவர் : அலீ (ரலி).

நூல் : அஹ்மத் (973)

//நேருக்கு நேர்//

_______________

பத்ருப் போர்களத்தில் எதிரிகளை முஸ்லிம்கள் நேருக்கு நேர் சந்தித்தார்கள். அப்போது மக்காவிலிருந்து வந்தவர்களிடம்தான் முதலில் போரிடுவோடும் என்று இணைவைப்பவர்கள் கூறியதால் முஹாஜிர்கள் முதலில் அவர்களிடம் போர் செய்ய சென்றனர்.

உத்பா பின் ரபீஆவும் அவன் மகனும் மற்றும் அவனுடைய சகோதரனும் (போரிட) முன்னர் வந்தனர். (அதில் உத்பா) யார் நேரிடையாக மோதத் தயார்? என்று கேட்டான். அப்போது அன்சாரி இளைஞர்கள் முன் வந்தனர். நீங்கள் யார் என்று கேட்டான். அவர்கள் (நாங்கள் அன்சாரிகள் என்ற) விவரத்தைத் தெரிவித்தனர். உங்களிடம் எங்களுக்கு எந்தத் தேவையும் இல்லை. நாங்கள் எங்கள் தந்தையின் உடன் பிறந்தவர்களிடம் (முஹாஜிர்களிடம் மோதவே) நாடுகிறோம் என்று கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள்.

ஹம்சா எழுந்திரும். அலீ எழுந்திரும். உபைதா பின் அல்ஹாரிஸ் எழுந்திரும் என்று கூறினார்கள். ஹம்சா அவர்கள் உத்பாவிடமும் நான் ஷைபாவிடமும் மோதினேன். உபைதாவும் வலீதும் மாறிமாறி வெட்டிக் கொண்டனர். ஒருவர் மற்றவரை காயமுறச் செய்தார். பின்னர் நாங்கள் வலீதை தாக்கி கொன்றோம். உபைதாவை சுமந்து சென்றோம்.

அறிவிப்பவர் : அலீ (ரலி),

நூல் : அபூதாவூத் (2291)

அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: (இறை மறுப்பாளர்கள் போரிட்டது தொடர்பாக) மறுமை நாளில் (பெருங்கருணையாளன்) ரஹ்மானுக்கு முன்னால் வழக்காடுவதற்காக மண்டியிடுபவர்களில் (இந்தச் சமுதாயத்திலேயே) நான் தான் முதல் நபராக இருப்பேன்

கைஸ் பின் உபாத் அவர்கள் கூறினார்கள்:

“இவர்கள் தங்களுடைய இறைவனின் (மார்க்க) விஷயத்தில் சண்டையிட்டுக் கொண்ட இரு பிரிவினர் ஆவர்” என்னும் (22:19) இறை வசனம், பத்ருப் போரின் போது (களத்தில் இறங்கித்) தனித்து நின்று போராடிய (இஸ்லாமிய வீரர்களான) அலீ, ஹம்ஸா, உபைதா பின் ஹாரிஸ் (ரலி) ஆகியோர் மற்றும் (இறைமறுப்பாளர்களான) ஷைபா பின் ரபீஆ, உத்பா பின் ரபீஆ, வலீத் பின் உத்பா ஆகியோர் தொடர்பாகவே அருளப்பட்டது.

நூல் : புகாரி (3965)

பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்களிடம் ஒருவர், “அலீ(ரலி) அவர்கள் பத்ருப் போரில் கலந்து கொண்டார்களா?” என்று கேட்டார். (“ஆம். கலந்து கொண்டார்கள்) கவசத்திற்கு மேல் கவசம் அணிந்து கொண்டு (களத்தில் இறங்கி) தனித்துப் போராடினார்கள்” என்று பராஉ (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள்.

நூல் : புகாரி (3970)

//எதிரிகள் குறைந்த எண்ணிக்கையானார்கள்//

_____________________________________

எதிரிகளிடம் வீரத்தோடும் தன்னம்பிக்கையோடும் போர் செய்ய வேண்டும் என்பதற்கு அல்லாஹ் எதிரிகளின் எண்ணிக்கை குறைவாக தெரியும்படி ஆக்கினான்.

நீங்கள் (களத்தில்) சந்தித்துக் கொண்ட போது உங்கள் கண்களுக்கு அவர்களைக் குறைந்த எண்ணிக்கை யினராகவும், அவர்களின் கண்களுக்கு உங்களைக் குறைந்த எண்ணிக்கை யினராகவும் காட்டியதை எண்ணிப் பாருங்கள்! செய்யப்பட வேண்டிய காரியத்தை அல்லாஹ் செய்வதற்காக (இவ்வாறு காட்டினான்). காரியங்கள் அல்லாஹ்விடமே கொண்டு செல்லப்படும்.

(அல்குர்ஆன் 8:44)

//அம்பெய்தல்//

_____________

பத்ருப் போரின் போது நாங்கள் குறைஷிகளுக்கெதிராகவும் குறைஷிகள் எங்களுக்கெதிராகவும் (போர் வியூகம் அமைத்து) அணிவகுத்து நின்ற போது நபி (ஸல்) அவர்கள், “(குறைஷிகள்) உங்களை நெருங்கினால் நீங்கள் அம்புகளைப் பயன்படுத்துங்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ உஸைத் (ரலி),

நூல் : புகாரி (2900) (புகாரி)

சுபைர் (ரலி) அவர்களுக்கு ஏற்பட்ட காயங்கள்

உர்வா பின் ஸுபைர் அவர்கள் கூறியதாவது: (என் தந்தை) ஸுபைர் (ரலி) அவர்களிடம் நபித்தோழர்கள் யர்மூக் போரின் போது, “நீங்கள் (பைஸாந்திய இணைவைப்போர் மீது) தாக்குதல் நடத்தமாட்டீர்களா? நாங்களும் உங்களுடன் சேர்ந்து தாக்குதல் நடத்துவோமே” என்று கேட்டார்கள். ஆகவே, ஸுபைர் (ரலி) அவர்கள், இணைவைப்போர் மீது தாக்குதல் தொடுத்தார்கள். இணைவைப்பவர்கள் ஸுபைர் (ரலி) அவர்களுடைய தோளின் மீது இரண்டு முறை வெட்டினார்கள். அவ்விரண்டுக்கும் இடையே பத்ருப் போரில் ஸுபைர் (ரலி) அவர்களுக்கு ஏற்படுத்தப்பட்ட இன்னொரு காயம் இருந்தது. நான் சிறுவனாயிருந்த போது அந்த காயங்(களால் ஏற்பட்ட துளை போன்ற வடுக்)களுக்கிடையே என் விரல்களை நுழைத்து விளையாடி வந்தேன்.

நூல் : புகாரி (3721)

//வானவர்களின் உதவி//

__________________

இணைவைப்பவர்களை தோற்கடிக்க அல்லாஹ் வானத்திலிருந்து வானவர்களை இறக்கி உதவி புரிந்தான். வானவர்கள் எதிரிகளை கடுமையாக தாக்கி இறுதியில் முஸ்லிம்களுக்கு வெற்றியைப் பெற்றுத் தந்தனர்.

நீங்கள் உங்கள் இறைவனிடம் உதவி தேடிய போது உங்களுக்குப் பின்னால் அணிவகுக்கும் ஆயிரம் வானவர்களின் மூலம் நான் உங்களுக்கு உதவுபவன்” என்று உங்களுக்குப் பதிலளித்தான்.

(அல்குர்ஆன் 8:9)

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது : பத்ருப் போரின் போது நபி (ஸல்) அவர்கள், “இதோ ஜிப்ரீல்! போர்த் தளவாடங்களுடன் தமது குதிரையின் தலையை (அதன் கடிவாளத்தை)ப் பிடித்துக் கொண்டிருக்கிறார்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி),

நூல் : புகாரி (3995)

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அன்றைய தினத்தில் முஸ்லிம்களில் ஒருவர் தமக்கு முன் சென்றுகொண்டிருந்த இணைவைப்பாளர்களில் ஒருவரை விரட்டிச் சென்றுகொண்டிருந்தார். அப்போது தமக்கு மேலே சாட்டையைச் சுழற்றி அடிக்கும் சப்தத்தையும், ஒரு குதிரை வீரர் “ஹைஸூம்! முன்னேறிச் செல்” என்று கூறியதையும் செவியுற்றார்.

உடனே தமக்கு முன்னால் சென்றுகொண்டிருந்த அந்த இணைவைப்பாளர் மல்லாந்து வீழ்ந்து கிடப்பதைக் கண்டார். அந்த இணைவைப்பாளரின் (அருகில் சென்று) அவர் பார்த்த போது, அவனது மூக்கில் காயமேற்பட்டிருப்பதையும் சாட்டையால் அடிபட்டது போல் அவனது முகம் கிழிந்து முகமெல்லாம் பச்சையாகக் கன்றிப் போயிருப்பதையும் கண்டார்.

உடனே அந்த அன்சாரீ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, அதைப் பற்றித் தெரிவித்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “நீர் சொன்னது உண்மையே. இது மூன்றாவது வானிலிருந்து இறங்கிய (வானவர்களின்) உதவியாகும்” என்று கூறினார்கள். (முஸ்லிம்கள்) அன்றைய தினத்தில் (இணைவைப்பாளர்களில்) எழுபது பேரைக் கொன்றனர்; எழுபது பேரைச் சிறைப்பிடித்தனர்.

நூல் : முஸ்லிம் (3621)

//அபூஜஹ்லைக் கொன்ற இரு இளைஞர்கள்//

____________________________________

இஸ்லாத்தின் முதல் எதிரியாக இருந்த அபூஜஹ்லை அன்சாரித் தோழர்களான இரு இளைஞர்களே கொன்றனர். இந்த இளைஞர்கள் இதற்கு முன்னர் அபூஜஹ்லைப் பார்த்ததுகூட கிடையாது.

பத்ருப் போரின் போது நான் (படை) அணியில் நின்றுகொண்டிருந்த நேரத்தில் என் வலப் பக்கமும் இடப் பக்கமும் நான் பார்த்தேன். என்னருகே (இரு பக்கங்களிலும்) இளவயதுடைய இரு அன்சாரிச் சிறுவர்கள் நின்று கொண்டிருந்தனர்.

“அவர்களைவிடப் பெரிய வயதுடையவர்களுக்கிடையே நான் இருந் திருக்கக் கூடாதா’ என்று நான் ஆசைப்பட்டேன். அவர்களில் ஒருவர் என்னை நோக்கிக் கண்சாடை செய்து, “என் பெரிய தந்தையே! நீங்கள் அபூஜஹ்லை அறிவீர்களா?” என்று கேட்டார். நான், “ஆம் (அறிவேன்); உனக்கு அவனிடம் என்ன வேலை? என் சகோதரர் மகனே!” என்று கேட்டேன்.

அதற்கு அச்சிறுவர், “அவன் அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களைத் திட்டுகிறான் என்று எனக்குத் தெரிவிக்கப் பட்டது. என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! நான் அவனைப் பார்த்தால் எங்களில் எவர் விரைவில் மரணிக்க வேண்டியுள்ளதோ அவர் (அதாவது எங்கள் இருவரில் ஒருவர்) மரணிக்கும் வரை அவனது உடலை எனது உடல் பிரியாது (அவனுடன் போரிட்டுக் கொண்டே யிருப்பேன்)” என்று கூறினார். இதைக் கேட்டு நான் வியந்து போனேன்.

அப்போது மற்றொரு சிறுவரும் கண்சாடை காட்டி முதல் சிறுவர் கூறியதைப் போன்றே கூறினார். சிறிது நேரம் தான் கழிந்திருக்கும்.

அதற்குள் அபூஜஹ்ல் மக்களிடையே சுற்றி வருவதைக் கண்டு, “இதோ, நீங்கள் விசாரித்த உங்கள் ஆசாமி!” என்று கூறினேன். உடனே, இருவரும் தங்கள் வாட்களை எடுத்துக் கொண்டு போட்டி போட்டபடி (அவனை நோக்கிச்) சென்று அவனை வெட்டிக் கொன்றுவிட்டார்கள்.

பிறகு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று அபூஜஹ்லைக் கொன்று விட்ட செய்தியைத் தெரிவித் தார்கள். நபி (ஸல்) அவர்கள், “உங்களில் யார் அவனைக் கொன்றது?” என்று கேட்டார்கள்.

அவர்களில் ஒவ்வொரு வரும், “நான் தான் (அவனைக் கொன்றேன்)” என்று பதிலளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள், “உங்கள் வாட்களை நீங்கள் (இரத்தக் கறை போகத்) துடைத்து விட்டீர்களா?” என்று கேட்டார்கள். இருவரும், “இல்லை” என்று பதிலளித் தார்கள். நபி (ஸல்) அவர்கள் வாட்கள் இரண்டையும் நன்கு பார்த்து விட்டு, “நீங்கள் இருவருமே அவனைக் கொன்றிருக்கிறீர்கள்.

(முஆத் பின் அம்ருடைய வாளில் ஆழமான இரத்தக் கறை தென்படுவதால்) “அபூஜஹ்லுடைய உடலில் இருந்து எடுத்த பொருட்கள் முஆத் பின் அம்ரு பின் ஜமூஹுக்கு உரியவை” என்று கூறினார்கள். அந்தச் சிறுவர்கள் இருவரும் முஆத் பின் அஃப்ரா (ரலி) அவர்களும் முஆத் பின் அம்ரு பின் ஜமூஹ் (ரலி) அவர்களும் ஆவர்.

அறிவிப்பவர் : அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி),

நூல் :புகாரி (3141)

பத்ருப் போர் (நடந்த) நாளில், “அபூ ஜஹ்ல் என்ன ஆனான் என்று பார்த்து வருபவர் யார்?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். உடனே இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் (அவனைப் பார்த்து வரப்) போனார்கள். அவனை அஃப்ராவின் இரு புதல்வர்கள் (முஆத், முஅவ்வித் ஆகிய இருவரும் பலமாகத்) தாக்கிவிடவே அவன் குற்றுயிராக இருக்கக் கண்டார்கள்.

இப்னு மஸ் ஊத் (ரலி) அவர்கள் அவனது தாடியைப் பிடித்துக் கொண்டு, “அபூஜஹ்லே! நீயா?” என்று கேட்டார்கள். (அப்போது) அவன், “தம் (சமுதாயத்து) மக்களாலேயே கொல்லப் பட்டுவிட்ட ஒரு மனிதனுக்கு மேலாக…. அல்லது நீங்களே கொன்றுவிட்ட ஒரு மனிதனுக்கு மேலாக…. ஒருவன் உண்டா?” என்று கேட்டான்.

அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி),

நூல் :புகாரி (3963)

பத்ருப் போரில் அபூஜஹ்லின் உயிர் ஊசலாடிக் கொண்டிருந்த போது நான் அவனிடம் வந்தேன். அப்போது அவன், “நீங்கள் எவனைக் கொலை செய்தீர்களோ அவனை விடச் சிறந்தவன் ஒருவன் உண்டா?” என்று (தன்னைத் தானே புகழ்ந்தபடிச்) சொன்னான்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி),

நூல் :புகாரி (3961)

//கொல்லப்பட்ட முஸ்லிம்கள்//

_________________________

பத்ருப் போரில் முஸ்லிம்கள் தரப்பிலும் சில தோழர்கள் கொல்லப்பட்டார்கள். எதிர்கள் தரப்பில் பெரும் தலைவர்களும் மற்றும் பலரின் தலைகளும் உருட்டப்பட்டன.

ஹாரிஸா பின் சுராகா (ரலி) அவர்களின் தாயாரான உம்மு ருபைய்யிஉ பின்த்து பராஉ (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! ஹாரிஸாவைப் பற்றி தாங்கள் எனக்குச் செய்தியறிவிக்க மாட்டீர்களா? அவர் பத்ருப் போரன்று கொல்லப்பட்டிருந்தார்; அவர் மீது எங்கிருந்தோ வந்த அம்பு ஒன்று பாய்ந்து விட்டிருந்தது. அவர் சொர்க்கத்தில் இருந்தால் நான் பொறுமையைக் கைக்கொள்வேன்; அவர் வேறெந்த (துன்ப) நிலையிலாவது இருந்தால் அவருக்காக நான் கடுமையாக அழுவேன்” என்று கூறினார்கள்.

நபி (ஸல்) அவர்கள் “ஹாரிஸாவின் தாயே! சொர்க்கத்தில் பல (படித்தரங்கள் கொண்ட) தோட்டங்கள் உள்ளன. உன் மகன் (அவற்றில்) மிக உயர்ந்த ஃபிர்தவ்ஸ் என்னும் சொர்க்கத் (தோட்டத்)தை (தன் உயிர்த் தியாகத் திற்கான பிரதிபலனாகப்) பெற்றுக் கொண்டார்” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி),

நூல் :புகாரி (2809)

எனக்குத் திருமணம் நடந்த அன்று காலை நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். -(இந்த ஹதீஸைக் கேட்டுக் கொண்டிருந்த காலித் பின் தக்வான் அவர்களிடம்) “எனக்கருகில் நீங்கள் அமர்ந் திருப்பது போல நபி (ஸல்) அவர்கள் எனது விரிப்பின் மீது அமர்ந்தார்கள்” (என்று ருபய்யிஉ கூறினார்கள்)- அங்கு சில (முஸ்லிம்) சிறுமிகள் (சலங்கையில்லா) கஞ்சிராக்களை அடித்துக் கொண்டு பத்ருப் போரில் கொல்லப்பட்ட தங்கள் முன்னோர்களைப் புகழ்ந்து (இரங்கல்) பாடிக் கொண்டிருந்தனர்.

அவர்களில் ஒரு சிறுமி, “எங்களிடையே ஓர் இறைத்தூதர் இருக்கிறார். அவர் நாளை நடக்க விருப்பதையும் அறிவார்” என்று கூறினாள். உடனே நபி (ஸல்) அவர்கள், “இப்படிச் சொல்லாதே. (இதை விடுத்து) முன்பு நீ சொல்லிக் கொண்டிருந்ததை (வேண்டுமானால்) சொல்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : ருபய்யிவு பின்த் முஅவ்வித் (ரலி),

நூல் : புகாரி (4001)

//கொல்லப்பட்ட இணைவைப்பாளர்கள்///

_________________________________

அபூஜஹ்ல் கூட்டத்தினரில் 70க்கும் அதிமானவர்கள் கொல்லப்பட்டார்கள்.

உஹுதுப் போரின் போது நபி (ஸல்) அவர்கள், (மலைக்கணவாயில்நிறுத்தப்பட்ட) அம்பெய்யும் வீரர்களுக்கு அப்துல்லாஹ் பின் ஜுபைர் (ரலி) அவர்களை(த்தலைவராக) நியமித்தார்கள். (அந்தப் போரின் போது முஸ்லிம்களாகிய) எங்களில் எழுபது பேர்களை (இணைவைப்பவர்களான) அவர்கள் கொன்றனர். (அதற்கு முன் நடந்த) பத்ருப் போரின் போது நபி (ஸல்) அவர்களும், அவர்களுடைய தோழர்களும் இணை வைப்பவர்களில் எழுபது பேர்களைக் கைது செய்து இன்னும் எழுபது பேர்களைக் கொன்று, (ஆக மொத்தம்) நூற்றி நாற்பது பேர்களை வீழ்த்தினார்கள். (இதைப் பற்றி) அபூ சுஃப்யான் கூறினார்: இந்த (உஹுதுப் போரின்) நாள் பத்ருடைய நாளுக்கு பதிலாகும். போர் என்பதே (கிணற்று) வாளிகள் தாம். (மாறி, மாறி தான் இறைக்க முடியும்)”

அறிவிப்பவர் : பரா (ரலி),

நூல் : புகாரி (3986)


//கிணற்றில் போடப்பட்ட இணைவைப்பாளர்கள்//

_______________________________________

பத்ருப் போரில் கொல்லப்பட்ட இணைவைப்பாளர்களில் 24 தலைவர்கள் கிணற்றில் போடப்பட்டார்கள்.

பத்ருப் போர் (நடந்து முடிந்த) நாளன்று நபி (ஸல்) அவர்கள், குறைஷித் தலைவர்களில் இருபத்தி நான்கு பேர்(களின் சடலங்)களை பத்ருடைய கிணறுகளில் அசுத்தமானதும், அசுத்தப்படுத்தக் கூடியதுமான (கற்களால் உட்சுவர் எடுக்கப்பட்ட) கிணறு ஒன்றில் தூக்கிப் போடுமாறு உத்தரவிட்டார்கள்.

(எதிரிக்) கூட்டத்தினர் எவரிடமாவது நபி (ஸல்) அவர்கள் போரிட்டு வெற்றி கண்டால் (போரிட்ட இடத்திலுள்ள) திறந்த வெளியில் மூன்று நாட்கள் தங்கிச் செல்வது அவர்களது வழக்கமாக இருந்தது. பத்ர் முடிந்த மூன்றாம் நாள் தம்முடைய வாகன(மான ஒட்டக)த்தின் மீது அதன் சிவிகையை (ஏற்றிக்) கட்டுமாறு நபி(ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள். ஆகவே, அதன் மீது அதன் சிவிகை கட்டப்பட்டது. பிறகு நபி (ஸல்) அவர்கள் (புறப்பட்டுச்) சென்றார்கள். அவர்களுடைய தோழர்களும்அவர்களைப் பின் தொடர்ந்தனர்.

நபி (ஸல்) அவர்கள் ஏதோ தமது தேவை ஒன்றிற்காகவே செல்கிறார்கள் என்றே நாங்கள் நினைத்தோம். இறுதியில், அந்தக் (குறைஷித் தலைவர்கள் போடப்பட்டிருந்த) கிணற்றருகில் நபியவர்கள் நின்றார்கள்.

(கிணற்றோரம் நின்றிருந்த) நபி (ஸல்) அவர்கள், (அதில் எறியப்பட்டிருந்த) அவர் களுடைய பெயர்களையும், அவர்களுடைய தந்தையரின் பெயர்களையும் குறிப்பிட்டு, “இன்னாரின் மகன் இன்னாரே! இன்னாரின் மகன் இன்னாரே! அல்லாஹ்வுக்கும் அவனு டைய தூதருக்கும் நீங்கள் கீழ்ப்படிந்து நடந்திருந்தால் (இப்போது அது) உங்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் தானே! ஏனெனில், எங்களுடைய இரட்சகன் எங்களுக்கு வாக்களித்த (நன்மை)தனை உண்மையானதே என்று நாங்கள் கண்டு கொண்டோம். உங்களுக்கு உங்களுடைய இரட்சகன் வாக்களித்த (தண்டனை)தனை உண்மையானது தான் என்று நீங்கள் கண்டு கொண்டீர்களா?” என்று கூறினார்கள்.

உடனே (அருகிலிருந்த) உமர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! உயிரற்ற சடலங்களிடமா பேசுகிறீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “என்னுடைய உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீதாணையாக! நான் கூறுவதை (கிணற்றில் உள்ள) இவர்களை விட நன்கு செவியேற்பவர்களாக நீங்கள் இல்லை” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூதல்ஹா (ரலி)

நூல் : புகாரி (3976)

உர்வா பின் ஸுபைர் அவர்கள் கூறியதாவது:

“குடும்பத்தினர் (ஒப்பாரி வைத்து) அழுவதால் மண்ணறையில் (இருக்கும் அவர்களின் உறவினரான) இறந்தவர் வேதனை செய்யப்படுகின்றார்” என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் என்று ஆயிஷா (ரலி) அவர்களிடம் தெரிவிக்கப் பட்டது. அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள், “(நபி -ஸல்- அவர்கள் அப்படிச் சொல்ல வில்லை.) “இறந்தவர் (தன் வாழ்நாளில் புரிந்த) சிறிய, பெரிய பாவங்களின் காரணத்தால் வேதனை செய்யப்படுகிறார். அவருடைய குடும்பத்தினரோ, இப்போது அவருக்காக அழுதுகொண்டிருக்கின்றனர்’ என்று தான் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்” என்று சொன்னார்கள்.

(மேலும்) ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்: இது எப்படியிருக்கிறதென்றால், “(குறைஷித் தலைவர்களான) இணைவைப்பவர்கள் பத்ரில் கொல்லப்பட்டு எறியப்பட்டிருந்த கிணற்றுக்கு அருகில் நின்று கொண்டு, அவர்களைப் பார்த்து நபி (ஸல்) அவர்கள் ஏதோ பேசினார்கள். (அப்போது நபி ஸல்-அவர்களிடம், “உயிரற்ற சடலங்களிடமா பேசுகிறீர்கள்?’ என்று உமர் -ரலி- அவர்கள் கேட்ட போது) “நான் கூறுவதை அவர்கள் செவியேற்கிறார்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்ததாக இப்னு உமர் கூறியதைப் போன்றது தான் இதுவும்.

ஆனால், “நான் அவர்களுக்குச் சொல்லி வந்ததெல்லாம் உண்மையென்று இப்போது அவர்கள் அறிகிறார்கள்” என்று தான் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (இப்போது நான் கூறுவதை அவர்கள் செவியேற்கிறார்கள்” என்று நபியவர்கள் சொல்லவில்லை.)

பிறகு, (இறந்தவர்கள் நாம் பேசுவதைச் செவியேற்பதில்லை என்ற தமது கருத்திற்குச் சான்றாக) ஆயிஷா (ரலி) அவர்கள் (பின்வரும் வசனங்களை) ஓதினார்கள்:

(நபியே!) இறந்தவர்களை உங்களால் கேட்கச் செய்ய முடியாது.

அல்குர்ஆன் 27:80

(நபியே!) மண்ணறைகளில் இருப்ப வர்களை உங்களால் செவியேற்கச் செய்ய முடியாது.

அல்குர்ஆன் 35:22

“நரகத்தில் அவர்கள் தங்களின் இருப்பிடங்களில் ஒதுங்கும் போது (இந்நிலை ஏற்படும்)” என ஆயிஷா (ரலி) அவர்கள் (விளக்கம்) கூறினார்கள்.

நூல் : புகாரி (3978,3979)

//கைதிகள்//

__________

பத்ருப் போரில் முஸ்லிம்கள் வெற்றியடைந்த நிலையில் சுமார் 70 நபர்கள் கைதிகளாக பிடிக்கப்பட்டனர். அவர்களை என்ன செய்வது? என்று நபி (ஸல்) அவர்கள் தன் தோழர்களிடம் ஆலோசனை செய்தார்கள்.

(அதற்கு முன் நடந்த) பத்ருப் போரின் போது நபி (ஸல்) அவர்களும், அவர்களுடைய தோழர்களும் இணை வைப்பவர்களில் எழுபது பேர்களைக் கைது செய்து இன்னும் எழுபது பேர்களைக் கொன்று, (ஆக மொத்தம்) நூற்றி நாற்பது பேர்களை வீழ்த்தினார்கள். (இதைப் பற்றி) அபூ சுஃப்யான் கூறினார்: இந்த (உஹுதுப் போரின்) நாள் பத்ருடைய நாளுக்கு பதிலாகும். போர் என்பதே (கிணற்று) வாளிகள் தாம்.(மாறி, மாறி தான் இறைக்க முடியும்)”

அறிவிப்பவர் : பரா (ரலி),

நூல் :புகாரி (3986)

//ஆலோசனை//

_____________

முஸ்லிம்கள் எதிரிகளைச் சிறைப்பிடித்தபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடமும் உமர் (ரலி) அவர்களிடமும் “இந்தக் கைதிகள் விஷயத்தில் நீங்கள் என்ன கருதுகிறீர்கள் (இவர்களை என்ன செய்யலாம்)?” என்று (ஆலோசனை) கேட்டார்கள்.

அபூபக்ர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! (எதிரிகளாயினும்) அவர்கள் (நம்) தந்தையின் சகோதரர் புதல்வர்களே; நம் குலத்தாரே. அவர்களிடமிருந்து ஏதேனும் பிணைத் தொகையைப் பெற்றுக்கொள்ளுங்கள்; அது இறைமறுப்பாளர்களுக்கெதிரான பலமாக நமக்கு அமையும். அவர்களுக்கு அல்லாஹ் இஸ்லாத்திற்கு வழிகாட்டக்கூடும். இவ்வாறே நான் கருதுகிறேன்” என்றார்கள்.

பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “நீங்கள் என்ன கருதுகிறீர்கள், கத்தாபின் புதல்வரே?” என்று கேட்டார்கள்.

உமர் (ரலி) அவர்கள், “இல்லை, அல்லாஹ்வின் மீதாணையாக! (இவ்வாறு செய்யாதீர்கள்), அல்லாஹ்வின் தூதரே! எனது கருத்து அபூபக்ர் அவர்களின் கருத்தைப் போன்றதன்று. மாறாக, அவர்களை எங்களிடம் ஒப்படைத்துவிடுங்கள்.

அவர்களின் கழுத்துகளை நாங்கள் துண்டித்துவிடுகிறோம். அக்கீலை அலீ அவர்களிடம் ஒப்படைத்துவிடுங்கள்; அவரது கழுத்தை அலீ துண்டிக்கட்டும்! (உமர் (ரலி) அவர்கள் தம் குலத்தாரில் ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டு) இன்ன மனிதரை என்னிடம் ஒப்படையுங்கள். நான் அவரது கழுத்தைத் துண்டித்துவிடுகிறேன். ஏனெனில், இவர்கள் இறைமறுப்பின் தலைவர்கள்; அதன் முன்னோடிகள். (எனவே, பிணைத் தொகை பெற்று இவர்களை விடுவிக்க வேண்டாம்)” என்று (ஆலோசனை) கூறினார்கள்.

//இறைவனின் கண்டனம்//

______________________

உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

அபூபக்ர் (ரலி) அவர்களின் கருத்தையே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விரும்பினார்கள். எனது கருத்தை அவர்கள் ஆதரிக்கவில்லை. மறுநாள் சென்றபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அபூபக்ர் (ரலி) அவர்களும் அமர்ந்து அழுதுகொண்டிருந்தனர்.

நான் “அல்லாஹ்வின் தூதரே! நீங்களும் உங்கள் நண்பரும் ஏன் அழுகிறீர்கள்? உங்கள் அழுகைக்கான காரணத்தை அறிந்தால் நானும் அழுவேன். அழுகை வராவிட்டாலும் உங்கள் இருவரது அழுகையைக் கண்டு அழுவது போன்றாவது இருப்பேனே!” என்று கூறினேன்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “கைதிகளிடமிருந்து பிணைத் தொகையைப் பெற்றுக்கொண்டு அவர்களை விடுவித்துவிடலாம் என உங்களுடைய நண்பர்கள் எனக்குக் கூறிய ஆலோசனைக்காகவே நான் அழுகிறேன்.

ஆனால், (இதோ) இந்த மரத்திற்கு அருகில் அந்த எதிரிகள் வேதனை செய்யப்படுவது எனக்கு எடுத்துக் காட்டப்பட்டது என்று (தமக்கு அருகிலிருந்த ஓர் மரத்தைக் காட்டி) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அப்போது அல்லாஹ், “பூமியில் எதிரிகளை வேரறுக்கும்வரை சிறைப்பிடித்தல் எந்த நபிக்கும் தகாது” என்று தொடங்கி, “நீங்கள் அடைந்த போர்ச் சொல்வங்களை அனுமதிக்கப்பட்ட தூய்மையானவையாகவே (கருதி) உண்ணுங்கள்” (8:67-69) என்பது வரை (மூன்று வசனங்களை) அருளினான். அப்போதுதான் போர்ச் செல்வங்களை அவர்களுக்கு அல்லாஹ் அனுமதித்தான்.

//பிணைத் தொகை//

________________

பத்ருப் போரில் கைது செய்யப்பட்டவர்களை குறிப்பிட்ட தொகை பெற்றக் கொண்டு அவர்களை நபிகளார் விடுதலை செய்தார்கள்.

என் தந்தை ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்கள் பத்ருப் போர்க் கைதிகளின் (பிணைத் தொகை மற்றும் விடுதலை) விஷயமாக நபி (ஸல்) அவர்களிடம் சென்றிருந்தார்கள். அப்போது, “நபி (ஸல்) அவர்கள் மஃக்ரிப் தொழுகையில் “தூர்’ அத்தியாயத்தை ஓதக் கேட்டேன்” என்று (என் தந்தை) கூறினார்கள்.

அறிவிப்பவர் : முஹம்மத் பின் ஜுபைர்.

நூல் :புகாரி (3050)

//வீரர்களின் சிறப்புகள்//

___________________

பத்ருப் போரில் கலந்து கொண்ட வீரர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் தனி சிறப்புகளை கூறியுள்ளார்கள். அவர்களின் பாவங்கள் மன்னிக்கப்பட்டவர்களாகவும் சொர்க்கவாசிகளாகவும் இருப்பார்கள் என்று கூறியுள்ளார்கள்.

ஹாரிஸா பின் சுராகா (ரலி) அவர்களின் தாயாரான உம்மு ருபைய்யிஉ பின்த்து பராஉ (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! ஹாரிஸாவைப் பற்றி தாங்கள் எனக்குச் செய்தியறிவிக்க மாட்டீர்களா? அவர் பத்ருப் போரன்று கொல்லப்பட்டிருந்தார்; அவர் மீது எங்கிருந்தோ வந்த அம்பு ஒன்று பாய்ந்து விட்டிருந்தது. அவர் சொர்க்கத்தில் இருந்தால் நான் பொறுமையைக் கைக்கொள்வேன்; அவர் வேறெந்த (துன்ப) நிலையிலாவது இருந்தால் அவருக்காக நான் கடுமையாக அழுவேன்” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் “ஹாரிஸாவின் தாயே! சொர்க்கத்தில் பல (படித்தரங்கள் கொண்ட) தோட்டங்கள் உள்ளன. உன் மகன் (அவற்றில்) மிக உயர்ந்த ஃபிர்தவ்ஸ் என்னும் சொர்க்கத் (தோட்டத்)தை (தன் உயிர்த் தியாகத் திற்கான பிரதிபலனாகப்) பெற்றுக் கொண்டார்” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி),

நூல் : புகாரி (2809)

//நீங்கள் விரும்பியதைச் செய்யுங்கள். உங்களுக்கு சொர்க்கம் உறுதியாகிவிட்டது!//

________________________________

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குதிரை வீரர்களான என்னையும், அபூமர்ஸத் (கினாஸ் பின் ஹுஸைன்)அவர்களையும், ஸுபைர் பின் அவ்வாம் அவர்களையும், “நீங்கள் “ரவ்ளத்து காக்’ என்னுமிடம் வரை செல்லுங்கள்; ஏனெனில், அங்கு (ஒட்டகச் சிவிகையில்) இணைவைப்பவர்களில் ஒருத்தி இருக்கிறாள். இணைவைப்பவர்(களின் தலைவர்)களுக்கு ஹாதிப் பின் அபீ பல்தஆ அனுப்பியுள்ள (நமது ரகசியத் திட்டங்களைத் தெரிவிக்கும்) கடிதம் ஒன்று அவளிடம் இருக்கும்; (அவளிடமிருந்து கடிதத்தைக் கைப்பற்றி வாருங்கள்)” என்று கூறினார்கள். (பிறகு நாங்கள் புறப்பட்டுப் போனோம்).

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குறிப் பிட்ட இடத்தில் அந்தப் பெண் தனது ஒட்டகத்தில் சென்று கொண்டிருக்க, அவளை நாங்கள் அடைந்தோம். அவளிடம், “கடிதம் (எங்கே? அதை எடு)” என்று கேட்டோம். அவள், “எம்மிடம் கடிதம் எதுவுமில்லை” என்று பதிலளித்தாள். (அவள் அமர்ந்திருந்த) ஒட்டகத்தை நாங்கள் படுக்க வைத்து (அந்தக் கடிதத்தைத்) தேடினோம். எந்தக் கடிதத்தையும் நாங்கள் காணவில்லை. அப்போது, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பொய் சொல்லமாட்டார்கள். ஒன்று, நீயாக கடிதத்தை எடு(த்துக் கொடு); அல்லது உன்னை(ச் சோதிப்பதற்காக உனது ஆடையை) நாங்கள் கழற்ற வேண்டியிருக்கும்” என்று நாங்கள் சொன்னோம்.

விடாப் பிடியாக (நாங்கள்) இருப்பதை அவள் கண்ட போது, (கூந்தல் நீண்டு தொங்கும்) தனது இடுப்புப் பகுதிக்கு அவள் கையைக் கொண்டு சென்றாள். அவள் ஒரு துணியை இடுப்பில் கட்டியிருந்தாள். (அங்கிருந்து) அ(ந்தக் கடிதத்)தை வெளியில் எடுத்தாள். அந்தக் கடிதத்துடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நோக்கி நடந்தோம். அப்போது உமர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! அவர் (ஹாதிப் பின் அபீ பல்தஆ) அல்லாஹ் வுக்கும் அவனுடைய தூதருக்கும், இறை நம்பிக்கையாளர்களுக்கும் துரோகமிழைத்து விட்டார். என்னை விடுங்கள்; அவரது கழுத்தைக் கொய்துவிடுகிறேன்” என்று கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் (ஹாதிப் அவர்களை நோக்கி), ஏன் இப்படிச் செய்தீர்கள்? என்று கேட்டார்கள். “அல்லாஹ் வின் மீதாணையாக! அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் விசுவாசமில்லாத வனாக நடந்து கொள்ள வேண்டுமென்பது என் நோக்கமல்ல.

இணைவைப்பாளர் (களுக்கு நான் செய்யும் இந்த உதவியால் அவர்)களிடம் எனக்கு ஒரு செல்வாக்குக் கிடைத்து, அதன் மூலம் அல்லாஹ் (மக்காவிலிருக்கும்) என் மனைவி மக்களையும், என் செல்வத்தையும் பாதுகாக்க வேண்டும் என்றே நான் நினைத்தேன்.

தங்கள் தோழர்கள் அனைவருக்குமே மக்காவில் அவர்களுடைய மனைவி மக்களையும், அவர்களது செல்வத் தையும் எவர் மூலமாக அல்லாஹ் பாதுகாப்பானோ அத்தகைய உறவினர்கள் இருக் கின்றனர்” என்று கூறினார். (இதைக் கேட்ட) நபி (ஸல்) அவர்கள், “இவர் உண்மை சொன்னார். இவரைப் பற்றி நல்லதையே சொல்லுங்கள்” என்று (தோழர்களைப் பார்த்துக்) கூறினார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள், “இவர் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும், இறைநம்பிக்கை யாளர்களுக்கும் துரோகமிழைத்து விட்டார். என்னை விடுங்கள்; இவரது கழுத்தைக் கொய்து விடுகிறேன் என்று (மீண்டும்) கூறினார்கள்.

அப்போது நபி (ஸல்) அவர்கள், “இவர் பத்ருப் போரில் கலந்து கொண்டவர் அல்லவா? பத்ரில் கலந்து கொண்டவர்களை நோக்கி அல்லாஹ், “நீங்கள் விரும்பியதைச் செய்யுங்கள். உங்களுக்கு சொர்க்கம் உறுதியாகிவிட்டது’… அல்லது “உங்கள் பாவங்களை நான் மன்னித்துவிட்டேன்’…. என்று கூறி விட்டிருக்கலாம் அல்லவா?” என்று சொன்னார்கள்.

இதைக் கேட்ட உமர் (ரலி) அவர்கள் தமது கண்கள் கண்ணீர் உகுத்துக் கொண்டிருக்க, “அல்லாஹ்வும் அவனது தூதருமே நன்கறிந்தவர்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அலீ (ரலி),

நூல் : புகாரி (3983)

நபி (ஸல்) அவர்களிடம் (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து, “உங்களிடையே பத்ருப் போரில் கலந்து கொண்டவரைப் பற்றி என்ன கருதுகிறீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “(பத்ரில் கலந்து கொண்டோர்) முஸ்லிம்களில் சிறந்தவர்கள்” என்றோ அல்லது அது போன்ற வேறொரு வார்த்தையையோ கூறினார்கள். (உடனே) ஜிப்ரீல் (அலை) அவர்கள், “இவ்வாறுதான் வானவர்களில் பத்ருப் போரில் கலந்து கொண்டவர்கள் (எங்களில் சிறந்தவர்கள் என்று நாங்களும் கருதுகிறோம்)” என்று கூறினார்கள்.

இந்த ஹதீஸை பத்ருப் போரில் கலந்து கொண்டவரான ரிஃபாஆ பின் ராஃபிஉ அஸ் ஸுரகீ (ரலி) அவர்களிடமிருந்து அவர்களின் புதல்வர் முஆத் பின் ரிஃபாஆ (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல் : புகாரி (3992)

கைஸ் பின் அபீ ஹாஸிம் அவர்கள் கூறியதாவது: பத்ருப் போரில் கலந்து கொண்டவர்களின் (வருடாந்திர உதவித்) தொகை (நபர் ஒன்றுக்கு, தீனார்/திர்ஹம்) ஐயாயிரம், ஐயாயிரமாக இருந்தது. உமர் (ரலி) அவர்கள் (தமது ஆட்சிக் காலத்தின் போது), “(உதவித் தொகையை) மற்றவர்களை விட இவர்களுக்கு அதிக மாக்கித் தருவேன்” என்று கூறினார்கள்.

நூல் : புகாரி (4022)

(ஒரு முறை) ஹாத்திப் (ரலி) அவர்களின் அடிமை ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து (தம் உரிமையாளர்) ஹாத்திபைப் பற்றி முறையிட்டார்; “அல்லாஹ்வின் தூதரே! ஹாத்திப் கட்டாயம் நரகத்திற்குத்தான் செல்வார்” என்று கூறினார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நீ தவறாகச் சொல்கிறாய். அவர் (நரகத்திற்குச்) செல்லமாட்டார். ஏனெனில், அவர் பத்ருப் போரிலும் ஹுதைபியாவிலும் கலந்துகொண்டிருக்கிறார்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி),

நூல் : புகாரி (4908)

//கனீமத்//

_________

பத்ருப் போரில் முஸ்லிம்கள் வெற்றி பெற்றதால் எதிரிகளின் பொருட்கள் முஸ்லிம்களுக்கு பதிர்ந்தளிக்கப்பட்டது.

பத்ருப் போரின் போது போரில் கிடைத்த செல்வத்திலிருந்து எனது பங்காக வயதான ஒட்டகம் ஒன்று எனக்குக் கிடைத்திருந்தது. நபி (ஸல்) அவர்களும் (தமக்குக் கிடைத்த ஐந்தில் ஒரு பாகமான) குமுஸில் இருந்து எனக்கு மற்றொரு கிழட்டு ஒட்டகத்தைத் தந்திருந்தார்கள்.

அறிவிப்பவர் : அலீ (ரலி).

நூல் : புகாரி (3091)

உஸ்மான் (ரலி) அவர்கள் பத்ருப் போரில் கலந்து கொள்ளாமல் போனதற்குக் காரணம், அவரது மனைவியாக அல்லாஹ்வின் தூதருடைய மகள் (ருகைய்யா (ரலி) அவர்கள்) இருந்தார்கள். மேலும், அவர்கள் நோய்வாய்ப்பட்டிருந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் உஸ்மான் (ரலி) அவர்களிடம், “பத்ருப் போரில் கலந்து கொண்டவருக்குரிய நற் பலனும் (போர்ச் செல்வத்தில்) அவருக்குரிய பங்கும் உங்களுக்கு உண்டு” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி),

நூல் : புகாரி (3130

_____________________________

ஏகத்துவம்

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed