நோன்பு வைக்க தடுக்கப்பட்ட நாட்கள்

நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப் பெருநாளிலும் நோன்பு நோற்பதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 1864

ஓர் ஊரில் அல்லது அந்த ஊரைச் சார்ந்துள்ள பகுதியில் பிறை பார்க்கப்பட்டு பெருநாளை முடிவு செய்கின்றார்கள். இந்த ஊரில் நோன்பு நோற்பது மேற்கண்ட ஹதீஸ் அடிப்படையில் மார்க்கத்தில் தடை செய்யப்பட்டதாகும்.

உலகமெங்கும் ஒரே பிறை என்று வாதிடுபவர்கள் இந்த ஹதீஸை எடுத்துக் கொண்டு உலகில் ஏதோ ஒரு பகுதியில் பெருநாளாக இருந்தால் உலகம் முழுவதும் நோன்பு வைப்பது ஹராம் என்று கூறுகின்றார்கள்.

உலகம் முழுவதும் ஒரே நாளில் பெருநாள் என்று கூறுவது மார்க்க அடிப்படையில் ஏற்றுக் கொள்ள முடியாத அபத்தமான வாதம் என்பதை சந்தேகத்துக்கிடமின்றி நிரூபித்துள்ளோம்.

எனவே பெருநாளில் நோன்பு நோற்பது ஹராம் என்றால் தத்தமது பகுதியில் பிறை பார்த்து பெருநாள் என்று அறிவிக்கப்பட்டால் அப்பகுதியில் உள்ளவர்கள் அன்று நோன்பு வைக்கக் கூடாது என்பதே பொருள். பிறை பார்க்கப்படாத பகுதிகளுக்கு இன்னும் பெருநாள் வராததால் அவர்கள் நோன்பு பிடிப்பதை விட்டு விடக் கூடாது.

பெருநாள் தினத்தில் நோன்பு நோற்பது ஹராம் என்பது மக்களுக்கு நன்றாகத் தெரிந்திருப்பதால் இதைத் தங்களுக்குச் சாதகமாக்கி மக்களை அச்சுறுத்துகிறார்கள்.

சவூதியில் பெருநாள் என்று அறிவித்த பின் நாம் எப்படி நோன்பு வைக்கலாம்? என்ற அச்சத்தில் சிலர் நோன்பை விட்டு விடுகிறார்கள். பெருநாளில் நோன்பு நோற்பது தடை செய்யப்பட்டது போல் ரமளானுக்கு ஒருநாள் முன் அல்லது இரண்டு நாட்களுக்கு முன் நோன்பு நோற்பதும் தடை செய்யப்பட்டுள்ளது.

நமது பகுதியில் நாளை தான் நோன்பு ஆரம்பமாகவுள்ளது என்ற நிலையில் சவூதியின் அறிவிப்பைக் கேட்டு முதல் நாள் நோன்பு வைத்தால் அந்தத் தடையை மீறும் நிலை ஏற்படுகிறது.

பெருநாளில் நோன்பு நோற்பது பற்றி நமக்கு அச்சம் ஏற்படுவது போல் ரமளானுக்கு முந்தைய இரண்டு நாட்களில் நோன்பு நோற்பது பற்றியும் அஞ்ச வேண்டும்.

உங்களில் ஒருவர் ரமளான் மாதத்திற்கு ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களுக்கு முன்னால் நோன்பு பிடிக்க வேண்டாம். அவர் வழக்கமாகப் பிடிக்கும் நோன்பு அந்நாளில் அமைந்து விட்டால் தவிர” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 1914

 

பெருநாள் தினத்தில் நோன்பு நோற்பது தடுக்கப்பட்டது போல் ரமலானுக்கு ஒரு நாள் முன்பாகவும், இரண்டு நாட்களுக்கு முன்பாகவும் அதாவது ஷஃபான் 29, 30 ஆகிய நாட்களில் நோன்பு நோற்கத் தடை உள்ளது. எனவே யாரோ அறிவித்து விட்டார்கள் என்பதற்காக ரமலான் அல்லாத நாளை ரமளான் என்று எண்ணி நோன்பு நோற்றால் அது மேற்கண்ட தடையை மீறியதாக ஆகி விடும்.

சந்தேகத்திற்குரிய நாளில் (ஷஃபானின் முப்பதாம் நாளில்) யார் நோன்பு நோற்கிறாரோ அவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மாறு செய்து விட்டார். 
அறிவிப்பவர்: அம்மார் (ரலி)
நூல்: திர்மிதி 686

இந்த ஹதீஸ் அடிப்படையில் ஷஃபான் மாதத்தின் 30ஆம் நாள் கண்டிப்பாக நோன்பு வைக்கக் கூடாது. இது யவ்முஷ் ஷக் (சந்தேகத்திற்குரிய நாள்) என்று அழைக்கப்படுகிறது. அதாவது ரமளான் பிறை தென்படுமா தென்படாதா என்று பார்க்கும் நாள். இந்த நாளில் நோன்பு வைப்பது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு மாற்றமான செயல் என்று கூறப்படுகிறது. எனவே இந்த விஷயத்தில் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

நமது நாட்டில் பிறை தென்படாமல் இருக்கும் போது (ஷஃபான் 30ம் இரவு) சவூதியில் நோன்பு என்று அறிவிக்கப்படுகிறது. இதனால் உலகம் முழுவதற்கும் ரமளான் பிறந்து விட்டது என்று கூறுவதன் மூலம் சந்தேகத்திற்குரிய நாளான ஷஃபான் 30 அன்று நோன்பு வைக்கும் நிலை ஏற்படுகிறது.

சவூதியிலும் நமது நாட்டிலும் வெவ்வேறு நாட்களில் பிறை தோன்றலாம் என்பது நிரூபிக்கப்பட்டு விட்ட நிலையில் நமது ஊரில் ஷஃபான் 30 ஆக இருக்கும் போது சவூதி பிறையை ஏற்று நோன்பு வைத்தால் அது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு மாறு செய்யும் செயலாகும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed