தொழுகையை சரிப் படுத்துவோம்!

கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே! ஸலாத்தும், ஸலாமும் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மீதும், உத்தம சஹாபாக்கள் மீதும், முஸ்லிம்கள் மீதும், குறிப்பாக நம் அனைவர் மீதும் என்றென்றும் நின்று நிலவட்டுமாக! 

முதல் கேள்வியே தொழுகை தான்.

இறைவன் நம் மீது கடமையாக்கி இருக்கிற அமல்களில் மிகமிக முக்கியமானது ஒரு அமல் தொழுகை. இந்த கடமையில் நாம் அனைவரும் நம்மை நாமே சுயபரிசோதனை செய்ய வேண்டிய நேரம் இந்த நேரம். ஏனெனில், அல்லாஹ், இறந்தவர்கள் அனைவரையும் மறுமை நாளில் எழுப்பி விசாரணை செய்வான். முதன் முதலில் அவன் தொழுகையைப் பற்றித் தான் விசாரிப்பான். இதற்கடுத்து தான் மற்றவைகளைப் பற்றி கேள்வி கேட்பான். இறைவன் கேட்கும் முதல் கேள்விக்கு நாம் அனைவரும் தயாராக இருக்கின்றோமா? என்று யோசிக்க வேண்டும். ஏகத்துவ கொள்கையை ஏற்ற முஸ்லிம்களில் பலர் தொழுகை எனும் அமலில் மறுமை நாளில் நஷ்டமாகி விடக்கூடாது.

அடியான் முதன் முதலில் விசாரிக்கப்படுவது அவனுடைய தொழுகையைப் பற்றித் தான்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),

நூல் : நஸயீ 463

தொழாதவர்களுக்கு எச்சரிக்கை

நபி (ஸல்) அவர்கள் ஒருவனிடத்தில் போர் செய்கிறார்கள் என்றால் அவன் சாதாரண குற்றத்தைச் செய்திருக்க முடியாது. தொழாதவனிடம் போர் செய்வேன் என்று சொல்லி இருக்கிறார்கள் என்றால் தொழாமல் இருப்பது எவ்வளவு பெரிய குற்றம் என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

மனிதர்கள், வணக்கத்திற்குத் தகுதியானவன் அல்லாஹ்வையன்றி வேறு யாருமில்லை. முஹம்மது அல்லாஹ்வின் தூதர் என்று உறுதியாக நம்பி தொழுகையை நிலைநிறுத்தி ஸகாத்தும் கொடுக்கும் வரை அவர்களுடன் போர் புரிய வேண்டும் என்று நான் கட்டளையிடப்பட்டுள்ளேன் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி),

நூல் : புகாரி 25

தொழுகையை விடுவது என்பது சாதாரணமான குற்றமில்லை. இறை மறுப்புச் செயல் என்று நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள். பெருமானார் (ஸல்) அவர்கள் ஒன்றை இறை மறுப்புச் செயல் என்று சொன்னால் அதுவென்ன சிறிய குற்றமாகவா இருக்கும்?. இதைத் தொழாதவர்கள் உற்று நோக்க வேண்டும்.

நோயாளியின் தொழுகை

தொழுகையை நின்று தான் தொழ வேண்டும் என்று மார்க்கம் கட்டளையிடுகிறது. ஆனால் நின்று தொழ முடியாத கட்டங்களில் உட்கார்ந்தாவது இந்த தொழுகையை நிறைவேற்ற வேண்டும். நோயாளியாக இருந்தாலும் தொழுகையை விடுவதற்கு இந்த மார்க்கத்தில் விதிவிலக்கு கிடையாது. என்று இஸ்லாம் கடுமை காட்டுகிறது.

எனக்கு மூல நோய் இருந்தது. “எவ்வாறு தொழுவது?” என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “நீ நின்று தொழு! இயலாவிட்டால் உட்கார்ந்து தொழு! அதற்கும் இயலாவிட்டால் படுத்துத் தொழு என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பவர் : இம்ரான் பின் ஹுஸைன் (ரலி),

நூல் : புகாரீ 1117

போர்க்களத்திலும் தொழுகை

தொழுகை விஷயத்தில் இஸ்லாம் எள்ளவும் விட்டுக் கொடுப்பதில்லை. தொழுகையை அந்தந்த நேரத்தில் தொழுதே ஆக வேண்டும். அவ்வாறு தொழவில்லை என்றால் அவர் குற்றவாளி ஆகி விடுகின்றார். போர்க்களத்தில் கூட தொழுகையை ஒத்திப் போட அனுமதியில்லை. இதற்காக போர்க்காலத் தொழுகை என்ற சலுகையை வழங்கி, அந்தந்த நேரத்தில் தொழச் செய்கிறான். கடமையான தொழுகையை போர்க்களத்திலேயே தள்ளிப் போட அனுமதியில்லை எனும் போது மற்ற சாதாரண நேரத்தில் தள்ளிப் போட முடியுமா? என்று சிந்திக்க வேண்டும்.

இனிவரும் காலங்களில் ஒரு வேளை தொழுகையைக் கூட விடாமல் தொழுது,  முஸ்லிமாக வாழ்ந்து,  முஸ்லிமாக மரணிக்கிற நல்லடியார்களாக, அந்த ஏக இறைவன் ஆக்கி அருள்புரிவானாக!

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *