தவ்ஹீதுவாதிகளே! கொஞ்சம் சிந்தியுங்கள்!

இந்தப் பெண்களை நீங்கள் மணமுடிக்கவில்லை என்றால் வேறு யார் மணமுடிப்பார்கள்? இந்தப் பெண்களை தரீக்காவாதிகளும், தர்ஹாவாதிகளும் திருமணம் முடிக்க விட்டு அவர்களை நரகத்தில் தள்ளப் போகிறீர்களா?

இணை வைப்பாளர்களுக்கு வாழ்க்கைப்பட்டால் அவர்களுடைய ஷிர்க்கில் தான் இந்தப் பெண்களும் இணைவார்கள். கணவனுக்குத் தக்கவாறு தானே வாழ்ந்தாக வேண்டும்.

அப்படியானால் அதன் அர்த்தமென்ன? கொள்கைக்கு வந்த குமரிப் பெண்களை நாமே கொண்டு போய் நரகத்தில் தள்ளுகிறோம் என்று தானே அர்த்தம்!

நாம் தவ்ஹீதுப் பிரச்சாரத்தைத் தொடங்கியது, தொடர்வது, அதற்காக ஓர் இயக்கம் கண்டது, இன்று ஓர் எழுச்சி மாநாடு நடத்துவது இவை அனைத்துமே ஆண்கள், பெண்கள் அனைவரையும் நரகத்திலிருந்து காப்பதற்காகத் தானே!

நரகத்திலிருந்து காப்பாற்றுவதற்குக் கிளம்பிய நாம் இந்தப் பெண்களை நரகத்தில் கொண்டு போய் தள்ளுவது நியாயமா? கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்.

நாம் இந்தக் குராபிகளை விட்டு ஏன் பிரிந்தோம்? ஷிர்க் எனும் இணை வைப்பு தான். இதனால் தான் தனி ஜமாஅத் கண்டோம்; தனிப் பள்ளி கண்டோம். இப்படி தனி ஜமாஅத் கண்ட நாம் நம்முடைய உறவினர் என்ற ஒரே காரணத்துக்காக இணை வைக்கும் பெண்ணை எப்படித் திருமணம் முடிக்கலாம்?

இணை வைக்கும் பெண்களை மணமுடிக்க அல்லாஹ் விதித்திருக்கும் தடையைப் பாருங்கள்.

இணை கற்பிக்கும் பெண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களைத் திருமணம் செய்யாதீர்கள்! இணை கற்பிப்பவள் எவ்வளவு தான் உங்களைக் கவர்ந்தாலும் அவளை விட நம்பிக்கை கொண்ட அடிமைப் பெண் சிறந்தவள். இணை கற்பிக்கும் ஆண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களுக்கு (உங்கள் பெண்களை) மண முடித்துக் கொடுக்காதீர்கள்! இணை கற்பிப்பவன் உங்களை எவ்வளவு தான் கவர்ந்தாலும் அவனை விட நம்பிக்கை கொண்ட அடிமை சிறந்தவன். அவர்கள் நரகத்திற்கு அழைக்கின்றனர். அல்லாஹ் தனது விருப்பப்படி சொர்க்கம் மற்றும் மன்னிப்பிற்கு அழைக்கிறான். படிப்பினை பெறுவதற்காக (இறைவன்) தனது வசனங்களை மனிதர்களுக்குத் தெளிவுபடுத்துகிறான்.

அல்குர்ஆன் 2:221

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவதைப் பாருங்கள்.

நான்கு நோக்கங்களுக்காக ஒரு பெண் மணமுடிக்கப்படுகிறாள்:

  1. அவளது செல்வத்திற்காக.
  2. அவளது குடும்பப் பாரம்பரியத்திற்காக.
  3. அவளது அழகிற்காக.
  4. அவளது மார்க்கத்திற்காக. ஆகவேமார்க்கம் உடையவளை (மணந்து) வெற்றி அடைந்து கொள்! (இல்லையேல்) உன்னிரு கரங்களும் மண்ணாகட்டும்!

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல்: புகாரி 5090

இதோ விண்ணப்பங்களை அனுப்பி விட்டு வரிசையில் நிற்கும் இந்த மார்க்கப்பற்றுள்ள கொள்கைத் தங்கங்களைத் தேர்வு செய்வதை விட்டு விட்டு, பின்னால் தவ்ஹீதுக்கு வந்து விடுவாள் என்று காரணம் சொல்லி இணை வைக்கும் பெண்களை எப்படித் திருமணம் செய்ய முனைகிறீர்கள்? அவ்வாறு முடிக்கும் உங்களிடம் சில கேள்விகள்:

தவ்ஹீதுக்கு வந்த பெண்ணை விட்டு விட்டு, வருவாள் என்று நினைத்து ஒரு பெண்ணை மணமுடிக்கிறீர்கள். அந்தப் பெண் தவ்ஹீதுக்கு வந்து விடுவாள் என்று உங்களுக்கு மறைவான ஞானம் இருக்கிறதா? வராமல் போனால் என்ன செய்வீர்கள்?

எத்தனை குடும்பங்களில் கணவனுக்குத் தெரியாமல் தர்ஹாவுக்குச் செல்லும் பெண்கள் இருக்கிறார்கள் என்று காட்ட முடியும். வெளிநாட்டில் போய் வேலை செய்யும் தவ்ஹீதுவாதிகளின் பிள்ளைகளை தர்ஹாவுக்கு அழைத்துச் செல்லும் பெண் வீட்டாரைக் காட்ட முடியும். தவ்ஹீது பள்ளிவாசலை வாப்பா பள்ளிவாசல் என்றும், தர்ஹாவை உம்மா பள்ளிவாசல் என்று கூறும் பிள்ளைகளைக் காட்ட முடியும்.

ஒரு தர்ஹாவாதியின் குடும்பத்தில் நீங்கள் மணமுடிக்கிறீர்கள். திருமணம் முடித்த ஒரு வாரத்தில் நீங்கள் இறந்து விடுகிறீர்கள். உங்கள் மனைவி கருவுற்று உங்களுக்கு ஒரு சந்ததியும் பிறக்கிறது. சுற்றுப்புறச் சூழல், குடும்பப் பின்னணி அனைத்தும் ஷிர்க்காக இருக்கும் போது அந்தப் பெண்ணும், அவளுக்குப் பிறந்த உங்கள் குழந்தையும் ஷிர்க்கான சூழலில் தானே வளரும்? இதற்கு உங்கள் பதில் என்ன?

நம்பிக்கை கொண்டோரே! உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நரகை விட்டுக் காத்துக் கொள்ளுங்கள்! அதன் எரிபொருள் மனிதரும்கற்களுமாகும். அதன் மேல் கடுமையும்கொடூரமும் கொண்ட வானவர்கள் உள்ளனர். தமக்கு அல்லாஹ் ஏவியதில் மாறு செய்ய மாட்டார்கள். கட்டளையிடப்பட்டதைச் செய்வார்கள்.

அல்குர்ஆன் 66:6

இவ்வாறு அல்லாஹ் குறிப்பிட்டிருக்க உங்கள் பிள்ளைகளை நீங்களே நரகத்தில் கொண்டு போடலாமா? சிந்தித்துப் பாருங்கள்.

தவ்ஹீதுக்காகத் தனது குடும்பத்தை, உறவினர்களைப் பகைத்து விட்டு நிற்கும் இந்த மணப் பெண்களை விட்டு விட்டு, சுன்னத் வல் ஜமாஅத்தில் மாமன் மகளை, மாமி மகளை அல்லது வேறு உறவுப் பெண்களைத் திருமணம் செய்து கொள்கிறீர்கள் என்றால் உங்களுக்கு ஷிர்க்கில் உள்ள அந்த உறவு தான் பெரிதாகத் தெரிகின்றது. அல்லாஹ்வும் அவனது தூதரும் உங்களுக்குப் பெரிதாகத் தெரியவில்லை.

இப்படிப்பட்டவர்களுக்கு அல்லாஹ் விடுக்கும் எச்சரிக்கை இதோ:

உங்கள் பெற்றோரும்உங்கள் பிள்ளைகளும்உங்கள் உடன் பிறந்தாரும்உங்கள் வாழ்க்கைத் துணைவியரும்உங்களின் குடும்பத்தாரும்நீங்கள் திரட்டிய செல்வங்களும்நஷ்டத்திற்கு நீங்கள் அஞ்சுகிற வியாபாரமும்நீங்கள் விரும்புகிற வசிப்பிடங்களும் அல்லாஹ்வை விடஅவனது தூதரை விடஅவன் பாதையில் போரிடுவதை விட உங்களுக்கு அதிக விருப்பமானவையாக ஆகி விட்டால் அல்லாஹ் தனது கட்டளையைப் பிறப்பிக்கும் வரை காத்திருங்கள்! குற்றம் புரியும் கூட்டத்துக்கு அல்லாஹ் வழி காட்ட மாட்டான்” என்று கூறுவீராக!

அல்குர்ஆன் 9:24

உற்றார் உறவினரை விட அல்லாஹ்வும் அவனது தூதரும் தான் எங்களுக்கு மேல் என்பதை நிரூபித்து, கொள்கைப் பெண்களைத் திருமணம் செய்ய முன்வாருங்கள்!

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed