சகுனம் பார்த்தல் இஸ்லாத்தில் இல்லை

இவ்வசனங்களில் அத்தூதர்களுக்கும் மக்களுக்கும் இடையில் நடந்த உரையாடல் இடம் பெற்றுள்ளது. தாங்கள் விரும்பாத கருத்தை கூறியதால் தூதர்களை கெட்ட சகுனமாக அம்மக்கள் கருதினர். இம்மூன்று தூதர்களுக்கு மட்டுமில்லாமல் மூஸா (அலை) போன்ற மற்ற தூதர்களுக்கும் இதே நிலை ஏற்பட்டதாக திருக்குர்ஆன் கூறுகிறது.

அவர்களுக்கு ஏதேனும் நன்மை வந்தால் “அது எங்களுக்காக (கிடைத்தது)” எனக் கூறுகின்றனர். அவர்களுக்கு தீங்கு ஏற்படுமானால் மூஸாவையும் அவருடன் உள்ளவர்களையும் பீடையாகக் கருதுகின்றனர். “கவனத்தில் கொள்க. அவர்கள் பீடையாகக் கருதுவது அல்லாஹ்விடமிருந்து வந்துள்ளது. எனினும் அவர்களில் அதிகமானோர் இதனை அறிவதில்லை.”

(அல்குர்ஆன் : 7 : 131.)

தாங்கள் விரும்பாத செயல்கள் தங்களுக்கு ஏற்பட்டால் அதை தூதர்களோடு இணைத்து துர்சகுனமாக கருதுவார்கள். “இவர்களால்தான் இந்த தீய விஷயங்கள் நடக்கிறது” என்று கூறி அவமதிப்பார்கள். நன்மை நடந்தால் தங்களோடு அதை இணைத்துக் கொள்வார்கள். இவ்வாறு கெட்ட சகுனமாக தூதர்களை கருதும் பழக்கம் பல சமுதாயத்திடம் இருந்துள்ளது.

மேலும் ஸாலிஹ் நபியின் சமுதாயமும் இவ்வாறு கூறியுள்ளனர்.

47. உம்மையும், உம்முடன் இருப்போரையும் கெட்ட சகுனமாகக் கருதுகிறோம் என்று அவர்கள் கூறினர். உங்கள் கெட்ட சகுனம் அல்லாஹ்விடமே உள்ளது. மாறாக நீங்கள் சோதிக்கப்படும் கூட்டமாக உள்ளீர்கள் என்று அவர் கூறினார்.

(அல்குர்ஆன் : 27:47.)

இறைவன் இவர்களின் சகுணம் பற்றிய கூற்றை அடியோடு மறுக்கின்றான்.

“கவனத்தில் கொள்க. அவர்கள் பீடையாகக் கருதுவது அல்லாஹ்விடமிருந்து வந்துள்ளது. எனினும் அவர்களில் அதிகமானோர் இதனை அறிவதில்லை.” என்று கூறி, நன்மை, தீமை அனைத்தும் தன்னிடமிருந்தே வருகிறது என அல்லாஹ் கூறுகிறான்.

தூதர்களும் உங்கள் கெட்ட சகுனம் உங்களிடமே உள்ளது. நீங்கள் அறிவுரை கூறப்பட்டாலுமா? இல்லை! நீங்கள் வரம்பு மீறிய கூட்டமாக இருக்கிறீர்கள்” என்று கூறி, இது போன்ற சகுனம் பார்த்தல் இஸ்லாத்தில் இல்லை என்பதை உறுதிப்படுத்துகிறார்கள். ஆனால் முஸ்லிம்களிடையே சகுனம் பார்க்கும் வழக்கம் இன்றளவும் உள்ளது.

சிலர் திருமண அழைப்பிதழ்களில் சகுனத்தை அடிப்படையாக கொண்டு இன்ன நல்ல நேரத்தில் திருமணம் நடைபெறும் என்று குறிப்பிடுவார்கள். பாதையில் பூனை குறுக்கே சென்றால் கெட்ட நேரம் என்றும், பல்லி விழுந்தால் இன்ன அர்த்தம் என்று பலவாறாக சகுனம் பார்க்கிறார்கள். இவை அனைத்துமே தவறு என நபி (ஸல்) அவர்கள் விளக்குகிறார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தொற்று நோய் கிடையாது. பறவை சகுனம் ஏதும் கிடையாது. ஆந்தை சகுனம் ஏதும் கிடையாது. “ஸஃபர் மாதம் பீடை என்பதும் கிடையாது.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல் : புகாரி-5757

ஆரம்பத்தில் அரபுகள் பறவை சகுனம் மட்டுமே பார்த்து வந்தனர். பிறகு பல சகுனங்களை அதிகப் படுத்துக் கொண்டனர். எனவேதான் நபி (ஸல்) அவர்கள் “பறவை சகுனம் கூடாது என்று குறிப்பிடுகிறார்கள். எனினும் அனைத்து சகுனமும் கூடாது என்பதுதான் இதன் கருத்தாகும்.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed