குளிப்பாட்டியவர் குளிக்க வேண்டுமா?‎

குளிப்பாட்டியவர் குளிக்க வேண்டுமா? என்பதில் மாறுபட்ட ‎கருத்துள்ள ஹதீஸ்கள் உள்ளன.‎

நாங்கள் இறந்தவரைக் குளிப்பாட்டி விட்டு சிலர் ‎குளிப்பவர்களாகவும், மற்றும் சிலர் குளிக்காதவர்களாகவும் ‎இருந்தோம்

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)‎; நூல்: தாரகுத்னீ 1820

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் நபித்தோழர்கள் இது ‎விஷயத்தில் எவ்வாறு நடந்து கொண்டனர் என்பதைத் தான் ‎இப்னு உமர் (ரலி) கூறுகிறார்.‎

அரபு மூலத்தில் குன்னா (கடந்த காலத்தில் இவ்வாறு ‎இருந்தோம்) என்ற சொல்லை இப்னு உமர் (ரலி) ‎பயன்படுத்தியிருப்பதால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‎காலத்து நடைமுறையைத் தான் குறிப்பிட்டுள்ளார்கள் என்பதில் ‎சந்தேகமில்லை.‎

எனவே விரும்பியவர் குளித்துக் கொள்ளலாம். விரும்பாதவர் ‎குளிக்காமலும் இருக்கலாம். இரண்டும் சமமானவை தான்.‎

ஆண்களை ஆண்களும் பெண்களை பெண்களும் குளிப்பாட்ட ‎வேண்டும்.‎

ஆண்களை ஆண்கள் தான் குளிப்பாட்ட வேண்டும் என்றோ ‎பெண்களை பெண்கள் தான் குளிப்பாட்ட வேண்டும் என்றோ ‎நேரடியாக எந்தக் கட்டளையும் இல்லை.‎

ஆயினும் குளிப்பாட்டுபவர் அந்தரங்க உறுப்புகளைப் பார்க்கும் ‎நிலை ஏற்படும் என்பதால் ஆண்களை ஆண்கள் தான் ‎குளிப்பாட்ட வேண்டும் என்றும், பெண்களை பெண்கள் தான் ‎குளிப்பாட்ட வேண்டும் என்றும் முடிவு செய்யலாம்.‎

மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மகளைப் பெண்கள் ‎தான் குளிப்பாட்டியுள்ளனர் என்பதை முன்னரே சுட்டிக் ‎காட்டியுள்ளோம்.‎

கணவனை மனைவியும், மனைவியை கணவனும் குளிப்பாட்ட ‎விரும்பினால் அவர்களிடையே எந்த அந்தரங்கமும் இல்லை ‎என்பதால் இதைத் தடுக்க முடியாது.‎

புனிதப் போரில் கொல்லப்பட்டவர்களைக் குளிப்பாட்டக் கூடாது

அல்லாஹ்வின் பாதையில் நியாயத்துக்காகப் போரிடும் போது ‎எதிரி நாட்டுப் படையினரால் கொல்லப்படுபவரைக் ‎குளிப்பாட்டாமல் இரத்தச் சுவடுடன் அடக்கம் செய்ய வேண்டும்.‎

உஹதுப் போரில் கொல்லபட்டவர்களைக் குறித்து  இவர்களை ‎இவர்களின் இரத்தக் கறையுடனே அடக்கம் செய்யுங்கள்!  என்று ‎நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அவர்களைக் ‎குளிப்பாட்டவில்லை.‎

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)‎; நூல்: புகாரி 1346, 1343, 1348, 1353, 4080‎

மார்க்கத்துடன் தொடர்பு இல்லாதவை

‎* குளிப்பாட்டுவதற்கு என்று சிறப்பான துஆக்கள் ஏதும் இல்லை.‎

‎* மய்யித்துக்கு நகம் வெட்டுதல்

‎* பல் துலக்குதல்

‎* அக்குள் மற்றும் மர்மஸ்தான முடிகளை நீக்குதல்

‎* பின் துவாரத்திலும், மூக்கிலும் பஞ்சு வைத்து அடைத்தல்

‎* வயிற்றை அழுத்தி உடலில் உள்ள அசுத்தங்களை ‎வெளியேற்றுதல்

‎* ஜனாஸாவைக் குளிப்பாட்டும் போது சில திக்ருகளை ஓதுதல்

‎* குளிப்பாட்டும் போது சந்தனத்தினாலோ, வேறு எதன் மூலமோ ‎நெற்றியில் எதையும் எழுதுதல்

ஆகியவற்றைச் செய்யுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‎வழிகாட்டவில்லை. மார்க்கத்தில் இதற்கு முக்கியத்துவம் ‎இல்லை. அது நபிவழி என்ற நம்பிக்கையில்லாமல் நம்முடைய ‎திருப்திக்காகச் செய்தால் அதில் தவறில்லை.‎

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *