ஏகத்துவக் கொள்கையை எடுத்துரைக்கும் வியூகம்

ஏகத்துவக் கொள்கையை உயிர் மூச்சாகக் கொண்டு சத்தியப் பாதையில் இலட்சியப் பயணம் மேற்கொண்டிருக்கின்ற நாம் குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் மட்டுமே இஸ்லாத்தின் அடிப்படை ஆதாரங்கள் என்று கூறி அதன் பக்கம் மக்களை அழைத்துக் கொண்டிருக்கின்றோம்.

இந்த ஏகத்துவக் கொள்கையை மக்களுக்கு மத்தியில் எத்தி வைப்பதற்காக நம் கொள்கைச் சொந்தங்கள் படுகின்ற கஷ்ட நஷ்டங்கள் ஒன்றல்ல, இரண்டல்ல; ஏராளம் என்று கூறலாம். எல்லோரும் சந்தோஷமாக இருக்கின்ற விடுமுறை நாட்களிலும் கூட அவர்கள் ஓய்வெடுக்க முடியாமல் குடும்பங்களைப் பிரிந்து, அவர்களிடமிருந்து கிடைக்கின்ற ஆசாபாசங்களை இழந்து எத்தி வைப்பதற்காக கடும் சிரமங்களை மேற்கொள்கின்றனர்.

பொருளாதாரம், குடும்பம், ஓய்வு போன்ற அடிப்படையான எதார்த்தமான இன்பங்களைக் கூட அவர்கள் இழப்பதால் அவர்கள் உடலளவிலும் மனதளவிலும் கடும் அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். பெருநாள் போன்ற விஷேச தினங்களையும் இவர்களால் மனைவிமார், குழந்தைகள், பெற்றோர் போன்ற குடும்பத்தினருடன் சந்தோஷமாகக் கழிக்க முடிவதில்லை. சந்தோஷமான சூழ்நிலைகளில் உடனிருக்காவிட்டாலும் துக்கமான நேரங்களில் அவர்களுடன் கலந்திருப்பது அவசியமாகும்.

இதனையும் சில நேரங்களில் அவர்கள் இழக்க வேண்டிய சூழ்நிலைகள் அவர்களுக்கு ஏற்படுகின்றது. பொருளாதார ரீதியில் அவர்கள் மார்க்கத்திற்காக செலவழிக்கின்ற அந்த நேரத்தினால் அந்த நாளில் செய்ய வேண்டிய பொருளாதார நிர்வாக ரீதியிலான வேலைகள் பாதிக்கப் படுகின்றன. இந்த வேலைகளை இவர்களுக்காக மற்றவர்கள் செய்து கொடுப்பதில்லை. அவற்றையும் இவர்கள் தங்களுக்குக் கிடைக்கின்ற மற்ற ஒய்வு நேரங்களில் செலவழிக்கின்ற சூழல்கள் ஏற்படுகின்றன.

மேலும் ஒரு ஜும்ஆ பயானாகவோ அல்லது இதர பிரச்சாரங்களாகவோ இருக்கட்டும் இதில் ஏதேனும் ஒன்று அவர்களுக்குச் சாட்டப்பட்டால் அதற்காக அவர்கள் குறிப்பு எடுப்பது என்று ஒரு சொற்பொழிவுக்காக அந்த வாரம் முழுவதும் அவர்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

இளமைக்குரிய துள்ளல்களை, ஒழுக்கங்கெட்ட செயல்களை ஆட்டம் பாட்டங்களைத் தவிர்த்து அடக்கத்துடன் வீரிய பிரச்சாரங்களை மேற்கொள்ளும் இளைஞர்கள் பட்டாளம் ஒரு புறமென்றால், குடும்பம் குட்டிகளுடன் நேரங்களைச் செலவழிக்காமல் எத்தி வைப்பதே முதல் சந்தோஷம் என்று இழக்கின்ற சந்தோஷங்களில் மறுமை இன்பத்தைத் தேடும் ஆண்கள் மறுபுறம்.

இவர்களுக்குத் தாங்கள் சற்றும் குறைந்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் விதமாக கணவனிடம் அனுமதி கேட்டு, குழந்தைகளைப் பொறுப்பான ஒருவரிடம் ஒப்படைத்து விட்டு, வீட்டு வேலைகளை முன்கூட்டியே முடித்து விட்டு சொற் பொழிவுக்குத் தயாராகி அதற்காகப் பெரும் சிரமங்களை மேற்கொள்கின்றனர் நம் பெண் தாயிக்கள். ஆண்களுக்கு பயான் பேசியதற்குப் பிறகு கிடைக்கின்ற ஒரு சில நிம்மதி கூட இவர்களுக்குக் கிடைப்பதில்லை.

மாமியாரின் குத்தலான பார்வைக்குப் பயந்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ளக் கூட நேரமில்லாமல் உடனடியாக வீட்டிற்கு திரும்பி வீட்டில் உள்ள வேலைகளில் தொடர்ந்து ஈடுபடுகின்றனர்.  இது அவர்களது சக்திக்கு மீறிய சுமையாகும். பொதுவாகவே பெண்கள் தங்களது கணவன்மார்களின் வீடுகளில் வீட்டிற்குள் நுழைந்தவுடன் ஆண்களைப் போல் கைகளை கழுவி விட்டு சாப்பாட்டில் கைவைக்க முடியாது.

இது போன்ற ஒரு சில நேரங்களில் அவ்வாறு நேர்ந்தாலும் கூட அதற்காக அவர்கள் வாங்குகின்ற ஏச்சுப் பேச்சுக்கள் வெளியே சொல்ல முடியாத மானம் போகின்ற விஷயங்களாகும். இவ்வளவு சிரமத்திற்கு மத்தியில் நாம் செய்கின்ற ஏகத்துவ பிரச்சாரங்கள் குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் சரியான முறையில் தான் அமைகின்றதா என்பதை நாம் இத்தருணத்தில் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

ஆகவே நமது கொள்கைச் சகோதர சகோதரிகள் தங்களது சொற் பொழிவுகளை குர்ஆன் ஹதீஸின் அடிப்படையில் எவ்வாறு அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதைத் தெளிவுபடுத்துவதே  இக்கட்டுரையின் நோக்கமாகும்.

  • நமது உரை, நாம் பேசக்கூடிய தலைப்பை மையமாகக் கொண்டு இரத்தினச் சுருக்கமாக அமைய வேண்டும்.

அபூவாயில் ஷகீக் பின் சலமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

எங்களுக்கு அம்மார் பின் யாசிர் (ரலி) அவர்கள் (ஒரு வெள்ளிக் கிழமை) சுருக்கமாகவும், செறிவுடனும் உரை நிகழ்த்தினார்கள். அவர்கள் (மேடையிலிருந்து) இறங்கியபோது, “அபுல் யக்ளானே!  செறிவுடன் சுருக்கமாகப் பேசினீர்கள். இன்னும் சிறிது நேரம் பேசியிருந்தால் நன்றாயிருந்திருக்குமே?” என்று நாங்கள் கூறினோம்.

அதற்கு அவர்கள் “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையை நீட்டி உரையைச் சுருக்குவது ஒருவரது மார்க்க அறிவிற்கு அடையாளம் ஆகும். ஆகவே, தொழுகையை நீட்டி உரையைச் சுருக்குங்கள். சில சொற்பொழிவுகளில் கவர்ச்சி உள்ளது‘ என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்” என்றார்கள்.

நூல்: முஸ்லிம்-1577

ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் தொழுது வந்தேன். அவர்களது தொழுகையும் உரையும் (நீண்டதாகவும் இல்லாமல் மிகவும் சுருக்கமானதாகவும் இல்லாமல்) நடுத்தரமாகவே அமைந்திருந்தன.

நூல்: முஸ்லிம்-1571

  • நமது பேச்சு பிறர் விளங்குகின்ற அளவிற்கு தெளிவாக இருக்க வேண்டும்

உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

“இன்னாரின் தந்தை (அபூ ஹுரைராவைத் தான் இப்படிக் குறிப்பிடுகிறார்கள் ஆயிஷா (ரலி) அவர்கள்.) உனக்கு வியப்பூட்ட வில்லையா? அவர் வந்தார்; என் அறையின் பக்கமாக அமர்ந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து (தாம் கேட்டதை) என் காதில் விழுமாறு அறிவித்துக் கொண்டிருந்தார். நான் தஸ்பீஹ் செய்து கொண்டிருந்தேன். நான் என் தஸ்பீஹை முடிப்பதற்குள் அவர் எழுந்து (சென்று) விட்டார்.

நான் அவரைச் சந்தித்திருந்தால் அவரை (ஒன்றன் பின் ஒன்றாக விடுவிடுவென்று நபிமொழிகளை அறிவித்துக் கொண்டே சென்றதை)க் கண்டித்திருப்பேன். நீங்கள் ஹதீஸ்களை ஒன்றன் பின் ஒன்றாக, வேகவேகமாக அறிவிப்பதைப் போல் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவசர அவசரமாக அறிவித்ததில்லை” என்று ஆயிஷா (ரலி) அவர்கள் சொன்னார்கள்.

நூல்: புகாரி-3568

  • உரை ஆக்ரோஷமாக அமைய வேண்டும்

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்  (ஏதேனும் முக்கிய விஷயம் குறித்து எச்சரிக்கை செய்து) உரை நிகழ்த்தும்போது, அவர்களின் கண்கள் சிவந்துவிடும்; குரல் உயர்ந்துவிடும்; கோபம் மிகுந்து விடும். எந்த அளவிற்கென்றால், எதிரிப் படையினர் தாக்குதல் தொடுக்கப்போவது குறித்து “எதிரிகள் காலையில் உங்கள்மீது தாக்குதல் தொடுக்கப்போகின்றனர்; மாலையில் உங்கள்மீது தாக்குதல் தொடுக்கப் போகின்றனர்‘ என்று கூறி அவர்கள் எச்சரிக்கை விடுப்பவரைப் போன்றி ருப்பார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “நானும் மறுமை நாளும் இதோ இவ்விரு விரல்களைப் போன்று (நெருக்கமாக) அனுப்பப் பெற்றுள்ளோம்” என்று கூறியவாறு தம்முடைய சுட்டு விரலையும் நடு விரலையும் இணைத்துக் காட்டுவார்கள். மேலும், “அம்மா பஅத் (இறை வாழ்த்துக்குப் பின்!) உரைகளில் சிறந்தது அல்லாஹ்வின் வேதம் (குர்ஆன்) ஆகும்.

வழிகாட்டலில் சிறந்தது முஹம்மதின் வழிகாட்டலாகும். செயல்களில் தீயவை (மார்க்கத்தின் பெயரால்) புதிதாக உண்டாக்கப்படுபவை ஆகும். (மார்க்கத்தின் பெயரால் புதிதாக உருவாக்கப்படும்) ஒவ்வொரு புதுமையும் வழிகேடு ஆகும்” என்று கூறுவார்கள்.

நூல்: முஸ்லிம்-1573

  • சொற்பொழிவு அறிவுப்பூர்வமாகவும் கருத்தாழமிக்கதாகவும் அமைய வேண்டும்.

தனக்கு அல்லாஹ் ஆட்சியைக் கொடுத்ததற்காக இப்ராஹீமிடம் அவரது இறைவன் குறித்து தர்க்கம் செய்தவனை நீர் அறியவில்லையா? “என் இறைவன் உயிர் கொடுப்பவன்; மரணிக்கச் செய்பவன்” என்று இப்ராஹீம் கூறியபோது, “நானும் உயிர் கொடுப்பேன்; மரணிக்கச் செய்வேன்” என்று அவன் கூறினான். “அல்லாஹ் கிழக்கில் சூரியனை உதிக்கச் செய்கிறான். எனவே நீ மேற்கில் அதை உதிக்கச் செய்!” என்று இப்ராஹீம் கேட்டார். உடனே (ஏகஇறைவனை) மறுத்த அவன் வாயடைத்துப் போனான். அநீதி இழைத்த கூட்டத்திற்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான்.

(அல்குர்ஆன்:2:258.)

அவர்களுக்கு அறிவுரை கூறுவீராக! அவர்களுக்காக கருத்தாழமிக்க சொல்லை அவர்களின் உள்ளங்களில் (பதியுமாறு) கூறுவீராக!

(அல்குர்ஆன்:4:63.)

  • நமது பேச்சு பிறர் இரசிக்கும் வண்ணம் இனிமையாக இருக்க வேண்டும்

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(மதீனாவிற்கு) கிழக்கிலிருந்து  இரண்டு  மனிதர்கள் வந்து சொற்பொழிவு நிகழ்த்தினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “நிச்சயமாகப் பேச்சில் கவர்ச்சி உள்ளது” என்று சொன்னார்கள்.

நூல்: புகாரி-5146

  • பிற மதத்தினர் தெய்வங்களாக நம்புபவற்றை இழிவுபடுத்தி பேசக் கூடாது:

அல்லாஹ்வையன்றி யாரிடம் அவர்கள் பிரார்த்திக்கிறார்களோ அவர்களை ஏசாதீர்கள்! அவர்கள் அறிவில்லாமல் வரம்பு மீறி அல்லாஹ்வை ஏசுவார்கள்.

(அல்குர்ஆன்:6:108.)

  1. மக்களுக்கு சலிப்பை ஏற்படுத்தாத வகையில் அவர்கள் விரும்புகின்ற (விடுமுறை) தினங்களில் பயான்களை அமைத்துக் கொள்ளவேண்டும்.

அபூவாயில் ஷகீக் பின் சலமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களை (அவர்களின் அறிவுரையைக் கேட்பதற்காக) எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தோம். அப்போது யஸீத் பின் முஆவியா வந்தார். அப்போது நான், “(யஸீத் அவர்களே!) நீங்கள் அமரவில்லையா?” என்று கேட்டேன். யஸீத், “இல்லை. நான் உள்ளே சென்று உங்கள் தோழரை (இப்னு மஸ்ஊதை) அழைத்து வருகிறேன். அவர் வராவிட்டால், நான் வந்து (உங்களுடன்) அமர்ந்துகொள்கிறேன்” என்று கூறினார். (பிறகு உள்ளே சென்றார்.)

அதன்பின் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் யஸீதின் கையைப் பிடித்தவராக வெளியே வந்து எங்களிடையே நின்று, “நீங்கள் இங்கு இருக்கும் விஷயம் எனக்குத் தெரிவிக்கப்பட்டது. ஆயினும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நாங்கள் சலிப்படைவதை விரும்பாமல் (சந்தர்ப்ப சூழ்நிலைகளைக் கவனித்து) விட்டுவிட்டு எங்களுக்கு அறிவுரை கூறி வந்தார்கள். இதுவே உங்களிடையே (அறிவுரை கூற) வரவிடாமல் என்னைத் தடுக்கின்றது” என்று சொன்னார்கள்.

நூல்: புகாரி-6411

  • மக்களுக்கு நாம் பேசுகின்ற பேச்சு எளிதாக விளங்குவதற்கு ஏற்ப அவர்களுக்குப் புரிகின்ற நடைமுறை உதாரணங்களைக் கூறி விளக்கலாம்.
  • நான் மேடையில் தான் பேசுவேன் என்று சிலரும், மேடை என்றாலே எனக்கு பயம் நான் மேடையில் பேசமாட்டேன் என்று சிலரும் உள்ளனர். இவற்றையும் பேச்சாளர்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும். எந்தச் சூழ்நிலைகளிலும் ஏகத்துவத்தை எத்தி வைப்போம் என்ற இலட்சியத்தை எடுக்க வேண்டும்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

“(நபியே!) உங்களுடைய நெருங்கிய உறவினர்களை நீங்கள் எச்சரியுங்கள்” எனும் (26:214ஆவது) இறைவசனம் அருளப்பெற்றபோது நபி (ஸல்) அவர்கள் “ஸஃபா‘ மலைக் குன்றின் மீது ஏறிக்கொண்டு, “பனூ ஃபிஹ்ர் குலத்தாரே! பனூ அதீ குலத்தாரே!” என்று குறைஷிக் குலங்களை (பெயர் சொல்லி) அழைக்கலானார்கள்.

அவர்கள் அனைவரும் ஒன்று கூடினார்கள். அங்கு வரமுடியாத நிலையில் இருந்த சிலர், அது என்ன என்று பார்த்து வர (தம் சார்பாக) ஒரு தூதரை அனுப்பினார்கள். இவ்வாறு அபூலஹப் உள்ளிட்ட குறைஷியர் (அனைவரும்) வந்(து சேர்ந்)தனர். நபி (ஸல்) அவர்கள், “சொல்லுங்கள்: இந்தப் பள்ளத்தாக்கில் குதிரைப் படை ஒன்று உங்கள் மீது தாக்குதல் தொடுக்கப்போகிறது என்று நான் உங்களுக்குத் தெரிவித்தால், நான் உண்மை சொல்வதாக என்னை நீங்கள் நம்புவீர்களா?” என்று கேட்க, மக்கள் “ஆம். (நம்புவோம்); உங்களிடம் நாங்கள் உண்மையைத் தவிர வேறெதையும் அனுபவித்த தில்லை” என்று பதிலளித்தனர்.

நபி (ஸல்) அவர்கள், “அப்படியென்றால், நான் கடும் வேதனையொன்று எதிர் நோக்கியுள்ளது என்று உங்களை எச்சரிக்கின்றேன்” என்று (தமது மார்க்கக் கொள்கையைச்) சொன்னார்கள். (இதைக் கேட்ட) அபூலஹப், “நாளெல்லாம் நீ நாசமாக! இதற்காகவா எங்களை ஒன்று கூட்டினாய்?” என்று கூறினான். அப்போது தான் “அபூலஹபின் கரங்கள் நாசமாகட்டும்! அவனும் நாசமாகட்டும்……” என்று தொடங்கும் (111ஆவது) அத்தியாயம் அருளப் பெற்றது.

நூல்: புகாரி-4770

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: (அடிமைப்பெண்) பரீரா, தனது விடுதலைப் பத்திரத்தின் விஷயத்தில் (அதில் குறிப்பிட்டுள்ள தொகையைக் கொடுப்பதற்காக உதவி கோரியபடி) என்னிடம் வந்தார். நான், “நீ விரும்பினால் உன் எஜமானர்களுக்கு (முழுத்தொகையும்) நான் செலுத்திவிடுகிறேன்.

ஆனால், உன் வாரிசுரிமை எனக்கே உரியதாகிவிட வேண்டும் என்று கூறினேன். ஆனால் பரீராவின் எஜமானர்கள் என்னிடம், “நீங்கள் விரும்பினால் பரீரா தர வேண்டிய பாக்கித் தொகையைத் தந்து (பரீராவை விடுதலை செய்து) கொள்ளலாம்” என்று கூறினார்கள்.

தொடர்ந்து ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்தபோது நான் அதைப் பற்றி அவர்களிடம் கூறினேன். அப்போது அவர்கள், “அவரை வாங்கி விடுதலை செய்துவிடு! ஏனெனில் வாரிசுரிமை விடுதலை செய்தவருக்கே உரியது” என்று சொன்னார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பள்ளி வாசலிலுள்ள) சொற்பொழிவு மேடை மீது நின்று (உரை நிகழ்த்தலானார்கள்:), “மக்களில் சிலருக்கு என்ன நேர்ந்து விட்டது?

இறைச் சட்டத்தில் இல்லாத நிபந்தனைகளை விதிக்கின்றார்களே! எவர் இறைச் சட்டத்தில் இல்லாத நிபந்தனைகளை விதிக்கின்றாரோ அவருக்கு அதற்கான (அதை நிறைவேற்றக் கோரும்) உரிமை இல்லை; அவர் நூறு முறை நிபந்தனை விதித்தாலும் சரியே” என்று குறிப்பிட்டார்கள்.

நூல்: புகாரி-456

மேற்கண்ட இரு ஹதீஸ்களிலும் நபி(ஸல்) அவர்கள், மக்கள் அனைவரையும் கவனிக்கும் விதமாக உயரமான பகுதியின் மீதும் மிம்பரின் மீது நின்றும் உரையாற்றியுள்ளார்கள். மேலும் நபி (ஸல்) அவர்கள் சாதாரணமாக மக்களோடு மக்களாக இருக்கும் சமயத்திலும் எந்த ஒரு மிம்பரும் இல்லாமல் இயல்பாக மார்க்கத்தை மக்களுக்கு எத்தி வைத்துள்ளார்கள் என்பதற்குக் கீழ்க்காணும் ஹதீஸ் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களுடன் நாங்கள் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலில் அமர்ந்திருந்தபோது ஒட்டகத்தில் ஒரு மனிதர் வந்து பள்ளி(யின் வளாகத்தி)ல் ஒட்டகத்தைப் படுக்க வைத்து அத(ன் முன்னங்காலி)னை மடக்கிக்கட்டினார். பிறகு மக்களிடம் “உங்களில் முஹம்மது அவர்கள் யார்?’ என்று கேட்டார். -அப்போது நபி (ஸல்) அவர்கள் மக்களிடையே சாய்ந்து அமர்ந்திருந்தார்கள்.- “இதோ சாய்ந்து அமர்ந்திருக்கும் இந்த வெள்ளைநிற மனிதர்தாம்‘ என்று நாங்கள் சொன்னோம்.

உடனே அம்மனிதர் நபி (ஸல்) அவர்களை “அப்துல் முத்தலிபின் (மகனின்) புதல்வரே!‘ என்றழைத்தார். அதற்கு நபியவர்கள் “என்ன விஷயம்?” என்று கேட்டார்கள். அப்போது அம்மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் “நான் உங்களிடம் சில கேள்விகள் கேட்கப் போகிறேன். சில கடினமான கேள்விகளையும் நான் கேட்கப் போகிறேன். அதற்கு நீங்கள் என் மீது கோபப்பட்டுவிடக் கூடாது” என்றார்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள் “உம் மனதில் பட்டதைக் கேளும்!” என்றார்கள். உடனே அம்மனிதர் “உம்முடைய, உம் முன்னோருடைய இரட்சகன் மீது ஆணையாகக் கேட்கிறேன்; அல்லாஹ் தான் உம்மை மனித இனம் முழுவதற்கும் தூதராக அனுப்பினானா?’ என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “ஆம், அல்லாஹ் சாட்சியாக!” என்றார்கள்.

அடுத்து அவர் “அல்லாஹ்வின் பொருட்டால் உம்மிடம் நான் கேட்கிறேன்; அல்லாஹ் தான் இரவிலும் பகலிலுமாக (நாளொன்றுக்கு) ஐவேளைத் தொழுகைளைத் தொழுது வர வேண்டுமென்று உமக்கு(ம் மக்களுக்கும்) கட்டளை யிட்டிருக்கின்றானா?” என்று கேட்டார்.

அதற்கும் நபி (ஸல்) அவர்கள் “ஆம், அல்லாஹ் சாட்சியாக” என்றார்கள். அவர் “அல்லாஹ்வின் பொருட்டால் உம்மிடம் நான் கேட்கிறேன்; அல்லாஹ் தான் ஒவ்வொரு ஆண்டிலும் (குறிப்பிட்ட) இந்த மாதத்தில் நோன்பு நோற்க வேண்டும் என்று உமக்குக் கட்டளை யிட்டிருக்கிறானா?” என்று கேட்டார்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள் “ஆம், அல்லாஹ் சாட்சியாக!‘ என்றார்கள். அவர், “அல்லாஹ்வின் பொருட்டால் உம்மிடம் நான் கேட்கிறேன்: அல்லாஹ் தான் எங்கள் செல்வர்களிடமிருந்து இந்த (ஸகாத் எனும்) தர்மத்தைப் பெற்று எங்கள் வறியோரிடையே விநியோகிக்குமாறு உமக்குக் கட்டளையிட்டிருக்கின் றானா?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “ஆம், அல்லாஹ் சாட்சியாக!‘ என்றார்கள்.

(இவற்றைக் கேட்டுவிட்டு) அம்மனிதர் “நீங்கள் (இறைவனிட மிருந்து) கொண்டு வந்தவற்றை நான் நம்பி ஏற்கின்றேன்” என்று கூறிவிட்டு “நான், எனது கூட்டத்தார்களில் இங்கு வராமல் இருப்பவர்களின் தூதுவனா வேன்;  நான் தான் பனூ சஅத் பின் பக்ர் குலத்தாரின் சகோதரன் ளிமாம் பின் ஸஅலபா” என்றும் கூறினார்.

நூல்: புகாரி-63

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed