உறங்கும் முன் உளூச் செய்தல்

பொதுவாக தொழுகைக்குத் தான், அதாவது வணக்கத்திற்குத் தான் உளூச் செய்யவேண்டும் என்று நாம் விளங்கி வைத்திருக்கின்றோம். ஆனால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உறங்கும் போது உளூச் செய்வதற்கு ஆர்வமூட்டுகின்றார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீ உன் படுக்கைக்குச் செல்லும்போது  தொழுகைக்காக அங்கசுத்தி (உளூ) செய்வது போன்று அங்கசுத்தி செய்துகொள். பிறகு உன் வலப்பக்கத்தின் மீது சாய்ந்து படு. பிறகு,

اللَّهُمَّ أَسْلَمْتُ نَفْسِي إِلَيْكَ وَفَوَّضْتُ أَمْرِي إِلَيْكَ وَأَلْجَأْتُ ظَهْرِي إِلَيْكَ رَهْبَةً وَرَغْبَةً إِلَيْكَ لَا مَلْجَأَ وَلَا مَنْجَا مِنْكَ إِلَّا إِلَيْكَ آمَنْتُ بِكِتَابِكَ الَّذِي أَنْزَلْتَ وَبِنَبِيِّكَ الَّذِي أَرْسَلْتَ

அல்லாஹும்ம அஸ்லம்த்து நஃப்ஸீ இலைக்க. வ ஃபவ்வள்த்து அம்ரீ இலைக்க. வ அல்ஜஃத்து ழஹ்ரீ இலைக்க. ரஃக்பத்தன் வ ரஹ்பத்தன் இலைக்க. லா மல்ஜஅ வலா மன்ஜா மின்க்க இல்லா இலைக்க. ஆமன்த்து பி கித்தாபிக்கல்லதீ அன்ஸல்த்த வபி நபிய்யிக்கல்லதீ  அர்ஸல்த்த’’ என்று ஓதிக்கொள்.

பொருள்: இறைவா! உனக்கு நான் கீழ்ப்படிந்தேன். காரியம் அனைத்தையும் உன்னிடம் ஒப்படைத்தேன். என் விவகாரங்கள் அனைத்திலும் உன்னையே சார்ந்திருக்கிறேன். உன் மீதுள்ள ஆவலிலும் அச்சத்திலும்தான் (இவற்றை நான் செய்தேன்). உன்னிடமிருந்து தப்பிக்கவும் ஒதுங்கிடவும் உன்னைத் தவிர வேறு போக்கிடமில்லை. நீ அருளிய உன்னுடைய வேதத்தையும், நீ அனுப்பிவைத்த உன்னுடைய நபியையும் நான் நம்பினேன். (இவ்வாறு நீ பிரார்த்தனை செய்துவிட்டு உறங்கி அன்றைய இரவில்) நீ இறந்துவிட்டால் (இஸ்லாம் எனும்) இயற்கை மரபில் இறந்தவனாவாய். இந்தப் பிரார்த்தனையை (இரவின்) இறுதிப் பேச்சாக ஆக்கிக்கொள்.

இந்த நபிமொழியின் அறிவிப்பாளரான பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

“நான் இவற்றைத் திரும்ப ஓதிக்காட்டுகிறேன்’’ என்று நபி (ஸல்) அவர்களிடம் கூறிவிட்டு ஓதிக் காட்டலானேன். (‘நீ அனுப்பிய உன் நபியையும் நான் நம்பினேன்’ என்பதற்கு பதிலாக) ‘நீ அனுப்பிய உன் ரசூலையும் நான் நம்பினேன்’ என்று நான் சொல்லிவிட்டேன். உடனே நபி (ஸல்) அவர்கள், “இல்லை; ‘நீ அனுப்பிய உன் நபியை நம்பினேன்’ என்று சொல்’’ என (எனக்குத் திருத்தி)ச் சொன்னார்கள்..

அறிவிப்பவர்: பராஃ இப்னு ஆஸிப் (ரலி)

நூல்: புகாரி 247 ,6311

இந்த ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள்,

  1. தொழுகைக்கு உளூச் செய்வது போல உளூச் செய்து கொள்.
  2. உன் வலது பக்கமாகச் சாய்ந்து படுத்துக் கொள்.
  3. மேலே குறிப்பிட்டுள்ள பிரார்த்தனையைச் செய்.

என மூன்று கட்டளைகளை இடுகின்றார்கள்.  உறங்குவதற்கு முன் இம்மூன்று கட்டளைகளை ஒருவர் நிறைவேற்றுகின்ற போது நிச்சயமாக அல்லாஹ் அவருக்குச் சாதாரண பாக்கியத்தை வழங்கவில்லை.

நிச்சயமாக ஓர் அடியான் சுவனவாசிகளின் அமலைச் செய்கின்றார் என்று மக்கள் கருதும் வகையில் அமல் செய்கின்றார்.  ஆனால் அவர் நரகவாசிகளில் ஒருவராக இருப்பார்.  அந்த அடியான் நரகவாசிகளின் அமலைச் செய்கின்றார் என்று மக்கள் கருதும் வகையில் அமல் செய்கின்றார்.  ஆனால் அவர் சுவனவாசிகளில் ஒருவராக இருப்பார்.  நிச்சயமாக அமல்கள் எல்லாம் இறுதியைப் பொறுத்து தான் அமைகின்றன என்று நபி (ஸல்) அவர்கள் தற்கொலை செய்து இறந்தவர் தொடர்பான ஹதீஸில் தெரிவிக்கின்றார்கள்.

அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸாயிதி (ரலி)

நூல்: புகாரி 6493

இந்த ஹதீஸின்படி ஒருவர் எவ்வளவு தான் வாழ்நாள் முழுவதும் நல்லமல்கள் செய்திருந்தாலும் அவருடைய இறுதி முடிவு நல்ல முடிவாக அமைய வேண்டும்.  அப்போது தான் அவர் சுவனம் செல்ல முடியும்.  இந்தப் பெரும் பாக்கியத்தைத்தான் படுக்கும்போது இம்மூன்று காரியங்களைச் செய்பவர் பெறுகின்றார்.

இந்தப் பிரார்த்தனையை உனது (இரவின்) கடைசிப் பேச்சாக ஆக்கிக் கொள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொல்கின்றபடி படுப்பவரின் கடைசிப் பேச்சு இந்தப் பிரார்த்தனையாக அமைந்து விடுமாயின் – எப்படி ஒரு குழந்தை பிறக்கும்போது பாவமற்றதாக பிறக்கின்றதோ அதுபோன்று அவர் பாவமற்ற தூய்மையான நிலையில் மரணித்து விடுகின்றார் என்றால் இது ஒரு சாதாரண விஷயமா? என்று எண்ணிப் பாருங்கள்.

இன்று எத்தனை தவ்ஹீதுவாதிகள் இந்த நபிவழியை இதுவரை நடைமுறைப் படுத்தியுள்ளனர்?  என்பதை நாம் சுயபரிசோதனை செய்தாக வேண்டும்.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed