இஸ்லாத்தின் அடிப்படையான விஷயங்கள் 

‘வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை’ என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையாகும். இஸ்லாத்தின் கொள்கை இது தான் என்பதை முஸ்லிமல்லாதவர்களும் கூட அறிந்து வைத்துள்ளனர்.

ஆனாலும் தமிழகத்தில் வாழும் கனிசமான முஸ்லிம்கள் இக்கொள்கையைச் சரியாகப் புரிந்து கொள்ளாதவர்களாக உள்ளனர்.

‘வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை’ என்பதில் இரண்டு செய்திகள் அடங்கியுள்ளன.

1. அல்லாஹ்வை வணங்க வேண்டும்.

2. அல்லாஹ்வைத் தவிர எவரையும் வணங்கக் கூடாது.

இதில் முதலாவது செய்தியை ஓரளவு ஏற்று நடக்கும் முஸ்லிம்கள் இரண்டாவது செய்தியை அறியாதவர்களாகவுள்ளனர். இதன் காரணமாகத் தான் ஒரு பக்கம் அல்லாஹ்வை வணங்கிக் கொண்டு இன்னொரு பக்கம் இறந்தவர்களையும், அவர்களை அடக்கம் செய்துள்ள சமாதிகளையும், மகான்கள் என்று உலா வரும் போலிகளையும் வணங்கி வருகின்றனர்.

இவ்விரண்டு செய்திகளில் இரண்டாவது தான் முக்கியமானதாகும். இதைச் சொல்வதற்காகத் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுப்பப்பட்டனர்.

அல்லாஹ்வை வணங்குங்கள் என்று சொல்லித் தருவதற்காகவோ, அல்லாஹ்வின் பண்புகளைச் சொல்லிக் கொடுப்பதற்காகவோ மட்டும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுப்பப்படவில்லை. ஏனெனில் அம்மக்கள் அல்லாஹ்வை நன்றாக அறிந்து வைத்திருந்தார்கள். அல்லாஹ்வை வணங்குவதிலும் அவர்களுக்கு ஆட்சேபனை ஏதும் இருந்ததில்லை.

அல்லாஹ்வைத் தவிர எவரையும், எதனையும் வணங்கக் கூடாது என்பது தான் அவர்களால் எதிர்க்கப்பட்டது.

இது கற்பனை அல்ல. தக்க சான்றுகள் மூலம் நிரூபிக்கப்பட்ட உண்மையாகும்.

வரலாற்றுச் சான்றுகள் 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது தந்தையின் பெயர் அப்துல்லாஹ் என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. அல்லாஹ்வின் அடிமை என்பது இதன் பொருள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தந்தைக்கு அல்லாஹ்வின் அடிமை என்ற பொருளில் அவர்களின் பாட்டானார் பெயர் சூட்டியிருப்பதிலிருந்து அம்மக்கள் அல்லாஹ்வைப் பற்றி முன்பே அறிந்திருந்தார்கள் என்பதை அறியலாம்.

திருக்குர்ஆன் சான்றுகள் 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை ஏற்காத அம்மக்கள் அல்லாஹ்வை அறிந்திருந்தார்கள் என்பதற்குப் பின்வரும் வசனங்களும் சான்றாக அமைந்துள்ளன.

வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உங்களுக்கு உணவளிப்பவன் யார்? செவிப் புலனையும், பார்வைகளையும் தன் கைவசம் வைத்திருப்பவன் யார்? உயிரற்றதிலிருந்து உயிருள்ளதையும், உயிருள்ளதிலிருந்து உயிரற்றதையும் வெளிப்படுத்துபவன் யார்? காரியங்களை நிர்வகிப்பவன் யார்?’ என்று கேட்பீராக! ‘அல்லாஹ்’ என்று கூறுவார்கள். ‘அஞ்ச மாட்டீர்களா’ என்று நீர் கேட்பீராக!

(அல்குர்ஆன் 10:31)

‘பூமியும், அதில் உள்ளோரும் யாருக்குச் சொந்தம்? நீங்கள் அறிந்தால் (பதிலளியுங்கள்!)’ என்று (முஹம்மதே!) கேட்பீராக! ‘அல்லாஹ்வுக்கே’ என்று அவர்கள் கூறுவார்கள். ‘சிந்திக்க மாட்டீர்களா?’ என்று கேட்பீராக!

(அல்குர்ஆன் 23:84,85)

‘ஏழு வானங்களுக்கும் அதிபதி, மகத்தான அர்ஷுக்கும் அதிபதி யார்?’ எனக் கேட்பீராக! ‘அல்லாஹ்வே’ என்று கூறுவார்கள். ‘அஞ்ச மாட்டீர்களா;?’ என்று கேட்பீராக!

(அல்குர்ஆன் 23:86,87)

‘பாதுகாப்பவனும், (பிறரால்) பாதுகாக்கப்படாதவனும், தன் கைவசம் ஒவ்வொரு பொருளின் அதிகாரத்தை வைத்திருப்பவனும் யார்? நீங்கள் அறிந்தால் (பதில் கூறுங்கள்!)’ என்று கேட்பீராக! ‘அல்லாஹ்வே’ என்று கூறுவார்கள். ‘எவ்வாறு மதி மயக்கப்படுகிறீர்கள்?’ என்று கேட்பீராக!

(அல்குர்ஆன் 23:88,89)

‘வானங்களையும், பூமியையும் படைத்தவனும், சூரியனையும், சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவனும் யார்?’ என்று அவர்களிடம் நீர் கேட்டால் ‘அல்லாஹ்’ என்று கூறுவார்கள். அப்படியாயின் ‘எவ்வாறு அவர்கள் திசை திருப்பப்படுகிறார்கள்?’ 

அல்குர்ஆன் (29:61)

‘வானத்திலிருந்து தண்ணீரை இறக்கி பூமி செத்த பின் அதன் மூலம் அதற்கு உயிரூட்டுபவன் யார்?’ என்று அவர்களிடம் நீர் கேட்டால் ‘அல்லாஹ்’ என்றே கூறுவார்கள். ‘அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்’ என்று கூறுவீராக! மாறாக அவர்களில் அதிகமானோர் விளங்கிக் கொள்வதில்லை.

(அல்குர்ஆன் 29:63)

‘வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்?’ என்று அவர்களிடம் நீர் கேட்டால் ‘அல்லாஹ்’ என்று அவர்கள் கூறுவார்கள். ‘அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்’ என்று கூறுவீராக! எனினும் அவர்களில் அதிமானோர் அறிய மாட்டார்கள்.

(அல்குர்ஆன் 31:25)

‘வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்?’ என்று அவர்களிடம் நீர் கேட்டால் ‘அல்லாஹ்’ என்று கூறுவார்கள். ‘அல்லாஹ்வையன்றி நீங்கள் பிரார்த்திப்பவற்றைப் பற்றிக் கூறுங்கள்!’ என்று கேட்பீராக! ‘அல்லாஹ் எனக்கு ஒரு தீங்கை நாடி விட்டால் அவனது தீங்கை அவர்கள் நீக்கி விடுவார்களா? அல்லது அவன் எனக்கு அருளை நாடினால் அவர்கள் அவனது அருளைத் தடுக்கக் கூடியவர்களா? அல்லாஹ் எனக்குப் போதும். சார்ந்திருப்போர் அவனையே சார்ந்திருப்பார்கள்’ என்று கூறுவீராக!

(அல்குர்ஆன் 39:38)

‘வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்?’ என்று அவர்களிடம் நீர் கேட்டால் ‘மிகைத்தவனாகிய அறிந்தவனே இவற்றைப் படைத்தான்’ எனக் கூறுவார்கள்.

(அல்குர்ஆன் 43:9)

அவர்களைப் படைத்தவன் யார் என்று அவர்களிடமே நீர் கேட்டால் அல்லாஹ் என்று கூறுவார்கள். எவ்வாறு திசை திருப்பப்படுகின்றனர்?

(அல்குர்ஆன் 43:87)

மக்கத்துக் காபிர்கள் அல்லாஹ்வை நம்பியிருந்தார்கள், அவனது வல்லமையைப் புரிந்து வைத்திருந்தார்கள் என்பதை இந்த வசனங்கள் சந்தேகத்திற்கிடமின்றி அறிவிக்கின்றன.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed